search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பைக்கை கடத்திய வாலிபர்
    X
    பைக்கை கடத்திய வாலிபர்

    மடிப்பாக்கத்தில் நூதன மோசடி: ஓட்டி பார்ப்பதாக கூறி ‘பைக்’கை கடத்திய வாலிபர்

    மடிப்பாக்கத்தில் ஓட்டி பார்ப்பதாக கூறி ‘பைக்’கை கடத்திய வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    மடிப்பாக்கம் பஜார் பிரதான சாலையைச் சேர்ந்தவர் ஜான். இவர் அதே பகுதியில் மோட்டார் சைக்கிள், இரு சக்கர வாகனங்களை வாங்கி மறு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவருடைய தம்பி எட்வின் கடையில் இருந்தார்.

    அப்போது ஆட்டோவில் வந்து இறங்கிய ஒரு வாலிபர், அந்த கடையில் மோட்டார் சைக்கிள் வாங்க வந்திருப்பதாக கூறினார். ‘பல்சர்’ பைக் ஒன்றை காட்டி அது தனக்கு பிடித்திருப்பதாகவும் விலையை குறைத்து தர வேண்டும் என்றும் கேட்டார்.

    அந்த வாலிபருக்கு, அவரை அழைத்து வந்த ஆட்டோ டிரைவரும் சிபாரிசு செய்தார். இருவரும் பைக் விலையை குறைக்கும்படி பேரம் பேசினார்கள். இறுதியில் குறிப்பிட்ட விலைக்கு ‘பல்சர்’ பைக்கை வாங்குவதற்கு வாலிபர் ஒப்புக் கொண்டார்.

    அதற்கு முன்பு அந்த பைக்கை ஓட்டிப் பார்க்க விரும்புவதாக கூறினார். அதை நம்பி அவரை பைக்கை ஓட்டிப் பார்ப்பதற்கு கடைக்காரர் அனுமதித்தார். ஆட்டோ டிரைவர் அங்கு நின்று கொண்டிருந்தார். வாலிபர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார்.

    நீண்ட நேரம் ஆகியும், பைக்கில் சென்ற வாலிபர் திரும்பவில்லை. ஆட்டோ டிரைவரிடம் கேட்டபோது, அவர் யார் என்று தெரியாது. மோட்டார் சைக்கிளை விலை குறைத்து வாங்கி தந்தால் கமி‌ஷன் கொடுப்பதாக கூறினார். அதனால்தான் அவருக்கு ஆதரவாக பேசினேன்.

    திரும்பி வந்ததும் இன்னொரு இடத்துக்குப் போக வேண்டும் என்றார். இதனால் நின்று கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தார். முன்னதாக வரும் வழியில் தனது போனில் ‘பேலன்ஸ்’ இல்லை என்று கூறி ஆட்டோ டிரைவர் போனை வாங்கி பைக் கடைக்காருடன் வாலிபர் பேசியதும் தெரிய வந்தது. எனவே வாலிபர் திட்டமிட்டு இந்த நூதன பைக் கடத்தல் மோசடியை செய்திருப்பது உறுதியானது.

    இதுகுறித்து ஏழுகிணறு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் உள்ள பதிவுகளை கொண்டு ‘பைக்’ மோசடி வாலிபரை தேடி வருகிறார்கள்.

    ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேல் ஓட்டிப் பார்ப்பதாக கூறி மோட்டார் சைக்கிளுடன் சென்று விடுவார். அதே காட்சியை நினைவூட்டும் வகையில் அரங்கேறியுள்ள இந்த மோட்டார் சைக்கிள் திருட்டு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×