search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரவுடி வரிச்சூர் செல்வம்
    X
    ரவுடி வரிச்சூர் செல்வம்

    அத்திவரதர் தரிசனம் - ரவுடி வரிச்சூர் செல்வத்திற்கு விஐபி பாஸ் கிடைத்தது எப்படி?

    ரவுடி வரிச்சூர் செல்வத்துக்கு ‘வி.ஐ.பி’ பாஸ் கிடைத்தது எப்படி என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் விழா கடந்த 1-ந்தேதி தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. தினந்தோறும் சுமார் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.

    கடந்த சனிக்கிழமை விடுமுறை நாளில் ஒரே நாளில் 2½ லட்சம் பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரிப்பால் காஞ்சிபுரம் நகரம் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. சுமார் 3 முதல் 6 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.

    தரிசன முறையை பொறுத்தவரை பொது தரிசனம், வி.ஐ.பி. தரிசனம் (டோனர்பாஸ்) மற்றும் ஆன்லைனில் ரூ.500 கட்டணம் செலுத்தி பதிவு செய்து சகஸ்ர நாம தரிசனம் செய்வது போன்றவை உள்ளன.

    கிழக்கு கோபுரம் வழியாக பொது தரிசனமும், மேற்கு கோபுரம் வழியாக வி.ஐ.பி. தரிசனமும் அனுமதிக்கப்படுகிறது. மேற்கு கோபுரம் வழியாக முக்கிய பிரமுகர்கள், உபயதாரர்களுக்கு அனுமதி அட்டை வழங்கி அதன் அடிப்படையில் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி போலியாக வி.ஐ.பி. தரிசன டிக்கெட் விற்கப்படுவதாக ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மதுரையை சேர்ந்த பிரபல ரவுடியான வரிச்சூர் செல்வம் தனது நண்பர்களுடன் ‘வி.ஐ.பி.’ தரிசனத்தில் அத்திவரதரை வழிபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    வரிச்சூர் செல்வம் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அளிக்கப்பட்ட முன்னுரிமை போல் ரவுடி வரிச்சூர் செல்வமும் அனுமதிக்கப்பட்டு சாமி சிலை அருகே அமர வைக்கப்பட்டு உள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவி விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

    ரவுடி வரிச்சூர் செல்வம்

    வரிச்சூர் செல்வத்துக்கு ‘வி.ஐ.பி’ பாஸ் கிடைத்தது எப்படி? யார் பெயரில் வாங்கப்பட்டது. அது போலியானதா? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவர், தரிசனம் செய்த நேரத்தில் கொடுத்த வி.ஐ.பி. பாஸ் நுழைவு சீட்டை கைப்பற்றி அதனை வழங்கியது யார்? என்று தனியாக விசாரிக்கிறார்கள்.

    அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களில் குடும்பத்துடன் வருபவர்களை குறிவைத்து போலி வி.ஐ.பி. தரிசன டிக்கெட் விற்பனை அதிக அளவில் நடந்து வருகிறது.

    பல மணி நேரம் காத்திருப்பதற்கு கஷ்டப்படும் பக்தர்களிடம் ரூ.1000 முதல் ரூ.5 ஆயிரம் வரை பணம் வசூலித்து ஒரிஜினல் பாஸ் போலவே தயாரித்து போலியான பாசை கொடுத்து வருகின்றனர்.

    நுழைவு வாயிலில் சோதனை செய்யும் அதிகாரிகள் அதன் ‘பார்கோட்டை’ சரி பார்க்கும்போது அது போலியானது என்பதை கண்டு பிடித்து அவர்களை தடுத்து திருப்பி அனுப்பி வருகிறார்கள்.

    பணம் கொடுத்து ஏமாந்தவர்களும் இதுபற்றி புகார் எதுவும் கொடுக்காமல் மீண்டும் பொது தரிசனத்திலேயே நின்று அத்திவரதரை வழிபட்டு செல்கின்றனர்.

    இதேபோல் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்டோரிடம் போலி பாஸ் தயாரிக்கும் கும்பல் பணம் வசூலித்து ஏமாற்றி வருகிறது. ஆனால் இதுவரை இந்த போலி பாசை தயாரிப்பவர்கள் யாரும் சிக்கவில்லை.

    இதற்கிடையே போலி பாஸ் விவகாரம் பற்றி கலெக்டர் பொன்னையாவுக்கும் ஏராளமான புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து நேற்று மாலை கலெக்டரே வி.ஐ.பி. தரிசன வரிசை பகுதிக்கு வந்து அனுமதி அட்டைகளை ஆய்வு செய்தார்.

    அப்போது தியேட்டர் ஊழியர் ஒருவர் 6 அனுமதி அட்டைகளுடன் குடும்பத்துடன் தரிசனம் செய்ய வந்து இருந்தார்.

    அந்த அனுமதி சீட்டை ‘பார்கோடை’ ஸ்கேன் செய்தபோது அது போலியான பாஸ் என்பது தெரிந்தது.

    இதையடுத்து ரவியை போலீசார் கைது செய்தனர். அவருக்கு வி.ஐ.பி. பாஸ் கிடைத்தது எப்படி? இதனை வழங்கியவர் யார்? ஊழியர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடந்து வருகிறது.

    அத்திவரதர் விழாவில் போலி வி.ஐ.பி. தரிசன ‘பாஸ்’ விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×