என் மலர்
காஞ்சிபுரம்
பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்தில் 2 நாட்கள் சந்தித்து பேசினர். தலைவர்கள் வருகையொட்டி மாமல்லபுரம் நகரமே புதுப்பொலிவு பெற்றது. சாலையோர கடைகள் மற்றும் குப்பைகள் முழுவதும் அகற்றப்பட்டு பளிச்சென காட்சி அளித்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்வையிட விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
புதுப்பொலிவுடன் மின்விளங்கு அலங்காரத்தில் சிற்பங்களை பார்வையிடுவதற்காக சுற்றுலா பயணிகள் தொடர்ந்து மாமல்லபுரத்தில் குவிந்து வருகிறார்கள்.
இதற்கிடையே தலைவர்கள் வருகையொட்டி புதுப்பொலிவுடன் காணப்பட்ட மாமல்லபுரம் நகரம் தற்போது மெல்ல மெல்ல பொலிவை இழந்து வருகிறது. சாலையோர கடைகள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்படுகின்றன.
மேலும் குப்பைகளும் அகற்றப்படாமல் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. கோவளத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் பிரதமர் மோடி தங்கி இருந்த போது கடற்கரையோரத்தில் கிடந்த குப்பைகளை அகற்றினர்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆனால் கோவளம் கடற்கரை பகுதியிலும் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கிறது. இது சுற்றுலா பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது.
ஏற்கனவே செய்திருந்த நடவடிக்கை போலவே மாமல்லபுரம் நகரத்தை சுத்தமாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரி உள்ளனர்.
மாமல்லபுரம் பகுதியில் குப்பைகள் தேங்கி கிடப்பது குறித்து பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து அதனை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தற்போது ஈடுபட்டு வருகிறார்கள்.
தொழில் நிறுவனங்கள், வியாபாரிகள், பொதுமக்கள் கடலோரத்தில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மாமல்லபுரம் புராதன சின்னங்கள் அருகே தள்ளுவண்டி, பெட்டிக்கடை, ஐஸ்கிரீம், இளநீர் சைக்கிள் போன்றவை அப்பகுதியில் நிரந்தரமாக ஆக்ரமித்து வைக்க கூடாது. அப்படி வைத்தால் அவைகளை மாவட்ட நிர்வாகம் பறிமுதல் செய்யும் எனவும் மாவட்ட நிர்வாகமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் அங்காளம்மன் மீனவர் பகுதியை சேர்ந்தவர் சுதாகர்(38). நேற்று இரவு கூவத்தூரில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந் சுதாகர் உயிரிழந்தார்.
இதுபற்றி அறிந்ததும் அப்பகுதி மீனவர்கள் திடீரென்று வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் வேம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 43). லாரி டிரைவர்.
இவர் ராணிப்பேட்டையில் இருந்து பதப்படுத்தப்பட்ட தோல்களை ஏற்றிக்கொண்டு குரோம்பேட்டை, நாகல் கேனி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு இன்று அதிகாலை வந்தார்.
நாகல்கேணி பிள்ளையார் கோவில் தெருவில் வந்த போது லாரியில் பிரேக் பழுதடைந்தது. இதனால் லாரியை நிறுத்த முடியவில்லை.
இதையடுத்து மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருந்த லாரியை நிறுத்துவதற்காக டிரைவர் முருகன் வண்டியில் இருந்து கீழே குதித்தார். பின்னர் அவர் அருகில் கிடந்த பெரிய கல்லை லாரியின் முன் சக்கரத்தில் போட்டு நிறுத்த முயற்சி செய்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக லாரியின் சக்கரம் முருகனின் மீது ஏறி இறங்கியது. இதில் முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் டிரைவர் இல்லாமல் சென்ற லாரி அதிர்ஷ்டவசமாக யார் மீதும் மோதாமல் அருகில் இருந்த தனியார் தொழிற்சாலையின் சுற்றுச் சுவர் மீது மோதி நின்றது.
இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், மளிகை செட்டி பகுதியை சேர்ந்தவர் அஞ்சலி, டாக்டர். இவர் ஸ்ரீபெரும்புதூரில் தனியாக கிளினிக் நடத்தி வருகிறார்.தினமும் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு இரவில் காரில் வீடு திரும்புவது வழக்கம்.
நேற்று இரவு அஞ்சலி பணி முடிந்து காரில் திரும்பி வந்து கொண்டு இருந்தார். காரை டிரைவர் ஒருவர் ஓட்டினார்.
