என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேலை வழங்க கோரி வாலிபர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    காஞ்சீபுரம்:

    வாலாஜாபாத் அருகே உள்ள வாரணவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராம். கிராம உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் செல்வம் (36). இவர் தந்தை பார்த்த வேலையை தனக்கு வழங்கும்படி தாலுகா அலுவலகத்தில் மனு செய்து இருந்தார்.

    பலமுறை முயற்சி செய்தும் செல்வத்துக்கு வேலை கிடைக்கவில்லை. கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் பயன் இல்லை. இதனால் மன வருத்தம் அடைந்தார்.

    இன்று காலை காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்களிடம் கலெக்டர் பொன்னையா மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார். அங்கு வந்த செல்வம் தன் மீது மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை கண்ட போலீசார் மற்றும் பொதுமக்கள் அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர்.

    தகவல் அறிந்ததும் கலெக்டர் பொன்னையா அங்கு வந்து செல்வத்தை சந்தித்து பேசினார். வேலை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    இதையடுத்து, செல்வம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். #tamilnews
    தாம்பரம் அருகே திருமணமான 10 மாதத்தில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாம்பரம்:

    குரோம்பேட்டை கணபதிபுரத்தை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் மறைமலை நகரில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக இருக்கிறார். இவரது மனைவி சவுமியா (31). கிண்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நிர்வாக மேலாளராக பணிபுரிகிறார்.

    இவர்களுக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதில் இருந்தே இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. நேற்று இரவு இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் சவுமியா வீட்டின் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சிட்லபாக்கம் போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினார்கள். திருமணமாகி 10 மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்றது. #tamilnews
    குடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சோழிங்கநல்லூர்:

    கானத்துரை அடுத்த பனையூர், 2-வது தெருவில் வசித்து வந்தவர் சுரேஷ் (வயது 24). இவரது மனைவி ஜெயா. இவர்களது 1½ வயது மகன் கிஷோர்.

    சுரேஷ் பனையூரில் உள்ள டாக்டர் ஒருவரது வீட்டில் காவலாளியாக வேலை பார்த்தார். அவருக்கு கிடைத்த குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    இதுபற்றி அவர் மனைவி ஜெயாவிடம் அடிக்கடி கூறினார். சுரேசை மனைவி சமாதானப்படுத்தி வந்தார்.

    வறுமையால் தவித்த சுரேஷ் மகனை எப்படி காப்பாற்ற போகிறோம் என்று வருத்தம் அடைந்தார். இதையடுத்து அவர் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    நேற்று இரவு சுரேஷ் குடும்பத்துடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவில் எழுந்த அவர் மகன் கிஷோரை மட்டும் எழுப்பி வி‌ஷம் கலந்த தண்ணீரை கொடுத்தார். அதில் உயிரை கொல்லும் வி‌ஷம் கலந்து இருப்பதை அறியாத அவன் அதனை குடித்தான். சிறிது நேரத்தில் கிஷோர் அங்கேயே மயங்கி விழுந்து இறந்தான்.

    இதையடுத்து சுரேஷ் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நடந்த விபரீதம் அறியாமல் ஜெயா தூங்கிக் கொண்டு இருந்தார்.

    இன்று அதிகாலையில் அவர் எழுந்து பார்த்த போது மகன் கிஷோர் வி‌ஷம் கொடுத்து கொல்லப்பட்டு இருப்பதையும், கணவர் சுரேஷ் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கிடப்பதையும் கண்டு அலறி துடித்தார்.

    தகவல் அறிந்ததும் கானத்தூர் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் 2 பேர் உடலையும் மீட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது சுரேசின் சட்டைப்பையில் இருந்த கடிதத்தை கைப்பற்றினர். அதில் வருமானம் இல்லாததால் மகனை கொன்று தற்கொலை செய்வதாக எழுதப்பட்டு இருந்தது.

    குடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக சுரேசின் மனைவி ஜெயாவிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    திருவனந்தபுரம், மங்களூர், கவுகாத்தி உள்ளிட்ட 6 விமான நிலையங்களை தனியார் மயமாக்குவதை எதிர்த்து இன்று சென்னை விமான நிலைய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #chennaiAirport
    ஆலந்தூர்:

    திருவனந்தபுரம், மங்களூர், கவுகாத்தி, லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர் ஆகிய 6 விமான நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

    இதற்கு அனைத்து விமான நிலைய ஊழியர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விமான நிலையங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து இன்று இந்தியா முழுவதும் அனைத்து விமான நிலையங்களிலும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதேபோல் சென்னை விமான நிலையத்திலும் அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அவர்கள் விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் 1-வது வருகை நுழைவு வாயில் அருகே தொடர் உண்ணாவிரதத்தை தொடங்கினர். வருகிற புதன்கிழமை வரை இந்த உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

    விமான நிலைய ஊழியர்களின் போராட்டத்தால் விமான சேவை மற்றும் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பணிகள் பாதிக்காத வகையில் ஊழியர்கள் பகுதியாக வந்துபோராட்டத்தை தொடர்ந்து உள்ளனர். #chennaiAirport

    கேளம்பாக்கம் அடுத்த கண்டிகையில் பெற்ற மகளுக்கு 5 வருடமாக பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
    மாமல்லபுரம்:

    கேளம்பாக்கத்தை அடுத்த கண்டிகையைச் சேர்ந்தவர் காந்தி. வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியிருந்தார். இவரது 18 வயது மகள் பள்ளி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்தார்.

    இந்த நிலையில் காந்தி, வீட்டில் இருந்த மகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்தார். இது பற்றி தாயிடம் கூறக்கூடாது என்று மிரட்டினார். இதனால் பயந்து போன அவள் தனக்கு நேர்ந்த கொடுமையை குறித்து யாரிடமும் கூறாமல் இருந்தார்.

    காந்தியின் அத்துமீறல் 5 வருடத்துக்கு மேலாக நீடித்துள்ளது. ஒரு கட்டத்தில் சகிக்க முடியாத காந்தியின் மகள், இது பற்றி தனது தாயிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் கணவரை கண்டித்தார். ஆனால் காந்தி எதுபற்றியும் கண்டு கொள்ளவில்லை. மேலும் மனைவியையும், மகளையும் மிரட்டினார்.

    இது குறித்து காந்தியின் மகள் மாமல்லபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். டி.எஸ்.பி. சுப்பராஜ் உத்தரவுப்படி காந்தியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் கேளம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
    மீனம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    மீனம்பாக்கம் பகுதியில் வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதுபற்றி விசாரிக்க பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின் பேரில் மீனம்பாக்கம் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் மீனம்பாக்கம் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் திரும்பி செல்ல முயன்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 20) என்பதும் மீனம்பாக்கம், திரிசூலம் பகுதிகளில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடி வந்ததும் தெரியவந்தது.

    இதனையடுத்து மணிகண்டனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 
    காஞ்சீபுரம் அருகே பெண் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்த முசரவாக்கம் கிராமம், விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன். விவசாயி. இவரது மனைவி பார்வதியம்மாள் (60). இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தினமும் காலையில் வீட்டு வேலைகளை செய்து விட்டு 11 மணியளவில் தன்னுடைய 2 கறவை எருமை மாடுகளை திருப்புட்குழி ஏரிக்கரை பகுதிக்கு மேய்ச்சலுக்கு கூட்டி செல்வார்.

    நேற்றும் இவர் மாடுகளை ஓட்டிச் சென்றார். மாலை வெகு நேரமாகியும் இவர் வீடு திரும்பவில்லை. எனவே மகள் ரேணுகா மற்றும் அக்கம் பக்கத்தினர் சென்று ஏரிக்கரை பகுதியில் தேடினார்கள். மாடுகள் மட்டும் கட்டப்பட்டிருந்தது. இவரை காணவில்லை.

    அக்கம் பக்கம் தேடிய நிலையில், அருகில் உள்ள முட்புதரில் காதில் ரத்தம் சொட்டிய நிலையில் மர்ம மான முறையில் பார்வதியம்மாள் இறந்து கிடந்தார். அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க செயின் மற்றும் காதில் அணிந்திருந்த தங்கதோடு ஆகியவைகளை கொள்ளையடிப்பதற்காக அவரை கொலை செய்துள்ளனர்.

    இது குறித்து மகள் ரேணுகா பாலுசெட்டி சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி சம்பவ இடம் சென்று பார்வையிட்டார். தப்பியோடிய மர்ம நபர்களை பிடிக்க டிஸ்பி பாலசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    மோப்ப நாய் அஜய் சம்பவ இடத்திலிருந்து சிறிது தூரம் சென்று நின்று விட்டது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

    மதுஅருந்திவிட்டு வாலிபர்கள் யாராவது இதைச் செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக இக்கொலை நடந்துள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீஹரிகோட்டா அதிகாரியிடம் நகை, லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்த கும்பலை சி.சி.டி.வி. கேமரா பதிவு மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் பொது மேலாளராக வேலை பார்த்து வருபவர் நாகராஜ். இவர் நேற்று மதியம் 2 மணிக்கு காரில் சென்னை ஆலந்தூர் பகுதிக்கு வந்தார்.

    ஆலந்தூர் ஆசர்கானா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் காரை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார்.

    சாப்பிட்டு முடிந்ததும் திரும்பி வந்து பார்த்தார். அப்போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. அதிலிருந்த 20 கிராம் தங்க நெக்லஸ், லேப்டாப் மற்றும் அவரது மகளின் எம்.எஸ்.சி. படிப்பு சான்றிதழ் ஆகியவை கொள்ளை போயிருந்தது.

    நாகராஜ் இதுபற்றி பரங்கிமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    ஓட்டலில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 3 பேர் கார் கண்ணாடியை உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. அதை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
    கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    போரூர்:

    சூளைமேடு திருவள்ளுவர் புரத்தைச் சேர்ந்தவர் அஸ்வக் மொகைதீன். போஸ்டர் ஒட்டும் தொழிலாளி. இவர் நள்ளிரவு நெல்சன் மாணிக்கம் சாலையில் போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் கத்தியை காட்டி மிரட்டி அஸ்வக்கிடம் இருந்து செல்போனை பறித்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து அமைந்தகரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 4 பேரையும் மடக்கி பிடித்தனர்.

    அவர்கள் நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், வினோத் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட 2 சிறுவர்கள் என்பது தெரிந்தது. பல்வேறு இடங்களில் அவர்கள் செல்போன் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள், கத்தி, 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சோழிங்கநல்லூர் பகுதியில் கழிவு நீர் அகற்றும் லாரிகள் இன்று 5-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
    சோழிங்கநல்லூர்:

    சோழிங்கநல்லூர் பகுதியில் கழிவு நீர் அகற்றும் லாரிகள் இன்று 5-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. கட்டண உயர்வை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வற்புறுத்தி லாரி உரிமையாளர்கள் இந்த போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

    இதனால், சோழிங்கநல்லூரை சுற்றியுள்ள பகுதியில் கழிவு நீர் தேங்கி கிடப்பதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சோழிங்கநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ், போராட்டம் நடத்தும் கழிவு நீர் லாரி அதிபர் சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேசினார்.
    சென்னை விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு 83-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்த சம்பவம் பயணிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. #ChennaiAirport
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம், வெளிநாட்டு முனையம் பகுதியில் உள்ள சுவர் கண்ணாடிகள் உடைந்து விழும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு 83-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்த சம்பவம் பயணிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

    சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதி, 3-வது நுழைவு வாயிலில் மேல்பகுதியில் இருந்த கண்ணாடி திடீரென உடைந்து விழுந்தது. சுமார் 4 அடி நீளம், 7 அடி உயரத்தில் அந்த கண்ணாடி பெயர்ந்து இருந்தது.

    அந்த இடத்தில் பயணிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. உடைந்த கண்ணாடியை விமான நிலைய ஊழியர்கள் உடனடியாக அப்புறப்படுத்தினர்.

    கண்ணாடி உடைந்து விழுந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். #ChennaiAirport
    லஞ்ச புகாரில் சஸ்பெண்டு செய்யப்பட்ட காஞ்சீபுரம் மற்றும் கூடலூர் நகராட்சி கமி‌ஷனர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் நகராட்சியில் கமி‌ஷனராக பணியாற்றி வந்தவர் சர்தார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஊட்டி நகராட்சியில் கமி‌ஷனராக வேலை பார்த்த போது, கட்டிட அனுமதி, வரைபட அனுமதி போன்றவற்றில் முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தன.

    அப்போது அதே அலுவலகத்தில் மேலாளராக பார்வதி பணியாற்றினார். தற்போது அவர் கூடலூர் 2-ம் நிலை நகராட்சியில் கமி‌ஷனராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காஞ்சீபுரம் நகராட்சி அலுவலகம் மற்றும் சர்தாரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    அதேபோல் பார்வதி தங்கி இருந்த நகராட்சி குடியிருப்பிலும் சோதனை நடத்தப்பட்டது. இதுபற்றி விரிவான விசாரணை நடத்தி லஞ்ச ஒழிப்புத்துறை அரசுக்கு அறிக்கை அனுப்பியது.

    அதன்படி காஞ்சீபுரம் கமி‌ஷனர் சர்தார், கூடலூர் நகராட்சி கமி‌ஷனர் பார்வதி ஆகிய இருவரையும் சஸ்பெண்டு செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    காஞ்சீபுரம் நகராட்சி பொறுப்புக்கு செயற் பொறியாளர் மகேந்திரன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    கூடலூர் நகராட்சி கமி‌ஷனர் பார்வதியிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார்பில் அனுமதி கோரப்பட்டு உள்ளதால் விசாரணைக்கு ஏதுவாக அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளதாக நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் சுல்தான் தெரிவித்து உள்ளார்.

    எனவே பார்வதியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைவில் விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது. இதேபோல் சர்தாரிடமும் விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். #tamilnews
    ×