என் மலர்
காஞ்சிபுரம்
மாமல்லபுரம் அடுத்த பையனூர் பண்டிதமேடை சேர்ந்த ஒரு பெண் தனது 5 வயது மகளுடன் கடந்த 4-ந்தேதி திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இது தொடர்பாக அவரது கணவர் மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
விசாரணையில் மகள் வழக்கமாக செல்லும் பள்ளி வேனின் டிரைவரான மாமல்லபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் இருவரையும் கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சரவணனின் மொபைல் போன் சிக்னலை வைத்து விசாரித்தனர். இதில் அவர் கன்னியாகுமரியில் பதுங்கி இருந்ததை கண்டு பிடித்தனர்.
தனிப்படை போலீசார் விரைந்து சென்று கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜில் சிறை வைக்கப்பட்டு இருந்த இருவரையும் மீட்டு சரவணனை கைது செய்தனர்.
போலீசாரிடம் அப்பெண் கூறும்போது, ‘‘பூஞ்சேரியில் பஸ்காக காத்திருந்த எங்களை சரவணன் கடத்தி சென்று கன்னியாகுமரி லாட்ஜில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டினார். மகளை கொலை செய்து விடுவதாக மிரட்டி எனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார்’’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து பாலியல் துன்புறுத்தல், ஆள் கடல், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
பல்லாவரத்தை அடுத்த பம்மலை சேர்ந்தவர் முகமது அலி (37). சிங்கப்பூரில் வேலை பார்த்து விட்டு சமீபத்தில் திரும்பி வந்தார். ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மாமியார் சையன்பு பொழிச்சலூர் பவானி நகரில் குடியிருக்கிறார். இவர் முகமது அலியிடம் ரூ.1½ லட்சம் கடன் வாங்கியிருந்தார். கடனை திரும்பதரவில்லை.
நேற்று இரவு முகமது அலி மாமியார் சையன்புவை சந்தித்தார். அப்போது கொடுத்த கடனை திரும்பி கேட்டார். இதனால் கடும் வாக்குவாதம் நடந்தது.
10 மணியளவில் முகமது அலியின் மைத்துனர் ஒசாமா காதர் அங்கு வந்தார். தாயாரிடம் கடன் பணத்தை கேட்டு தகராறு செய்ததை தட்டிக் கேட்டார்.
இதனால் கைகலப்பு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக் கொண்டனர்.
ஒசாமாகாதருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
கத்திக் குத்தில் காயம் அடைந்த முகமது அலிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கொலை சம்பவம் தொடர்பாக முகமது அலி கைது செய்யப்பட்டார்.
அத்திவரதரை தரிசிக்க நேற்று அதிகாலை 3 மணிக்கே பக்தர்கள் குவிந்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளதால் அத்திவரதர் தரிசன இடம் வசந்த மண்டபத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்படலாம் என்ற பேச்சு பக்தர்களிடையே நிலவியது.
இது குறித்து அறநிலைய துறை அதிகாரிகளிடம் கேட்டபோது:-
அத்திவரதர் தரிசன இடத்தை மாற்றம் செய்யும் எண்ணம் இல்லை என்றனர்.
நேற்று அத்திவரதரை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாள், நடிகர்கள் ராதாரவி, தாமு, நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணன் குடும்பத்தினர் தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் விழா கடந்த 1-ந்தேதி தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. தினந்தோறும் சுமார் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.
கடந்த சனிக்கிழமை விடுமுறை நாளில் ஒரே நாளில் 2½ லட்சம் பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரிப்பால் காஞ்சிபுரம் நகரம் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. சுமார் 3 முதல் 6 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.
தரிசன முறையை பொறுத்தவரை பொது தரிசனம், வி.ஐ.பி. தரிசனம் (டோனர்பாஸ்) மற்றும் ஆன்லைனில் ரூ.500 கட்டணம் செலுத்தி பதிவு செய்து சகஸ்ர நாம தரிசனம் செய்வது போன்றவை உள்ளன.
கிழக்கு கோபுரம் வழியாக பொது தரிசனமும், மேற்கு கோபுரம் வழியாக வி.ஐ.பி. தரிசனமும் அனுமதிக்கப்படுகிறது. மேற்கு கோபுரம் வழியாக முக்கிய பிரமுகர்கள், உபயதாரர்களுக்கு அனுமதி அட்டை வழங்கி அதன் அடிப்படையில் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி போலியாக வி.ஐ.பி. தரிசன டிக்கெட் விற்கப்படுவதாக ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மதுரையை சேர்ந்த பிரபல ரவுடியான வரிச்சூர் செல்வம் தனது நண்பர்களுடன் ‘வி.ஐ.பி.’ தரிசனத்தில் அத்திவரதரை வழிபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

வரிச்சூர் செல்வத்துக்கு ‘வி.ஐ.பி’ பாஸ் கிடைத்தது எப்படி? யார் பெயரில் வாங்கப்பட்டது. அது போலியானதா? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவர், தரிசனம் செய்த நேரத்தில் கொடுத்த வி.ஐ.பி. பாஸ் நுழைவு சீட்டை கைப்பற்றி அதனை வழங்கியது யார்? என்று தனியாக விசாரிக்கிறார்கள்.
அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களில் குடும்பத்துடன் வருபவர்களை குறிவைத்து போலி வி.ஐ.பி. தரிசன டிக்கெட் விற்பனை அதிக அளவில் நடந்து வருகிறது.
பல மணி நேரம் காத்திருப்பதற்கு கஷ்டப்படும் பக்தர்களிடம் ரூ.1000 முதல் ரூ.5 ஆயிரம் வரை பணம் வசூலித்து ஒரிஜினல் பாஸ் போலவே தயாரித்து போலியான பாசை கொடுத்து வருகின்றனர்.
நுழைவு வாயிலில் சோதனை செய்யும் அதிகாரிகள் அதன் ‘பார்கோட்டை’ சரி பார்க்கும்போது அது போலியானது என்பதை கண்டு பிடித்து அவர்களை தடுத்து திருப்பி அனுப்பி வருகிறார்கள்.
பணம் கொடுத்து ஏமாந்தவர்களும் இதுபற்றி புகார் எதுவும் கொடுக்காமல் மீண்டும் பொது தரிசனத்திலேயே நின்று அத்திவரதரை வழிபட்டு செல்கின்றனர்.
இதேபோல் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்டோரிடம் போலி பாஸ் தயாரிக்கும் கும்பல் பணம் வசூலித்து ஏமாற்றி வருகிறது. ஆனால் இதுவரை இந்த போலி பாசை தயாரிப்பவர்கள் யாரும் சிக்கவில்லை.
இதற்கிடையே போலி பாஸ் விவகாரம் பற்றி கலெக்டர் பொன்னையாவுக்கும் ஏராளமான புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து நேற்று மாலை கலெக்டரே வி.ஐ.பி. தரிசன வரிசை பகுதிக்கு வந்து அனுமதி அட்டைகளை ஆய்வு செய்தார்.
அப்போது தியேட்டர் ஊழியர் ஒருவர் 6 அனுமதி அட்டைகளுடன் குடும்பத்துடன் தரிசனம் செய்ய வந்து இருந்தார்.
அந்த அனுமதி சீட்டை ‘பார்கோடை’ ஸ்கேன் செய்தபோது அது போலியான பாஸ் என்பது தெரிந்தது.
இதையடுத்து ரவியை போலீசார் கைது செய்தனர். அவருக்கு வி.ஐ.பி. பாஸ் கிடைத்தது எப்படி? இதனை வழங்கியவர் யார்? ஊழியர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடந்து வருகிறது.
அத்திவரதர் விழாவில் போலி வி.ஐ.பி. தரிசன ‘பாஸ்’ விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அத்திவரதரை முக்கிய நபர்கள் தரிசிக்க காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவின் கையெழுத்திட்ட ‘டோனர் பாஸ்’ வழங்கப்படுகிறது. இதை போலியாக தயாரித்து ஒரு சிலர் பயன்படுத்துவதாக கலெக்டருக்கு புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் கலெக்டர் அங்கு சென்று ஆய்வில் ஈடுபட்டார். அப்போது போலியான ‘டோனர் பாஸ்’ பயன்படுத்தி ஒருவர் அத்திவரதரை தரிசிக்க முயல்வது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை கலெக்டர் பிடித்து எச்சரித்து திருப்பி அனுப்பினார்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ராம்சிங். இவரது மனைவி நீலாவதி. இவர்களது 3 வயது மகன் சோம்நாத். இவர்கள் குடும்பத்துடன் சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.
நேற்று முன்தினம் அதிகாலை அவர்கள் ஒடிசா செல்வதற்காக சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந்தனர். அதிகாலை ரெயில் என்பதால் இரவே குடும்பத்துடன் வந்து ரெயில் நிலையத்தில் தூங்கினர்.
அதிகாலையில் நீலாவதி எழுந்து பார்த்த போது அருகில் தூங்கிக்கொண்டிருந்த மகன் சோம்நாத் மாயமாகி இருந்தான். அவனை ரெயில் நிலையம் முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து ராம்சிங் சென்ட்ரல் ரெயில் நிலைய போலீசில் புகார் செய்தார். போலீசார் ரெயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர்.
இதில் சிறுவனை வாலிபர் ஒருவர் கடத்தி செல்வது பதிவாகி இருந்தது. அவர் சிறுவனுடன் கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் வரை செல்லும் மின்சார ரெயிலில் ஏறுவது தெரிந்தது.
இதையடுத்து தாம்பரம் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தனர். அப்போது கடத்தப்பட்ட சிறுவனுடன் மர்ம வாலிபர் தாம்பரம் ரெயில் நிலையத்தில் உள்ள கிழக்கு பகுதி படிக்கட்டில் நடந்து செல்வது தெரிந்தது.
கண்காணிப்பு கேமிராவில் சிக்கிய வீடியோ காட்சியை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் கடத்தப்பட்ட சிறுவன் திருப்போரூரில் கண்டுபிடிக்கப்பட்டதாக ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். திருப்போரூரில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன் செங்கல்பட்டு காப்பகத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
செங்கல்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட சிறுவனை மீட்க ரெயில்வே காவல்துறை விரைந்துள்ளது.
தாம்பரம்:
சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் கடப்பேரி அற்புதம் நகரைச் சேர்ந்தவர் பிரதீப்குமார், கிழக்கு தாம்பரம் ஆதி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்.
நண்பர்களான இருவர் மீதும் பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளன. போலீசாரின் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்று இருந்தனர்.
நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சென்ற போது பிரதீப்குமார், சுரேஷ் இரு வரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக 4 பேரை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் என்ற லாரி டிரைவரை பிரதீப் குமாரும், சுரேசும் சேர்ந்து தாக்கி உள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் இருவர் மீதும் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதன் பிறகு ரங்கநாதனின் மகன் மணிகண்டன், மருமகன் பாபு ஆகியோருடன் பிரதீப்குமார், சுரேஷ் ஆகியோருக்கு விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஆயுதங்களுடன் அப்பகுதியில் சுற்றி வந்துள்ளனர். அப்போதுதான் தீர்த்துக் கட்டப்பட்டு இருக்கிறார்கள். லாரி டிரைவர் ரங்கநாதன் தாக்கப்பட்ட முன் விரோதத்தில்தான் பிரதீப்குமாரும், சுரேசும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக பிடிபட்ட 4 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
தாம்பரம்:
பெருங்களத்தூரை அடுத்த ஆலப்பாக்கத்தில் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு ஊழியராக இளவரசன் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இரவு 10 மணியளவில் 3 வாலிபர்கள் ஆட்டோவில் பெட்ரோல் பங்கிற்கு வந்தனர். அப்போது ஊழியர் இளவரசனுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் இளவரசனை அவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பங்க் ஊழியர்கள் 2 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார். சிக்கிய 2 பேரையும் ஆட்டோவுடன் அங்கு வைத்து விசாரித்து கொண்டு இருந்தனர்.
இதற்கிடையே தப்பி ஓடிய வாலிபர், திடீரென நண்பர்கள் 10-க்கும் மேற்பட்டோருடன் மோட்டார் சைக்கிள்களில்பெட்ரோல் பங்கிற்கு வந்தார். அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் இருந்த அவர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்களை சரமாரியாக தாக்கினர். பெட்ரோல் நிரப்ப வந்த வாகன ஓட்டிகளையும் அடித்து விரட்டினர்.
மேலும் பங்கில் உள்ள கண்ணாடிகளையும் நொறுக்கினர். இதனை தடுக்க முயன்ற பங்க் உரிமையாளர் ராஜீவ் காந்திக்கு கையில் வெட்டு விழுந்தது.
பின்னர் மர்ம கும்பல் பெட்ரோல் பங்கில் சிறைவைக்கப்பட்டு இருந்த நண்பர்கள் 2 பேர் மற்றும் ஆட்டோவை மீட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரிவாளுடன் மர்ம கும்பல் நடத்திய தாக்குதல் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இது சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் நெற்குன்றம் பகுதியை சேர்ந்த மணி மற்றும் கூட்டாளிகள் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து பீர்க்கன்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை 15 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
அத்திவரதரை தரிசிக்க தினந்தோறும் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நேற்றும், நேற்று முன்தினம் விடுமுறை நாள் என்பதால் காஞ்சீபுரம் நகரம் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. இரண்டு நாட்களிலும் இரவு 12 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளனர்.
