என் மலர்
கன்னியாகுமரி
- ‘தினத்தந்தி' பாரம்பரிய நிகழ்ச்சிகளை முன்னெடுத்து மக்கள் விரும்பும் வண்ணம் நடத்தி வருகிறது.
- முதலில் 8 வயது முதல் 14 வயது வரையிலான மாணவ- மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடந்தது.
அகஸ்தீஸ்வரம் தெற்குச் சாலையில் உள்ள அருள்மிகு சுடலை மாடசுவாமி கோவிலில் மேல்கூரை அமைக்க தர வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் சொந்த செலவில் 1 லட்சத்தில் மேல்கூரை அமைத்து கொடுத்து இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
முன்னதாக, 'தினத்தந்தி' நாளிதழ் வெற்றி நிச்சயம், கல்வி கண்காட்சி போன்ற மாணவ- மாணவிகள் பயன்பெறும் நிகழ்ச்சிகளை பல ஆண்டுகளாக நடத்தி வந்தது. தற்போது 'தினத்தந்தி' பாரம்பரிய நிகழ்ச்சிகளை முன்னெடுத்து மக்கள் விரும்பும் வண்ணம் நடத்தி வருகிறது.
அந்த வகையில் 'தினத்தந்தி'யின் நாகர்கோவில் பதிப்பு முதன்முறையாக 'கலை இலக்கியத் திருவிழா' என்ற நிகழ்ச்சியை நேற்று நடத்தியது. இந்த விழா நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள ஒய்.ஆர்.மகாலில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 'தினத்தந்தி'யுடன், வசந்த் அன்கோ நிறுவனமும் டைட்டில் ஸ்பான்சராக தன்னை இணைத்துக் கொண்டது.

இந்த விழா நேற்று பிற்பகலில் தொடங்கியது. முதலில் 8 வயது முதல் 14 வயது வரையிலான மாணவ- மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடந்தது. இதற்கிடையே விழா மேடையில் பரத நாட்டியம், பாரம்பரிய நடனம், மேற்கத்திய நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பார்வையாளர்கள் தரப்பிலும் பாடல்கள் பாடி அசத்தினர்.
ஓவியப்போட்டி நிறைவடைந்ததும் போட்டியின் நடுவர்களான பிரபா அகாடமி ஜான் பிரபாகரன், பைன் ஆர்ட்ஸ் அகாடமி அபினயா, ஆதிரா அகாடமி ஆதிரா, சாம் ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் நேச அருள், பகவதி ஆகியோர் சிறந்த ஓவியங்கள் வரைந்த மாணவ- மாணவிகளை தேர்வு செய்தனர். கலை இலக்கிய திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சி மாலையில் நடந்தது.
நிகழ்ச்சியை குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, தலைமை தாங்கி பேசினார். விழாவுக்கு வசந்த் அன்கோ நிறுவன நிர்வாக பங்குதாரரும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி.யுமான விஜய் வசந்த், ஆறுதெங்கன்விளை ஸ்டெல்லா மேரீஸ் கல்விக்குழும தலைவர் நசரேத் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
- மரக்கிளைகள் மின்கம்பங்கள் மீது முறிந்து விழுந்ததால் மின் வயர்கள் அறுந்து விழுந்தன.
- பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 35.84 அடியாக இருந்தது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து நேற்று காலையிலிருந்து மாவட்டம் முழுவதும் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இரவு சூறைக்காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது.
குழித்துறை, திக்குறிச்சி, சுருளோடு, கொட்டாரம், மயிலாடி, பூதப்பாண்டி, ஆணைக்கிடங்கு, முள்ளங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 38.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சூறைக்காற்றுடன் மழை பெய்ததையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. திருவட்டார், கொட்டாரம், மயிலாடி, நாகர்கோவில் பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் தடைப்பட்டது.
மரக்கிளைகள் மின்கம்பங்கள் மீது முறிந்து விழுந்ததால் மின் வயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்கள் நேற்று இரவு இருளில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள்.
இன்று காலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆறுகாணி, பத்துகாணி, திருவட்டாறு, திக்குறிச்சி, குழித்துறை மற்றும் மலையோர கிராமங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் சூறைக்காற்று வீசியது. விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.
திற்பரப்பு அருவி பகுதியிலும் சாரல் மழை நீடித்து வருகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். தொடர் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர் வரத்தும் அதிகரித்துள்ளது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 35.84 அடியாக இருந்தது. அணைக்கு 671 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.35 அடியாக உள்ளது. அணைக்கு 371 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 22 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 36.4, பெருஞ்சாணி 38.6, சிற்றாறு 1-35.4, சிற்றார் 2-18, கொட்டாரம் 17.2, மயிலாடி 6.2, நாகர்கோவில் 19, கன்னிமார் 30.2, பூதப்பாண்டி 22.6, முக்கடல் 12, பாலமோர் 29.4, தக்கலை 17, குளச்சல் 18.2, இரணியல் 10.4, அடையாமடை 17, குந்தன்கோடு 24.6, கோழிப்போர்விளை 30.8, மாம்பழத்துறையாறு 24, ஆணைக்கிடங்கு 25.4, களியல் 22.4, குழித்துறை 32.4, புத்தன் அணை 37.2, சுருளோடு 27.2, திற்பரப்பு 32.8, முள்ளங்கினாவிளை 18.4.
மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. கீரிப்பாறை, தடிக்காரன்கோணம், குலசேகரம் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. ரப்பர் மரங்களில் கட்டப்பட்டுள்ள சிரட்டைகளிலும் மழைநீர் தேங்கி உள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
தோவாளை, செண்பகராமன்புதூர் பகுதிகளில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்கும் பணியை விவசாயிகள் மேற்கொண்டு இருந்தனர். தற்போது பெய்த மழையின் காரணமாக வண்டல் மண் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மழையின் காரணமாக விவசாயிகள் சாகுபடி பணியை தீவிரம் காட்டி உள்ளனர். கன்னி பூ சாகுபடிக்காக வருகிற 1-ந்தேதி அணைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
- ரபிகா உடலை கைப்பற்றி செண்பகராமன் புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- ரபிகா தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரல்வாய்மொழி:
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பகராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சந்துரு. இவரது மகள் ரபிகா (வயது 18), நர்சிங் கல்லூரி மாணவி.
இவருக்கும் பூதப்பாண்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்த ஒரு மாணவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை இரு வீட்டாரும் கண்டித்து உள்ளனர். இந்த நிலையில் இன்று காலை ரபிகா நீண்ட நேரமாக செல்போனில் பேசிக் கொண்டிருந்தாராம்.
இதனை தாயார் பானுமதி கண்டித்து உள்ளார். அதன் பிறகு ரபிகா குளிக்கச் செல்வதாக கூறிவிட்டு குளியல் அறைக்குச் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் குளியல் அறையில் இருந்து வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், குளியல் அறை கதவை தட்டிப்பார்த்தனர்.
அப்போது ரபிகாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனை தொடர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு ரபிகா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து ரபிகா உடலை கைப்பற்றி செண்பகராமன் புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போனில் பேசியதை கண்டித்ததால் அவர் தற்கொலை முடிவை எடுத்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரணை நடைபெற்று வருகிறது. கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தற்போது 5 படகுகள் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை கண்ணாடி பாலத்தை பார்வையிட செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிக்காக இயக்கப்பட்டு வருகிறது.
- சுற்றுலாப் பயணிகள் படகில் பயணம் செய்ய மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் திறக்கப்பட்ட கண்ணாடி பாலம் மற்றும் கோடை விடுமுறை சீசன் காலம் ஆகியவை சுற்றுலாப் பயணிகளின் வருகையை இருமடங்காக உயர்த்தி உள்ளது.
