என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் வரும் 28-ந் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் வேளாண்மைதுறை சம்மந்தபட்ட குறைகளை விவசாயிகள் நேரடியாகவோ அல்லது மனுவாகாவோ தெரிவிக்கலாம். மாவட்டம் முழுவதும் இருந்து விவசாயிகள் பெரும் அளவில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புகையிலை, குட்கா விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனினும் கடைகளில் புகையிலை பொருட்கள் தாராளமாக விற்கப்படுகின்றன.
அதிகாரிகள் தொடர்ந்து வேட்டை நடத்தியும் வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் புகையிலையை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதேபோல காஞ்சீபுரம் மாவட்டத்திலும் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை தாராளமாக நடக்கிறது. இதையடுத்து குட்கா, புகையிலை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் பொன்னையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பான்பராக், குட்கா பொருட்கள் விற்பனையை தமிழக அரசு தடை செய்துள்ளது. அதன்படி மாவட்டத்தில் இதுவரை 1,36,707 கிலோ பான்பராக் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளது.
உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளில் இதுவரை 2,24,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பான் பராக், குட்கா விற்பனை செய்யும் வணிகர்களின் உணவு பாதுகாப்பு உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Gutka
சோழிங்கநல்லூர்:
பெருங்குடி, திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). பால் வியாபாரி. இன்று அதிகாலை அவர் ராஜீவ்காந்தி சாலை வழியாக கல்லுக்குட்டை பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது தொடர்மழை மற்றும் சூறை காற்று காரணமாக அப்பகுதியில் சென்ற மின்வயர் அறுந்து சாலையில் கிடந்தது. இதனை கவனிக்காத சரவணன் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு இறங்கினார்.
அப்போது அங்கு தேங்கிய மழைநீரில் பாய்ந்து இருந்த மின்சாரம் சரவணன் மீது பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள மேல்மாயில் பகுதியை சேர்ந்தவர் தமிழ்வாணன் இவரது மனைவி புவனா (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
புவனா இன்று காலை வீட்டில் உள்ள துணிகளை துவைத்து வீட்டின் மேற்கூரையின் மீது காயபோட்டுள்ளார். அப்போது அருகே சென்று கொண்டிருந்த மின் கம்பி மீது தவறுதலாக கைபட்டு மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
செங்கம் அடுத்த முன்னூர் மங்கலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (65). நேற்று இரவு அவர் வீட்டில் இருந்து வெளியே வந்த போது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தார். இதில் மின்சாரம் பாய்ந்து ராஜேந்திரன் பலியானார்.
கூடுவாஞ்சேரியை அடுத்த அருங்கால் கிராமத்தை சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 3 பேர் கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பரமசிவம்(65) காரணை புதுச்சேரியை சேர்ந்த சங்கர்(45), சிதம்பரம்(40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பரமசிவத்தின் உறவினர் ஒருவரது வீட்டுக்கு இரும்பு கூரை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. இதில் சங்கரும், சிதம்பரமும், வேலை பார்த்தனர். அப்போது அங்கு வந்த சிறுமியை பரமசிவம் மிரட்டி கற்பழித்து உள்ளார். இதனை பார்த்த சங்கரும், சிதம்பரமும் இது பற்றி வெளியில் சொல்லாமல் இருக்க தங்களது ஆசைக்கும் சிறுமியை இணங்க வைக்கும் படி கூறி உல்லாசமாக இருந்து இருக்கிறார்கள். கடந்த 3 மாதத்துக்கு மேலாக சிறுமிக்கு இந்த கொடுமை நடந்துள்ளது.
தற்போது சிறுமி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் சிறுமி மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதால் கர்ப்பத்தை கலைப்பதா? அல்லது வேறு எந்த முடிவு எடுப்பது என்று டாக்டர்கள் குழப்பம் அடைந்து இருக்கிறார்கள். கோர்ட்டு உத்தரவுப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே சிறுமியை கற்பழித்த பரமசிவம் உள்பட 3 பேரையும் போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மதுராந்தகம் அருகே குருகுலம் கிராமத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான 51 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
விவசாயிகளிடம் இருந்து அரசு கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகள் இங்கு வைக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் சமீபத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 20 ஆயிரம் நெல் மூட்டைகள் குருகுலம் கிராமத்தில் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அப்படி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மீது தார்ப்பாய்கள் போட்டு பாதுகாப்புடன் மூடி வைக்கவில்லை.
இதற்கிடையே நேற்று மாலை மதுராந்தகம் பகுதியில் கன மழை பெய்தது. இந்த மழையால் குருகுலம் கிராமத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் நெல் மூட்டைகளும் நனைந்து சேதம் அடைந்தன. இதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.
இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், நெல் வாங்கும் போது ஈரப்பதம் இருந்தால் அதை அதிகாரிகள் வாங்க மறுக்கிறார்கள். ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் நெல் மூட்டைகள் நனைந்து நாசமாகியுள்ளன என்றனர்.
