என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    சென்னை விமான நிலையத்தில் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் விமான நிலைய அத்தாரிட்டி கேண்டியன் உள்ளது. அதன் அருகே நேற்று இரவு, வாயில் நுரை தள்ளியபடி சுமார் 40 வயதுடைய ஆண் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

    இதையடுத்து அங்கு பணியிலிருந்த விமான நிலைய ஊழியர்கள், சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக விமான நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் ரமேஷ்(40) என்பதும், சென்னை விமான நிலையத்தில் டிராலிகளை தள்ளும் வேலை செய்து வந்தது தெரியவந்தது.

    இவருடைய உடலில் எந்த காயமும் இல்லை. அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. இதேபோல் சென்னை விமான நிலையம் கார் பார்க்கிங் அருகே இந்த மாதம் கடந்த 7-ந் தேதி 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் உடலில் காயங்களோடு இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பள்ளிக்கரணை மற்றும் ராஜமங்கலத்தில் மொத்தம் ஒரு டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    வேளச்சேரி:

    தமிழகத்தில் குட்கா, புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனினும் கடைகளில் புகையிலை விற்பனை தடையை மீறி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் பள்ளிக்கரணை, துலுக்கானத்தம்மன் கோயில் தெருவில் உள்ள கடையில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் கடை மற்றும் வியாபாரியின் வீட்டில் சோதனை நடத்தினர். இதில் அங்கு மூட்டை மூட்டையாக குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக வியாபாரி ஜெயராம் என்பவரை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    கொளத்தூர், ராஜமங்கலம் பகுதியில் குட்கா, புகையிலை பொருட்கள் கைமாற்றப்படுவதாக அண்ணாநகர் துணை கமிஷனர் சிவ பிரசாத்துக்கு தகவல் கிடைத்தது.

    ராஜமங்கலம் போலீஸ் நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளி சாலையில் தனிப்படை போலீசார் சொகுசு கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருந்தன.

    காரில் இருந்த வாலிபர் கொடுத்த தகவலின் பேரில் அந்த வழியாக வந்த மேலும் 2 கார்களை நிறுத்தி சோதனை செய்தபோது அதிலும் குட்கா மூட்டைகள் இருந்தன. இதையடுத்து கார்களில் இருந்த 520 கிலோ குட்கா, புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக கார்களில் இருந்த கோவில்பட்டியைச் சேர்ந்த முருகன், படப்பை பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வம் , சுகுமார், ஆண்டனி பாஸ்கர், குன்றத்தூரை சேர்ந்த குமார், கார்த்திக் ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் 3 கார் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    பள்ளிக்கரணை மற்றும் ராஜமங்கலத்தில் மொத்தம் ஒரு டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    தமிழகத்தில் மட்டும் கல்வியை அரசியல் ஆக்குவது ஒருபோதும் ஏற்புடையதல்ல என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
    காஞ்சிபுரம்:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் காஞ்சிபுரத்தில் நடந்த கட்சி நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒரு ஆண்டுக் கால தி.மு.க. ஆட்சியிலே எதிர்பார்த்த மக்கள் இன்றைக்கு ஏமாந்து போய் இருப்பது வருத்தத்துக்குரியது, கொடுத்த முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக தி.மு.க. செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது,

    தமிழகத்தில் மட்டும் கல்வியை அரசியல் ஆக்குவது ஒருபோதும் ஏற்புடையதல்ல. புதிய கல்விக் கொள்கையில் ஏற்படும் சந்தேகங்களை விளக்க மத்திய அரசு இருக்கும் போது, இதனை முறையாக எடுத்துக் கொண்டு சென்று சந்தேகங்களை தீர்க்க வேண்டியது அரசின் கடமை.

    இந்த புதிய கல்விக் கொள்கையைப் பற்றி தமிழக அரசு பல ஆலோசனைகளை கூறலாம். ஆனால் எதையும் செய்யாமல் கண்மூடித்தனமாக இதனை எதிர்ப்பது ஏற்புடையதல்ல. கல்வியிலே அரசியலை புகட்டுவது பெற்றோர்களும் மாணவர்களும் 100 சதவிகிதம் ஏற்புடையதல்ல.

