என் மலர்
காஞ்சிபுரம்
மாமல்லபுரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டடு நீர் நிலைகளில் கரைக்கப்படுகிறது.
மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 156 இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை முதலே பக்தர்கள் விநாயகர் சிலைகளை கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
பின்னர் அந்த சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட்டது. இந்த ஆண்டு முதன் முதலாக சினிமா படப்பிடிப்பில் பயன் படுத்தும் 120 அடி நீள டிராலியை சிலைகளை கரைக்க உபயோகப்படுத்தினர். கடற்கரைக்கு கொண்டு வரும் விநாயகர் சிலைகளை டிராலியில் வைத்து தள்ளி கடலுக்குள் கொண்டு சென்று கரைத்தனர். கடந்த ஆண்டுகளில் விநாயகர் சிலைகளை கொண்டு வருபவர்கள் அதனை கரைக்க கடற்கரையில் இருந்து 200 அடி தூரத்துக்கு தூக்கிச் செல்லும் நிலை இருந்தது. இதனால் பக்தர்கள் சிரமப்படுவதுடன் கடலுக்குள் தவறி விழுந்து காயங்கள் ஏற்படும் நிலையும் காலதாமதமும் ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து மாமல்லபுரம் டி.எஸ்.பி. சுப்பாராஜி உத்தரவின் பேரில் சிலைகளை கடற்கரை வரை பக்தர்கள் எளிதாக கொண்டு செல்ல சினிமா ஆர்ட் டைரக்டர் ராஜா, பிரபு ஆகியோரின் மேற் பார்வையில் 14 ஊழியர்கள் பணிபுரியும் 120 அடி நீள முள்ள சினிமா படப்பிடிப்பு டிராலி முதல் முறையாக மாமல்லபுரம் கடற்கரையில் பயன் படுத்தப்பட்டு வருகிறது.
இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடலோர பாதுகாப்பு படை நீச்சல் வீரர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆலந்தூர்:
பக்ரைனில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த ஜாகீர் உசேனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று உடமைகளை சோதனை செய்தனர்.
அப்போது சூட்கேசில் பலூனுக்கு காற்றடிக்கும் கருவி ஒன்று இருந்தது. அதுபற்றி ஜாகீர் உசேனிடம் கேட்ட போது தனது சொந்த பயன்பாட்டிற்காக வாங்கியதாக தெரிவித்தார். ஆனாலும் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த கருவியை கழற்றி சோதனை செய்தனர்.
அப்போது அதில் தங்கத்தை பதுக்கி கடத்தியது தெரிய வந்தது. அதில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள 1.3 கிலோ தங்கம் இருந்தது.
அவற்றை பறிமுதல் செய்து ஜாகீர் உசேனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அண்ணாவின் 110-வது பிறந்தநாளையொட்டி காஞ்சீபுரம் பஸ்நிலையம் அருகில் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை 30 மாவட்டங்களில் சிறப்பாக நடத்தி காட்டினோம். மக்கள் கூட்டம் அலைமோதியதை பொறுக்க முடியாத எதிர் கட்சியினர் மக்களிடம் தவறான தகவல்களை பரப்பிகொண்டு வருகிறார்கள்.
வரும் 22-ந்தேதி கன்னியா குமரியிலும், வரும் 30-ந்தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா நிறைவு விழா நடக்க இருக்கிறது. அப்போது அ.தி.மு.க.வின் வலுவினை நாட்டுமக்களும், எதிர்கட்சியினரும் அறிந்துகொள்வார்கள்.