போரூர்:
திருமங்கலம் திருவல்லீஸ்வரர் நகர் இளங்கோ தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாலதி (வயது28). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
மாலதி கடந்த சில மாதங்களாக சிறிது மன நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. அவர் பாடியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று காலை குளியலறைக்கு சென்ற மாலதி திடீரென தனது கழுத்தை கத்தியால் அறுத்து கொண்டார். அலறல் சத்தம் கேட்டு வந்த செந்தில்குமார், ரத்த வெள்ளத்தில் மனைவி மாலதி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். சிகிச்சை பலனின்றி மாலதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்த ஆப்பூரில் 120 ஆண்டு பழமை வாய்ந்த கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இக்கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் ஸ்ரீதேவி, பூதேவி சாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை திருடி சென்றனர்.
இதுகுறித்து பாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆப்பூரில் உள்ள ஏரியில் அப்பகுதியைச் சேர்ந்த சங்கர் வலையை விரித்து மீன்பிடித்து போது ஒன்று சிக்கியது. அதை எடுத்து பார்த்தபோது அதற்குள் சாமி சிலைகள் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர் கிராம மக்களுக்கு தகவல் கொடுத்தார்.
அப்போது ஏரியில் மீட்கப்பட்ட சாமி சிலைகள் கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் கொள்ளைப் போன சிலைகள் என்பது தெரிய வந்தது.
சாமி சிலைகளை திருடிய கொள்ளையர்கள் அதை லாரி டியூப்பில் வைத்து ஏரியில் வீசி சென்றுள்ளனர். சில நாட்கள் கழித்து ஏரியில் இருந்து சாமி சிலைகளை எடுத்துக் கொள்ளலாம் என்ற திட்டத்துடன் இவ்வாறு செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் டி.எஸ்.பி. கந்தன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல், செங்கல்பட்டு தாசில்தார் பாக்கியலட்சுமி, வருவாய் ஆய்வாளர் கவிதா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் சாமி சிலைகளுக்கு தீபஆராதனை காட்டி பூஜை செய்து வழிபட்டனர்.
அதன்பின்னர் சாமி சிலைகள் செங்கல்பட்டு தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணைக்கு பிறகு இந்த சிலைகள் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் சாமி சிலைகளை கொள்ளையடித்தவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
பழமை வாய்ந்த கல்யாண வரதராஜபெருமாள் கோவில் பராமரிப்பு இல்லாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இக்கோவிலை பராமரிக்க வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். #Idol
போரூர்:
விருகம்பாக்கம் ஏ.வி.எம். அவன்யூ பகுதியைச் சேர்ந்தவர் சரண் பார்த்திபன். இவர் தனக்கு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தொடர்பு இருப்பதாகவும் தலைமை செயலகத்தில் அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி வந்தார்.
இதனை நம்பி அரசு வேலைக்காக சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சுந்தரேச பாண்டியன் ரூ.16.½லட்சம், ஹரிகரன் ரூ.7½ லட்சம், லட்சுமிகாந்தன் ரூ.18½லட்சம் கொடுத்தனர்.
பணத்தை பெற்றுக் கொண்ட சரண் பார்த்திபன் இதுவரை யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. மேலும் பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.
இதுகுறித்து சுந்தரேச பாண்டியன் உள்பட 3 பேரும் வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தனர். உதவி கமிஷனர் சம்பத், இன்ஸ்பெக்டர் அமுதா ஆகியோர் விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபட்ட சரண் பார்த்திபனை கைது செய்தனர்.
அவர் இதேபோல் மேலும் பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 60 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. வேறு யாருக்கும் இந்த மோசடியில் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலந்தூர்:
இலங்கையில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது இலங்கையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது நடவடிக்கையில் அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். அவரை தனி அறையில் வைத்து சோதனை செய்தபோது உள்ளாடையில் மறைத்து 300 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.9 லட்சம் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் இலங்கையில் இருந்து சென்னை வந்த மேலும் 2 விமானத்தில் பயணம் செய்த இலங்கையைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவரிடம் ரூ.11 லட்சம் மதிப்புள்ள 370 கிராம் தங்கம் மற்றும் மற்றொரு பயணியிடம் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மலேசியாவில் இருந்து சென்னைக்கு இன்று காலை வந்த விமானத்தில் சென்னையைச் சேர்ந்த ராஜேந்திரன் தங்கம் கடத்தி வந்து இருந்தார். அவரிடம் 200 கிராம் தங்கம் சிக்கியது. இதன் மதிப்பு ரூ.7 லட்சம்.
சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் சென்னையைச் சேர்ந்த அப்துல்லா என்பவரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 100 கிராம் தங்கம் மற்றும் ரூ.8½ லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த காமிராக்கள், மின்சாதன பொருட்கள் பிடிபட்டது.
சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 5 விமானங்களில் கடத்தி வந்த ரூ.37 லட்சம் மதிப்புள்ள தங்கம் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் கடத்தி வந்தவர்களிடம் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். #chennaiairport #goldseized
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம் பார்த்த சாரதி நகர் 9-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் வசித்து வருபவர் ராமன். ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் புனேயில் உள்ள மகனை பார்க்கச் சென்றார்.