இதனையடுத்து கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு சேவையில் தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை பொதிகை, குகன் மற்றும் விவேகானந்தா ஆகிய 3 படகுகள் மட்டுமே இந்த சேவையில் பயன்பட்டு வந்தன. ஆனால் தற்போது, விவேகானந்தா படகு பழுது பார்க்கும் பணிக்காக சின்னமுட்டம் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கரையேற்றப்பட்டுள்ளதால், சில வாரங்களாக 2 படகுகள் மட்டுமே சேவையில் இருந்தன. இதனால் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரிக்காக பயன்படுத்தப்பட்டு வந்த சொகுசு படகுகளான 'திருவள்ளுவர்' மற்றும் 'தாமிரபரணி' ஆகிய 2 படகுகளை வட்டக்கோட்டைக்கு இயக்குவதற்கு பதிலாக விவேகானந்தர் மண்டபத்துக்கு இயக்கி வருகிறது.
மேலும் விவேகானந்த கேந்திரத்துக்கு சொந்தமான 'ஏகநாத்' படகும் ஒப்பந்த அடிப்படையில் கூட்டம் நெரிசலை பொறுத்து அவ்வப்போது விவேகானந்தர் மண்டபத்துக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தற்போது மொத்தம் 5 படகுகள் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை கண்ணாடி பாலத்தை பார்வையிட செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிக்காக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முன்பு சுற்றுலாப் பயணிகள் படகில் பயணம் செய்ய மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. இப்போது சற்றே விரைவாக படகுகளில் செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்று சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் இணைந்து சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக மேற்கொண்ட இந்த ஏற்பாடு சுற்றுலா துறையில் ஒரு சிறப்பான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
- படகு போக்குவரத்து கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- சுற்றுலா பயணிகள் இன்று காலை முதல் படகில் பயணம் செய்து கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.
கண்ணாடி பாலம் திறக்கப்பட்டதை தொடர்ந்து கோடை விடுமுறை சீசன் காரணமாக தற்போது வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக உள்ளது. இதைத்தொடர்ந்து படகு போக்குவரத்து கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது அதிகாலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுதுறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் பயணம் செய்து கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு செல்கிறார்கள்.
தொடர்ந்து இன்று வரை கடந்த 11 நாட்களில் 1¼ லட்சம் சுற்றுலா பயணிகள் படகுமூலம் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் கண்ணாடி பாலம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிட்டுள்ளனர்.
இன்றும் காலை 7 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று காலை முதல் படகில் பயணம் செய்து கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
- விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்திருந்தனர்.
- திருவள்ளுவர் சிலையை பார்வையிட்ட பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து படகு மூலம் கரைக்கு திரும்பினர்.
கன்னியாகுமரி:
கோடை விடுமுறையையொட்டி சனிக்கிழமையான இன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர். இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
அதேபோல விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்திருந்தனர். காலை 7 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் படகுதுறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு திரும்பினர்.
திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கண்ணாடி கூண்டு பாலம் வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் நடந்து சென்றனர். திருவள்ளுவர் சிலையை பார்வையிட்ட பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து படகு மூலம் கரைக்கு திரும்பினர்.
மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன், திருப்பதி வெங்கடாஜலபதி, கொட்டாரம் ராமர், சுசீந்திரம் தாணுமாலயசாமி, விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா, ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
தற்போது கோடையை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்துவதால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் கடலில் ஆனந்த குளியல் போட்டு உற்சாகம் அடைந்தனர்.
மேலும் மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர்காற்று வீசுவதால் வெயில் வெப்பத்தை தணிக்கும் வகையில் இரவு 9 மணி வரை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- அய்யா வைகுண்டர் வாலிபால் கிளப் மற்றும் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளையும் இணைந்து நடத்திய 4வது மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி நடைபெற்றது.
