search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனிமைப்படுத்துதல்
    X
    தனிமைப்படுத்துதல்

    சென்னை வந்த இங்கிலாந்து பயணிகள் 4 பேரை ஓட்டலில் தனிமைப்படுத்தினர்

    உள்நாட்டு விமானத்தில் சென்னை வந்த இங்கிலாந்து பயணிகள் 4 பேரை கொரோனா பரிசோதனைக்கு பிறகு தனியார் ஓட்டலில் சுகாதார துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தி வைத்தனர்.
    ஆலந்தூர்:

    இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியா உள்பட சில நாடுகள் இங்கிலாந்துக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

    லண்டனில் இருந்து சென்னை வரும் விமான சேவைகள் கடந்த மாதம் 23-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது. கடந்த மாதம் 24-ந் தேதி லண்டனில் இருந்து சரக்கக விமானம் சென்னைக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த விமானிகள் உள்பட ஊழியா்கள் 9 பேரை சென்னை விமான நிலையத்தில் உள்ள சுகாதாரத்துறையினா் மருத்துவ பரிசோதனைகள் நடத்தி தனிமைப்படுத்தினா். அதன்பிறகு லண்டனில் இருந்து சரக்கு விமானமும் சென்னைக்கு வரவில்லை.

    இந்தநிலையில் இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு விமான நிலையங்களில் இருந்து லண்டனுக்கு குறைந்த அளவு விமானங்களை இயக்க இந்திய அரசு அனுமதித்து உள்ளது.

    ஆனால் சென்னையில் இருந்து லண்டனுக்கு நேரடி விமான சேவையை தொடங்கவில்லை. சென்னையில் இருந்து லண்டன் செல்லும் பயணிகள், பெங்களூரு, ஐதராபாத்துக்கு உள்நாட்டு விமானத்தில் சென்று அங்கிருந்து லண்டன் செல்கின்றனர். இதேபோல் லண்டனில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய பயணிகளும் பெங்களூரு, ஐதராபாத் வழியாக சென்னை வரவேண்டிய நிலை உள்ளது.

    லண்டனில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் வழியாக உள்நாட்டு விமானத்தில் சென்னை உள்ளிட்ட தமிழகம் வரும் பயணிகளால் இங்கும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்படுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில் நேற்று உள்நாட்டு விமானம் மூலம் சென்னை வந்த இங்கிலாந்து நாட்டு பயணிகள் 4 பேரை அடையாளம் கண்டுபிடித்த சுகாதாரத் துறை அதிகாரிகள், அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்தனர். பின்னர் 4 பேரையும் மணப்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தி வைத்தனர்.

    இங்கிலாந்தில் பரவும் உருமாறிய வைரஸ் இந்தியாவில் பரவுவதை தடுக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. லண்டனில் இருந்து இந்தியாவிற்கு நேரடியாக வரும் அனைத்து விமான பணிகளுக்கும், அவா்கள் வந்திறங்கும் விமான நிலையங்களிலேயே முழுமையான மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகின்றது. அவா்களில் நோய்தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டவா்கள் மட்டுமே வெளியே அனுப்பப்படுகின்றனா்.

    உள்நாட்டு விமானங்களில் பயணிக்கவும் அனுமதிக்கப்படுகின்றனா். லண்டனில் இருந்து வந்து வேறு மாநிலங்கள் அல்லது மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் பற்றிய விவரங்களை அந்தந்த மாநில, மாவட்ட சுகாதாரத்துறைக்கு உடனடியாக தெரிவிக்கப்படுகிறது. லண்டனில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தொடா்ந்து கண்காணிக்கபடுவார்கள். எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
    Next Story
    ×