கண்ணுக்கு தெரியாத காற்றில் ஊழல் செய்யும் அளவிற்கு விஞ்ஞான மூளை படைத்தவர்கள் தி.மு.க.வினர்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்பார் என அக்கட்சியினர் கூறிவரும் நிலையில் அவர் தி.மு.க.வினரால் தாக்கப்பட்டவர்களை வீடு வீடாகச் சென்று ஆறுதல் கூறி வருகின்றார்,
தி.மு.க.வினர் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பில்லை கொடுக்காமல் அதன் உரிமையாளரையே அடிக்கின்றனர். வேலூரில் ஒரு செல்போன் கடையில் செல்போன் வாங்கிவிட்டு அவரையே அடிக்கின்றனர். ஒரு அழகு நிலையத்தில் தி.மு.க. முன்னாள் மாவட்ட கவுன்சிலர் உள்ளே சென்று ஒரு பெண்ணை அடித்து உதைக்கிறார். எதிர்கட்சியாக இருக்கும்போதே இந்த நிலை என்றால் ஆளும் கட்சியாக வந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. அ.தி.மு.க.வில் மட்டும் தான் நேர்மை, பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது.
தி.மு.க. ஆட்சியில் எவ்வளவு ஊழல் நடந்தது என்று நாட்டு மக்களுக்கு தெரியும். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு ஆட்சி என்றால் அது தி.மு.க. ஆட்சிதான். அப்படிப்பட்டவர்கள் நம்மை விமர்சனம் செய்கிறார்கள்.
தி.மு.க.வில் தான் வாரிசு அரசியல் உள்ளது, அ.தி.மு.க. சாமானிய தொண்டர்களுக்கான கட்சி, இங்கு விசுவாசத்துடன் உழைப்பவர்கள் உயர் பதவிக்கு வருவார்கள். நாடாளுமன்ற தேர்தலில் தொண்டர்கள் அனைவரும் விழிப்புடன் செயல்பட்டு அனைத்து தொகுதிகளிலும் அதிக அளவில் வெற்றியை ஏற்படுத்தி தரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் எடப்பாடி பழனிசாமிக்கு மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜா பாத் பா.கணேசன் வெள்ளியிலான விநாயகர் சிலை மற்றும் வெள்ளி வீரவாளினை பரிசாக வழங்கினார். #edappadipalaniswami
அண்ணாவின் 110 வது பிறந்த நாளினை முன்னிட்டு சின்ன காஞ்சீபுரம் பகுதியில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வேளச்சேரி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விமல். ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கப் பெண் வெல்லா என்பவரை திருமணம் செய்தார். இருவரும் வேளச்சேரியில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் வெல்லா காஞ்சீபுரம் அருகே வெள்ளைக்கேட் பகுதியில் ஆடைகள் கிழிந்த நிலையில் அலங்கோலமாக போதையில் சுற்றிக்கொண்டு இருந்தார்.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் காஞ்சீபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வெல்லாவை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
போதை தெளிந்த பிறகு போலீசார் விசாரணை நடத்தினர். கணவர் விமலுக்கும், வெல்லாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. விமல் வீட்டிலேயே போதை பொருள் பயன்படுத்தி வந்ததாலும் தற்போது வேலையில்லாமல் இருந்ததாலும் தகராறு ஏற்பட்டு இருக்கிறது.
சம்பத்தன்று இருவரும் போதையில் இருந்தனர். மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த விமல் காரில் வெல்லாவை வெளியே அழைத்து சென்று இருக்கிறார். காஞ்சீபுரம் வெள்ளைக்கேட் பகுதியில் சென்றபோது காரில் இருந்து வெல்லாவை கீழே தள்ளி விட்டு சென்று விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேளச்சேரி போலீசார் வெல்லாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றனர். ஆனால் அங்கு விமல் இல்லை. வீடு காலியாக இருந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காஞ்சீபுரம் போலீசார் அமெரிக்க பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக 3 ஆட்டோ டிரைவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய கணவர் விமலையும் தேடி வருகிறார்கள்.
வெல்லாவை கிழக்கு கடற்கரை சாலை அருகே பனையூர் பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நாளை மாலை காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
காஞ்சீபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார். இதற்காக அங்கு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக காஞ்சீபுரத்துக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட எல்லையான படப்பையில் பூரண கும்ப மரியாதையுடன் மேள தாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் வாலாஜாபாத், காஞ்சீபுரம் டோல்கேட் பகுதிகளிலும் முதல்- அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா நினைவு இல்லத்திற்கு செல்லும் எடப்பாடி பழனிசாமி அங்குள்ள அண்ணா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
பின்னர் காஞ்சீபுரம் ரங்கசாமி குளம் அருகே காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் அமைக்கப்பட்டு உள்ள கல்வெட்டினைத் திறந்து வைத்து அ.தி.மு.க. கொடியினை ஏற்றி வைக்கிறார்.
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி காஞ்சீபுரம் தேரடி ஆஞ்சநேயர் கோவிலில் சாமி கும்பிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குகிறார்.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 501 சதுர அடி பரப்பளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கூட்டரங்கினையும் அவர் திறந்து வைக்கிறார்.
நிகழ்ச்சியையொட்டி காஞ்சீபுரம் மேற்கு மாவட்டத் திற்குட்பட்ட பகுதிகளில் பிரம்மாண்டமான பதாகைகள், தோரணங்கள், கட்சிக் கொடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத்.பா.கணேசன் செய்து வருகிறார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், பெஞ்சமின், கொள்கை பரப்புச் செயலாளர்வைகைச் செல்வன், மாவட்டச் செய லாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், திருக்கழுக்குன்றம் ஆறுமுகம்.
அமைப்புச் செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலி, மரகதம் குமரவேல் எம்பி, பழனி எம்.எல்.ஏ., நிர்வாகிகள் கே.யு.எஸ்.சோமசுந்தரம், வள்ளிநாயகம், காஞ்சி பன்னீர் செல்வம், குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, தும்பவனம் ஜீவானந்தம், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, அத்திவாக்கம் ரமேஷ், அக்ரி நாகராஜன், என்.பி.ஸ்டாலின், ஆர்.டி. சேகர், ஆர்.வி.ரஞ்சித்குமார், கரூர் மாணிக்கம், மனோகரன், ராஜசிம்மன், ஜெயராஜ், பாலாஜி, விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். #edappadipalanisamy
ஆலந்தூர்:
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கோவை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரபேல் போர் விமான ஊழலை கண்டித்து இன்னும் 2 நாட்களில் தமிழக மாவட்ட தலை நகரங்களில் கண்டன பேரணி நடத்தி மாவட்ட கலெக்டரிடம் மனுகொடுக்க உள்ளோம். இது நாடு முழுவதும் நடைபெறுகிறது. சென்னையில் கவர்னரை சந்தித்து இதுகுறித்து மனுகொடுக்க உள்ளோம். இதில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் கலந்து கொள்கிறார்.
அகில இந்திய அளவில் பாரத் பந்த் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தமிழகத்திலும் வெற்றிகரமாக நடந்தது. இந்த பந்த்துக்கு தமிழக அரசு ஒத்துழைக்க வில்லை. அதனால் பந்த் தோல்வி என்று சொல்லக் கூடாது. கண்ணை மூடிக் கொண்டு தோல்வி என்று சொல்பவர்கள் சொல்லட்டும்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா படுதோல்வி அடையும். பா.ஜனதா கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறி உள்ளன. தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதையும் மோடி நிறைவேற்ற வில்லை. மக்களை ஏமாற்றியுள்ளார்.
மக்கள் மோடி மீது கோபமாக இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது மோடி எப்படி அதிக இடங்களில் வெற்றி பெறுவார். மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் பகல் கனவு காண்கிறார். ராகுல்காந்தி பிரதமர் ஆவது உறுதி.
உலக அளவில் கச்சா எண்னை விலை குறைந்திருக்கும்போது தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்துள்ளது. மத்திய அரசுக்கு மக்கள் மீது அக்கறைஇல்லை. எதிர்க்கட்சிகள் மக்கள் மீது அக்கறை கொண்டு கண்டன ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துகின்றன.
அதைப்பற்றி கவலைப்படாமல் தினந்தோறும் மத்திய அரசு பெட்ரோல்- டீசல் விலையை உயர்த்தி வருகிறது. விரைவில் பெட்ரோல்-டீசல் விலை 100 ரூபாயை எட்டிவிடும்.