நேற்று நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் ராமன் வீட்டு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை, பணத்தை அள்ளிச் சென்றனர்.
இதேபோல் அதே பகுதியில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சாப்ட்வேர் என்ஜீனியர் ஜெனீஸ், ஓய்வு பெற்ற கோ-ஆப்டெக் ஊழியர் பூபதி, குமரபுரம் 1-வது தெருவில் உள்ள என்ஜீனியர் சரவணன், ராம்பாபு ஆகியோரது வீடுகளிலும் நகை, பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போனது.
அவர்கள் அனைவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தனர். இதனை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.
எவ்வளவு நகை, பணம் கொள்ளை போனது குறித்து அவர்கள் வந்த பின்னரே தெரியவரும். லட்சக்கணக்கில் நகை, பணம் கொள்ளை போயிருக்கலாம் என்றுதெரிகிறது.
இது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பம்மல், மூவேந்தர் நகரைச் சேர்ந்தவர் வரதன் (வயது32). தாம்பரம் போக்குவரத்து பணிமனையில் மாநகர பஸ் டிரைவாக பணியாற்றினார்.
இவர் பணிக்கு செல்வதற்காக அதிகாலை மோட்டார்சைக்கிளில் வந்தார். குரோம்பேட்டை அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் வரதன் பலியானர். இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் செந்தில்வேலனை கைது செய்தனர்.
சென்னையை அடுத்த பரங்கிமலை நசரத்புரத்தை சேர்ந்தவர் கோபிநாத். இவரது மனைவி பத்மா (35). இவர்களுக்கு பரத் (13) என்ற பார்வையற்ற மகன் இருந்தான். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 12 வருடங்களாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பத்மா தனது மகனை பிளாஸ்டிக் கவரால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.
பின்னர் தானும் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். கயிறு அறுந்து விட்டதால் அதில் இருந்து உயிர் தப்பினார். இதற்கிடையே பரத்தின் உடலை கைப்பற்றிய பரங்கிமலை போலீசார் பிரேத பரிசோதனை நடத்தினர்.
சிறுவன் சாவில் சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து பத்மாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனது மகனை கொன்று விட்டு தான் தற்கொலைக்கு முயன்றதை அவர் ஒப்புக்கொண்டார். அதை தொடர்ந்து பத்மாவை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
கொலை செய்யப்பட்ட பரத்தின் உடல் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தாய் பத்மா சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவனது உடலை யாரிடம் ஒப்படைப்பது என்பதில் போலீசாருக்கு பிரச்சினை ஏற்பட்டது.
இறுதியில், அவனது தந்தை கோபிநாத்திடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்தனர். மனைவியை பிரிந்து வாழும் கோபிநாத் நசரத்புரத்தில் தான் தங்கியிருந்தார். எனவே அவரை அழைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி பேசினார். பின்னர் அவரிடம் பரத்தின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையே தனது மகனை கொலை செய்தது ஏன் என்று பத்மா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
“கடந்த 14 வருடத்துக்கு முன்பு நானும், கோபிநாத்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.
கருத்து வேறுபாடு காரணமாக 2 வருடத்தில் அவர் பிரிந்து சென்றுவிட்டார். நான் எனது மகனுடன் தாய் வீட்டில் இருந்தேன். எனது குறைந்த வருமானத்தில் மகனை வளர்த்து படிக்க வைத்தேன். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் எனது தாயாரும் இறந்துவிட்டார்.
இதனால் மிகவும் விரக்தி அடைந்தேன். எனது குறைந்த வருமானம் மூலம் குடும்பம் நடத்த முடியவில்லை. சம்பாதிக்கும் பணம் வீட்டு வாடகைக்கும், மகன் மருத்துவ செலவுக்கும் போதவில்லை. என்னை விட்டு பிரிந்து சென்ற கணவர் கோபிநாத் இதே பகுதியில் வசித்தாலும் மகன் பரத்துக்கு எந்த உதவியும் செய்யவில்லை.
நான் நம்பி இருந்த தாயும் இறந்துவிட்டார். வறுமையும் வாட்டியது. ஆகவே நான் தற்கொலை செய்து கொள்ள விரும்பினேன். நான் இறந்தால் பார்வையற்ற மகனின் கதியை நினைத்து கலங்கினேன். கண் தெரியாத மகனை விட்டு சென்றால் அவனை பிச்சை எடுக்கவிட்டு விடுவார்களோ என பயந்து பிளாஸ்டிக் கவரால் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.
நான் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றேன். ஆனால் கயிறு அறுந்துவிட்டதால் உயிர் பிழைத்தேன். அதன் பிறகும் பிளாஸ்டிக் கவரால் எனது கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றேன். ஆனால் முடியவில்லை. வறுமையின் காரணமாக எனது மகனை கொன்ற பாவி ஆகிவிட்டேன் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.






