என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    மாமல்லபுரம் அருகே கார் மோதி கொத்தனார் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

    மாமல்லபுரம்:

    திருப்போரூரை அடுத்த மானாமதிபகுதியை சேர்ந்தவர் வீரராகவன் (வயது58) கொத்தனார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் வாணியுடன் மோட்டார் சைக்கிளில் மாமல்லபுரம் அடுத்த தேவநேரிக்கு கட்டிட வேலைக்கு சென்றார்.

    கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் வந்த போது சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வீரராகவன் பலியானார் படுகாயம் அடைந்த வாணிக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் பகுதியில் உள்ள குளத்தில் வாலிபர் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் பெரிய குளம் உள்ளது. நேற்று மாலை குளத்தில் ஆண் பிணம் மிதந்தது.

    தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து குளத்தில் மிதந்த பிணத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இறந்த நபரின் இடது கையில் சிலுவை உருவில் பச்சை குத்தியுள்ளார்.

    மேலும் வலது கையில் சாரதி என்ற பெயரும் பச்சை குத்தப்பட்டு இருந்தது. மேலும் கழுத்தில் சிலுவை அணிந்துள்ளார். பலியானவர் பற்றி விவரம் தெரிந்தால் 9498151550, 9498100274 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும்படி போலீசார் அறிவித்து உள்ளனர். #tamilnews
    சென்னை புறநகரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்த ஆந்திர மாநில கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 130 பவுன் தங்கநகை மீட்கப்பட்டது. #EngineerArrest #GoldTheft
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளில் கடந்த ஓராண்டாக அடிக்கடி அடுக்குமாடி குடியிருப்புகளில் பூட்டை உடைத்து தொடர்ந்து நகை கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் தென்சென்னை இணை கமிஷனர் மகேஸ்வரி மேற்பார்வையில் பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி தலைமையில் மடிப்பாக்கம் உதவி கமிஷனர் கெங்கைராஜ், ஆதம்பாக்கம் இன்ஸ்பெக்டர் முரளி உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது வேளச்சேரி உள்வட்ட சாலையில் நடந்து சென்றவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டவரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் பிடிபட்டவர் ஆந்திர மாநிலம் சித்தூர் யாதமாரி கிராமத்தை சேர்ந்த என்ஜினீயர் மதன்குமார் (வயது 29) என்பது தெரியவந்தது. இவர் சென்னை கோடம்பாக்கத்தில் தங்கி இருந்தார். இதனையடுத்து மதன்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    போலீசாரிடம் மதன்குமார் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படித்து உள்ளேன். சரியான வேலை எதுவும் கிடைக்கவில்லை. மேலும் உல்லாசமாக வாழ ஆசைப்பட்டேன். ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வேலைக்கு செல்லும் தம்பதிகளின் வீடுகளை நோட்டமிட்டேன். அங்கு வீடுகளின் பூட்டை உடைத்து திருடியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டேன்.

    வீடுகளில் திருடிய நகைகளை உருக்கி விற்று அதில் வரும் பணத்தில் தாய்லாந்து சென்று அங்குள்ள மசாஜ் சென்டர்களில் உல்லாசமாக இருப்பேன். சென்னையில் உள்ள வேலைக்கு செல்பவர்கள் வசிக்கும் பகுதிகள் எது? என்று இன்டர்நெட் மூலமாக தேடினேன். அப்போது ஆதம்பாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி பகுதிகளை காட்டியது.

    இதையடுத்து கடந்த ஓராண்டாக அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளில் பூட்டை உடைத்து தங்கநகை, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து அவற்றை விற்று தாய்லாந்து சென்று உல்லாசமாக இருந்து வந்தேன். வழிப்பறியில் ஈடுபட்டபோது போலீசாரிடம் சிக்கி விட்டேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மதன்குமாரிடம் இருந்து 130 பவுன் தங்க நகைகள், 2½ கிலோ வெள்ளிப்பொருட்களை போலீசார் மீட்டனர். மேலும் மதன்குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    கல்பாக்கம் அருகே சாலையில் உள்ள பள்ளத்தில் இறங்கியதால் ஆட்டோ குலுங்கியது. அதில் ஓரமாக அமர்ந்து பயணம் செய்த 1-ம் வகுப்பு மாணவனின் தலை எதிரே வந்த தனியார் கல்லூரி பஸ்சில் உரசியதில் பரிதாபமாக இறந்தான்.
    கல்பாக்கம்:

    காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகன் வெற்றிவேல்(வயது 7). இவன், கல்பாக்கம் அணுசக்தித்துறை ஊழியர் குடியிருப்பில் உள்ள கேந்திரவித்யாலயா-1 பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று காலை வெற்றிவேல், சகமாணவர்களுடன் ஆட்டோவில் கடலூர் கிராமத்தில் இருந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்தான். ஆட்டோவில் பின்இருக்கையின் ஓரத்தில் மாணவன் வெற்றிவேல் அமர்ந்து இருந்தான்.