சுமார் 4½ ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசும், எண்ணை நிறுவனங்களும் லாபமாக பெற்று பலனடைந்துள்ளனர். இதற்கு பா.ஜனதா ஒரு விலை தர வேண்டி இருக்கும். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா படுதோல்வி அடையும்.
தமிழ்நாட்டில் எந்த கட்சி தலைவர்களுக்கும் பிரதமரை தேர்ந்தெடுக்கும் அருகதை இல்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் கூறி இருப்பது மிகவும் தவறானது. மக்களை அவமானப்படுத்தும் வகையில் அவரது பேச்சு இருக்கிறது. தமிழகத்தில் 50 எம்.பி.க்கள் இருக்கின்றனர். தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கின்றது என்று பொன்.ராதாகிருஷ்ணன் ஒத்துக் கொள்வாரா?

ராஜீவ்காந்தி படுகொலையில் ஈடுபட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே ஒரு தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. காங்கிரஸ் சார்பில் அதை நான் எதிர்த்துள்ளேன். ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்டபோது அங்கிருந்த பொதுமக்கள், காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர். பலர் ஊனமுற்று உள்ளனர். அவர்கள் எல்லாம் விடுதலை செய்யக் கூடாது என்று தினமும் கூறி வருகின்றனர்.
அந்த 7 பேரில் 4 பேர் வெளிநாட்டினர். தமிழக அரசு பரிந்துரை செய்தது தவறான முடிவு. ஆளுநர் முடிவு செய்வதில் சிரமம் என்பதால் தான் மத்திய உள்துறைக்கு அனுப்பியுள்ளார். இதில் மத்திய அரசும், உள்துறையும் முடிவு எடுக்காது என்று நம்புகிறேன். அப்படி விடுதலை செய்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.
சில அரசியல் கட்சிகள், அமைப்புகள் விடுதலை செய்யவேண்டும் என்று சொல்வதால் விடுதலை செய்யக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார். #thirunavukkarasar #rajivkillers
காரைக்காலை சேர்ந்தவர் பாலமுருகன். ரியல் எஸ்டேட் அதிபர். இவர் தனது காரில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் முகமது யூசுப் ஓட்டினார். முதலியார் குப்பம் என்ற இடத்தில் இருவரும் ஓட்டலில் சாப்பிட்டனர். டிரைவர் முகமது யூசுப் முதலில் ஓட்டலை விட்டு வெளியேறி காரில் இருந்த ரூ.25 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு காருடன் தப்பிச் சென்றார்.
கூவத்தூர் என்ற இடத்தில் காரை விட்டு விட்டு பணத்துடன் தலைமறைவாகி விட்டார். இது குறித்து கூவத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. #tamilnews
விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிட்லபாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 10 ஆயிரம் விநாயகர் சிலைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.
கண்காட்சியில் பல்வேறு வடிவங்களுடன் விநாயகர் சிலைகள் விதவிதமாக காட்சி அளிக்கிறது. இதில் அனைத்து வகை கற்களால் ஆன பிள்ளையார் சிலைகள், கண்ணாடி பிள்ளையார் சிலைகள், 25 தலைகள் 52 கைகளுடன் சாம்பசிவ கணபதி சிலை, 12 அடி உயர தும்பிக்கையை தூக்கி ஆசிர்வதிக்கும் விநாயகர், நீச்சல் குளத்தில் படகில் செல்லும் விநாயகர், ரெயில் ஓட்டும் விநாயகர், நவக்கிரகங்களை சுற்றிவரும் விநாயகர் சிலை என வித்தியாசமான சிலைகள் காண்போரை ஆச்சரியப்பட வைக்கிறது.
இந்த கண்காட்சி விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. அனுமதி இலவசம் ஆகும். கண்காட்சியை ஏராளமான பொது மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட கூடுதல் இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இதையொட்டி திருவள்ளூரில் 231, திருத்தணியில் 272, ஊத்துக்கோட்டையில் 227, பொன்னேரியில் 223, கும்மிடிப்பூண்டியில் 202 ஆகிய 5 உட்கோட்டங்களில் மொத்தம் 1155 சிலைகள் வைத்து வழிபாடு நடக்கிறது. #GaneshChaturthi
ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்தவர் சுரேஷ் (32). இவருடைய மனைவி பார்கவி என்கிற ரோகிணி (26). பெரும்பாக்கம் பகுதியில் வசித்து வந்தனர்.
சுரேஷ் சோழிங்கநல்லூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்குதிருமணாகி 3 வருடம் ஆகிறது. அஸ்மிதா என்ற 2 வயது குழந்தை உள்ளது.
திருமணத்தில் பெண் வீட்டார் சார்பாக 50 பவுன் தங்க நகை, வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், இரு சக்கர வாகனம், ஒரு கார், ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவை வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடத்தில் பெண் குழந்தை பிறந்ததால் சுரேஷ் வீட்டாரைச் சேர்ந்தவர்கள் ஆண் குழந்தை பிறக்கவில்லை என ரோகிணியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
சுரேஷ் தன் மனைவியிடம் 20 லட்சம் மதிப்பிலான புது கார், ரூ.50 லட்சம் ரொக்கம் கேட்டு தினமும் அடித்து சித்ரவதை செய்தார் என்று சொல்லப்படுகிறது.
கணவன் கொடுமையை தாங்க முடியாமல் ரோகிணி மன உளைச்சலில் இருந்தார். வீட்டில் யாரும் இல்லாதபோது மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் தகவல் கொடுத்தனர்.
போலீசார் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ரோகிணியின் கணவர் சுரேஷ் தலைமறைவாகி விட்டார். பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சுரேசை தேடி வருகிறார்கள்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை 2.50 மணிக்கு குவைத் செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது. 166 பயணிகள் உள்பட மொத்தம் 172 பேர் விமானததில் இருந்தனர்.
ஓடு பாதையில் சிறிது தூரம் விமானம் சென்ற போது எந்திரத்தில் கோளாறு இருப்பதை விமானிகள் கண்டுபிடித்தனர்.
உடனடியாக விமானத்தை மேலும் இயக்காமல் ஓடுபாதையிலேயே நிறுத்தினர். இதுபற்றி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இழுவை வண்டிகள் மூலம் விமானத்தை மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே இழுத்து வந்து நிறுத்தினர். பின்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டு விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே எந்திர கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் அதில் இருந்த 172 பேரும் தப்பினர். #ChennaiAirport
ஆலந்தூர்:
சிவகங்கை மாவட்டம் பனங்குடியை சேர்ந்தவர் முருகேசன். தற்போது இவர் சென்னை ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் 1-வது தெருவில் தங்கியுள்ளார். அங்கு 35 வருடங்களாக டீக் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவர் கணக்கு வைத்திருக்கும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிக்கு சென்று வியாபாரத்தை விரிவுபடுத்த ரூ.20 ஆயிரம் கடன் கேட்டார். அதையடுத்து அவர் வேறு வங்கியில் கடன்பெற்று இருக்கிறாரா? என வங்கி மேலாளர் பரிசோதித்து பார்த்தார்.
அப்போது ஒரு தனியார் வங்கியில் போலியான ஆவணங்கள் மூலம் இவரது பெயரில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கிரெடிட் கார்டு வாங்கி இருப்பது தெரிய வந்தது. மேலும் இவரது பெயரில் 3 போலிகம்பெனிகள் உருவாக்கி ரூ.3 லட்சத்துக்கு கடன்பெற்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
முருகேசன் பெயரில் போலி வாக்காளர் அடையாள அட்டையும், டிரைவிங் லைசன்சும் தயாரித்துள்ளனர். வேறு செல் போன் நம்பரும் பெற்றுள்ளனர். அதை வைத்து தான் கிரெடிட் கார்டு பெறப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேசன் ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் முருகேசன் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.






