என் மலர்
செய்திகள்

காஞ்சீபுரம் அருகே பெண் படுகொலை- நகை கொள்ளை
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அடுத்த முசரவாக்கம் கிராமம், விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன். விவசாயி. இவரது மனைவி பார்வதியம்மாள் (60). இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தினமும் காலையில் வீட்டு வேலைகளை செய்து விட்டு 11 மணியளவில் தன்னுடைய 2 கறவை எருமை மாடுகளை திருப்புட்குழி ஏரிக்கரை பகுதிக்கு மேய்ச்சலுக்கு கூட்டி செல்வார்.
நேற்றும் இவர் மாடுகளை ஓட்டிச் சென்றார். மாலை வெகு நேரமாகியும் இவர் வீடு திரும்பவில்லை. எனவே மகள் ரேணுகா மற்றும் அக்கம் பக்கத்தினர் சென்று ஏரிக்கரை பகுதியில் தேடினார்கள். மாடுகள் மட்டும் கட்டப்பட்டிருந்தது. இவரை காணவில்லை.
அக்கம் பக்கம் தேடிய நிலையில், அருகில் உள்ள முட்புதரில் காதில் ரத்தம் சொட்டிய நிலையில் மர்ம மான முறையில் பார்வதியம்மாள் இறந்து கிடந்தார். அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க செயின் மற்றும் காதில் அணிந்திருந்த தங்கதோடு ஆகியவைகளை கொள்ளையடிப்பதற்காக அவரை கொலை செய்துள்ளனர்.
இது குறித்து மகள் ரேணுகா பாலுசெட்டி சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி சம்பவ இடம் சென்று பார்வையிட்டார். தப்பியோடிய மர்ம நபர்களை பிடிக்க டிஸ்பி பாலசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மோப்ப நாய் அஜய் சம்பவ இடத்திலிருந்து சிறிது தூரம் சென்று நின்று விட்டது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.
மதுஅருந்திவிட்டு வாலிபர்கள் யாராவது இதைச் செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக இக்கொலை நடந்துள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.