    மக்கள் நலனிலே அக்கறைக்கொண்ட ஆட்சியாளர்களாக மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற காரணத்தால் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை குறைத்து, மக்கள் மீது உள்ள சுமையை மத்திய அரசு குறைத்து வருகிறது. இனிவரும் நாட்களிலும் மத்திய அரசு விலையினை குறைக்கும்.

    ஆனால் தி.மு.க. அரசு பெட்ரோல்-டீசல், கேஸ் விலையை குறைக்க மாட்டோம், சொத்து வரியை உறுதியாக உயர்த்துவோம் என சொல்லுவது மட்டுமல்லாமல், ஆண்டுக்கு ஒரு முறை சொத்துவரியினை உயர்த்துவோம் என கூறுவது மக்கள் விரோதபோக்கு.

    மேலும் மக்கள் மீது ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கந்தபுராணம் அரங்கேற்றிய குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெறும்.

    கடந்த இரண்டு வருடக்ளாக கொரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டு காரணமாக பிரம்மோற்சவ விழா நடைபெறாமல் இருந்தது.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை மூலவருக்கும், உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளான இன்று பவழக்கால் சப்பரத்தில் சுப்பிரமணயசுவாமி எழுந்தருளி நான்கு ராஜவீதிகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 5-ந்தேதி மயில்வாகன வீதி உலாவும், 9-ந்தேதி திருத்தேர் உற்சவமும், 13-ந்தேதி வள்ளி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

    16-ந்தேதி விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
    ஆம்புலன்சில் விரைந்து வந்த ஊழியர்கள் நித்யாவை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே நித்யாவுக்கு பிரசவ வலி அதிகமானது.
    காஞ்சிபுரம்:

    உத்திரமேரூர் அருகே உள்ள ஆலஞ்சேரி மதுரா மலைக்காலனி கிராமத்தை சேர்ந்தவர் நித்யா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு வீட்டில் இருந்த போது திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

    இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்சில் விரைந்து வந்த ஊழியர்கள் நித்யாவை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் போகும் வழியிலேயே நித்யாவுக்கு பிரசவ வலி அதிகமானது. இதையடுத்து ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் சாம்சுந்தர் மற்றும் ஊழியர்கள் அவருக்கு பிரசவம் பார்த்தனர்.

    அப்போது நித்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது . பிறகு தாயும், குழந்தையும் சாலவாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர்.
    மே மாதம் 27-ந் தேதி இலங்கையில் இருந்து மெல்போர்ன் சென்ற விமானம் சென்னை விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பி சென்றது.
    ஆலந்தூர்:

    இலங்கையில் கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. மேலும் அங்கு அடிப்படை தேவைகளுக்கே பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பெட்ரோல், டீசல், கியாஸ் மற்றும் உணவு பொருட்கள் தட்டுப்பாடு நிலவுகிறது.

    இந்த நிலையில் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களில் எரிபொருள் நிரப்புவதிலும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அந்தநாட்டு விமானங்களில் நிரப்புவதற்கு போதுமான எரிபொருள் இல்லை. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    இதனால் இலங்கையில் இருந்து மெல்போர்ன், சிட்னி, டோக்கியோ போன்ற வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களுக்கு வழியில் சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்கான உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான தொகையை இலங்கை விமான நிறுவனங்கள் செலுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து மே மாதம் 23-ந் தேதி கொழும்பில் இருந்து டோக்கியோ சென்ற 297 இருக்கைகள் கொண்ட பெரிய இலங்கை விமானம் சென்னை விமான நிலையத்தில் சுமார் 40 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு அதற்கு வேண்டிய எரிபொருளை நிரப்பியது. பின்னர் அந்த விமானம் மீண்டும் டோக்கியோ புறப்பட்டு சென்றது

    இதேபோல் மே மாதம் 27-ந் தேதி இலங்கையில் இருந்து மெல்போர்ன் சென்ற விமானம் சென்னை விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பி சென்றது.

    மே மாதம் 27-ந் தேதி இலங்கையில் இருந்து பிராங்பேர்ட் மற்றும் சிட்னிக்கு சென்ற விமானம் திருவனந்தபுரத்தில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு சென்றது. இலங்கையில் இருந்து 357 கி.மீட்டர் தூரத்தில் இந்த விமான நிலையம் உள்ளதால் அங்கும் இலங்கை விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப்படுகிறது.

