என் மலர்
காஞ்சிபுரம்
சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்கு வசதியாக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனாலும் சென்னையில் வசிக்கும் பலர், சொந்த ஊருக்கு விமானங்களில் செல்லவே ஆர்வம் காட்டினர்.
இதனால் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் செல்லும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சென்னையில் இருந்து நேற்று தூத்துக்குடிக்கு 3 விமானங்கள் சென்றன. அந்த 3 விமானங்களிலும் அனைத்து இருக்கைகளும் நேற்று மாலைக்கு முன்னதாகவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. இதனால் அதன்பிறகு முன்பதிவு செய்ய முயன்ற பலர் விமானத்தில் செல்ல டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.
மதுரைக்கு சென்ற 5 விமானங்கள், திருச்சிக்கு சென்ற 2 விமானங்களிலும் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. சென்னையில் இருந்து கோவைக்கு 7 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அந்த விமானங்களில் மிகவும் குறைந்த அளவு டிக்கெட்டுகள் மட்டுமே இருந்தது. சென்னையில் இருந்து சேலம் செல்லும் விமானத்திலும் குறைந்த அளவு டிக்கெட்டுகளே இருந்தது.
விமானங்களில் செல்ல பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் விமான டிக்கெட் கட்டணங்களும் பல மடங்கு அதிகரித்தது. தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.3 ஆயிரமாக இருக்கும் டிக்கெட் கட்டணம் நேற்று ரூ.8,500 வரை அதிகரித்தது.
மதுரைக்கு ரூ.2,500 ஆக உள்ள டிக்கெட் கட்டணம் ரூ.6 ஆயிரம் வரையும், உயா் வகுப்பு கட்டணம் ரூ.12,500 ஆகவும் அதிகரித்து இருந்தது. திருச்சிக்கு ரூ.2,400 ஆக இருக்கும் கட்டணம் ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமானது. கோவை, சேலம் விமானங்களிலும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு இருந்தது.
ஆனாலும் பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் குடும்பத்தினருடன் சோ்ந்து கொண்டாடவேண்டும் என்ற ஆா்வத்தில் விமான கட்டண உயா்வை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஆர்வத்துடன் விமானங்களில் பயணம் செய்தனா்.
காஞ்சிபுரத்தை அடுத்த களக்காட்டூர் காந்தி ரோட்டை சேர்ந்தவர் அருள். இவரது மகன் லிங்கமூர்த்தி (வயது 32). சமையல்காரராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் இவர் களக்காடூரில் உள்ள அரசு தோட்டக்கலை எதிரே நேற்று முன்தினம் இரவு நின்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் அவரை பட்டாகத்தியால் சரமாரியாக வெட்டினர்.
அவரது அலறல் சத்தம் கேட்டதும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த லிங்கமூர்த்தியை அங்கு இருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர், பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா, காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தனர்.
இது குறித்து மேலும் வழக்குப்பதிவு செய்து, இந்த கொலை முன் விரோதத்தில் நடந்ததா? வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.21¼ லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.11 லட்சம் தங்கமும் சிக்கியது.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் செல்லும் விமானத்தில் ஏற வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது ராமநாதபுரத்தை நவுப்பர் (வயது 28), சென்னையை சேர்ந்த சவுர் பாத்திமா (44), திருச்சியை சேர்ந்த தில்சாத் (39) ஆகிய 3 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர்களிடமிருந்த கைப்பைகளை சோதனை செய்தனர்.
அதில் கட்டுக்கட்டாக அமெரிக்கா டாலர்கள், சவூதி ரியால்கள், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் நாட்டு பணம் ஆகியவை மறைத்து வைத்து கடத்தி செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, 3 பேரிடமும் இருந்து ரூ.21 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதே போல் துபாயில் இருந்து விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்திறங்கிய சென்னையை சேர்ந்த முகமது அஸ்மத் (33) என்பவரை நிறுத்தி அவரது உள்ளாடையை சோதித்த போது, ரூ.11 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 220 கிராம் தங்கம் கடத்தி வந்ததை கண்டறிந்து, அதை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 4 பேரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இன்றைய அவசர உலகில் சமூக பொறுப்பு என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமானது. ஆனால் இது நம்மில் பலருக்கும் இல்லை என்பதே உண்மை.