காஞ்சிபுரம் அருகே ராஜகுளம் பகுதியில் சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் திடீரென காரை வழிமறித்தனர்.
அவர்கள் காரின் கண்ணாடியை கத்தியால் அடித்து உடைத்தனர். பின்னர் மர்ம கும்பல் அஞ்சலியை கத்தி முனையில் மிரட்டி அவர் அணிந்திருந்த 25 பவுன் நகையை பறித்து அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொள்ளையில் அஞ்சலியும், கார் டிரைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இது குறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. கலைச்செல்வன், இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. பெண் டாக்டரை வழிமறித்து கத்தி முனையில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு 2 நாட்கள் நடந்தது. இதனையொட்டி மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் அழகுபடுத்தப்பட்டன. மேலும் மாமல்லபுரமே மின்னொளியில் ஜொலித்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக புராதன சின்னங்களை பொதுமக்கள் கண்டுகளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு நிறைவடைந்ததையடுத்து புராதன சின்னங்களை பொதுமக்கள் கண்டுகளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று காலை 9 மணி முதல் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் திரண்டனர். அதிகஅளவில் வாகனங்கள் வந்ததால் மாமல்லபுரம் கடற்கரை சாலை, கிழக்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி, டி.கே.எம். சாலை, கோவளம் சாலை உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று ஒரே நாளில் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்தனர்.
போக்குவரத்தை சரி செய்யவும், வாகன நெரிசலை கட்டுப்படுத்தவும் கிழக்கு ராஜ வீதியும், மேற்கு ராஜ வீதியும் நேற்று ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டாலும் வாகனங்கள் ஒன்றன்பின், ஒன்றாக மெதுவாக ஊர்ந்து சென்றன.

வாகன நிறுத்தும் இடங்களில் போதிய இடம் இல்லாததால் ஆங்காங்கே சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் வாகனங்கள் நகரை விட்டு வெளியே செல்ல பல மணி நேரம் ஆனது. வாகன நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசாரும் திணறினர்.
குறிப்பாக பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் புகைப்படம் எடுத்த வெண்ணை உருண்டை கல், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட இடங்களுக்கு குடும்பம், குடும்பமாய் வருகை தந்த சுற்றுலா பயணிகள் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.
வெண்ணை உருண்டை பகுதியில் குழந்தைகள் சறுக்கி விளையாடி மகிழ்ந்தனர். இதேபோல் ஐந்துரதம் பகுதியில் இரு நாட்டு தலைவர்களும் அமர்ந்து இளநீர் பருகிய இடங்களில் தாங்களும் நின்று புகைப்படம் எடுத்தனர். தற்போதும் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட முக்கிய இடங்களில் மாமல்லபுரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல்களில் சுற்றுலா பயணிகள் வெகுநேரம் காத்திருந்து உணவருந்தி சென்றனர். சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைப்பதை தடுக்க தொல்லியல் துறை சார்பில் அர்ச்சுனன் தபசு சாலையில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை மீறி கடை அமைப்பவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆக்கிரமிப்பு நபர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்றும் தொல்லியல் துறை எச்சரித்துள்ளது. அதேபோல் கடற்கரை சாலையிலும் ஆக்கிரமிப்பு செய்வோர் மீதும், சுற்றுலாத்துறைக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக ஆக்கிரமித்து ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் என விற்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய, மாநில சுற்றுலாத்துறை எச்சரித்துள்ளது.
தாம்பரம்:
தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர் குமரன் நகரைச் சேர்ந்தவர் காந்திமதி. இவர் நேற்று இரவு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு செல்வதற்காக நடந்து வந்தார். அபபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காந்திமதி அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் - இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் 2 நாள் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னையை அடுத்த சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது. மாலை 5 மணிக்கு சீன அதிபர் ஜின்பிங் அர்ஜூனன் தபசு பகுதிக்கு வந்தார். அவரை பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். இருவரும் உரையாடியபடி மெதுவாக நடந்து சென்றனர். மோடி, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி- சட்டை- துண்டு அணிந்து இருந்தார்.