    கல்பாக்கம் அடுத்த காத்தான்கடை கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் ஆட்டோ வந்தபோது எதிரே தனியார் கல்லூரி பஸ் ஒன்று கடலூர் கிராமம் நோக்கி வந்தது. அந்த பகுதியில் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் வளைவில் திரும்பும்போது சாலையில் உள்ள பள்ளத்தில் இறங்கியதால் ஆட்டோ குலுங்கியது.

    இதனால் ஆட்டோவில் ஓரமாக அமர்ந்து பயணம் செய்த மாணவன் வெற்றிவேலின் தலை வெளியே நீண்டது. அப்போது எதிரே வந்த கல்லூரி பஸ், ஆட்டோவில் உரசியபடி சென்றதால் பஸ் மீது மாணவனின் தலையும் உரசியதால் படுகாயம் அடைந்தான்.

    இதையடுத்து மாணவன் வெற்றிவேலை மீட்டு கல்பாக்கம் அணுசக்தி துறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவன் வெற்றிவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஆட்டோவில் இருந்த மற்ற மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்து தொடர்பாக கூவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 
    சென்னை பல்லாவரத்தில் வங்கி மேலாளர் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு, 206 பவுன் நகைகளை கொள்ளையடித்துச்சென்ற சம்பவத்தில் வேலைக்காரி மற்றும் உறவினர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். #PallavaramRobbery
    தாம்பரம்:

    ஜமீன் பல்லாவரம், கார்டன் உப்ராப் நகர், முதல் தெருவில் வசித்து வருபவர் யோகசேரன். தியாகராயநகரில் உள்ள வங்கியில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி சுப்புலட்சுமி.

    நேற்று முன்தினம் மாலை வீட்டுக்குள் புகுந்த 4 பேர் கொண்ட முகமூடி கும்பல் யோகசேரன், அவரது மனைவி சுப்புலட்சுமி, வேலைக்கார பெண் மகாராணி ஆகியோரை கட்டிப் போட்டு 206 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

    இது குறித்து பல்லாவரம் போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் வேலைக்கார பெண் மகா ராணியின் திட்டப்படி மதுரையை சேர்ந்த உறவினர் மூலம் இந்த கொள்ளையை நடத்தி இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து மகா ராணியை கடந்த 2 நாட்களாக போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து விசாரித்து வந்தனர். அப்போது அவர், பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.

    அவர் கொடுத்த தகவலின் படி கொள்ளையில் ஈடுபட்டு மதுரையில் பதுங்கி இருந்த உறவினர்கள் நாகப்பட்டினத்தை சேர்ந்த அருண் குமார் (32) மதுரையை சேர்ந்த செல்வம் (28), சுரேஷ் (26) உசிலம்பட்டி கவுதம் ஆகிய 4 பேரை இன்று காலை போலீசார் கைது செய்தனர்.

    இவர்களில் அருண்குமார் கோவையில் ரப்பர் தொழில் செய்து வருகிறார். கொள்ளையடித்த நகைகளை அவர்கள் கோவையில் உள்ள ஒரு கடையில் அடகு வைத்திருப்பது தெரிந்தது.

    தனிப்படை போலீசார் கோவைக்கு விரைந்து சென்று இன்று மதியம் 206 பவுன் நகையை மீட்டனர்.

    வங்கி மேலாளர் யோக சேரனின் சொந்த ஊர் மதுரை ஆகும். கடந்த 2 மாதத்துக்கு முன்பு அவர் சொந்த ஊருக்கு சென்ற போது பக்கத்து வீட்டை சேர்ந்த மகாராணியை வீட்டு வேலை செய்ய பல்லாவரத்துக்கு அழைத்து வந்து இருக்கிறார்.

    வீட்டில் அவருக்கு கீழ் பகுதியில் தங்க இடம் ஒதுக்கி இருந்தார். தினமும் காலையும், மாலையும் யோகசேரன் தங்கி உள்ள அறையை சுத்தம் செய்தார்.

    கொள்ளை நடந்த வீடு.

    மதுரையில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்பதற்காக யோக சேரன் வங்கி லாக்கரில் இருந்த மகளின் நகை உள்பட 206 பவுன் நகையை வீட்டுக்கு எடுத்து வந்தார்.

    இதனை கண்ட மகாராணிக்கு நகை மீது ஆசை ஏற்பட்டது. அதனை எப்படியாவது கொள்ளையடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

    இது பற்றி மகாராணி கோவையில் உள்ள உறவினர் அருண்குமாருக்கு தகவல் தெரிவித்தார். அவரும் உறவினர்கள் செல்வம், சுரேஷ், கவுதம் துணையோடு கொள்ளை திட்டத்தை வகுத்தார்.

    திட்டப்படி நேற்று முன்தினம் யோக சேரன் மற்றும் அவரது குடும்பத்தினர் மதுரையில் இருந்து வீட்டிற்கு வந்ததும் அருண்குமார் உள்பட 4 பேரும் முகமூடி அணிந்தபடி வீட்டுக்கு புகுந்தனர். அவர்களுக்கு உதவியாக மகாராணியும் எந்தவித சத்தமும் போடாமல் வீட்டுக் கதவை திறந்து விட்டு இருக்கிறார்.

    போலீசாரின் விசாரணையை திசை திருப்புவதற்காக மகாராணியையும் கட்டுப்போட்டு நகையை அள்ளி சென்று இருக்கிறார்கள்.

    மதுரையில் கைதான அருண்குமார் உள்பட 4 பேரையும் இன்று மாலை போலீசார் சென்னை அழைத்து வருகிறார்கள். அவர்களுடன் மகாராணியையும் சேர்த்து வைத்து மேலும் விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    அப்போது கொள்ளை திட்டம் வகுத்தது எப்படி? அவர்களுக்கு வேறு யாரேனும் உதவினார்களா என்ற விபரம் தெரிய வரும். #PallavaramRobbery
    நீலாங்கரையில் வழிப்பறி கொள்ளையை தடுத்த விடுதி காவலாளியை கத்தியால் குத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

    சோழிங்கநல்லூர்:

    நீலாங்கரையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் காவலாளியாக வேலை பார்த்து வருபவர் ராமராஜ்.

    கடந்த 8-ந் தேதி இரவு விடுதிக்குள் 2 வாலிபர்கள் திடீரென புகுந்தனர். அவர்கள் அங்கு தங்கி இருந்த சுற்றுலா பயணிகளை கத்தி முனையில் மிரட்டி கொள்ளையில் ஈடுபட முயன்றனர்.

    இதனை ராமராஜ் தடுக்க முயன்றார். உடனே மர்ம கும்பல் அவரை கத்தியால் கழுத்தில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த ராமராஜுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்த போது அதில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகி இருந்தது. இதனை வைத்து வெட்டுவாங்கேனி பகுதியை சேர்ந்த நாகராஜ், பெரிய நீலாங்கரை குப் பத்தை சேர்ந்த ராஜேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    நீலாங்கரை அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

    சோழிங்கநல்லூர்:

    நீலாங்கரையை அடுத்த வெட்டுவாங்கேனி பகுதியில் கஞ்சா விற்பதாக நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜனுக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சவுந்தரராஜன், முரளி, பானுப்பிரியா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய பானுபிரியாவின் கணவன் காத்தவ ராயனை போலீசார் தேடி வருகின்றனர்.

    கூடுவாஞ்சேரி மற்றும் மறைமலைநகர் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடி பாதி விலைக்கு விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

    கூடுவாஞ்சேரி:

    கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், ஓட்டேரி பகுதிகளில் வீட்டின் முன்பு பஜார் வீதி மற்றும் அரசு அலுவலகங்கள் முன்பு நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களை நோட்டமிட்டு ஒரு கும்பல் தொடர்ந்து திருடி வந்தது.

    இது குறித்து கூடுவாஞ்சேரி, ஓட்டேரி, மறைமலைநகர் போலீஸ் நிலையங்களுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின்படி வண்டலூர் டி.எஸ்.பி. வளவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், பாஸ்கர், நந்த கோபால் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் கேளம்பாக்கத்தை சேர்ந்த பழனிதங்கம் (20), கூடுவாஞ்சேரி தைலாவரத்தை சேர்ந்த விஜயகுமார் (30) என்பதும், 20 நாட்களுக்கு ஒருமுறை புல்லட் மோட்டார் சைக்கிள் மற்றும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்றதும் தெரிந்தது.

