search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pallavaram bank manager house robbery"

    சென்னை பல்லாவரத்தில் வங்கி மேலாளர் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு, 206 பவுன் நகைகளை கொள்ளையடித்துச்சென்ற சம்பவத்தில் வேலைக்காரி மற்றும் உறவினர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். #PallavaramRobbery
    தாம்பரம்:

    ஜமீன் பல்லாவரம், கார்டன் உப்ராப் நகர், முதல் தெருவில் வசித்து வருபவர் யோகசேரன். தியாகராயநகரில் உள்ள வங்கியில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி சுப்புலட்சுமி.

    நேற்று முன்தினம் மாலை வீட்டுக்குள் புகுந்த 4 பேர் கொண்ட முகமூடி கும்பல் யோகசேரன், அவரது மனைவி சுப்புலட்சுமி, வேலைக்கார பெண் மகாராணி ஆகியோரை கட்டிப் போட்டு 206 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

    இது குறித்து பல்லாவரம் போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் வேலைக்கார பெண் மகா ராணியின் திட்டப்படி மதுரையை சேர்ந்த உறவினர் மூலம் இந்த கொள்ளையை நடத்தி இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து மகா ராணியை கடந்த 2 நாட்களாக போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து விசாரித்து வந்தனர். அப்போது அவர், பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.

    அவர் கொடுத்த தகவலின் படி கொள்ளையில் ஈடுபட்டு மதுரையில் பதுங்கி இருந்த உறவினர்கள் நாகப்பட்டினத்தை சேர்ந்த அருண் குமார் (32) மதுரையை சேர்ந்த செல்வம் (28), சுரேஷ் (26) உசிலம்பட்டி கவுதம் ஆகிய 4 பேரை இன்று காலை போலீசார் கைது செய்தனர்.

    இவர்களில் அருண்குமார் கோவையில் ரப்பர் தொழில் செய்து வருகிறார். கொள்ளையடித்த நகைகளை அவர்கள் கோவையில் உள்ள ஒரு கடையில் அடகு வைத்திருப்பது தெரிந்தது.

    தனிப்படை போலீசார் கோவைக்கு விரைந்து சென்று இன்று மதியம் 206 பவுன் நகையை மீட்டனர்.

    வங்கி மேலாளர் யோக சேரனின் சொந்த ஊர் மதுரை ஆகும். கடந்த 2 மாதத்துக்கு முன்பு அவர் சொந்த ஊருக்கு சென்ற போது பக்கத்து வீட்டை சேர்ந்த மகாராணியை வீட்டு வேலை செய்ய பல்லாவரத்துக்கு அழைத்து வந்து இருக்கிறார்.

    வீட்டில் அவருக்கு கீழ் பகுதியில் தங்க இடம் ஒதுக்கி இருந்தார். தினமும் காலையும், மாலையும் யோகசேரன் தங்கி உள்ள அறையை சுத்தம் செய்தார்.

    கொள்ளை நடந்த வீடு.

    மதுரையில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்பதற்காக யோக சேரன் வங்கி லாக்கரில் இருந்த மகளின் நகை உள்பட 206 பவுன் நகையை வீட்டுக்கு எடுத்து வந்தார்.

    இதனை கண்ட மகாராணிக்கு நகை மீது ஆசை ஏற்பட்டது. அதனை எப்படியாவது கொள்ளையடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

    இது பற்றி மகாராணி கோவையில் உள்ள உறவினர் அருண்குமாருக்கு தகவல் தெரிவித்தார். அவரும் உறவினர்கள் செல்வம், சுரேஷ், கவுதம் துணையோடு கொள்ளை திட்டத்தை வகுத்தார்.

    திட்டப்படி நேற்று முன்தினம் யோக சேரன் மற்றும் அவரது குடும்பத்தினர் மதுரையில் இருந்து வீட்டிற்கு வந்ததும் அருண்குமார் உள்பட 4 பேரும் முகமூடி அணிந்தபடி வீட்டுக்கு புகுந்தனர். அவர்களுக்கு உதவியாக மகாராணியும் எந்தவித சத்தமும் போடாமல் வீட்டுக் கதவை திறந்து விட்டு இருக்கிறார்.

    போலீசாரின் விசாரணையை திசை திருப்புவதற்காக மகாராணியையும் கட்டுப்போட்டு நகையை அள்ளி சென்று இருக்கிறார்கள்.

    மதுரையில் கைதான அருண்குமார் உள்பட 4 பேரையும் இன்று மாலை போலீசார் சென்னை அழைத்து வருகிறார்கள். அவர்களுடன் மகாராணியையும் சேர்த்து வைத்து மேலும் விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    அப்போது கொள்ளை திட்டம் வகுத்தது எப்படி? அவர்களுக்கு வேறு யாரேனும் உதவினார்களா என்ற விபரம் தெரிய வரும். #PallavaramRobbery
    ×