அர்ஜூனன் தபசு பகுதியை சுற்றிப்பார்த்த பிறகு இருவரும் அருகில் உள்ள வெண்ணை உருண்டை பாறை, ஐந்து ரதம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப் பார்த்தனர். கலைநிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தனர். பின்னர் இரவு 7.30 மணி அளவில் அங்கேயே சீன அதிபர் ஜின்பிங்குக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
விருந்து நிகழ்ச்சி முடிவடைந்ததும், சீன அதிபர் ஜின்பிங் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலுக்கு காரில் புறப்பட்டார். அவரை பிரதமர் மோடி வழியனுப்பி வைத்தார். அவர் சென்றதும், மோடியும் கோவளத்தில் தான் தங்கியுள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலுக்கு புறப்பட்டுச் சென்றார்.

Plogging at a beach in Mamallapuram this morning. It lasted for over 30 minutes.
— Narendra Modi (@narendramodi) October 12, 2019
Also handed over my ‘collection’ to Jeyaraj, who is a part of the hotel staff.
Let us ensure our public places are clean and tidy!
Let us also ensure we remain fit and healthy. pic.twitter.com/qBHLTxtM9y
இத்தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார் மோடி. அதில், நமது பொது இடங்கள் சுத்தமாகவும் துப்புரவாகவும் இருப்பதை உறுதி செய்வோம்! நாம் உடற்திறனுடனும் ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்வோம்! என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
மாமல்லபுரம்:
பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி மாமல்லபுரம் பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய 4 சீன வாலிபர்களை போலீசார் பிடித்தனர். இதில் ஒருவரிடம் பாஸ்போர்ட் இல்லை.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 4 சீன வாலிபர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீபெரும்புதூர்:
திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் அருண் (23). இவர் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணி புரிந்தார்.
சுங்குவார் சத்திரத்தை அடுத்த ஜோதிநகர் விவேகானந்தா தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருந்தார். அவருடன் 5 பேர் தங்கியுள்ளனர்.
நேற்று பணி முடிந்து திரும்பிய அவர் தான் தங்கியுள்ள வீட்டின் 3-வது மாடிக்கு சென்றார். மொட்டை மாடியில் வைத்து அவர் மது குடித்ததாக தெரிகிறது. இதற்கிடயே இரவு பணிக்கு செல்லும் முன்பு உடன் தங்கியிருந்த பலர் இவரை பார்க்க மொட்டை மாடிக்கு வந்தனர்.
அங்கு அருண் இல்லை. வீட்டிலும் அவரை காணவில்லை. எனவே அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது அவர் தரையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். குடிபோதையில் செல்போன் பேசிய போது 3-வது மாடியில் இருந்து அருண் தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது.
நேபாளத்தை சேர்ந்தவர் அரிபாபு (வயது 46). இவர் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த காட்டரம்பாக்கம் பகுதியில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீசிங் பிரச்சினையில் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் அதே பகுதியில் உள்ள மருந்து கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு உள்ளார். பின்னர் அரிபாபு மீண்டும் வேலை செய்யும் கம்பெனிக்கு வந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் அரிபாபு பரிதாபமாக இறந்தார்.
மாமல்லபுரம்:
சீன அதிபர் ஜி ஜின்பிங் 2 நாள் அரசு முறை பயணமாக நாளை (வெள்ளிக்கிழமை) சென்னை வருகிறார்.
நாளை பிற்பகல் 1.30 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடையும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன் பின்னர் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலுக்கு சென்று தங்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மாலை 4 மணி அளவில் மாமல்லபுரத்துக்கு காரில் புறப்பட்டு செல்கிறார்.
வழிநெடுக 34 இடங்களில் சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டு சீன அதிபருக்கு பிரமாண்டமான அளவில் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.
பிரதமர் மோடியும் நாளை சென்னை வருகிறார். அவர் ஹெலிகாப்டரில் மாமல்லபுரம் சென்று கோவளத்தில் உள்ள தாஜ் ஓட்டலில் தங்குகிறார்.
நாளை மாலை 4.55 மணி அளவில் மாமல்லபுரம் சென்றடையும் சீன அதிபரை பிரதமர் மோடி வரவேற்கிறார். இருவரும் ஒன்றாக மாமல்லபுரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற சிற்பங்களை பார்வையிடுகிறார்கள்.
முதலில் அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை ஆகியவற்றை பார்த்து ரசிக்கும் இருவரும் பின்னர் காரில் புறப்பட்டு ஐந்து ரதம் இருக்கும் பகுதிக்கு செல்கிறார்கள். ஐந்து ரதத்தை பார்வையிட்ட பிறகு மாலையில் கடற்கரை கோவில் அருகில் நடைபெறும் பிரமாண்டமான நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.
கடற்கரையில் இருந்து கண்ணுக்கு எட்டிய தூரத்திலேயே பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன் காரணமாக மாமல்லபுரம் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடற்கரை கோவிலின் பின்புலத்தில் இருவரும் தனியாக அமர்ந்து பேசுவதற்கும் கலை நிகழ்ச்சிகளை பார்த்து ரசிப்பதற்கும் தனியாக கூம்பு வடிவிலான அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் செவ்வக வடிவில் இன்னொரு அரங்கமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அரங்கத்தில் சீனாவில் இருந்து வரும் உயர் அதிகாரிகளும், அதி முக்கிய பிரமுகர்களும் அமர உள்ளனர்.
இந்த இரண்டு அரங்கங்களும் குண்டு துளைக்காத வகையில் பலத்த பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. வலுவான அலுமினிய தகடுகள் மற்றும் குண்டு துளைக்காத கண்ணாடிகள் மூலமாக இரண்டு அரங்குகளும் அழகுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் இருந்துதான் சீன அதிபரும், பிரதமர் மோடியும் அங்கு நடைபெறும் நடன நாட்டிய நிகழ்ச்சிகளை ரசிக்கிறார்கள்.
சீன அதிபருக்கு தேனீர் விருந்தும், இரவு விருந்தும் அளிக்கப்படுகிறது.
கலாசேத்ரா குழுவினர் நடத்தும் நாட்டிய நிகழ்ச்சியும், நாடகமும் நடைபெறுகிறது. மாமல்லபுரத்தின் வரலாறு, பெருமைகளை விளக்கும் வகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்காக சீன அதிபரும், பிரதமரும் அமரும் குண்டு துளைக்காத அரங்குக்கு எதிரில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதில் கண்ணை கவரும் வகையில் அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளன.
இந்த மேடையின் அருகில் மத்திய மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் அமருவதற்காக தனி மேடையும் அமைக்கப்பட்டுள்ளது.
சீன அதிபரின் வருகைக்கு சென்னையில் உள்ள திபெத்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பயங்கரவாதிகள் மிரட்டலும் உள்ளது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கிண்டியில் சீன அதிபர் தங்கும் நட்சத்திர ஓட்டலையும், கோவளத்தில் பிரதமர் மோடி தங்கும் ஓட்டலையும் சீன மற்றும் மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரையில் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு சீன அதிபர் காரிலேயே பயணம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக அவர் பயணம் செய்யும் ஜி.எஸ்.டி. சாலை, அண்ணாசாலை, சர்தார்வல்லபாய் பட்டேல் சாலை, ராஜீவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகியவற்றில் சென்னை மற்றும் மாமல்லபுரம் போலீசார் கடந்த ஒரு வாரமாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டி சோழா வரையிலும், அங்கிருந்து மாமல்லபுரம் வரையிலும் சீன அதிபரை பாதுகாப்புடன் அழைத்து செல்வது தொடர்பான பாதுகாப்பு ஒத்திகையும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சாலை ஓரங்களில் உள்ள வணிக நிறுவனங்கள், ஐ.டி. கம்பெனிகள் ஆகியவற்றின் உரிமையாளர்களையும் அழைத்து பேசி ஒத்துழைப்பு தருமாறு கேட்டுள்ளனர். இதன்படி குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெறும் மாமல்லபுரம் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சீன அதிபர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு வந்து தங்குகிறார். பிரதமர் மோடி கோவளத்தில் உள்ள ஓட்டலில் தங்க உள்ளார்.
மறுநாள் (12-ந்தேதி) காலை 9 மணியளவில் சீன அதிபர் காரில் புறப்பட்டு பிரதமர் மோடி தங்கியுள்ள கோவளம் ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு இருவரும் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இதன் பிறகு சீன அதிபருக்கு பிரதமர் மோடி மதிய விருந்து அளிக்கிறார். இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். நாளை மறுநாள் (சனிக்கிழமை) மதியம் 1 மணிக்குள் இருவரது நிகழ்ச்சிகளும் முடிவடைகின்றன. இதன் பின்னர் சீன அதிபர் சென்னையில் இருந்து புறப்பட்டு நேபாளம் செல்கிறார். பிரதமர் மோடி டெல்லி செல்கிறார்.






