என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம்:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தலைப்பில் வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட பிரசாரத்தை கடந்த 13-ந்தேதி மதுரையில் தொடங்கினார். 14, 15, 16 ஆகிய தேதிகளில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் முதல்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தார்.
இந்தநிலையில் கமல்ஹாசன் இன்று தனது 2-வது கட்ட பிரசாரத்தை காஞ்சீபுரத்தில் தொடங்கினார். இதற்காக அவர் நேற்று மாலை 4 மணிக்கு ஆலந்தூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார். போரூர், பூந்தமல்லி வழியாக காஞ்சீபுரம் சென்றார்.
நேற்று மாலை காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டத்தில் பேசினார். இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் கட்டமைப்பு மாநில செயலாளர் எஸ்.கே. பி.பி. கோபிநாத், நிர்வாகிகள் பிரபாகரன், மயில்வாகனன், பிரதீப்குமார், ஏசு, சண்முகம், தொல்காப்பியன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தநிலையில் கமல்ஹாசன் இன்று காலை காஞ்சீபுரத்தில் 2-வது கட்ட பிரசாரத்தை தொடங்கினார். காலையில் அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்ற அவர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அண்ணா பிறந்த காஞ்சீபுரத்தில் 7 அம்ச திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளேன். தமிழகத்தில் ஊழல் இல்லாத அரசு அமைய வேண்டும். அரசு திட்டங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் மக்களை சென்றடைய வேண்டும்.
தொழிற்புரட்சி ஏற்படுத்தி பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும். வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் அரசு ஊதியம் அளிக்கும் திட்டத்தையும் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். பசுமை புரட்சியையும் செய்வேன்.
ஒருவனை வறுமை கோட்டுக்கு மேலே தூக்கி வைத்துவிட்டால் அரசு வென்றுவிட்டது என்று பொருள் அல்ல. வாழ்க்கையில் பல சறுக்கல்கள் வரலாம். அப்படி வறுமை கோட்டுக்கு மேலே இருப்பவர்கள் சறுக்கும் போது வறுமை கோட்டுக்கு கீழே தான் போவார்கள்.
செழுமை கோட்டுக்கு மேலே அவனை தூக்கி வைத்தால் சறுக்கல் நேர்ந்தாலும் வியாபாரத்தில் தோல்வி, எது நேர்ந்தாலும் அவன் வறுமை கோட்டுக்கு மேலேயே நிற்பான். இது பெரிய அல்ஜீப்ரா கணிதம் அல்ல. அப்படியே அண்ணார்ந்து பார்த்தால் உயரமான விஷயங்கள் தெரியும்.
கேள்வி:- ரஜினி கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன். ஆனால் முதல்வர் வேட்பாளராக நிற்கமாட்டேன் என்று கூறியிருக்கிறார். முதல்வர் வேட்பாளராக உங்களை நிற்கும்படி ரஜினி கேட்டால் நிற்பீர்களா?
பதில்:- ரஜினி முதல்வர் வேட்பாளர் என்று என்னை அறிவித்தால் ஏற்பேன்.
கேள்வி:- மு.க.ஸ்டாலின் பேசும் போது 200 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்று கூறி இருக்கிறாரே?
பதில்:- அவர் கூட்டணி கட்சிகளுக்கு 34 இடங்கள் தான் என்று சூசகமாக தெரிவித்து இருக்கிறார்.
கேள்வி:- அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடி சிறுபான்மையினர்களுடன் இணக்கமாக இருப்பதாக காட்டி உள்ளார்களே?
பதில்:- சிறுபான்மையினர் எனது தம்பிகள், அவர்களுடன் இணக்கமாக இருக்க வேண்டும்.
பதில்:- நான் நாத்திகர் இல்லை. பகுத்தறிவாளன். ஆனால் என்னை நாத்திகர் என்று முத்திரை குத்துகிறார்கள்.
கேள்வி:- ரேஷன் கார்டுகளுக்கு ரூ.2,500 ரொக்கப் பணம் அறிவிக்கப்பட்டுள்ளதே?
பதில்:- தேர்தலை மனதில் வைத்து அறிவித்து இருக்கிறார்கள். அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் ஓட்டுக்கு ரூ.500 முதல் ரூ.2,500 வரை கொடுக்கப்போவதாக தகவல் பரவுகிறது. ஆனால் நான் பணத்தை நம்பவில்லை. மக்களை நம்பியே தேர்தலில் நிற்கிறேன்.
கேள்வி:- எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பீர்கள்?
பதில்:- கூட்டணி பற்றி இப்போது எதும் சொல்ல முடியாது. கூட்டணி தொடர்பான நிலைபாட்டை ஜனவரி மாதம் அறிவிப்பேன். தமிழகத்தில் ஊழல் இல்லா ஆட்சி அமைந்தால் தான் தமிழகம் தலை நிமிரும். அரசு திட்டங்கள் 30 சதவீதம் தான் மக்களுக்கு போய் சேருகிறது. மீதி 70 சதவீதம் அரசியல்வாதிகளுக்கே செல்கிறது.
கேள்வி:- தி.மு.க. ஆட்சி அமைவதை தடுக்க புதுப்புது கட்சிகள் உதயமாகின்றன என்று மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறாரே? அவர் உங்களை சொல்லி இருக்கிறாரா?
பதில்:- அவர் எங்களை சொல்லவில்லை. வேறு யாரையாவது சொல்லி இருப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் ஒழிய வேண்டும்.
* நேர்மையான கொள்கைகளை முன் வைத்து மக்கள் நீதி மய்யம் பிரசாரத்தில் ஈடுபடும்.
* வரும் முன் கணிப்பு என்ற முறையில் அரசை செயல்படுத்துவோம்.
* பல இடங்களில் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பிறகு அந்த விமானம் மீண்டும் துபாய் புறப்பட தயாரானது. முன்னதாக விமான நிலைய ஊழியா்கள், விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது விமானத்தின் ஒரு இருக்கைக்கு அடியில் ஒரு சிறிய பாா்சல் கேட்பாரற்று கிடப்பதை கண்டுபிடித்தனா். இதுபற்றி விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். சுங்க இலாகா அதிகாரிகள் விரைந்து வந்து அந்த பாா்சலை பரிசோதித்தனா்.
அந்த பார்சலை பிரித்து பாா்த்தபோது, அதில் 3 பற்கள் இருந்தன. இது பற்றி வனத்துறைக்கு தகவல் தரப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து அவற்றை ஆய்வு செய்தனர்.
அதில் அவை, பெரிய பூனை வகையின் பற்கள் போல் உள்ளது என்றனர். மேலும் அவை சிறுத்தை, புலி போன்றவற்றின் பற்களாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது. அத்துடன் அவற்றின் நகங்கள், எலும்பு துண்டுகள் அடங்கிய தூள்களும் இருந்தன.
பற்கள் மற்றும் நகம், எலும்பு தூள்களை பறிமுதல் செய்து வனவிலங்குகள் ஆராய்ச்சி மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. சிறுத்தை, புலியின் நகம், பல் போன்றவைகளை சங்கிலியில் டாலர்போல் சேர்த்து அணிந்து கொண்டால் அதிா்ஷ்டம் உண்டாகும் என்ற நம்பிக்கை ஒரு சிலரிடம் உள்ளது. அப்படிபட்டவா்கள் பல லட்சம் ரூபாய் கொடுத்து இவைகளை வாங்குவாா்கள்.
அவர்களுக்காக இவை விமானத்தில் கடத்தி வந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.
அப்போது சந்தேகத்தின்பேரில் சென்னையை சேர்ந்த முகமது ஜலாலுல்லா (வயது 46), திருச்சியை சேர்ந்த அப்துல் சலீம் (61), ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த காதர் மீரான் (45) ஆகிய 3 பேரை நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். அவர்களது உடைமைகளை சோதனை செய்தபோது, அட்டை பெட்டியில் ரகசிய அறைகள் அமைத்து பிளாஸ்டிக் சீட்டில் தங்க தகடுகள், கைப்பையில் தங்க சங்கிலிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
மேலும் இவர்களது உடைமைகளில் சிகரெட்டுகள், டிரோன் ஆகியவற்றை கடத்தி வந்ததும் தெரிந்தது. 3 பேரிடம் இருந்தும் ரூ.34 லட்சத்து 11 ஆயிரம் மதிப்புள்ள 667 கிராம் தங்கம், ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட்டுகள், டிரோன் ஆகியவற்றை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 3 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் நட்சத்திர ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நசரத்பேட்டை போலீசார் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர். இருவருக்கும் அடுத்த மாதம் ஊர் அறிய திருமணம் நடைபெற இருந்த நிலையில் அக்டோபர் மாதம் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் சித்ரா மீது சந்தேகம் அடைந்த ஹேம்நாத் அவரை துன்புறுத்தி இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் பிறகே ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருமணமாகி 2 மாதங்களிலேயே சித்ரா தற்கொலை செய்ததால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது. சிறையில் இருக்கும் ஹேம்நாத்திடம் விசாரணை நடத்துவதற்காக ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ, பொன்னேரி சிறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார்.
அதில், பலத்த பாதுகாப்புடன் ஹேம்நாத்தை ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இதன்படி இன்று காலை 8.15 மணியளவில் ஹேம்நாத் விசாரணைக்காக ஆர்.டி.ஓ. முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். பலத்த பாதுகாப்புடன் ஹேம்நாத்தை சிறைத்துறை காவலர்கள் அழைத்து வந்தனர்.
சித்ரா தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது பற்றி ஹேம்நாத்திடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆர்.டி.ஓ. கேட்ட கேள்விகளுக்கு ஹேம்நாத் முறையாக பதில் அளித்துள்ளார். பல மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடைபெற்றது.
விசாரணையின்போது ஹேம்நாத் அளித்த தகவல்களை வாக்குமூலமாக ஆர்.டி.ஓ. பதிவு செய்துள்ளார். மதியம் 12 மணிக்கு பிறகும் விசாரணை நீடித்தது.
முழு விசாரணை முடிந்த பிறகு தான் ஆர்.டி.ஓ. விசாரணையில் ஹேம்நாத் என்ன சொல்லி இருக்கிறார்? என்பது தெரியவரும்.
சித்ராவிடம் நெருங்கி பழகிய நடிகைகளிடமும் அவருடன் தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ள நடிகர்களிடமும் நாளை ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த உள்ளார்.
சித்ரா மற்றும் ஹேம்நாத் பெற்றோரிடம் ஏற்கனவே ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அந்த விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த முகமது வர்கீஸ் (வயது 25), முகமது யாசிர் கான் (23), திருச்சியை சேர்ந்த முஜிபுர் ரகுமான் (34), பிலால் (33), புதுக்கோட்டையை சேர்ந்த மதன்குமார் (24), மதுரையை சேர்ந்த சையத் முகமது (30), ராமநாதபுரத்தை சேர்ந்த அசோக்குமார் (32), பசில் ரகுமான் (27), முகமது ரபீக் (21) ஆகிய 9 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி, அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில் கைக்கடிகாரம், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து, கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். மேலும் இவர்கள் ஐபோன், செல்போன்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள், உடற்பயிற்சிக்கான சத்து உணவு பொருட்களையும் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து 9 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ 800 கிராம் தங்கம், ரூ.19 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள், சிகரெட்டுகள், உடற்பயிற்சிக்கான சத்து உணவு பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் சென்னையில் இருந்து துபாய்க்கு சென்ற சிறப்பு விமானத்தில் செல்ல வந்த சிவகங்கையை சேர்ந்த ரசூலுதீன் (29) என்பவரது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் கைப்பையில் உள்ள ரகசிய அறைக்குள் இங்கிலாந்து பவுண்டு, சிங்கப்பூர் டாலர்களை மறைத்து வைத்து கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.5 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை கைப்பற்றினார்கள்.
சென்னை விமான நிலையத்தில் 10 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 65 லட்சத்து 28 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், செல்போன்கள், உடற்பயிற்சிக்கான சத்துணவு பொருட்கள், சிகரெட்டுகள் மற்றும் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 10 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






