என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளிக்கரணை-ராஜமங்கலத்தில் 3 கார்-கடையில் பதுக்கிய ஒரு டன் குட்கா பறிமுதல்- 7 பேர் கைது
வேளச்சேரி:
தமிழகத்தில் குட்கா, புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனினும் கடைகளில் புகையிலை விற்பனை தடையை மீறி நடந்து வருகிறது.
இந்த நிலையில் பள்ளிக்கரணை, துலுக்கானத்தம்மன் கோயில் தெருவில் உள்ள கடையில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் கடை மற்றும் வியாபாரியின் வீட்டில் சோதனை நடத்தினர். இதில் அங்கு மூட்டை மூட்டையாக குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக வியாபாரி ஜெயராம் என்பவரை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
கொளத்தூர், ராஜமங்கலம் பகுதியில் குட்கா, புகையிலை பொருட்கள் கைமாற்றப்படுவதாக அண்ணாநகர் துணை கமிஷனர் சிவ பிரசாத்துக்கு தகவல் கிடைத்தது.
ராஜமங்கலம் போலீஸ் நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளி சாலையில் தனிப்படை போலீசார் சொகுசு கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருந்தன.
காரில் இருந்த வாலிபர் கொடுத்த தகவலின் பேரில் அந்த வழியாக வந்த மேலும் 2 கார்களை நிறுத்தி சோதனை செய்தபோது அதிலும் குட்கா மூட்டைகள் இருந்தன. இதையடுத்து கார்களில் இருந்த 520 கிலோ குட்கா, புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக கார்களில் இருந்த கோவில்பட்டியைச் சேர்ந்த முருகன், படப்பை பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வம் , சுகுமார், ஆண்டனி பாஸ்கர், குன்றத்தூரை சேர்ந்த குமார், கார்த்திக் ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் 3 கார் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
பள்ளிக்கரணை மற்றும் ராஜமங்கலத்தில் மொத்தம் ஒரு டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.






