search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Corporation Commissioner"

    தீ விபத்து நடந்த கட்டிடத்தை இடிக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் தூங்கிக் கொண்டு இருக்கிறார்களா என ஆணையரிடம், ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. #ChennaiHighCourt
    சென்னை:

    வடபழனி சிவன் கோயில் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் மின்கசிவு காரணமாக 2017-ம் ஆண்டு மே மாதம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 4 பேர் உடல் கருகி பலியாகினர்.

    இந்த கட்டிடம் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதாகவும், இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் சென்னை மாநகராட்சி ஆணையரை நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, ஆணையர் ஆஜராகவில்லை. அவர் சார்பில் துணை ஆணையர் ஆஜரானார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனை நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

    அதன்படி, ஆணையர் கார்த்திகேயன் இன்று காலையில் நீதிபதிகள் முன்பு ஆஜராகி, ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அதை படித்து பார்த்த நீதிபதிகள், மாநகராட்சி அதிகாரிகளின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். சரமாரியாக கேள்விகளையும் எழுப்பினர். நீதிபதிகள் கூறியதாவது:-

    வடபழனி கட்டிடத்தில் கடந்த 2017ம் ஆண்டு மே தீ விபத்து நடந்துள்ளது. அன்று முதல் (2018ம்ஆண்டு) செப்டம்பர் மாதம் வரை என்ன நடவடிக்கைகள் எடுத்தீர்கள்? இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்ட பிறகுதான், இந்த அறிக்கையை தயாரித்து காலதாமதமாக தாக்கல் செய்துள்ளீர்கள். இது மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சிய போக்கை காட்டுகிறது

    தீ விபத்து குறித்து கடந்த ஓர் ஆண்டில் அதிகாரிகள் என்ன நடவடிக்கையை எடுத்துள்ளனர்? நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? தீவிபத்து ஏற்பட்ட கட்டிடத்தை இடிக்க இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இதை கவனிக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் என்ன தூங்கிக் கொண்டிருக்கின்றனரா?

    மெரினாவில் சென்று பார்த்தால் எவ்வளவு அசுத்தமாக, அருவருப்பாக உள்ளது என தெரியும், அது மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் தானே வருகிறது.

    மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் எவ்வளவு விதிமுறை மீறிய கட்டிடங்கள் உள்ளன? என்பதற்கான தகவல்கள் மாநகராட்சியிடம் இல்லை. தமிழக அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகப்பணியை ஐகோர்ட்டு மேற்கொள்ள முடியாது.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

    அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராஜகோபால் ஆஜராகி, ‘விபத்து குறித்து முதல் கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை வந்தவுடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உயிரிழந்தவரின் குடும்பங்களுக்கு இழப்பீடு கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்பட்டு விட்டது என்று கூறினார்.

    இதையடுத்து இந்த வழக்கை டிசம்பர் 5-ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், சென்னையில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டனர். #ChennaiHighCourt
    ×