என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    ஒரகடம் அருகே பைக் மீது ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    செங்கல்பட்டு அடுத்த சிங்க பெருமாள் கோவிலில் இருந்து ஷேர் ஆட்டோ ஒன்று ஒரகடம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.

    ஒரகடம் அருகே சாலையில் திரும்பும்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி ஷேர் ஆட்டோ கவிழ்த்தது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த ஒரகடம் அடுத்த சென்னகுப்பம் பகுதியை சேர்ந்த ரங்கநாதன் (50), பரனுர் பகுதியை சேர்ந்த சுஜாதா, மோட்டார் சைக்கிளில் வந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த லோகநாதன் ஆகிய மூன்று பேர் படுகாயம் அடைந்து பொத்தேரி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    ரங்கநாதன் மேல் சிகிச்சைக்காக பல்லாவரம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ரங்கநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஒரகடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    சுங்குவார்சத்திரம் அருகே வேலை தேடி வந்த போது சென்னை வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    சென்னை கொளத்தூர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார்.(வயது 27). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து உள்ளார்.

    இவர் பல இடங்களில் வேலை தேடி வந்தார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. இதனால் இவருக்கும் குடும்பத்தாருக்கும் பிரச்சனை ஏற்பட்டு வந்தது.

    நேற்று முன்தினம் தினேஷ் வீட்டில் இருந்து கிளம்பி காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் பகுதியில் வேலைதேடி வந்தார். காலை உணவு எதுவும் சாப்பிடாமல் வந்ததாக தெரிகிறது.

    சுங்குவார்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே தினேஷ் மயங்கி கீழே விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் தினேசை மீட்டு ஆன்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரில் சேர்த்தனர்.

    பின்னர் தினேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்கு பதிவு செய்து தினேஷ் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தாரா? அல்லது வேறு காரணமா? அல்லது வி‌ஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு செய்து கொண்டாரா? என போலீசார் பல கோணங்களில் விசாரணை செய்து வருகிறார்கள்.
    மடிப்பாக்கத்தில் ஓட்டி பார்ப்பதாக கூறி ‘பைக்’கை கடத்திய வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    மடிப்பாக்கம் பஜார் பிரதான சாலையைச் சேர்ந்தவர் ஜான். இவர் அதே பகுதியில் மோட்டார் சைக்கிள், இரு சக்கர வாகனங்களை வாங்கி மறு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவருடைய தம்பி எட்வின் கடையில் இருந்தார்.

    அப்போது ஆட்டோவில் வந்து இறங்கிய ஒரு வாலிபர், அந்த கடையில் மோட்டார் சைக்கிள் வாங்க வந்திருப்பதாக கூறினார். ‘பல்சர்’ பைக் ஒன்றை காட்டி அது தனக்கு பிடித்திருப்பதாகவும் விலையை குறைத்து தர வேண்டும் என்றும் கேட்டார்.

    அந்த வாலிபருக்கு, அவரை அழைத்து வந்த ஆட்டோ டிரைவரும் சிபாரிசு செய்தார். இருவரும் பைக் விலையை குறைக்கும்படி பேரம் பேசினார்கள். இறுதியில் குறிப்பிட்ட விலைக்கு ‘பல்சர்’ பைக்கை வாங்குவதற்கு வாலிபர் ஒப்புக் கொண்டார்.

    அதற்கு முன்பு அந்த பைக்கை ஓட்டிப் பார்க்க விரும்புவதாக கூறினார். அதை நம்பி அவரை பைக்கை ஓட்டிப் பார்ப்பதற்கு கடைக்காரர் அனுமதித்தார். ஆட்டோ டிரைவர் அங்கு நின்று கொண்டிருந்தார். வாலிபர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார்.

    நீண்ட நேரம் ஆகியும், பைக்கில் சென்ற வாலிபர் திரும்பவில்லை. ஆட்டோ டிரைவரிடம் கேட்டபோது, அவர் யார் என்று தெரியாது. மோட்டார் சைக்கிளை விலை குறைத்து வாங்கி தந்தால் கமி‌ஷன் கொடுப்பதாக கூறினார். அதனால்தான் அவருக்கு ஆதரவாக பேசினேன்.

