search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திற்பரப்பு அருவியில் குளிக்க 4-வது நாளாக தடை
    X

    திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை காணலாம்.

    திற்பரப்பு அருவியில் குளிக்க 4-வது நாளாக தடை

    • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
    • மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த நெற்பயிர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த வாரம் கொட்டி தீர்த்த மழை மாவட்டத்தையே புரட்டி எடுத்தது. நாகர்கோவில் பகுதியில் பல்வேறு பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது.

    தோவாளை, அகஸ்தீஸ்வரம், கிள்ளியூர் பகுதியில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கடந்த 2 நாட்களாக வெயில் அடித்து வந்த நிலையில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடிந்து வருகிறது. நாகர்கோவில் மீனாட்சி கார்டன் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் வடிந்த நிலையில் தெருக்களிலும் வீடுகளை சுற்றியும் மழை நீர் தேங்கி கிடக்கிறது.

    அந்தப் பகுதியில் மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் மழை குறைந்ததையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்தும் படிப்படியாக குறைந்தது. நேற்று இரு அணைகளுக்கும் ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று நீர்வரத்து குறைந்துள்ளது.

    இதையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவும் குறைக்கப்பட்டு உள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதனால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு இன்றும் 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.24 அடியாக உள்ளது. அணைக்கு 866 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 514 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி நீர்மட்டம் 75.12 அடியாக உள்ளது. அணைக்கு 1077 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 503 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்1- நீர்மட்டம் 16.73 அடியாக உள்ளது. அணைக்கு 138 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 129 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. 3 அணைகளில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதையடுத்து ஆறுகளில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    தொடர் மழைக்கு நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 36 வீடுகள் இடிந்து விழுந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 12 வீடுகள் இடிந்துள்ளது. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 3 வீடுகளும், தோவாளை தாலுகாவில் 5 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் 2 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 2 வீடுகளும் இடிந்துள்ளன.

    மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த நெற்பயிர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கணக்கெடுக்கும் பணியில் வேளாண் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்று வரை நடந்த கணக்கெடுப்பில் 605 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×