- இந்த நிகழ்வில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு தலைமைப்பதி வளாகத்தில் அய்யா வைகுண்டரின் 193-வது உதய தினவிழாவினை முன்னிட்டு நேற்று அய்யா வைகுண்டர் கிளப் நிறுவனர் மற்றும் தலைவர் குரு. பால ஜனாதிபதி தலைமையில் அய்யா வைகுண்டர் வாலிபால் கிளப் மற்றும் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளையும் இணைந்து நடத்திய 4வது மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டம் சிறந்து விளங்குவது பெருமை.
- வெற்றியை தவறவிட்ட மாணவர்கள் வரும் தேர்வில் சிறப்பாக செயல்பட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.70 சதவீதம், மாணவிகள் 95.13 சதவீதம் ஆகும். வழக்கத்தை போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம். மாணவிகள் 4.14 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டம் சிறந்து விளங்குவது பெருமை. ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு வாழ்த்துகள்.
வெற்றியை தவறவிட்ட மாணவர்கள் வரும் தேர்வில் சிறப்பாக செயல்பட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

- திருத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோஜெயன் கல்லுபாலம் பகுதியில் கடை நடத்தி வந்தார்.
- கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல் சூட்டால் அவதிப்பட்டு வந்த நிலையில் மார்த்தாண்டம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர் பலியானார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை முதலே அடித்து வரும் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். மதிய நேரங்களில் சாலைகளில் அனல்காற்று வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
வெப்பத்தின் தாக்கம் காரணமாக களியக்காவிளை அருகே திருத்துவபுரத்தில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோஜெயன் (வயது 47). இவர் கல்லுபாலம் பகுதியில் கடை நடத்தி வந்தார்.
இவருக்கு மனைவியும், 8 மாத கை குழந்தையும் உள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல் சூட்டால் பாதிக்கப்பட்ட மனோஜெயனை சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோஜெயன் பரிதாபமாக இறந்தார்.
திருத்துவபுரத்தை அடுத்த மடிச்சல் வடக்கே வெள்ளச்சிமாவிளை பகுதியை சேர்ந்தவர் அச்சுதன் கலைமணி (47). முன்னாள் ராணுவ வீரர். தற்போது செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல் சூட்டால் அவதிப்பட்டு வந்த நிலையில் மார்த்தாண்டம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர் பலியானார்.
மடிச்சல் வடக்கே வெள்ளச்சிமாவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெகன் என்ற சந்தோஷ் (46), காய்கறி வியாபாரி. இவர் கடந்த 14-ந்தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் பலியானார். கோடை வெயிலின் தாக்கத்தால் ஒரே பகுதியில் அடுத்தடுத்து 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- 5-ம் நாளான நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் பரிசளிப்பு விழாவில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
- 4-ம் நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், மங்காவிளை அருள்மிகு சிவசுடலை மாடசுவாமி திருக்கோவிலில் வைகாசி கொடை விழா நடைபெற்று வருகிறது. இதில் 5-ம் நாளான நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் பரிசளிப்பு விழாவில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை வழங்கி அவர் பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஊர் நிர்வாக தலைவர், நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள், அனைத்து கட்சி முக்கிய பிரமுகர்கள் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம், பூவங்காபறம்பு ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில் சித்திரை பொங்காலை திருவிழா மற்றும் கொடைவிழா கடந்த 10-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 4-ம் நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
- 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கண்ணாடி கூண்டு பாலம் வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் நடந்து சென்றனர்.
- கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கன்னியாகுமரி:
கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதையொட்டி சனிக்கிழமையான இன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத் துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்து இருந்தனர். காலை 7 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. இருப்பினும் சுமார் 3 மணி நேரம் படகு துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு திரும்பினர்.
133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கண்ணாடி கூண்டு பாலம் வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் நடந்து சென்றனர். மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுவதால் வெயில் வெப்பத்தை தணிக்கும் வகையில் இரவு 9 மணி வரை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
- கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் கன்னியாகுமரியில் சீசன் களைகட்டி உள்ளது.
- பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது.
இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக இந்த படகு போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த படகில் பயணம் செய்வதற்காக சாதாரண கட்டணமாக நபர் ஒன்றுக்கு தலா ரூ.75 வீதமும், கியூவில் காத்து நிற்காமல் நேரடியாக செல்வதற்காக சிறப்பு கட்டணமாக நபர் ஒன்றுக்கு தலா ரூ.300 வீதமும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தற்போது பள்ளிகளுக்கு தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் கன்னியாகுமரியில் கோடை விடுமுறை சீசன் களைகட்டி உள்ளது. இதனால் மற்ற நாட்களை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குடும்பம்-குடும்பமாக கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாக உள்ளனர்.
இந்த சீசனில் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வரை கன்னியாகுமரிக்கு வருகிறார்கள். இந்த சீசன் நேரத்தில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் வட்டக்கோட்டைக்கு இயக்கப்படும் திருவள்ளுவர் சொகுசு படகை சின்னமுட்டம் துறைமுகத்துக்கு கொண்டு சென்று பராமரிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. அதேபோல விவேகானந்தா படகையும் சின்னமுட்டத்தில் கரை ஏற்றி பராமரிப்பு பணிகளை செய்து வருகிறது. இதனால் தற்போது குகன் மற்றும் பொதிகை படகு மட்டுமே விவேகானந்தர் மண்டபத்துக்கு இயக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் மாலை 4 மணிக்கு வழக்கம்போல் படகு போக்குவரத்து நிறுத்தப்படுவதால் அதன் பிறகு படகு துறைக்கு வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினம் தினம் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் செல்ல முடியாமலும் கண்ணாடி பாலத்தை பார்க்க முடியாமலும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லக்கூடிய அவலநிலை இருந்து வருகிறது. தினமும் மாலை 4 மணிக்கு பிறகு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வரை படகுத்துறைக்கு வந்து கண்ணாடி பாலத்தை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற நிலை இருந்து வந்தது.
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காலங்களில் மட்டும் 3 நாட்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை படகு போக்குவரத்து கூடுதலாக 4 மணி நேரம் நீட்டிக்கப்பட்டு இயக்கப்பட்டது. அதேபோல கோடை விடுமுறை சீசன் காலங்களில் மாலை 4 மணிக்கு பிறகு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை தவிர்க்கும் வகையில் கோடை காலம் முடியும் வரை படகு போக்குவரத்து நேரத்தை காலை 8 மணிக்கு தொடங்குவதற்கு பதிலாக 2 மணி நேரத்துக்கு முன்னதாக அதிகாலை 6 மணிக்கு தொடங்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
எனவே சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்ப கோடை விடுமுறை சீசன் முடியும் வரை கண்ணாடி பாலத்தை பார்க்க படகு போக்குவரத்து நேரத்தை நீட்டிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்குமா? என்று மாலை மலரில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதன் எதிரொலியாக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று முதல் படகு போக்குவரத்தை காலை 8 மணிக்கு தொடங்குவதற்கு பதிலாக ஒரு மணி நேரம் முன்னதாக காலை 7 மணிக்கு தொடங்குவதற்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். இந்த படகு போக்குவரத்து நேரம் மாற்றம் கோடை கால சீசன் முடியும் நாளான ஜூன் 1-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி இன்று அதிகாலை 6.45 மணிக்கு படகு துறையில் உள்ள டிக்கெட் கவுண்டர் திறக்கப்பட்டு படகு டிக்கெட் விநியோகம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து படகு போக்குவரத்து காலை 7 மணிக்கு தொடங்கியது. சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து மிகுந்த ஆர்வத்துடன் படகில் பயணம் செய்தனர். இந்த படகு போக்குவரத்து நேர மாற்றத்தை கண்காணிப்பதற்காக சென்னையில் இருந்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக பொது மேலாளர் (இயக்கம்) தியாகராஜன் இன்று நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.