    போலீசில் சிக்காமல் இருக்க அவர்கள் இந்த நூதன முறையை கையாண்டு உள்ளனர்.

    திருட்டு மோட்டார் சைக்கிள்களை அவர்கள் வில்லிவாக்கம், அயனாவரம் மற்றும் கூடுவாஞ்சேரி பகுதிகளில் பாதி விலைக்கு விற்று உள்ளனர்.

    மேலும் மோட்டார் சைக்கிள்களை விற்று பணம் கொண்டு வருவதற்காக தைலாவரத்தை சேர்ந்த தினேஷ்குமார் (28) என்பவரை கூட்டாளியாக சேர்த்து உள்ளனர். அவனையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 17 புல்லட் மோட்டார் சைக்கிள்கள் உள்பட மொத்தம் 26 விலை உயர் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும்.

    கைதான 3 பேரையும் போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சென்னை பல்லாவரத்தில் வங்கி மேலாளர் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு, 206 பவுன் நகைகளை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் தொடர்பாக வேலைக்கார பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #PallavaramRobbery
    தாம்பரம்:

    ஜமீன் பல்லாவரம், கார்டன் உட்ராப் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் யோகசேரன். தியாகராயநகரில் உள்ள வங்கியில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி சுப்புலட்சுமி.

    இவர்களது வீட்டின் கீழ் பகுதியில் வேலைக்கார பெண் ராணி என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை யோகசேரன், அவரது மனைவி சுப்புலட்சுமி வீட்டில் இருந்தனர்.

    அப்போது முகமூடி அணிந்த 5 பேர் கும்பல் திடீரென வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி யோகசேரன், அவரது மனைவி சுப்புலட்சுமி மற்றும் வேலைக்கார பெண் ராணி ஆகியோரை கட்டிப் போட்டனர். பின்னர் அவர்களது வாயில் துணியை திணித்து விட்டு பீரோவில் இருந்த 206 பவுன் நகையை அள்ளி தப்பி சென்று விட்டனர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முகமூடி கும்பலை பிடிக்க துணை கமி‌ஷனர் முத்துசாமி தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் விசாரணையை தொடங்கி உள்ளனர். கொள்ளையர்களின் உருவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    யோகசேரன் தனது மனைவியின் நகைகளை வங்கி லாக்கரில் வைப்பது வழக்கம். மதுரையில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் நகைகளை வங்கியில் இருந்து எடுத்து வந்திருந்தார்.

    நேற்று காலைதான் மதுரையில் இருந்து திரும்பி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில்நேற்று மதியம் வீட்டுக்கு வந்த முகப்பேரில் வசிக்கும் அவர்களது மகள் செந்தமிழ் காவியா தனது 175 பவுன் நகைகளையும் வங்கி லாக்கரில் வைக்கும்படி பெற்றோரிடம் கொடுத்து சென்று உள்ளார். அந்த நகையுடன் சேர்த்து மொத்தம் 206 பவுன் நகையை கொள்ளையர்கள் சுருட்டி சென்று விட்டனர்.

    இந்த கொள்ளையில் வேலைக்கார பெண் ராணி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. முகமூடி கொள்ளை கும்பல் கதவை தட்டிய போது ராணிதான் கதவை திறந்து விட்டு உள்ளார். அவர் கொள்ளையர்களை கண்டதும் கூச்சலிடாதது ஏன்? யோகசேரன் வீட்டில் நகை இருப்பது கொள்ளையர்களுக்கு எப்படி தெரியும் என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

    இதையடுத்து ராணியை தனியாக அழைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் திட்டமிட்டு முகமூடி கும்பலை வரவழைத்து நகையை கொள்ளையடித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து ராணியை போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். முகமூடி கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ராணியின் செல்போனை கைப்பற்றி கொள்ளை நடந்த நாளில் அவர் யார்? யாருடன் பேசினார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? யார் என்ற விபரத்தையும் சேகரித்து வருகின்றனர். #PallavaramRobbery 
    துபாயில் இருந்து சென்னை வந்த விமானங்களில் நடந்த சோதனையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த 2 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். #ChennaiAirport
    ஆலந்தூர்:

    துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ஆந்திராவை சேர்ந்த பயணி ரங்கநாதன் (42) தனது உள்ளாடையில் தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்ததாக சுங்கத்துறை அதிகாரியிடம் பிடிபட்டார். அவரிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள 140 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதேபோல துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் ஜானகிராமன் (47) என்ற பயணி எந்த ஆவணமும் இல்லாமல் 170 கிராம் தங்க நகைகள் வைத்திருந்தார். ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்படுகிறது. #ChennaiAirport
    தி.மு.க.வுக்கும் பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை கூறினார். #TamilisaiSoundararajan
    ஆலந்தூர்:

    தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை செய்வது குறித்து தமிழக அமைச்சரவை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது. ஏற்கனவே ஜனாதிபதி ஒரு முடிவை எடுத்துள்ளார். சட்ட விதிகளுக்கு உட்பட்டு கவர்னர் நடவடிக்கை எடுப்பார். இதில் வியப்பு என்னவென்றால் காங்கிரசில் பலர் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

    166-வது சட்டப்பிரிவின் கீழ் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஏன் விடுதலை செய்யவில்லை.

    மாநிலத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்த போது இந்த சட்ட விதிகளை வைத்து ஏன் விடுதலை செய்யவில்லை. இப்போதுதான் அதை செய்யுங்கள், இதை செய்யுங்கள் என்று கூறி வருகின்றனர்.

    காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு பந்த் நடத்துவதற்கு எந்த உரிமையும் இல்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ்தான் காரணம். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது எண்ணெய் நிறுவனங்களின் தொலைநோக்கு பார்வைக்கான வழிமுறைகள் இல்லை. தொலைநோக்கு பார்வையில் பெட்ரோல் - டீசல் தேவைக்காக நிர்வாகத்தின் திட்டமிடுதல் இல்லை. தற்போது மத்திய அரசு கடன்களை அடைத்ததால் இன்று பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்துள்ளது.

    மேலும் சர்வதேச அளவில் பண வீக்கம் ஒரு காரணம். பெட்ரோல் - டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர அனைத்து மாநிலங்ளும் ஏற்றுக்கொண்டு ஒத்துழைக்க வேண்டும். எங்களை பொறுத்தவரை பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கட்டுப்படுத்தப்படும்.

    தி.மு.க.வுக்கும் பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மரியாதை மற்றும் அரசியல் நாகரீகம் கருதி கலைஞர் விழாவில் கலந்து கொண்டோம்.

    தற்போது நடந்த சி.பி.ஐ. சோதனை தகவலின் அடிப்படையில் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கிறது. எந்த காலத்திலும் தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி பற்றி பேசவில்லை. பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் மறைமுக கூட்டணி உள்ளது என்று சொல்லி இருப்பது தவறு.

    இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan
    காஞ்சீபுரத்தில் வருகிற 15-ந்தேதி அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்காக வருகை தரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பது என்று மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தில் வருகிற 15-ந்தேதி அண்ணா பிறந்த நாள் விழா நடக்கிறது. இதையொட்டி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சின்ன காஞ்சீபுரம் பகுதியில் அமைந்துள்ள அண்ணா நினைவு இல்லத்திற்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் ரங்கசாமி குளம் பகுதியில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்டமான கல்வெட்டினை திறந்து வைத்து அதிமுக கொடியேற்றுகிறார்.

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிகாக கட்டப்பட்ட பல்நோக்கு கூட்ட அரங்கத்தினை திறந்து வைக்கிறார். மாலையில் காஞ்சீபுரம் பஸ் நிலையம் எதிரே நடைபெறும் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். முதல்வர் வருகை குறித்து ஆலோசனைக் கூட்டம் காஞ்சீபுரத்தில் மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத்.பா.கணேசன் தலைமையில் நடைபெற்றது.

    அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சீபுரம் மேற்கு மாவட்டம் முழுவதும் சிறப்புறக் கொண்டாடப்பட வேண்டும். முதல்வருக்கு காஞ்சீபுரம் நகர எல்லையில் மேள தாளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் அமைச்சர் பெஞ்சமின், அமைப்புச் செயலாளர்கள் வி.சோம சுந்தரம், மைதிலி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாணவரணி செயலாளர் வள்ளிநாயகம், நிர்வாகிகள் காஞ்சி பன்னீர்செல்வம், அத்திவாக்கம் ரமேஷ், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, அக்ரி நாகராஜன், குண்ண வாக்கம் கிருஷ்ணமூர்த்தி, கரூர் மாணிக்கம், ராஜசிம்மன், பாலாஜி, ஜெயராஜ், மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    ×