விழாவின் 15-ம் நாளான இன்று அத்திவரதர் பச்சை வண்ண பட்டாடையில் அருள்பாலித்தார். இன்றும் பக்தர்கள் வருகை அதிகமாக காணப்பட்டது. அதிகாலையில் இருந்து நீண்ட நேரம் வரிசையில் நின்றதாலும், வெயிலின் தாக்கத்தாலும் 10-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்தபடி உள்ளது.
இன்று காலை இசை அமைப்பாளர் இளையராஜா, அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் தரிசனம் செய்தனர்.
இதற்கிடையே தினமும் காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும் சகஸ்ர நாமம் வழிபாடு திடீரென காலை 6.30 மணிக்கு மாற்றப்பட்டதாகவும், இதனால் பொது தரிசன பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் தகவல் பரவியது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் கேட்டபோது, ‘சகஸ்ர நாம வழிபாடு நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சாமி அலங்காரத்துக்காக காலையில் சிறிது நேரம் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன’ என்றார்.
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம் வானவம் பேட்டையில் வசிப்பவர் கள் முத்தியால் ரெட்டி தெருவில் உள்ள சுடு காட்டை பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக இந்த சுடுகாட்டை பயன்படுத்த தடை விதித்தும் 5 கி.மீட்டர் தொலைவில் உள்ள பாலகிருஷ்ணாபுரம் மற்றும் கண்ணன் காலனியில் உள்ள சுடுகாட்டை பயன்படுத்த வேண்டும் என்று மாநக ராட்சி உத்தரவிட்டது. இதையடுத்து முத்தியால் ரெட்டி தெருவில் உள்ள சுடுகாடு மூடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வானவம்பேட்டை பகுதி மக்கள் ஆலந்தூர் மண்டல சுகாதார ஆய்வாளர் வைரம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டு மனு கொடுத்தனர். ஆனால் அதன்மீது எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை 200 அடி சாலையில் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆதம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடு பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
தாம்பரம்:
மேற்கு தாம்பரம் அருகே உள்ள அற்புதம் நகரை சேர்ந்தவர்கள் பிரதீப், சுரேஷ்.
நண்பர்களான இவர்கள் இருவரும் இன்று காலை 11.30 மணி அளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அற்புதம் நகரிலேயே வைத்து ஒரு கும்பல் 2 பேரையும் வழிமறித்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதீப், சுரேஷ் இருவரும் அக்கும்பலிடம் இருந்து தப்பிப்பதற்காக மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு ஓடினார்கள். இருப்பினும் 2 பேரையும் விரட்டிச் சென்ற மர்ம நபர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் பிரதீப், சுரேஷ் இருவருக்கும் சரமாரியாக வெட்டு விழுந்தது. உடலில் பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டதால் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்கள்.
கொலை செய்யப்பட்ட 2 பேரும் சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் இளைஞர் ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை நடந்ததா? என்பது பற்றி தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இருப்பினும் கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை. மர்மம் நீடிக்கிறது.
அற்புதம் நகரில் ஊருக்குள் வைத்தே பிரதீப், சுரேஷ் இருவரும் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையுண்ட வாலிபர்களில் ஒருவரின் இடுப்பில் பெரிய பட்டாக்கத்தி சொருகி வைக்கப்பட்டுள்ளது. இதனால் 2 பேரும் வேறு யாரையாவது கொலை செய்யும் எண்ணத்தில் சுற்றி வந்தார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அத்திவரதரை தரிசிக்க 6 மணி நேரம் வரை ஆவதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகிறார்கள். வெளியூரில் இருந்து வாகனங்களில் வரும் பக்தர்கள் 4 கி.மீட்டர் தூரத்திலேயே நிறுத்தப்பட்டு இறக்கிவிடப்படுகிறார்கள்.
அத்திவரதர் தரிசனம் குறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அத்திவரதரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4½ மணி முதல் இரவு 10 மணி வரை இருந்த தரிசன நேரம் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அத்திவரதரை தரிசிக்க போலி பாஸ் பயன்படுத்தியது தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் இருந்து கோவில் வளாகத்திற்கு 20 மினி பஸ்கள் இயக்கப்பட்டன. தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆணைக்கிணங்க கூடுதலாக 10 மினி பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஏற்கனவே உள்ள மருத்துவ குழுக்களுடன் கூடுதலாக 20 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அத்திவரதரை நேற்று கேரள கவர்னர் சதாசிவம், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தஹில் ரமானி, காமெடி நடிகர் சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலர் தரிசனம் செய்தனர்.