இதனை மாற்றும் வகையில் சமூக பொறுப்பை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் லட்சுமிபுரத்தை சேர்ந்த அசோக்குமார் - கிருஷ்ணவேணி தம்பதியினரின் குழந்தைகள் தேவயாணி (11), விக்னேஷ் (8) நடந்திருப்பது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
கடந்த 8-ந்தேதி கிருஷ்ணவேணியும், விக்னேசும் கொட்டும் மழையில் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது சாலையோரம் கழிவுநீர் செல்லும் மழைநீர் கால்வாய் திறந்து கிடப்பதை கண்டனர். அதில் யாரும் விழுந்துவிடக்கூடாது என்பதை உணர்ந்த அவர்கள் தடுப்புகள் வைக்க முடிவெடுத்தனர்.
தேவயாணி அங்கிருந்த விளம்பர பதாகை கட்ட பயன்படுத்தும் ‘ஆங்கிளை’ எடுத்து கால்வாய் மீது வைத்து அதன் மீது பலகை ஒன்றை வைத்து மூடினார்.
கால்வாய் மூடும் பணியை அக்காள் செய்து கொண்டிருந்தபோது அவர் மழையில் நனையாமல் இருக்க விக்னேஷ் குடை பிடித்தார். அவர் சமூக பொறுப்புடன் சகோதர பாசத்தையும் வெளிப்படுத்தினார். இந்த காட்சியை அவ்வழியே சென்ற பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவியதால் அக்காள் தம்பியான தேவயாணி, விக்னேசை அனைவரும் பாராட்டினர்.

இந்த நிலையில் தீயணைப்பு துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, நேற்று குழந்தைகள் தேவயாணி, விக்னேஷ் மற்றும் அவர்களது பெற்றோர் அசோக்குமார் - கிருஷ்ணவேணி ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டினார்.
மேலும் சமூக பொறுப்புடனும், பிறருக்கு எடுத்துக்காட்டாகவும் செயல்பட்ட தேவயாணி, விக்னேசுக்கு ரூ.2 ஆயிரம் பரிசு வழங்கினார். குழந்தைகளின் கல்விக்கு எதிர்காலத்தில் உதவி தேவைப்பட்டால் தன்னை அழைக்குமாறும் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் தேவயாணி - விக்னேசின் செயல் பொறுப்பற்ற அதிகாரிகளுக்கும், சமூக பொறுப்பில்லாமல் சுற்றி வருபவர்களுக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் தென்மாவட்ட பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையோரம் உள்ள சி.எம்.டி.ஏ.வுக்கு சொந்தமான இடத்தில் புதியதாக புறநகர் பஸ் நிலையம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது அந்த இடத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பஸ் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இந்த தற்காலிக பஸ் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்கு ஆம்னி பஸ்களும் நின்று செல்லும். தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்ட இடத்தில் மின்கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. குடிநீர் வசதி, கழிப்பறை மற்றும் பயணிகள் அமருவதற்கு இருக்கைகள் போடப்பட்டுள்ளது.
மேலும் தற்காலிகமாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து மகேந்திரா சிட்டி வரை ஜி.எஸ்.டி.சாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆவடி:
ஆவடியை அடுத்த மோரை திருமலை நகரை சேர்ந்த திருமணமான 27 வயது இளம்பெண் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் இளம்பெண்ணுக்கும் உடன் வேலை பார்க்கும் 2 குழந்தைகளுக்கு தந்தையான 33 வயது வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.
இதுபற்றி அறிந்ததும் இளம்பெண்ணை அவரது கணவர் கண்டித்தார். இதற்கிடையே கடந்த 4-ந் தேதி இளம்பெண் திடீரென மாயமானார்.
இதுபற்றி அவரது கணவர் ஆவடி டேங்க்பேக்டரி போலீசில் புகார் செய்தார். விசாரணையில் இளம்பெண் தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது. குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற அவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இளம்பெண் திடீரென தனது கணவரின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது, ‘‘தாம்பரம் அருகே தங்கி உள்ளோம். நாங்கள் விஷம் குடித்து விட்டோம்.
கடைசியாக உங்களை பார்க்க வேண்டும் வாருங்கள்’’ என்று தெரிவித்து இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனால் பதறிப்போன இளம்பெண்ணின் கணவர் தாம்பரம் பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்று பார்த்தார். அங்கு மனைவியும், கள்ளக்காதலனும் விஷம் குடித்து மயங்கிய நிலையில் உயிருக்கு போராடியபடி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவர்களை மீட்டு ஆவடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கள்ளக்காதல் ஜோடியின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள், விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது துபாயில் இருந்து வந்த சென்னையை சேர்ந்த ஜாகீர் உசேன் (வயது 35) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.
அதில் அவர் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.16 லட்சத்து 81 ஆயிரம் மதிப்புள்ள 330 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக ஜாகீர் உசேனிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி, ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப போகி பண்டிகை அன்று பொதுமக்கள் வீட்டில் உள்ள உபயோகமற்ற கழிவு பொருட்களை எரித்து கொண்டாடுவர். இந்த நிலையில் விமான நிலைய ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை சுற்றி மீனம்பாக்கம், பல்லாவரம், பரங்கிமலை, ஆலந்தூர், நங்கநல்லூர், பொழிச்சலூர், பம்மல், கொளப்பாக்கம், மணப்பாக்கம் போன்ற பகுதிகள் உள்ளன. அதில், கடந்த 2018-ம் ஆண்டு விமான நிலையத்தை சுற்றி உள்ள மேற்கண்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் போகி பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி, அதிக புகை தரக்கூடிய பொருட்களை எரித்ததால் ஏற்பட்ட புகை மூட்டத்தினால் சென்னை விமான நிலையத்தில் 73 புறப்பாடு விமானங்களும், 45 வருகை விமானங்களும் தரையிறங்க சிரமம் ஏற்பட்டு சேவை பாதிக்கப்பட்டது.
அதே போல் கடந்த 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளிலும் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், வருகிற போகி பண்டிகையன்று விமான நிலையத்தை சுற்றி உள்ள வீடுகளில் அதிக புகை தரக்கூடிய பழைய கழிவு பொருட்களை (டயா், பிளாஸ்டிக்) எரிப்பதால் ஏற்படும் புகை மண்டலம் உருவாகி விமானநிலைய ஓடுபாதையை சூழ்ந்து கொள்ளும் நிலை ஏற்படும்.
இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் போகியன்று அதிகமாக புகை ஏற்படக்கூடிய கழிவு பொருட்களை எரிக்க வேண்டாம் என்றும், மேலும் விமான நிலையத்தை சுற்றி உள்ள குடியிருப்பு வாசிகள் விமான சேவைகள் பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்பட ஒத்துழைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
பம்மல், கிருஷ்ணா நகர், பாரதியார் தெருவை சேர்ந்தவர் விநாயகம். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜனனி (வயது 17). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 14-ந்தேதி, அடையாறில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்தின் ஆன்லைன் வகுப்பில், மகள் ஜனனியை விநாயகம் சேர்த்துள்ளார். இதையடுத்து பயிற்சி மைய ஆன்லைன் வகுப்புக்கு சென்று வந்த நிலையில், மகள் சரியாக படிக்கவில்லை என்று கூறி விநாயகம் வருத்தம் அடைந்து பேசாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் விநாயகம் மற்றும் குடும்பத்தினர், எழுந்து பார்த்தபோது, ஜனனி, தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே அவரை மீட்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜனனி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விநாயகம் சங்கர் நகர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் சாவு குறித்து விசாரித்து வருகின்றனர். நீட் பயிற்சி மையத்தில் சரியாக படிக்காததால் மனமுடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் செல்லும் விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை கண்காணித்தனர். அப்போது சென்னையை சேர்ந்த மன்சூரலிகான் (வயது 27), யாகாலீக் (68), தமீம் அன்சாரி (49), முகமது உசேன் (30), யூசுப் (67), புதூரை சேர்ந்த அப்துல் ரகுமான் (38) ஆகிய 6 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
இதற்கிடையே 6 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே, அவர்களது உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த கைப்பை, பவர் பங்க் ஆகியவற்றை சோதனை செய்தனர்.
அதில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள், யூரோ கரன்சிகள், சவூதி ரியால்கள் உள்ளிட்ட வெளிநாட்டு பணத்தை மறைத்து வைத்து கடத்தி செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, 6 பேரிடமும் இருந்து ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தமீம் அன்சாரியை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், மற்ற 5 பேரிடமும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.