    இதற்கிடையே விமான நிலைய இயக்குனரகம் விமான நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து அங்கு செல்லும் விமானங்களில் தேவையான எரிபொருளை டேங்கரில் நிரப்பிக் கொண்டு செல்லுமாறும், இலங்கையில் எரிபொருள் நிரப்புவதை தவிர்க்கும் வகையிலும் செல்லும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.

    உற்சவர் வைகுண்டப் பெருமாள் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க ஆபரணங்கள் ஜொலிக்க சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
    காஞ்சீபுரம் குண்டவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 26-ந் தேதி அதிகாலை கொடியேற்றதுடன் தொடங்கியது.

    பிரம்மோற்சவத்தின் முக்கிய வைபவமான கருட சேவை உற்சவம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

    அதையொட்டி உற்சவர் வைகுண்டப் பெருமாள் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க ஆபரணங்கள் ஜொலிக்க சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

    அர்ச்சகர்கள் சிறப்பு ஆராதனைகள்,கற்பூர தீபாராதனைகள் காட்டினார்கள். மேள தாளங்கள் முழங்க கோவில் வெளிபிரகாரத்தை வந்தடைந்து பின்னர் பஜனை கோஷ்டியினர் பஜனை பாடல்கள் பாட, மேள தாளங்கள் முழங்கியப்படி உற்சவர் வைகுண்டப்பெருமாள் கருட வாகனத்தில் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.

    வழி நெடுகிலும் திரண்டிருந்த திரளான பக்தர்கள் பூ, வாழைப்பழம், கற்பூர தீபாராதனைகளை தாம்பூல தட்டுகளில் ஏந்தியவாறு "கோவிந்தா கோவிந்தா" என பக்தி பரவச கோஷங்களை எழுப்பினார்கள். பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானங்களும் வழங்கப்பட்டது.

    பிரம்மோற்சவ விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் செயல் அலுவலர் பூவழகி மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.
    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தி.மு.க. கவுன்சிலரை கொல்ல முயன்றது தொடர்பாக புரட்சிபாரதம் கட்சி நிர்வாகி உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கட்சிபட்டு பகுதியை சேர்ந்தவர் வீரா என்கிற வீரபத்திரன். ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 11-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். கடந்த மாதம் மர்மநபர்கள் சிலர் வீராவை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர். உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் கவுன்சிலர் வீராவுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஸ்ரீபெரும்புதூர் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை வலை வீசி தேடிவந்தனர். இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவை கைப்பற்றி விசாரணையை துவங்கினர்.

    போலீசாரின் தீவிர விசாரணையில் வீரா மீது முன்விரோதம் காரணமாக ஸ்ரீபெரும்புதூர் கட்சி பட்டு பகுதியை சேர்ந்த புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த மிதுன்சக்ரவர்த்தி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வீராவை கொலை செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது. போலீசார் இந்த வழக்கில் மிதுன் சக்கரவர்த்தி உள்பட 8 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    மேலும் சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடிவருகின்றனர். இந்த நிலையில் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ள மிதுன் சக்கரவர்த்தி (வயது 29) மற்றும் வெங்காடு பகுதியை சேர்ந்த ஆகாஷ் (வயது 23),

    வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பாலமுருகன் (வயது 29) ஆகிய மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பரண்டு சுதாகர் பரிந்துரை செய்தார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆரத்தி மூவரையும் ஜாமினில் வராத படி குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
    காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவில் வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள், வீதி உலா நடைபெற உள்ளது.
    காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது.

    தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த கோவிலில் வைகாசி விசாக பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான வைகாசி விசாகப்பெருவிழா வருகிற 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி தினந்தோறும் சிறப்பு பூஜைகள், வீதி உலா நடைபெற உள்ளது. வருகிற 5-ந்தேதி தேவேந்திர மயில் வாகனம், கோபுர சிறப்பு தரிசனம் நடைபெற உள்ளது.

    9-ந்தேதி திருத்தேர், 11-ந்தேதி மாவடி சேவை நடக்கிறது. 12-ந்தேதி திருத்தேர், விசாகம், தீர்த்த வாரி நடைபெற உள்ளது.

    வருகிற 13-ந்தேதி வள்ளி திருக்கல்யாணம், சூரன் மயில் வாகன சேவையும், 14-ந்தேதி கேடயம், மங்கள கிரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் எவரும் விடுபடாமல் பரிசோதனை முகாமில் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்யுமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் ஆர்த்தி அறிவுறுத்தினார்.
    காஞ்சிபுரம்:

    உத்திரமேரூர் வட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து ஆேலாசனை முகாம் அம்மையப்ப நல்லூர் மற்றும் மேல்துளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த முகாமில் 140 குழந்தைகளுக்கு எடை மற்றும் உயரம் அளவீடு செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    பின்னர் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கு வளர்ச்சி கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டு, குழந்தையின் ஊட்டச்சத்து வளர்ச்சி மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு சத்துமாவு, கொழுக்கட்டை மற்றும் வேர்க்கடலை பர்பி வழங்கப்பட்டது.

    ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் எவரும் விடுபடாமல் பரிசோதனை முகாமில் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்யுமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் ஆர்த்தி அறிவுறுத்தினார்.

    பின்னர் கலெக்டர் ஆர்த்தி அப்பகுதியில் உள்ள இருளர் இன குடியிருப்புக்கு சென்று அங்குள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தை ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) பிரியா ராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் கிருஷ்ணவேணி கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந் தேதி மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் கலெக்டர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
    காஞ்சிபுரம் :

    காஞ்சிபுரம்  மாவட்டத்தில் விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம்  மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் கலெக்டர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.

    இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு கலெக்டர் ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

    இத்திட்டத்தில் பதிவு செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் ஆதார் அட்டை, சிட்டா, அடங்கல், நில வரைபடம், ரேஷன் கார்டு நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-1, இணையவழி சிறு/குறு விவசாய சான்று, வங்கி கணக்கு புத்தக நகல், நிலத்தின் பரப்பளவு-பட்டா நகல் ஆகிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பதிவு செய்யலாம்.

    மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை நகல் காண்பித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று கலெக்டர் ஆர்த்தி அறிவித்து உள்ளார்.
    மதுகுடிக்க பணம் தராததால் தந்தையை வெட்டி கொலை செய்து விட்டு மகன் தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர், பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் ராமு(வயது45).இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆண்கள் உயர்நிலை பள்ளி அருகே சலூன் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ரேணுகா.

    இவர்களது மகன் தினேஷ்(20). இவர் வேலைக்கு போகாமல் குடி போதைக்கு அடிமையாக ஊர் சுற்றி வந்தார்.

    நேற்று இரவு தினேஷ் மது குடிக்க பணம் கேட்டு தந்தை ராமுவிடம் தகராறில் ஈடுபட்டார். மகனை கண்டித்து விட்டு ராமு வீட்டு மாடிக்கு சென்று தூங்கினார். இரவு மின்தடை ஏற்பட்டதால் ராமுவின் மனைவி ரேணுகாவும் மாடிக்கு வந்து தூங்கினார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை மின்சாரம் வந்துவிட்டதாக கூறி தாய் ரேணுகாவை மாடியில் இருந்து கீழே வருமாறு தினேஷ் அழைத்தார்.

    இதையடுத்து ரேணுகா வீட்டுக்குள் சென்று தூங்கினார். ஏற்கனவே மதுகுடிக்க பணம் தராததால் ஆத்திரத்தில் இருந்த தினேஷ் தூங்கி கொண்டிருந்த தந்தை ராமுவின் கழுத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டான்.

    அலறல் சத்தம் கேட்டு ரேணுகா வந்து பார்த்த போது கணவர் ராமு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய படி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய தினேஷை தேடி வருகிறார்.

    கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற தினேஷ் மாயமாகி இருந்தார். கடந்த ஆண்டு மேல்மருவத்தூர் அருகே அவனைப் பார்த்து குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

    தினேசுக்கு குடிப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் கடந்த மாதம் அவனை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த தினேசை கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் மதுகுடிக்க பணம் தராததால் அவர் தந்தை ராமுவை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×