என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    வேலை செய்த வீட்டில் கள்ளச்சாவி போட்டு கதவை திறந்து, 30 பவுன் நகையை திருடிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த துரைப்பாக்கம் ஒக்கியம்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரிடம் கடந்த 1½ ஆண்டுகளாக காரைக்குடி சாகவாயல் பகுதியை சேர்ந்த ராஜகோபால் (வயது 33) என்பவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அதன்பிறகு திடீரென அவர் வேலையில் இருந்து நின்றுவிட்டார்.

    இந்த நிலையில் தனது வீட்டில் 30 பவுன் நகைகள் மாயமாகி இருந்ததை கண்டு ரமேஷ்குமார் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி துரைப்பாக்கம் கண்ணகிநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    ரமேஷ்குமார் வீட்டில் ஏற்கனவே வேலை செய்து வந்ததால் சந்தேகத்தின்பேரில் திருப்போரூர் பகுதியில் இருந்த ராஜகோபாலை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ரமேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லாத நேரத்தில் ராஜகோபால், கள்ளச்சாவி போட்டு கதவை திறந்து உள்ளே புகுந்து நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.

    அவரை போலீசார் கைது செய்தனர். அந்த நகைகளை விற்று அதில் கிடைத்த பணத்தில் வாங்கிய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான ராஜகோபால் சிறையில் அடைக்கப்பட்டார்.
    படப்பை அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் என்ஜினீயர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி டவுன் ஜமீன்கோட்டை தெரு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் ரஞ்சித்குமார் (வயது 26). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் வாடகை வீட்டில் தங்கி திருவள்ளுவர் மாவட்டம் மப்பேடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.

    நேற்று முன்தினம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள அவரது நண்பர் ஆஷிஷ் என்பவர் வீட்டுக்கு சென்றார். புத்தாண்டு கொண்டாடி விட்டு ஸ்ரீபெரும்புதூரில் இருந்து மணிமங்கலம் வழியாக படப்பை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    படப்பையை அடுத்த மலைப்பட்டு-சேத்துப்பட்டு கிராமத்திற்கு இடையே உள்ள காட்டுப்பகுதி அருகே வரும்போது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில் ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமங்கலம் போலீசார் ரஞ்சித்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    குன்றத்தூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    பூந்தமல்லி:

    திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் பூமாதேவன் (வயது 33). இவரது நண்பர் கார்த்திக் (33). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு தாம்பரத்தில் இருந்து மதுரவாயல் நோக்கி தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். குன்றத்தூர் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக இந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். 

    இதில் பூமாதேவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். கார்த்திக் பலத்த காயங்களுடன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதம்பாக்கத்தை சேர்ந்த அபிஷேக் (21) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சீபுரம் அருகே கஞ்சா கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த குருவிமலை வசந்தம் நகர் பகுதியில் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வேகமாக வந்த ஒரு மினி வேனை போலீசார் சைகை காட்டி நிறுத்தினார். வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் உரிய ஆவணங்களின்றி, முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் மினி வேனை சோதனை செய்தனர்.

    அப்போது வேனில் 3 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையொட்டி காஞ்சீபுரம் செவிலிமேட்டை சேர்ந்த வேன் டிரைவர் சகாதேவன் (வயது 21), வெண்பாக்கத்தை சேர்ந்த முகமது அன்சாரி (21) மற்றும் 16 வயது சிறுவர்கள் 3 பேர், 17 வயது சிறுவன் என 6 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பொட்டலங்கள், டிஜிட்டல் தராசு, 5 செல்போன்கள், ரூ.1060, கடத்தலுக்கு பயன்படுத்திய மினிவேன் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.
    சவுதி அரேபியாவில் இருந்து சென்னைக்கு பேரிச்சம் பழத்துக்கு நடுவில் மறைத்து வைத்து கடத்திய ரூ.15 லட்சத்து 26 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் சிறப்பு விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர்.

    அப்போது ஏற்கனவே சவுதி அரேபியாவில் இருந்து சென்னை வந்த பயணி ஒருவரின் உடைமைகள் வந்திருந்தன. அவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது பேரிச்சம் பழம் பெட்டிகள் இருந்தன.

    அவற்றின் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அதில் ஒரு பாக்கெட்டை எடுத்து பிரித்து பார்த்தனர். அதில் பேரிச்சம் பழங்களுக்கு நடுவே தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

    ரூ.15 லட்சத்து 26 ஆயிரம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக மேலும் விசாரித்து வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள்- கார் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பீமன்தாங்கள் மதுரை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகிதாஸ் (வயது 47). ஆட்டோ டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் செல்வம் (50). கட்டுமான பணி செய்து வந்தார். உறவினர்களான லோகிதாசும், செல்வமும் நேற்று மோட்டார் சைக்கிளில் பீமந்தாங்களில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்றனர்.

    சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது சென்னை நோக்கி சென்ற கார் லோகிதாஸ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இ்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த லோகிதாஸ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தார். உடன் சென்ற செல்வம் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு செல்வத்துக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான லோகிதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

    ஜனவரி 22-ந் தேதி முதல் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கேட்க உள்ளேன். அதன் பின்னர் அரசியல் நிலைப்பாடு தெரிவிக்கப்படும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.

    காஞ்சீபுரம்:

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரது மனைவி ராதிகா உடன் வந்து இருந்தார்.

    ரஜினிகாந்த் அவருடைய சொந்த கருத்தை பதிவு செய்திருக்கிறார். அவரின் அரசியல் பற்றி பேச விரும்பவில்லை. அவரது உடல் நலம் என்றும் சிறப்பாக இருக்கவேண்டும். கலை உலக பயணமாக இருந்தாலும் சரி, வாழ்க்கையில் எடுத்து வைக்கின்ற அனைத்து பணிகளும் சிறப்பாக நலமாக என்றும் இருக்க வேண்டும்.

    வருகிற ஜனவரி 22-ந் தேதி முதல் 5 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கேட்கிறேன். அதன் பின்னர் அரசியல் நிலைப்பாடு தெரிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.41 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர். அப்போது மன்னார்குடியை சேர்ந்த புவியரசன் (வயது 25) என்பவர் வந்தார். அவரது உடைமைகளை சோதனை செய்த போது எதுவும் சிக்காததால், அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவரது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடமிருந்து, ரூ.30 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள 600 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    அதேபோல், ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது இஸ்மாயில் (52) என்பவரை நிறுத்திசோதனை செய்த போது அவரது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.11 லட்சம் மதிப்புள்ள 220 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    மேலும் துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த கருப்பசாமி (60), சசிகுமார் (31) ஆகியோர் கடத்தி வந்த ரூ.6 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புள்ள 4 ‘டிரோன்’ கேமராக்கள், சிகரெட்டுகள் ஆகியவற்றை கைப்பற்றினார்கள்.

    ஒரே நாளில் 4 பேரிடம் இருந்து ரூ.41 லட்சத்து 65 ஆயிரம் 820 கிராம் தங்கமும், ரூ.6 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புள்ள 4 டிரோன் கேமராக்கள், சிகரெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக புவியரசனை கைதுசெய்த சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
    சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் துபாய் செல்ல வந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து துபாய்க்கு சிறப்பு விமானம் சென்றது. முன்னதாக அந்த விமானத்தில் செல்ல வந்திருந்த ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை சேர்ந்த சையத் முகமது (வயது 35) என்பவரது பாஸ்போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அதில் அவர், வேறு ஒருவரின் பாஸ்போர்ட்டில் தனது புகைப்படத்தை மாற்றி ஒட்டி, போலி பாஸ்போர்ட்டில் துபாய் செல்ல வந்திருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து சையத் முகமதுவின் விமான பயணத்தை ரத்து செய்த குடியுரிமை அதிகாரிகள், அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இதுபற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சையத் முகமதுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடியே 47 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ 800 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக தனியார் விமான நிறுவன என்ஜினீயர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

    அந்த விமானத்தில் வந்த பயணி ஒருவர், பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ள கழிவறைக்கு சந்தேகப்படும்படியாக சென்றுவிட்டு சிறிது நேரத்தில் வெளியே வந்தார். அவர் வெளியே வந்ததும், மற்றொரு வாலிபர் கழிவறைக்குள் சென்றுவிட்டு வந்தார்.

    இதை கண்ட சுங்க இலாகா அதிகாரிகள், அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர், விமான நிலையத்தில் உள்ள தனியார் விமான நிறுவனத்தில கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றும் நிழல் ரவி (வயது 29) என தெரியவந்தது. அவரை சோதனை செய்தபோது, 2 பொட்டலங்களில் 27 தங்க கட்டிகள் வைத்திருந்ததை கண்டு பிடித்தனர்.

    துபாயில் இருந்து அந்த தங்க கட்டிகளை கடத்தி வந்த சென்னையை சேர்ந்த நியாமத்துல்லா ஹாதி (35) என்பவர், சுங்க சோதனை இல்லாமல் கடத்தல் தங்கத்தை விமான நிலையத்துக்கு வெளியே கொண்டு வந்து தரவேண்டும் என்று கூறி கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு சென்றதாகவும், அதைதான் எடுத்துக்கொண்டு வெளியே செல்ல இருந்ததாகவும் கூறினார்.

    இதையடுத்து நிழல் ரவியையும், தங்கத்தை கடத்தி வந்த நியாமத்துல்லா ஹாதியையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 66 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 200 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் வந்த அப்துல் நசார் உள்பட 5 பேரை பிடித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். அவர்களது உடைமைகளில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    அதில் அவர்கள் 5 பேரும் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.81 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 600 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 6 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 47 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ 800 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக தங்கம் கடத்தலுக்கு உதவிய தனியார் விமான நிறுவன என்ஜினீயர் நிழல் ரவி, தங்கம் கடத்தி வந்த நியாமத்துல்லா ஹாதி, அப்துல் நசார் ஆகிய 3 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். மற்ற 4 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.
    கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறையால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    மாமல்லபுரம்:

    கிறிஸ்துமஸ் பண்டிகை கடந்த வெள்ளிக்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாள் தொடர் விடுமுறையால் நேற்று மாமல்லபுரம் கடற்கரை மற்றும் புராதன சின்னங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் குவிந்தனர்.

    இதனால் மாமல்லபுரம் கடற்கரை மற்றும் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல், கிருஷ்ண மண்டபம் உள்ளிட்ட புராதன சின்ன மையங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    சென்னை புறநகர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் மற்றும் சுற்றுப்புற புறநகர் பகுதிகளில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர்.

    கொரோனா ஊரடங்குக்கு பிறகு நேற்று 30 ஆயிரம் பயணிகள் மாமல்லபுரம் வந்து புராதன சின்னங்களை கண்டு களித்ததாக சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவித்தனர்.

    கடந்த ஆண்டு அக்டோபர் 11-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி, சீன அதிபர் ஜின்பிங் கண்டுகளித்த புராதன சின்னங்கள் முன்பு நேற்று வந்திருந்த சுற்றுலா பயணிகள் பலர் குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்ததையும் காண முடிந்தது.

    சுற்றுலா பயணிகளிடம் திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தடுக்கும் வகையில் மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மேற்பார்வையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் தலைமையில் போலீசார் மாமல்லபுரம் நகரம் முழுவதும் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

    சுற்றுலா வாகனங்கள் நேற்று அதிகமாக திரண்டதால் நகரப்பகுதியில் நெரிசல் மிகுந்த இடங்களில் போக்குவரத்து சீரமைப்பு பணிகளை மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமூர்த்தி தலைமையில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    குறிப்பாக நேற்று புராதன சின்னங்களை கண்டுகளிக்க தினமும் வழங்கப்படும் 2 ஆயிரம் ஆன்லைன் நுழைவு சீட்டுகள் காலை 10 மணிக்கே அனைத்தும் பதிவாகிவிட்டதால் கட்டண கவுண்ட்டர்களில் ரூ.40 கட்டணம் செலுத்தி நுழைவு சீட்டு வாங்கி சென்றனர்.

    சுற்றுலா பயணிகளின் வருகையால் கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை பகுதிகளில் அனைத்து கடைகளிலும் வியாபாரம் களைகட்டியது.
    அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்து ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி பரிதாபமாக இறந்தார்.
    ஆலந்தூர்:

    சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் சூரியபிரகாஷ் (வயது 67). ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி. அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மனைவியுடன் வசித்து வந்தார்.

    நேற்று முன்தினம் அவரது மனைவி, மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார். வீட்டில் சூரியபிரகாஷ் மட்டும் தனியாக இருந்தார். அவரது மனைவி, செல்போனில் தொடர்பு கொண்டபோது சூரியபிரகாஷ் எடுக்கவில்லை.

    இதனால் அவரது மனைவி, வீட்டுக்கு வந்து பார்த்தார். அங்கும் கணவர் சூரிய பிரகாசை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளுடன் இணைந்து கணவரை தேடினார்.

    சந்தேகத்தின்பேரில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியை(சம்ப்)திறந்து பார்த்தபோது அதன் உள்ளே சூரியபிரகாஷ் பிணமாக கிடந்ததை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்துவந்த கிண்டி போலீசார், சூரியபிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    சூரியபிரகாஷ், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் பராமரிப்பு பணியை கவனித்து வந்தார். அவர், தரைமட்ட தண்ணீர் தொட்டியை திறந்து சுத்தம் செய்தபோது, தவறி உள்ளே விழுந்து இருக்கலாம். இது தெரியாமல் யாராவது தொட்டியை மூடி இருக்கலாம். இதனால் முதியவரான சூரியபிரகாஷ், நீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என கருதப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

    இது பற்றி கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×