என் மலர்
காஞ்சிபுரம்
சுங்குவார்சத்திரம் அடுத்த பாப்பான்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (47). இவர் சந்தவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டல் நடத்தி வந்தார்.
ஓட்டலில் வியாபாரம் சரியாக இல்லாததால் பல இடங்களில் கடன் வாங்கியிருந்தார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்தார். கடன் தொல்லை தாங்காமல் ராஜேஷ் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக இறந்தார். சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் விசாரணை நடத்தினார். #tamilnews
நீலாங்கரையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.
இந்த இடம் வனத்துறைக்கு சொந்தமான சதுப்பு நிலத்தில் இருப்பதாகவும் இதனால் பறவைகள் பாதிக்கப்படுவதாகவும் அதே பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி ‘அம்மா’ உணவகத்தை இடித்து அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் இன்று காலை அங்கு வந்தனர்.
இதுபற்றி அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் அம்மா உணவகத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கையில் தட்டு ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர், தே.மு.தி.க.வினர் ஏராளமானோர் திரண்டனர்.
அவர்கள் உணவகத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
நீலாங்கரை இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #AmmaUnavagam
சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். மீன் வியாபாரி.
அவர் மனைவி மற்றும் குடும்பத்துடன் 15 வருடங்களாக பெருங்குடி பகுதியில் வசித்து வந்தார்.
கடந்த 3 வருடங்களாக தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். அவரிடம் பெருங்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 205 பேர் தீபாவளி சீட்டு போட்டு இருந்தனர்.
அவர்களிடம் ரூ.1 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருந்தார். தீபாவளிக்கு முன்பு சீட்டுக்குரிய பொருட்கள் வாங்கி வருவதாக கூறி தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.
அதன் பின்னர் அவர் ஊர் திரும்பவில்லை. குடும்பத்துடன் தப்பி சென்று விட்டது தெரிய வந்தது. அதையடுத்து அவரிடம் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்துள்ளனர்.
சென்னை:
தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் நல சங்கங்களின் கூட்டமைப்பின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ராஜகோபாலின் முதலாம் ஆண்டு நினைவு நாள் சிங்கபெருமாள் கோவிலில் மாநில தலைவர் யுவராஜ் தலைமையில் நடந்தது. ராஜ கோபாலின் உருவ படத்திற்கு சங்கத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவை சங்க நிர்வாகிகள் சந்தித்து மணல் லாரி உரிமையாளர்கள் தீர்மானத்தின் மனுவை அளித்தோம்.
அதிக பாரம் ஏற்றிக் கொண்டு செல்லும் மணல் லாரிகள் மீது காஞ்சீபுரம் மாவட்ட வட்டார போக்கு வரத்து அதிகாரிகள் மூலம் லாரிகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
அதிக பாரம் ஏற்றிக் கொண்டு செல்லும் மணல் லாரிகளால் காஞ்சீபுரம், வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் விபத்துக்கள் முலம் அதிக உயிர் பலி ஏற்படுவதை தடுக்க வேண்டும்.
தமிழக அரசு காஞ்சீபுரம் மாவட்டத்தில் 7 மணல் குவாரிகளை திறக்க முடிவு செய்துள்ளது. இந்த மணல் குவாரிகளை அரசு திறந்தால் மணல் விலை அதிக அளவில் குறையும்.
6 சக்கரங்களை கொண்ட லாரிகள் 13 டன் மணல் ஏற்ற வேண்டும். ஆனால் இந்த லாரிகளில் 20 டன் மணல் வரை கொண்டு செல்லப்படுகிறது.
10 சக்கரங்களை கொண்ட லரிகள் 18 டன் மணல் கொண்டு செல்ல வேண்டும். 30 டன் மணல்களை கொண்டு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். அரசு அனுமதி அளித்த எடையுள்ள மணலை மட்டும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கனிம பொருட்களை திருட்டு தனமாக கொண்டு செல்பவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் காதர்மை தீன், அகத்தியன், கணேஷ், சையது உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கிழக்கு தாம்பரம், கண்ணகி தெருவைச் சேர்ந்த 16 வயது மாணவி, சேலையூரில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
இன்று காலை மாணவி வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். சேலையூர் புத்தர் தெரு வழியாக நடந்து சென்றபோது காரில் வந்த 3 பெண்கள் மாணவியிடம் பேச்சு கொடுத்தனர்.
திடீரென 3 பெண்களும் மாணவியை அமுக்கி பிடித்து கொண்டு அவரது வாயில் விஷத்தை ஊற்றினர். பின்னர் மாணவியை காருக்குள் இழுத்துப் போட்டு கடத்த முயன்றனர்.
இதனால் நிலைகுலைந்த மாணவி கூச்சலிட்டார். அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே சென்றவர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர்.
இதனால் உஷாரான 3 பெண்களும் அங்கிருந்து ஓடி தாங்கள் வந்த காரில் தப்பி சென்று விட்டனர்.
விஷம் குடித்ததால் மாணவியின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மாணவியை கடத்த முயன்ற பெண்கள் யார்? அதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
சம்பவம் நடந்த இடத்தில் சேலையூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சியை வைத்து தப்பி சென்ற பெண்கள் குறித்து விசாரணை நடக்கிறது.
குடும்ப தகராறில் கடத்தல் முயற்சி நடந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். மாணவிக்கு கொடுக்கப்பட்ட விஷத்தின் தன்மையை அறிய அதன் மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மாணவிக்கு நடுரோட்டில் வாயில் விஷம் ஊற்றி கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்து வேலை செய்யும் பெண்கள் தங்களது பாதுகாப்பு கருதி, தனியார் விடுதிகளில் தங்கி பணிபுரிந்து வருகிறார்கள்.
இதனால் சென்னையில் புற்றீசல் போல் பெண்கள் விடுதிகள் முளைத்துக் கொண்டே உள்ளன.
இதனை நடத்துபவர்களே பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் அக்கறை காட்டாமல் வேலியே பயிரை மேய்ந்த கதையாக குற்ற சம்பவங்களில் ஈடுபடும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன.
அந்த வகையில் சென்னை ஆதம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் செயல்பட்டு வந்த பெண்கள் விடுதியில் ஆபாச படம் எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் முதல் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அறைகளை வாடகைக்கு எடுத்து பெண்கள் தங்கும் விடுதி நடத்தி வந்தவர் சஞ்சீவ்.
இந்த விடுதியில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து 10-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் தங்கி இருந்தனர். அவர்கள் அனைவரும் சாப்ட்வேர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தனர்.
இதற்கிடையே அறைகளில் சீரமைப்பு பணி என்ற பெயரில் சஞ்சீவ் சில வேலைகளை செய்திருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் விடுதியில் தங்குவதற்காக வந்தார்.
அவர் வைத்திருந்த செல்போனில் மறைவாக வைக்கப்பட்டு இருக்கும் ரகசிய கேமிராக்களை கண்டு பிடிக்கும் ‘ஹைடன் கேமிரா, டிடெக்டர் ஆப்’ என்னும் செயலி இருந்தது.
அதன் மூலம் அவர் விடுதி அறையில் ரகசிய கேமிராக்கள் உள்ளதா? என்று ஆய்வு செய்தார். அப்போது குளியல் அறை, படுக்கை அறை, துணிகள் தொங்கவிடும் கைப்பிடி உள்ளிட்ட இடங்களில் சிறிய வகை ரகசிய கேமிராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமிராக்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக சஞ்சீவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 16 செல்போன்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், ஆதார் அட்டை, பான் அட்டை உள்ளிட்ட ஏராளமான போலி ஆவணங்கள் இருந்தன. அவை பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான சஞ்சீவ் திருச்சியை சேர்ந்தவர். தாம்பரத்தில் குடும்பத்துடன் தங்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளை சரளமாக பேசுகிறார்.
இவர் பெண்கள் தங்கும் விடுதி என்று சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து இளம்பெண்களை சேர்த்துள்ளார். பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே விடுதி இருந்ததால் போக்குவரத்து வசதியை கருதி பெண்கள் இதில் தங்கி உள்ளனர்.
சஞ்சீவிடம் இருந்து ஏராளமான போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதால் அதனை அவருக்கு தயாரித்து கொடுத்தவர்கள் யார்? போலி ஆவணம் தயாரிக்கும் கும்பலுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘இந்த இடத்தில் விடுதி செயல்படுவதே பலருக்கு தெரியாது. விடுதிக்கான எந்த அறிகுறியும் இல்லை. போர்டும் வைக்கவில்லை. இதுபோல் போலியாக செயல்படும் விடுதிகளில் பெண்கள் தங்கி பாதிக்கப்படக் கூடாது’ என்றனர். #AdambakkamHostel
மத்தியபிரதேச மாநிலம், ஹர்சத் மாவட்டத்தை சேர்ந்தவர் ஓம்பிரகாஷ் குப்தா (வயது 36). மனநலம் பாதிக்கப்பட்ட இவர் 7 ஆண்டுகளுக்கு முன் தனது சொந்த ஊரில் மாயமானார். பல ஊர்களில் மனநலம் பாதித்த நிலையில் சுற்றித்திரிந்த இவர் ரெயிலில் சென்னை வந்து பல பகுதிகளில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார்.
கடந்த மாதம் 2-ந் தேதி பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் சுற்றித்திரிந்த இவரை திரிசூலத்தை சேர்ந்த ‘மனசு’ என்ற தொண்டு நிறுவன மனநல காப்பகத்தினர் மீட்டு சிகிச்சை அளித்து வந்தனர். சில நாட்களுக்கு முன் ஓம்பிரகாஷ் குப்தா குணமடைந்தார். அப்போது அவர் தன்னுடைய வீட்டு முகவரியை தெரிவித்தார்.
தேசிய அளவில் காணாமல்போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள மாநில குற்ற ஆவண காப்பக ஆய்வாளர் தாஹீரா உதவியுடன் ஓம்பிரகாஷ் குப்தாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 7 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போனவர் இறந்திருப்பார் என அவரது குடும்பத்தினர் நினைத்திருந்தனர்.
ஆனால் அவர் நன்றாக இருப்பதை அறிந்து ‘வீடியோ கால்’ மூலம் அவருடன் பேசினார்கள். அப்போது ஆனந்த கண்ணீர் வடித்து, தங்கள் மகனை நேரில் வந்து அழைத்துச்செல்வதாக தெரிவித்தனர். அதன்படி அவரது தந்தை அனில்குமார் குப்தா நேற்று காலை மத்தியபிரதேசத்தில் இருந்து திரிசூலத்திற்கு வந்தார். அவரிடம் இருந்த அனைத்து ஆதாரங்களும் சரிபார்க்கப்பட்டது.
மனசு மனநல காப்பக இயக்குனர் சூசை ஆண்டனி, மாநில குற்ற ஆவண காப்பக ஆய்வாளர் தாஹீரா முன்னிலையில் ஓம்பிரகாஷ் குப்தா அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டார். மகனை 7 ஆண்டுகளுக்கு பிறகு மீட்டுக்கொடுத்த அனைவருக்கும் அனில்குமார் குப்தா நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து ஆய்வாளர் தாஹீரா கூறுகையில், “ஏ.டி.ஜி.பி. சீமா அகர்வால் உத்தரவின் பேரில் காணாமல்போனவர்களை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இதுவரை 140 பேர் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டு உள்ளனர்” என்றார்.
போரூர்:
வளசரவாக்கம், ராஜாஜி அவின்யூவைச் சேர்ந்தவர் ரங்கராஜன். நேற்று காலை அவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நங்க நல்லூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். மாலையில் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 25 பவுன் நகைகள் மற்றும் வங்கி பாஸ்புக் கொண்ட பையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இந்த நிலையில் இன்று காலை விருகம்பாக்கம் போலீசார் ரெட்டி தெருவில் உள்ள சாலையில் கிடந்த ரங்கராஜனின் வங்கி பாஸ்புக்கை கைப்பற்றினர். கொள்ளையர்கள் ரங்கராஜன் வீட்டில் நகைகளை எடுத்து கொண்டு பாஸ் புக்கை சாலையில் வீசி சென்று இருப்பது தெரிய வந்தது.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
தாம்பரம்:
பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் ஓட்டல் வைத்து இருந்தவர் மனோன்மணி (54). இவருடைய ஓட்டலில் திருச்சியை சேர்ந்த இளையராஜா (26). திருவண்ணாமலையை சேர்ந்த சீனிவாசன்(25) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 27-ந்தேதி 2 வாலிபர்களும் மனோன்மணியை கொலை செய்து விட்டு 15 பவுன் நகை, செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இவர்களை சங்கர்நகர் போலீசார் தேடிவந்தனர். இன்று இளையராஜா, சீனிவாசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரத்தை சேர்ந்தவர்கள் முபரக் பாஷா, தர்குனிஷா. பாலுச்செட்டிசத்திரத்தை சேர்ந்தவர் மும்தாஜ்பேகம், வாலாஜாபாத்தை சேர்ந்தவர் நிஷார் அகமது. இவர்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் ஒரு சென்ட் நிலத்தை கடந்த 1999-ம் ஆண்டு ரெயில்வே நிர்வாகம் கையகப்படுத்தியது. அதற்குரிய இழப்பீட்டு தொகையை அதிகரித்து வழங்கக்கோரி அவர்களது சார்பில் காஞ்சீபுரம் சார்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த கோர்ட்டு உடனடியாக அவர்கள் 4 பேருக்கும் தலா ரூ.37 லட்சத்து 66 ஆயிரத்து 574 இழப்பீட்டு தொகை வழங்க உத்தரவிட்டது. ஆனால் இழப்பீட்டுத் தொகை வழங்காமல் ரெயில்வே நிர்வாகம் தாமதம் செய்து வந்தது.
இதையடுத்து திருப்பதி-புதுச்சேரி ரெயில், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரின் வாகனம், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியின் வாகனம் மற்றும் கலெக்டர் அலுவலக அசையா சொத்துகளை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து காஞ்சீபுரம் புதிய ரெயில் நிலையத்திற்கு சென்ற கோர்ட்டு ஊழியர்கள் அங்கு நின்று கொண்டிருந்த திருப்பதி - புதுச்சேரி ரெயிலில் ஜப்தி செய்வதற்கான நோட்டீசை ஒட்டினர். இது போன்ற இழப்பீட்டு தொகை பிரச்சினையில் பஸ்சை அதிகாரிகள் ஜப்தி செய்வார்கள். ஆனால் ரெயிலை ஜப்தி செய்வதாக கூறி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். ரெயில்வே ஊழியர்கள் இது குறித்து ரெயில்வே நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க சொல்வதாக தெரிவித்தனர். அதன் பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
கலெக்டரின் வாகனம், வருவாய்த்துறை அதிகாரியின் வாகனம் இல்லாததால் அவற்றை ஜப்தி செய்யவில்லை. #TrainConfiscation #KanchipuramRailwayStation
போரூர்:
வளசரவாக்கம் சேனாதிபதி தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். குழந்தைகள் நல மருத்துவர். சாலிகிராமம் ஸ்டேட் பாங்க் காலனி 2-வது தெருவில் மருத்துவ மனையை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு 10 மணி அளவில் கார்த்திகேயன் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தார்.
அப்போது 3 பேர் கொண்ட கும்பல் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து கத்தி முனையில் டாக்டர் கார்த்திகேயனை கடத்த முயன்றது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து 3 பேர் கும்பலை பிடிக்க முயன்றனர்.
இதில் ஒருவன் மட்டும் சிக்கினான். மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட வாலிபரை விருகம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். அந்த வாலிபர் புதுக்கோட்டை மாவட்த்தைச் சேர்ந்த லோக பிராமன் (21) என்பது தெரியவந்தது.
விசாரணையில் டாக்டர் கார்த்திகேயனிடம் கடந்த சில மாதங்களாக பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வந்ததும், ஆனால் அப்பெண்ணின் குழந்தை இறந்து விட்டதும் அதன் காரணமாக டாக்டரை கடத்தி செல்ல வந்ததாகவும் கூறினார். அவனிடமிருந்து இரண்டு கத்தி மற்றும் கயிறு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
லோக பிராமனின் கூட்டாளிகளான சென்னையைச் சேர்ந்த சத்யா மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். டாக்டரை கடத்த வந்த மூவரும் கூலிப்படையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் பணம் பிரச்சனை காரணமாக டாக்டரை கடத்த வந்தார்களா என்கிற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
வெளிமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு பொருட்களை ஏற்றி வரும் லாரி டிரைவர்கள், தமிழக எல்லைக்கு வந்ததும் தங்களுக்கு வழிகாட்டு வதற்காக ஒருவரை தங்களுடன் அழைத்து வருவது வழக்கம்.
நேற்று, கொல்கத்தாவில் இருந்து இருசக்கர வாகனங்களை ஏற்றுக் கொண்டு ஒரு லாரி காஞ்சீபுரம் வந்தது. இதை தரண்ஷானி (34) என்பவர் ஓட்டி வந்தார்.
சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் வந்த இந்த லாரி காஞ்சீபுரம் அருகே உள்ள பாலுசெட்டி சத்திரம் என்ற இடத்தில் நின்றது. அதை ஓட்டி வந்த டிரைவர் காஞ்சீபுரத்தில் உள்ள ஷோரூம் செல்வதற்கு வழிகேட்டார்.
அப்போது, துலுங்கும் தண்டலம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி கங்கன் (55) என்பவர் வழிகாட்டு வதற்காக லாரியில் ஏறினார். அதற்கு பணம் தர வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து, அவர் அந்த லாரியில் சென்று இருசக்கர வாகனங்களை இறக்க வேண்டிய கடையை கட்டினார். லாரி புறப்படும் போது தனக்கு தர வேண்டிய பணத்தை கேட்டார். அப்போது டிரைவருக்கும் கங்கனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பணம் தராவிட்டால் லாரியை விடமாட்டேன் என்று கங்கன் லாரியை வழிமறித்தார். அப்போது டிரைவர் தரண் ஷானி அவர் மீது லாரியால் மோதினார். இதில் கங்கன் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார்.
தகவல் அறிந்ததும், பாலு செட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகான் சம்பவ இடம் சென்று வழக்கும் பதிவு செய்தார். டிரைவர் லாரியை ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச் சென்று ரோட்டிலேயே நிறுத்திவிட்டு தப்பி விட்டார்.
போலீசார், அருகில் உள்ள கிராமத்தில் பதுங்கி இருந்த டிரைவர் தரண்ஷானியை கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.






