என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சீபுரம் அருகே தனியார் நிறுவனத்தில் ரூ.5 கோடியே 86 லட்சம் மோசடி செய்ததாக முதன்மை நிதி அலுவலரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டம் காரை கிராமத்தில் டயர் தயாரிக்கும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரியாக பணியாற்றி வந்தவர் புதுச்சேரியை சேர்ந்த சிவஸ்ரீராமுலு (வயது 45).இவர் தான் பணியாற்றி வரும் நிறுவனத்தின் ரூ.5 கோடியே 86 லட்சத்தை நிறுவனத்திற்கு சம்பந்தம் இல்லாத சிலரது வங்கி கணக்குக்கு அனுப்பி விட்டு அதை அவர்களிடமிருந்து பொய்யான காரணங்கள் கூறி திரும்ப பெற்றுள்ளார்.இவரது மோசடியானது அநத நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான அருளுக்கு தெரியவந்தது. 

    இதை தொடர்ந்து அவர் காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த சிவஸ்ரீராமுலுவை கைது செய்தனர்.பின்னர் அவரை காஞ்சீபுரத்திற்கு கொண்டு வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    சென்னை விமான நிலையத்தில் துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.8 லட்சம் வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு சிறப்பு விமானத்தில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

    அப்போது அந்த விமானத்தில் செல்ல வந்த சென்னையை சேர்ந்த முகமது அசாருதீன் (வயது 30) என்பவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணத்தை மறைத்து வைத்து துபாய்க்கு கடத்திச்செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர்.

    அவரிடம் இருந்து ரூ.7 லட்சத்து 78 ஆயிரம் மதிப்புள்ள யூரோ மற்றும் இங்கிலாந்து பவுண்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முகமது அசாருதீனின் விமான பயணத்தை ரத்து செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 4 கட்டமாக நடத்திய விசாரணையில் சுமார் 250 பக்கம் கொண்ட அறிக்கையை ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ தயார் செய்து இருக்கிறார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    சின்னத்திரை நடிகை சித்ராபூந்தமல்லி அருகே உள்ள விடுதியில் கடந்த 9-ந்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 14-ந்தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    நடிகை சித்ரா தற்கொலை குறித்து ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீயும் விசாரணை செய்து வருகிறார். சித்ராவின் தாய், தந்தை, சகோதரி, சகோதரர், ஹேம்நாத் மற்றும் அவரது தாய், தந்தை ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. முக்கியமாக சித்ராவுக்கு வரதட்சணை கொடுமை நடந்ததா? என்று விசாரிக்கப்பட்டது.

    மேலும் சித்ரா தங்கியிருந்த விடுதியின் ஊழியர்கள், சித்ராவுடன் கடைசியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள், வீட்டின் அருகில் வசிப்பார்கள் மற்றும் நெருக்கமானவர்கள் என இதுவரை 16 பேரிடம் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ விசாரணை நடத்தி உள்ளார்.

    4 கட்டமாக நடத்திய விசாரணையில் சுமார் 250 பக்கம் கொண்ட அறிக்கையை தயார் செய்து இருக்கிறார். இந்த விசாரணை அறிக்கையை வருகிற திங்கட்கிழமை பூந்தமல்லி போலீஸ் உதவி கமி‌ஷனர் சுதர்சனத்திடம் வழங்க ஆர்.டி.ஓ., திவ்யஸ்ரீ முடிவு செய்து உள்ளார்.

    இந்த அறிக்கை முடிவை வைத்து அடுத்த கட்ட விசாரணையை தொடங்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
    சோழிங்கநல்லூரில் லாரி சக்கரத்தில் சிக்கி 5-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
    சோழிங்கநல்லூர்:

    சோழிங்கநல்லூர் பரமேஸ்வரன் நகரை சேர்ந்தவர் அருள் (வயது 38) இவரது மனைவி கோகிலா (34). இவர்களது மகன் அபிஷேக் (10). அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று பிற்பகல் வீட்டின் அருகே பிரகாஷ் சைக்கிள் ஓட்டி கொண்டிருந்தான்.

    அப்போது அந்த வழியாக வந்த கழிவுநீர் லாரி சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி அபிஷேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

    சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் லாரி டிரைரான பிரபாகரன்(26) என்பவரை பிடித்து அடித்து உதைத்து செம்மஞ்சேரி போலீசில் ஒப்படைத்தனர். தகவலறிந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    லாரி டிரைவரான பிரபாகரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சீபுரம் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் ஓரிக்கை அண்ணா நகரை சேர்ந்தவர் அன்புராஜ் (வயது 33). இவர் தனது மனைவி மற்றும் 2 வயது பெண் குழந்தையை அழைத்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் பூரிவாக்கத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் காஞ்சீபுரத்திற்கு வந்தார். பரந்தூர்- மதுரமங்கலம் ரோடு வழியாக நாகப்பட்டு கிராமம் என்ற இடத்தில் இவர்கள் வந்த போது, வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மோட்டார் சைக்கிளில் வந்தவர் மோட்டார் சைக்கிளுடன் தப்பிச்சென்று விட்டார்.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அன்புராஜ் படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அன்புராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.மனைவி மற்றும் குழந்தை லேசான காயங்களுடன், காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    காஞ்சீபுரம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 52). நெசவு தொழிலாளி. இவருக்கு மனைவி, ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தன்னுடைய மகளுக்கு திருமணமாகவில்லையே என்ற ஏக்கத்தில் விஜயராகவன் இருந்து வந்தார். இதனால் மனமுடைந்த அவர் காஞ்சீபுரம் அருகே பரந்தூர் பகுதியில் உள்ள ஒரு ஏரிக்கரையில் திராவகம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கட்சியை தொடங்கிய 24 மணி நேரத்தில் ஆட்சியை பிடிப்போம் என்கிறார்கள். இது மக்களை ஏமாற்றும் வேலை என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதையடுத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார்.

    ‘தமிழகம் காப்போம்’ என்ற தலைப்பில் மாவட்டங்கள் தோறும் காணொலி காட்சி மூலம் சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடத்தி பேசினார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அண்ணா அறிவாலயத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறும் போது, ‘அ.தி.மு.க.வை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் 16 ஆயிரம் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என்று அறிவித்து இருந்தார்.

    அதன்படி ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள குன்னம் ஊராட்சியில் இன்று காலை கிராமசபை கூட்டத்தை மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்தார். முன்னதாக காரில் வந்த மு.க.ஸ்டாலின் கிராமத்தின் வழியாக நடந்து கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றார்.

    அவருக்கு வழிநெடுக தி.மு.க. நிர்வாகிகள், கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    கிராம சபை கூட்டத்திற்காக அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி மைதானத்தில் சிறப்பு ஏற்பாடு மற்றும் மேடை அமைக்கப்பட்டு இருந்தது. கிராமத்தின் வழிநெடுக வாழை மற்றும் கரும்புகளால் தோரணம் கட்டப்பட்டு இருந்தன. சுமார் 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்றனர்.

    கிராம மக்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடி பேசியதாவது:-

    ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக என்றும் பாடுபடும் இயக்கம் தி.மு.க. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றி பெறும்.

    விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு. பச்சை துண்டு போட்டுக்கொண்டு விவசாயிகளை எடப்பாடி பழனிசாமி ஏமாற்றுகிறார். ‘நானும் ரவுடி ரவுடி’ என்று சொல்வது போல்தான் விவசாயி, விவசாயி என்று முதல்வர் கூறி வருகிறார்.

    விவசாயி என கூறும் முதல்-அமைச்சர் விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. அவர் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை எதிர்க்காதது ஏன்?

    ஒப்பந்தங்கள் மூலம் ரூ.6,131 கோடி முறைகேடு நடந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறையிலும் ஊழல். முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியலை ஆதாரத்துடன் கவர்னரிடம் அளித்துள்ளோம். இது பகுதி ஒன்றுதான்.

    ஊழல் பட்டியலின் 2-வது பகுதி விரைவில் கவர்னரிடம் கொடுக்கப்படும். நீதிமன்றம் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை இன்னும் விசாரணையை தொடங்கவில்லை. முன்னாள் முதல்- அமைச்சரின் மரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது.

    கொரோனாவால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். ஆனால் கொரோனா பேரிடர் நிதியிலும் அ.தி.மு.க. அரசு ஊழல் செய்கிறது.

    கட்சியை தொடங்கிய 24 மணி நேரத்தில் ஆட்சியை பிடிப்போம் என்கிறார்கள். இது மக்களை ஏமாற்றும் வேலை.

    டெல்லியில் போராடும் விவசாயிகளை பிரதமர் சந்தித்து பேசாதது ஏன்? அ.தி.மு.க. வை நிராகரிப்போம் என்பதை மக்கள் வரவேற்று உள்ளனர். எனவே வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.
    காஞ்சிபுரம்:

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் பட்டியலை கொடுத்தார். இந்த புகார் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்னம் ஊராட்சியில் இன்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிராமசபை கூட்டத்தை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஒப்பந்தங்கள் மூலம் ரூ.6,131 கோடி முறைகேடு நிகழ்ந்துள்ளது. அதிமுக அரசின் ஊழல்கள் தொடர்பாக ஆளுநரிடம் 97 பக்க ஊழல்புகார் கடிதம் கொடுத்தேன். இந்த புகார்கள் மீது ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அதன்பின்னர் நீதிமன்றத்தை நாடுவோம்.

    விவசாயிகள் போராட்டம்

    ஏறக்குறைய ஒரு மாத காலமாக பல மாநிலங்களில் இருந்து விவசாயிகள் வந்து கடும் குளிருக்கு மத்தியில் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை அவர்களுடன் பேசவும் அவர்களின் கோரிக்கையை கேட்கவும் பிரதமர் முன்வரவில்லை. நமது முதல்வர் எடப்பாடி, பிரதமரின் இசைக்கு நடனமாடுகிறார். 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற்று நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    காஞ்சிபுரம் மாவட்டம் குன்னம் ஊராட்சியில் நடக்கும் கிராமசபை கூட்டத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார்.
    காஞ்சிபுரம்:

    சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள   திமுக   தயாராகி வருகிறது. அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற தலைப்பில்   திமுக   சார்பில் தமிழகம் முழுவதும் பஞ்சாயத்துகளில் கிராம சபை மற்றும் வார்டு கூட்டங்கள் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, இன்று முதல் 10 நாட்களுக்கு கிராமங்கள் மற்றும் வார்டுகளில் 16 ஆயிரம் கிராமசபை கூட்டங்களை நடத்த இருக்கிறார்கள்.

    இந்நிலையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றியம், குன்னம் ஊராட்சியில் நடக்கும் கிராமசபை கூட்டத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். தேர்தலையொட்டி கிராம சபை கூட்டத்தில் மக்களின் குறைகள், தேவைகளை கேட்டறிகிறார்.

    கிராம சபை கூட்டத்தில்   முக ஸ்டாலின்  கூறியதாவது:

    * ஜெயலலிதாவின் மரணம் இன்றும் மர்மமாக இருக்கிறது.

    * விசாரணை கமிஷனை நீடிக்கிறார்களே தவிர, முடிவு வரவில்லை

    *   ஜெயலலிதா   எங்களுக்கு எதிரிதான் என்றாலும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்.

    * கட்சி தொடங்கிய 24 மணி நேரத்தில ஆட்சியைப் பிடிப்போம் என சொல்கிறார்கள்.

    * நானும் ரவுடி ரவுடி என சொல்வதுபோல் தான் விவசாயி விவசாயி என முதலமைச்சர் கூறி வருகிறார்.

    * விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை எதிர்க்காதது ஏன்?

    * ஒப்பந்தங்கள் மூலம் ரூ.6,131 கோடி முறைகேடு நிகழ்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.87 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமி‌‌ஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் இருந்து வந்திறங்கிய பயணிகளை கண்காணித்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருந்த சென்னையை சேர்ந்த சையத் முசுரூதீன் (வயது 48), ராமநாதபுரத்தை சேர்ந்த கலந்தர் பக்ரூதீன் (29), சாகுல் அமீது (38), பத்ரூதீன் (48), தூத்துக்குடியை சேர்ந்த தமீம் அன்சாரி (36) ஆகிய 5 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர்.

    அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது உள்ளாடை மற்றும் சட்டை ஆகியவற்றில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அதேபோல் விளையாட்டு பொருட்களில் தங்க தகடுகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து 5 பேரிடம் இருந்து ரூ.68 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 350 கிராம் தங்கத்தை கைப்பற்றினர். மேலும், துபாயில் இருந்து வந்த விமானத்தின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்ட ரூ.19 லட்சம் மதிப்புள்ள 350 கிராம் தங்கத்தையும் கைப்பற்றினார்கள். அதேபோல் துபாயில் வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த சர்புதீன் அப்துல் மஜீத் (40), முகமது ரகமத்துல்லா (36) ஆகியோரின் உடைமைகளை சோதனை செய்தபோது ரூ.10 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ குங்குமப்பூ கைப்பற்றப்பட்டது.

    ஒரே நாளில் சுங்க இலாகா நடத்திய சோதனையில் ரூ.87 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 700 கிராம் தங்கமும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ குங்குமப்பூ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தங்கத்தை கடத்திய 5 பேரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை அருகே சி.ஐ.டி.யு. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி படப்பையில் உள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    படப்பை:



    காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய தொழிலாளர்கள் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி படப்பையில் உள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



    இதில், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய தொழிலாளர்கள் சங்கம் சி.ஐ.டி.யூ கவுரவ தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகைக்கு முன் ஒரு மாத சம்பளம் போனசாக வழங்கிடு, காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் நயிம்பஷாவை சந்தித்து தங்களது கோரிக்கையை முன்வைத்தனர்.

    காஞ்சீபுரத்தில் மனைவியுடன் கருத்து வேறுபாட்டால் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் ஒலிமுகம்மது பேட்டை, வரதப்பன் தெருவை சேர்ந்தவர் முகமதுசராபத் நவுஷாத் (வயது 30). டிரைவர், இவருக்கும் பரனாம்பேட்டையை சேர்ந்த ரிஷ்வானா (27) என்பவருக்கும் கடந்த 55 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது. 

    இந்நிலையில் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படும் முகமதுசராபத், வீட்டில் அனைவரும் தூங்கியதும், அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து பெரிய காஞ்சீபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் நடராஜன் விரைந்து சென்று, முகமதுசராபத் நவுஷாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ×