என் மலர்
காஞ்சிபுரம்
இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியா உள்பட சில நாடுகள் இங்கிலாந்துக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
லண்டனில் இருந்து சென்னை வரும் விமான சேவைகள் கடந்த மாதம் 23-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது. கடந்த மாதம் 24-ந் தேதி லண்டனில் இருந்து சரக்கக விமானம் சென்னைக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த விமானிகள் உள்பட ஊழியா்கள் 9 பேரை சென்னை விமான நிலையத்தில் உள்ள சுகாதாரத்துறையினா் மருத்துவ பரிசோதனைகள் நடத்தி தனிமைப்படுத்தினா். அதன்பிறகு லண்டனில் இருந்து சரக்கு விமானமும் சென்னைக்கு வரவில்லை.
இந்தநிலையில் இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு விமான நிலையங்களில் இருந்து லண்டனுக்கு குறைந்த அளவு விமானங்களை இயக்க இந்திய அரசு அனுமதித்து உள்ளது.
ஆனால் சென்னையில் இருந்து லண்டனுக்கு நேரடி விமான சேவையை தொடங்கவில்லை. சென்னையில் இருந்து லண்டன் செல்லும் பயணிகள், பெங்களூரு, ஐதராபாத்துக்கு உள்நாட்டு விமானத்தில் சென்று அங்கிருந்து லண்டன் செல்கின்றனர். இதேபோல் லண்டனில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய பயணிகளும் பெங்களூரு, ஐதராபாத் வழியாக சென்னை வரவேண்டிய நிலை உள்ளது.
லண்டனில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் வழியாக உள்நாட்டு விமானத்தில் சென்னை உள்ளிட்ட தமிழகம் வரும் பயணிகளால் இங்கும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்படுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று உள்நாட்டு விமானம் மூலம் சென்னை வந்த இங்கிலாந்து நாட்டு பயணிகள் 4 பேரை அடையாளம் கண்டுபிடித்த சுகாதாரத் துறை அதிகாரிகள், அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்தனர். பின்னர் 4 பேரையும் மணப்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தி வைத்தனர்.
இங்கிலாந்தில் பரவும் உருமாறிய வைரஸ் இந்தியாவில் பரவுவதை தடுக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. லண்டனில் இருந்து இந்தியாவிற்கு நேரடியாக வரும் அனைத்து விமான பணிகளுக்கும், அவா்கள் வந்திறங்கும் விமான நிலையங்களிலேயே முழுமையான மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகின்றது. அவா்களில் நோய்தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டவா்கள் மட்டுமே வெளியே அனுப்பப்படுகின்றனா்.
உள்நாட்டு விமானங்களில் பயணிக்கவும் அனுமதிக்கப்படுகின்றனா். லண்டனில் இருந்து வந்து வேறு மாநிலங்கள் அல்லது மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் பற்றிய விவரங்களை அந்தந்த மாநில, மாவட்ட சுகாதாரத்துறைக்கு உடனடியாக தெரிவிக்கப்படுகிறது. லண்டனில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தொடா்ந்து கண்காணிக்கபடுவார்கள். எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அதில் வந்த சென்னையை சேர்ந்த பத்மா பாலாஜி (வயது 25) என்ற பெண்ணிடம் சந்தேகத்தின்பேரில் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார். அவரது உடைமைகளை சோதனை செய்தபோது அதில் எதுவும் இல்லை.
இதனால் அவரை தனிஅறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் சாக்லெட்டுகளை மறைத்து வைத்திருந்தார். அதனை பிரித்து பார்த்தபோது அவற்றுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.28 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 546 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த 12 பயணிகள் மற்றும் சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த 3 பேர் என 15 பேரை சோதனை செய்தனர். அதில் அவர்கள் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.1 கோடியே 69 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 180 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து வந்த 16 பேரிடமும் இருந்து ரூ.1 கோடியே 97 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 726 கிராம் தங்கத்தை பறிமுதல் சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக பத்மா பாலாஜி என்ற பெண்ணை கைது செய்தனர். மற்ற 15 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
ஆலந்தூர்:
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்து செல்லும் விமானங்களை மத்திய அரசு ரத்து செய்தது. ஆனால் சிறப்பு விமானங்களை மட்டும் அந்தந்த மாநில அரசாங்கத்தின் அனுமதியோடு வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இங்கிலாந்தில் பரவி உள்ள உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் 22-ம் தேதியிலிருந்து இங்கிலாந்துக்கு சிறப்பு விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
பின்னர் கடந்த 6-ந் தேதி முதல் லண்டனுக்கு சிறப்பு விமானங்கள் அந்தந்த மாநில அரசாங்க அனுமதியோடு இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து விமான சேவை இயக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து இங்கிலாந்துக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. தற்போது தமிழக அரசு எந்த ஒரு அனுமதியும் அளிக்காததால் சென்னை விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்துக்கு விமான சேவை இயக்கப்படவில்லை.
இதுகுறித்து சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது, ‘‘இங்கிலாந்துக்கு மாநில அரசின் அனுமதியோடு குறைந்த எண்ணிக்கையிலான விமானங்கள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.ஆனால் தமிழக அரசு சென்னையிலிருந்து விமான சேவை தொடங்குவதற்காக எந்த ஒரு அனுமதியும் இதுவரையும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து மத்திய, மாநில அரசு கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கும்’’ என்று தெரிவித்தார்.
இதற்கிடையே ஏர் இந்தியா நிறுவனம் வருகிற 19-ந் தேதி முதல் மார்ச் மாதம் 24-ந் தேதி வரை புதன்கிழமை தோறும் சென்னையில் இருந்து லண்டனுக்கும், செவ்வாய்க்கிழமை தோறும் லண்டனில் இருந்து சென்னைக்கும் விமான சேவை தொடங்கப்படும் என்று அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை தொட்டு உள்ளது. ஏரியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 1 மணிக்கு உபரிநீர் திறக்கப்படுகிறது. ஏரியில் இருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட உள்ளது.
இதையடுத்து ஏரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டதாக 10 வழக்குகளில் ரூ.7.25 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா, போதை பவுடர்கள் சிக்கியது.
ஆனால் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் மாதம் முதல் நேற்று வரை சென்னை விமான நிலையத்தில் போதை பொருட்கள் கடத்தல் பெருமளவு அதிகரித்து விட்டது.
கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் முதல் பன்னாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டு, சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கடந்த 9 மாதங்களாக சரக்கு விமானங்களில் போதை பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி அமோகமாக நடந்துள்ளன.
சென்னை விமான நிலையத்தில் கடந்த 9 மாதங்களில் சுங்கத் துறை இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் போதை பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக 100 வழக்குகள் பதிவு செய்துள்ளனா்.
இந்த வழக்குகளில் ஒரு பெண், கல்லூரி மாணவர்கள் உள்பட 20 பேர் வரை கைது செய்யப்பட்டு உள்ளனா். இந்த வழக்குகளில் ரூ.3 கோடியே 42 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.
சமீப காலமாக போதை பொருள் கடத்தும் முக்கிய முனையமாக சென்னை விமான நிலையம் மாறி உள்ளது. வெளிநாடுகள், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும் சென்னையை மையமாக வைத்து இந்த கடத்தலில் ஈடுபடுகின்றனா்.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இளைஞா்கள் பெருமளவு போதைக்கு அடிமையாகி இருப்பதால் விற்பனை அதிகமாக இருப்பதும், கடத்தலுக்கு சென்னை மிகவும் வசதியாக இருப்பதுவும் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
இதுபற்றி சுங்க இலாகா அதிகாரிகள் கூறும்போது, சென்னை விமான நிலையத்தில் போதை பொருட்கள் கடத்தலை முழுமையாக தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் காரணமாக சமீபகாலமாக போதை பொருட்கள் கடத்தல் கட்டுபடுத்தப்பட்டு உள்ளது. ஆன்-லைன் மூலம் வெளிநாடுகளில் சுலபமாக கிடைப்பதால் அவற்றை சரக்கு தபால் மூலம் கடத்திய சம்பவங்களே அதிகமாக நடைபெற்று உள்ளது என்றனர்.
காஞ்சீபுரம் அருகே திம்மசமுத்திரம் பாலாஜி நகரில் வசிப்பவர் சண்முகப்பிரியன் (வயது 35). இவருக்கு சரண்யா என்ற மனைவியும், கிருத்திகா, தன்ஷிகா என்ற 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் சண்முகப்பிரியன் தனது குழந்தையின் மருத்துவ பரிசோதனைக்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத் துடன் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டார். சிகிச்சை முடிந்ததும் அங்குள்ள உறவினர் ஒருவர் வீட்டில் மனைவி, குழந்தைகளை தங்க வைத்துவிட்டு, அவர் பணிக்கு சென்று விட்டார்.
இதையடுத்து, தனது பணியை முடித்துவிட்டு மீண்டும் சென்னையில் உள்ள தனது மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு நேற்றுமுந்தினம் திம்மசமுத்திரத்தில் உள்ள தனது வீட்டிற்குவந்துள்ளார்.
அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் நகை மற்றும் 1 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருட்டு போனதை கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து சண்முகப்பிரியன் பாலுசெட்டி சத்திரம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை, இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டது.மோப்பநாய் சிறிது தூரம் சென்று நின்றது.
அதைத்தொடர்ந்து, காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.சண்முகப்பிரியா உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், கொள்ளை நடந்த வீட்டின் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் சிறப்பு விமானத்தில் சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் அதிகாரிகள், விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள், விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது துபாயில் இருந்து சிறப்பு விமானம் சென்னை வந்தது. அதில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது ஹசன் மாலிக் (வயது 25), நாகப்பட்டினத்தை சேர்ந்த முகமது அசாருதீன் (31) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அதிகாரிகளிடம் 2 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் இருவரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அதில் 2 பேரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.48 லட்சத்து 27 ஆயிரம் மதிப்புள்ள 937 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், மேலும் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.