    திரும்பி வந்ததும் இன்னொரு இடத்துக்குப் போக வேண்டும் என்றார். இதனால் நின்று கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தார். முன்னதாக வரும் வழியில் தனது போனில் ‘பேலன்ஸ்’ இல்லை என்று கூறி ஆட்டோ டிரைவர் போனை வாங்கி பைக் கடைக்காருடன் வாலிபர் பேசியதும் தெரிய வந்தது. எனவே வாலிபர் திட்டமிட்டு இந்த நூதன பைக் கடத்தல் மோசடியை செய்திருப்பது உறுதியானது.

    இதுகுறித்து ஏழுகிணறு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் உள்ள பதிவுகளை கொண்டு ‘பைக்’ மோசடி வாலிபரை தேடி வருகிறார்கள்.

    ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேல் ஓட்டிப் பார்ப்பதாக கூறி மோட்டார் சைக்கிளுடன் சென்று விடுவார். அதே காட்சியை நினைவூட்டும் வகையில் அரங்கேறியுள்ள இந்த மோட்டார் சைக்கிள் திருட்டு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்போரூர் அருகே 12 பவுன் நகை கொள்ளையடித்த வழக்கில் 3 மாதம் தலைமறைவாக இருந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த கொட்டமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரவி என்ற டைல்ஸ் ரவி பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    கொட்டமேட்டில் உள்ள தன்னுடைய இடத்தில் புதிதாக வீடுகட்டி வருகிறார். இதை பார்ப்பதற்காக கடந்த ஜூலை மாதம் இவருடைய மனைவி ஆனந்தி (வயது 43) மகளுடன் கொட்டமேடு வந்தார்.

    அங்கு நடைபெற்று வரும் வீட்டு வேலைகளை பார்வையிட்ட பின்பு மேடவாக்கத்தைச்சேர்ந்த உறவினர் ரேவதி (42) என்பவருடன் தன்னுடைய இருசக்கரவாகனத்தில் 3 பேரும் கொட்டமேட்டிலிருந்து சிறுங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    ஆள் அரவமற்ற அப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ரேவதி கழுத்திலிருந்த 12 பவுன் நகையை பறித்தனர். 3 பேரும் கொள்ளையர்களுடன் போராடினர். இதில் ரேவதியின் 12 பவுன் செயின் பறிபோனது. ஆனால் கொள்ளையன் ஒருவனுடைய செல்போன் இவர்களுடைய கையில் சிக்கியது.

    இதுகுறித்து திருப்போரூர் போலீசில் புகார்செய்யப்பட்டது. வழக்குபதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜா இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினார்.

    செல்போன் எண்ணை வைத்து விசாரணை செய்ததில் கொள்ளையில் ஈடுபட்டது செங்கல்பட்டு அடுத்த பரனூரைச்சேர்ந்த ராஜேஷ் (வயது 28) என்பது தெரியவந்தது. இவன் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் சுமார் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

    இவனை பிடிக்க போலீசார் செல்போன் டவர் மூலம் பல்வேறு இடங்களுக்கு சென்று தேடினர். ஆனால் போலீசார் கையில் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்தான்.

    3 மாதங்களாக போலீசார் கையில் சிக்காமல் தப்பி வந்த ராஜேஷ் நேற்று முன்தினம் புதுப்பாக்கம் அருகே கைது செய்யப்பட்டான். அவனிடமிருந்து கேளம்பாக்கம் காவல்நிலைய எல்லையில் வழிப்பறி செய்த 16 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.
    திருப்போரூர் பகுதியில் ஒரேநாள் இரவில் 3 இடங்களில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த கண்ணகப் பட்டு அபிராமி நகர் பகுதியில் வசித்து வருபவர் தயாநிதி. நேற்று இரவு முன்பக்க கதவை மூட மறந்துவிட்டு தூங்க சென்றுள்ளார். அப்போது நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை -வெள்ளி குத்துவிளக்கு ரூ5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளான். 

    கண்ணகப்பட்டு மாரியம்மன்கோயில் தெருவில் வசிக்கும் கோவிந்தசாமி இவருடைய மனைவி வசந்தி நேற்று இரவு கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளார். அப்போது வீட்டிற்குள் வந்த ஒருவர் இவரது கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் தங்கநகையை பறித்துக்கொண்டு சென்றுவிட்டான்.

    இது தவிர திரெள பதியம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் அழகர்சாமி வீட்டுக்குள்ளும் நள்ளிரவு வீடு புகுந்த திருடன் அவரது மனைவி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கநகையை பறித்துக்கொண்டு சென்று விட்டான். இந்த 3 சம்பவங்கள் குறித்தும் திருப்போரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்போரூர் அடுத்த தண்டலத்தில் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த தண்டலம் பகுதியில் வசித்து வருபவர் உமாபதி (வயது 44). இவருக்கு விஜயா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். உமாபதி செங்கல்பட்டு கால்நடை மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மனைவியிடம் தகராறு செய்யவே மனைவி கோபித்துக்கொண்டு தனது குழந்தைகளுடன் அதே பகுதியில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த விரக்தியில் இருந்த உமாபதி கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடித்துவிட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போதிய பயணிகள் இல்லாததால் சென்னை - திருச்சிக்கு செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று அதிகாலை 4.55 மணிக்கு செல்ல வேண்டிய இன்டிகோ விமானம், திருச்சியில் இருந்து சென்னைக்கு காலை 8.50 மணிக்கு வர வேண்டிய இன்டிகோ விமானம் ஆகிய 2 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாததால் இன்று ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    சென்னையில் இருந்து மதுரைக்கு காலை 9 மணிக்கு செல்ல வேண்டிய ஏர்இந்தியா விமானம் எந்திர கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த விமானத்தில் செல்ல இருந்த 49 பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
    சுங்குவார்சத்திரம் அருகே பேக்கரியில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    வயலூர் அடுத்த அகரம் கிராமத்தை சேர்த்தவர் முத்து. இவர் சுங்குவார் சத்திரம் பஜார் பகுதியில் பேக்கரி கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் பேக்கரி கடையின் பூட்டை உடைத்து கல்லா பெட்டியில் இருந்த ரூ.3 ஆயிரத்தை திருடி சென்றுவிட்டார்.

    இது குறித்து சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்கு பதிவு செய்து பேக்கரியில் திருடிய சுங்குவார்சத்திரம் ராஜீவ் காந்தி தெரு சேர்ந்த அமிர்த்சுதீனை கைது செய்தார்.

    வடகால் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    படப்பை:

    ஒரகடம் அடுத்த வடகால் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 25) வேலை செய்து வந்தார். நேற்று மாலை வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது மின்சாரம் தாக்கி மணிகண்டன் பலியானார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால் மாமல்லபுரத்தில் லட்சக்கணக்கில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அன்று ஒரே நாளில் பார்வையாளர் நுழைவு கட்டணம் மூலம் ரூ.7 லட்சம் வசூலாகி உள்ளது.
    மாமல்லபுரம் :

    காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்திற்கு பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வந்து சென்ற பிறகு பல்வேறு இடங்களில் இருந்து வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இங்கு கடற்கரை கோவில், ஐந்துரதம் ஆகிய 2 புராதன சின்னங்களை கண்டுகளிக்க உள்நாட்டு பயணிக்கு ரூ.40-ம், வெளிநாட்டு பயணிக்கு ரூ.600-ம் நுழைவு கட்டணமாக தொல்லியல் துறை வசூலிக்கிறது.

    குறிப்பாக காணும் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு, கோடை விடுமுறை உள்ளிட்ட விஷேச தினங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையால் பார்வையாளர் கட்டணம் அதிகம் வசூலாவது வழக்கம். தற்போது இரு நாட்டு தலைவர்கள் வந்த சென்ற பின்னர் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

    குறிப்பாக கடந்த ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால் மாமல்லபுரத்தில் லட்சக்கணக்கில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அன்று ஒரே நாளில் பார்வையாளர் நுழைவு கட்டணம் மூலம் ரூ.7 லட்சம் வசூலாகி உள்ளது.

    இந்த தகவலை தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே மினி லாரி கவிழ்ந்து 1000 கோழிகள் உயிரிழந்தன. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த டிரைவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி கறிக்கோழிகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி வந்தது.

    குடியாத்தத்தைச் சேர்ந்த டிரைவர் யாசின் வண்டியை ஓட்டி வந்தார். சுங்குவாச்சத்திரம் கூட்டுச்சாலை அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை மினி லாரி வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் கவிழ்ந்தது.

    விழுந்த வேகத்தில் மினி லாரி சில அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. இதில் லாரியில் இருந்த ஆயிரம் கோழிகள் நசுங்கி இறந்தன.

    டிரைவர் யாசின் படுகாயம் அடைந்தார். அவருக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இறந்த கோழிகள் சாலை ஓரத்தில் குவியல் குவியலாக கிடக்கிறது. இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சென்னை பெரும்பாக்கத்தில் முன்விரோதம் காரணமாக டாஸ்மாக் கடையில் 2 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை பெரும்பாக்கம் இந்திரா நகரைச் சேர்ந்தவர்கள் ஆனந்த், ஸ்டீபன். உறவினர்களான இவர்கள் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றனர்.

    இரவு 10 மணிக்குள் டாஸ்மாக் மூட வேண்டும் என்கிற விதிமுறை உள்ளது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி கடை செயல்பட்டது.

    இரவு 11 மணி அளவில் டாஸ்மாக் கடையில் 6 பேர் கொண்ட கும்பல் புகுந்தது. அவர்களது கைகளில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன.

    அந்த கும்பல் கடையில் மது அருந்திக் கொண்டு இருந்த ஆனந்த், ஸ்டீபன் இருவரையும் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர்.

    2 பேருக்கும் தலை, கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாக வெட்டு விழுந்தது. இருவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். இருவரையும் வெட்டி சாய்த்த கும்பல் மின்னல் வேகத்தில் டாஸ்மாக் கடையில் இருந்து வெளியேறியது. 6 பேரும் 3 மோட்டார்சைக்கிள்களில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் பள்ளிகரணை போலீசார் விரைந்து வந்தனர். அப்போது ஸ்டீபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது. ஆனந்த்தை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவரும் உயிரிழந்தார்.

    இந்த இரட்டை கொலை பற்றிய தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியது. இதனால் பொதுமக்களும் டாஸ்மாக் கடை முன்பு கூடினர்.

    கொலையாளிகளை பிடிக்க போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். உடனடியாக வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால் கொலையாளிகள் சிக்கவில்லை.

    டாஸ்மாக் கடையில் மது குடித்த ஆனந்த், ஸ்டீபன் இருவரும் கூடுதல் விலைக்கு மது வாங்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக மது விற்றவர்களுக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்த தகராறு நடந்தபிறகு தான் இருவரும் வெட்டி கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் மது விற்பனையில் நடந்த மோதல் காரணமாக கொலை நடந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுபற்றி போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மதியம் 12 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு மூட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் சென்னை உள்பட பல இடங்களில் இதனை யாரும் கடைபிடிப்பது இல்லை.

    குறிப்பாக சென்னையில் அதிகாலையிலேயே டாஸ்மாக் கடைகளை திறந்து மது விற்பனை நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு மாமல்லபுரத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர் ஒருவர் போலீஸ் கெடுபிடி காரணமாக தற்கொலை செய்தார்.

    குறிப்பிட்ட நேரத்தை கடந்து மது விற்பனை செய்வதற்காக போலீசார் அவரிடம் மாமூல் கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்ததே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

    இதையடுத்து மாமல்லபுரம் பகுதியில் டாஸ்மாக் பார்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அதுபோன்று எதுவும் நடைபெறவில்லை.

    கொலை செய்யப்பட்ட ஸ்டீபன் ஆனந்த் ஆகிய இருவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் 6 மாதங்களுக்கு முன்பு கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த முன் விரோதம் காரணமாக இருவரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

    கொலை செய்யப்பட்ட ஸ்டீபன் ஆட்டோ டிரைவராகவும், ஆனந்த் லாரி கிளீனராகராகவும் பணிபுரிந்து வந்தனர். இருவரது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ×