search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னை விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்

    சாக்லெட் மற்றும் உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.1 கோடியே 97 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 726 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அதில் வந்த சென்னையை சேர்ந்த பத்மா பாலாஜி (வயது 25) என்ற பெண்ணிடம் சந்தேகத்தின்பேரில் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார். அவரது உடைமைகளை சோதனை செய்தபோது அதில் எதுவும் இல்லை.

    இதனால் அவரை தனிஅறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் சாக்லெட்டுகளை மறைத்து வைத்திருந்தார். அதனை பிரித்து பார்த்தபோது அவற்றுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.28 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 546 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த 12 பயணிகள் மற்றும் சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த 3 பேர் என 15 பேரை சோதனை செய்தனர். அதில் அவர்கள் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.1 கோடியே 69 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 180 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து வந்த 16 பேரிடமும் இருந்து ரூ.1 கோடியே 97 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 726 கிராம் தங்கத்தை பறிமுதல் சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக பத்மா பாலாஜி என்ற பெண்ணை கைது செய்தனர். மற்ற 15 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×