என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    கள்ளக்குறிச்சி அருகே மது குடிப்பதற்காக இரும்பு கடையில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் கரீம்ஷா தர்க்கா பகுதியை சேர்ந்தவர் சையத் உசேன் (வயது 42). இவர் இதே பகுதியில் உள்ள பழைய இரும்பு கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 9 மணிக்கு வழக்கமாக கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    மறுநாள் அதி காலை 5 மணியளவில் தனது நண்பர்களுடன் கலையநல்லூர் சாலையில் உள்ள டீக் கடைக்கு டீ குடிக்க சென்றார். அப்போது மர்ம நபர் ஒருவர் பழைய இரும்பு கடையில் இரும்புகளை திருடியது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த சையத் உசேன் தனது நண்பர்களுடன் சென்று அந்த நபரை மடக்கி பிடித்து தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் தியாகதுருகம் சந்தைமேடு பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (வயது 20) என்பதும், சுமார் 2 மாதத்திற்கு முன்பு இந்த பழைய இரும்பு கடையில் வேலை பார்த்ததும் தெரிய வந்தது.

    மேலும் தற்போது மது குடிப்பதற்கு பணம் இல்லாததால் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான 25 கிலோ எடையுள்ள பழைய இரும்புகளை திருடியது தெரியவந்தது. இது குறித்து சையத் உசேன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஏழுமலையை கைது செய்தனர்.

    அத்தியாவசிய கடைகள், பால், மருந்தகம் உள்ளிட்ட கடைகளை தவிர மற்ற கடைகள் மூடப்பட்டும், போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக தமிழக அரசு வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்திருந்தது.

    அதன்படி கடந்த 9 ந்தேதி மற்றும் 16ந் தேதி ஞாயிற்றுக் கிழமைகளில் முழு கடையடைப்பு நடைபெற்றது. அதேபோல் இன்று மாவட்டம் முழுவதும் அத்தியாவசிய கடைகள், பால், மருந்தகம் உள்ளிட்ட கடைகளை தவிர மற்ற கடைகள் மூடப்பட்டும், போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    மேலும் காவல் துறையினர் மாவட்டம் முழுவதும் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகனங்களை தணிக்கை செய்தனர். தேவையின்றி சுற்றி திரிந்தவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்குள் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 28-ந்தேதி கொரோனா தொற்றால் ஒருவர்கூட பாதிக்கப்படாத நிலையில், ஜனவரி 1-ந்தேதி 5 பேர் பாதிக்கப்பட்டனர். 10-ந்தேதி 38 பேர் எனவும், 15-ந்தேதி 120 பேர் எனவும், 20ஆம் தேதி 186 பேரும், நேற்று 231 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்குள் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று மூன்றாவது அலை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    எனவே கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பதை உணர்ந்து அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும் முக கவசங்களை அணிந்து கொண்டும், சமூக இடைவெளி, பொதுமுடக்கம் ஆகியவற்றை கடைபிடித்து கொரோனா தொற்று பரவலை முழுவதும் ஒழிக்க சுகாதாரத்துறையினருக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறினார்.
    அரகண்டநல்லூர் விற்பனை கூட பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று நெல் வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் நெல் வியாபாரிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் தொழில் அதிபர் ஜெ.முருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆண்டு ஒன்றுக்கு ரூ. 100 கோடிக்கு கொள்முதல் நடைபெறும் அரகண்டநல்லூர் விற்பனை கூடத்திற்கு இதுவரை நிரந்தர கண்காணிப்பாளர் இல்லாமல் இருப்பது பெரிய அளவிலான நிர்வாக சிக்கலை ஏற்படுத்துகிறது.

    விற்பனை கூடத்திற்கு தேவையான அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் இல்லாமல் இருப்பது விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே பணப் பட்டுவாடா செய்வதில் பெரும் குழப்பம் ஏற்படுகிறது மற்றும் காலதாமதம் ஏற்படுகிறது.

    தானியக் கிடங்கில் பழுதடைந்துள்ள ரோலிங் ‌ஷட்டர்ரை உடனே பழுது நீக்கம் செய்து தரவேண்டும்.விற்பனைக்கூடம் முழுமைக்கும் மழைநீர் வடிகால் வாய்க்கால் செய்து தரவேண்டும் விற்பனைக் கூடத்தில் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள முட்புதர்களை அகற்றி தூய்மைப்படுத்தி தரவேண்டும்.

    விற்பனைக் கூடத்தின் அனைத்துப் பகுதிக்கும் மின் விளக்குகள் மற்றும் சிசிடிவி பொருத்தி அதனை முறையாக செயல்படுத்த வேண்டும் மேற்கண்ட தீர்மானங்கள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    இறுதியாக மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 24-ந்தேதி முதல் விற்பனை கூடத்தில் நடைபெறும் ஏலத்தில் கலந்து கொள்வதில்லை எனவும் விவசாயிகள் கொண்டுவரும் தானியங்களை கொள்முதல் செய்ய போவதில்லை எனவும் நெல் அரிசி வியாபாரிகள் சங்க தலைவர் தொழிலதிபர் ஜெ.முருகன் தெரிவித்துள்ளார்.


    விவசாயிகள் பயன்பெறும் வண்ணம் புதிய மின்மோட்டார் பம்ப் செட்டுகள் வாங்குவதற்கு ஒரு மின்மோட்டார் பம்ப் செட்டுக்கு அதிகபட்சமாக ரூ.10,000 மானியமாக வழங்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரால் சட்டமன்றப் பேரவையில் சிறு, குறுவிவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் வழங்கும் திட்டம் தொடர்பாக தனி நிதி நிலை அறிக்கையில்அறிவிக்கப்பட்டு உரிய அரசாணை பெறப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் விழுப்புரம், வேளாண்மைப் பொறியியல் துறை வாயிலாக செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மூன்று ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு குறு விவசாயிகளுக்குபாசன நீரை இறைத்திட புதிய மின்மோட்டடர் பம்ப் செட்டுகள் வாங்கவும், திறன் குறைந்த பழைய மின் மோட்டார் பம்ப் செட்டுகளை மாற்றி புதிய மின் மோட்டார் பம்ப் செட்டுகள் பொருத்தவும், விவசாயிகள் பயன்பெறும் வண்ணம் புதிய மின்மோட்டார் பம்ப் செட்டுகள் வாங்குவதற்கு ஒரு மின்மோட்டார் பம்ப் செட்டுக்கு அதிகபட்சமாக ரூ.10,000 மானியமாக வழங்கப்படும்.

    எனவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும், மூன்று ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் சிறு, குறு விவசாயி சான்றிதழ், அடங்கல் கிணறு அமைத்துள்ள நிலவரைப்படம், மின்சார இணைப்பு அட்டை விவரம் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலுடன் கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் வருவாய் கோட்டத்தின் பகுதியில் உள்ள விவசாயிகள், உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் உபகோட்ட அலுவலகங்களில் விவசாயிகள் நேரில் வந்து உரிய படிவத்தில் மனுக்கள் அளித்து பதிவு செய்துகொள்ளலாம்.

    இதேபோல் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், வெள்ளிமலை மற்றும் சின்னசேலம் வட்ட விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப்பொறியியல் துறை, எண் 3. வெற்றிவேல் காம்ப்ளக்ஸ், தச்சூர் கூட்டு ரோடு, தச்சூர்,கள்ளக்குறிச்சி 606 202, தொலைபேசி எண்: 04151 291125 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    திருக்கோவிலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை வட்டவிவசாயிகள் உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப்பொறியியல் துறை, 45/72 பெரியார் தெரு, என்.ஜி.ஜி.ஓ. நகர், திருக்கோவிலூர் 605 757, தொலைபெசி எண்: 04153 253333 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, 27/1209. பெரியார் தெரு, வழுதரெட்டி, விழுப்புரம், தொலைபேசி எண்: 04146 294888 எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சியில் மூடு பணியின் காரணமாக பொதுமக்கள் பலரும் இன்று காலை வெளியே வருவதை தவிர்த்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பனி பெய்து வந்தது. இந்நிலையில் இன்று வழக்கத்திற்கு மாறாக காலையில் மூடுபனி பெய்தது. இதனால் 4 சக்கர மற்றும் 2 சக்கர வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களை தெரிந்துகொள்வதற்காக முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக சென்றனர்.

    மூடு பணியின் காரணமாக பொதுமக்கள் பலரும் இன்று காலை வெளியே வருவதை தவிர்த்தனர். தொடர்ந்து சுமார் 8:30 மணி அளவில் சூரியன் உதிக்க தொடங்கியதும் மூடுபனி விலகியது.

    இதனை தொடர்ந்து பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வழக்கம் போல தங்களது பணிகளை செய்தனர்.

    அரகண்டநல்லூரில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கடந்த ஒரு வார காலமாக நெல் வரத்து தொடங்கி உள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 5000 மூட்டை நெல் வரத்து வந்தது.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூரில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கடந்த ஒரு வார காலமாக நெல் வரத்து தொடங்கி உள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 5000 மூட்டை நெல் வரத்து வந்தது.

    இதன் குறைந்தபட்ச விலையாக ரூபாய் 980 அதிகபட்ச விலையாக ரூ.1,450 மாக இருந்தது. எல்.இ.டி. 37 ரக நெல்லுக்கு குறைந்தபட்சம் ரூ. 980 அதிகபட்சம் ரூ.1,110 எனவும் பொன்னி ரக நெல்லுக்கு குறைந்தபட்சமாக ரூ. 1250 எனவும் அதிகபட்சமாக ரூ. 1450 எனவும் இருந்தது.

    இது தவிர உளுந்து, கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம், திணை, மணிலா மற்றும் எள் ஆகிய தானியங்களும் வரத்து வந்தன. நேற்று ஒரே நாளில் ரூ. 74 லட்சத்துக்கு தானியங்களை விற்பனை நடைபெற்றது.


    திருக்கோவிலூர், அரியூர், குன்னத்தூர் எடையூர், மற்றும் விளந்தை ஆகிய 5 சுகாதார மையங்களிலும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரிசோதனை நேற்று மேலும் தீவிரப்படுத்தப்பட்டு ஒரே நாளில் 300 பேருக்கு சோதனை மேற் கொள்ளப்பட்டது.

    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் அதிகமாக இருப்பது குறித்தும் வீட்டுக்கு ஒருவர் பாதிப்பு என்ற நிலையில் காணப்படுகிறது.

    இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் சுகாதாரத் துறையினர் அதிரடி நடவடிக்கையாக திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள வீடுகள் தோறும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்புக்குள்ளானவர்கள் இருக்கின்றார்களா? என் பதை நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.

    அதேசமயம் திருக்கோவிலூர், அரியூர், குன்னத்தூர் எடையூர், மற்றும் விளந்தை ஆகிய 5 சுகாதார மையங்களிலும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரிசோதனை நேற்று மேலும் தீவிரப்படுத்தப்பட்டு ஒரே நாளில் 300 பேருக்கு சோதனை மேற் கொள்ளப்பட்டது.

    இது தவிர கிராமங்களில் மருந்து தெளிக்கும் பணி மற்றும் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியும் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் நிர்வாகத்துடன் இணைந்து பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. மேற்கண்ட பணிகளை சுகாதாரத் துறையினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.

    திருக்கோவிலூர் அருகே டிராக்டர் மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே உள்ள கொடுங்கால் கிராமத்தை சேர்ந்தவர் கார்மேல் மகள் வினிதா (வயது 24). இவருக்கும் உறவினரான அதே பகுதியை சேர்ந்த செல்வம் மகன் ஜேம்ஸ்பாண்டு (28) என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வினிதாவும், ஜேம்ஸ்பாண்டும் உளுந்தூர்பேட்டை அடுத்த சென்னாகுப்பத்தில் உள்ள தேவாலயத்துக்கு சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு சொந்த ஊருக்கு புறப்பட்டனர். வினிதா ஸ்கூட்டரை ஓட்டினார். ஜேம்ஸ்பாண்டு பின்னால் அமர்ந்து பயணம் செய்தார். அரகண்டநல்லூர் அடுத்த தனியார் கலைக்கல்லூரி அருகே வந்தபோது, முன்னால் மின்கம்பங்களை ஏற்றிச்சென்ற டிராக்டரை, அதன் டிரைவர் திடீரென நிறுத்தினார். அப்போது வினிதா ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் டிராக்டர் மீதும், மின்கம்பங்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வினிதா, ஜேம்ஸ்பாண்டு ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு வினிதா பரிதாபமாக உயிரிழந்தார். ஜேம்ஸ்பாண்டுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் விபத்தை ஏற்படுத்தியதாக டிராக்டர் டிரைவர் மீது அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    விண்ணப்பதாரர்கள் குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி, குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    2015-ம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர் நீதிக்குழும உறுப்பினர்கள் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என்ற விகிதத்தில் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விண்ணப்பதாரர்கள் குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி, குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும். அல்லது குழந்தை உளவியல் அல்லது சமூகவியல் அல்லது மனிதமேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்  35  வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.

    ஒரு குழுவில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்களாவர். ஆனால் தொடர்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது. இதற்கான விண்ணப்ப படிவத்தினை விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

    தகுதி வாய்ந்த நபர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்-156, சாரதாம்பாள் வீதி, நித்தியானந்தம் நகர், வழுதரெட்டி, விழுப்புரம் - 605 401, என்ற முகவரியில் விண்பத்தை பெற்று விண்ணப்பிக்கலாம். மேலும் 04146 - 290659 என்ற தொலைபேசி எண்ணிலும், dcpuvpm1@gmail.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
     
    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    திருக்கோவிலூர் அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக அரகண்டநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அடுத்த பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 30). சம்பவத்தன்று இவர் பில்ராம்பட்டு மெயின்ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே உள்ள நாடக மேடை எதிரில் தனது மோட்டார் சைக்கிளை வைத்துக்கொண்டு நின்று கொண்டு இருந்தார். 

    அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சதாசிவம் மற்றும் கார்த்தி ஆகிய 2 பேரும் ராமகிருஷ்ணனிடம் தகராறு செய்ததுடன் அவரின் மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

    இது குறித்து ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தியதுடன் சதாசிவம் மற்றும் கார்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து சதாசிவத்தை கைது செய்தனர். கார்த்தியை வலைவீசி தேடி வருகின்றனர்.
    மகள் விழுந்து இறந்த கிணற்றிலேயே தாயும் விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள சூ.பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகர் விவசாயி, இவரது மனைவி ஆதிலட்சுமி (34) ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினராக இருந்தார். இவர்களது மூத்த மகள் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது கிணற்றில் விழுந்து இறந்து விட்டார்.

    இதனால் ஆதிலட்சுமி சோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தங்களது நிலத்திற்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எனவே இவரது மகள் கவியரசி தாயை தேடி நிலத்திற்குச் சென்றார். அப்போது கிணற்றின் அருகே காலணியும், துண்டும் இருந்ததால் சந்தேகமடைந்து கூச்சலிட்டார். அக்கம், பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் இறந்து கிடந்த ஆதிலட்சுமி உடலை மீட்டனர். தியாகதுருகம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    இதுகுறித்து குணசேகர் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மகள் விழுந்து இறந்த கிணற்றிலேயே தாயும் விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ×