என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான், மற்றவர்கள் சுயநலத்திற்காக கூறுகின்றனர் என்று கேபி முனிசாமி கூறியுள்ளார்.
    சென்னை:

    4 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்று பெங்களூரூ ஜெயிலில் இருந்து வந்த சசிகலா கடந்த 27-ந்தேதி முறைப்படி விடுதலை செய்யப்பட்டார். கொரோனா பாதிப்பு இருந்ததால், தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று மதியம் 12 மணிக்கு ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெளியே வந்தார்.

    அவர் கார் முன் இருக்கையில் அமர்ந்திருந்தார். அவரது காருக்கு முன்னும் பின்னும் பல கார்கள் அணிவகுத்து வந்தன. சசிகலாவின் காரில் அ.தி.மு.க. கொடி பொருத்தப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி கூறியதாவது,

    அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான், மற்றவர்கள் சுயநலத்திற்காக கூறுகின்றனர். அதிமுக இல்லாத சசிகலா, அதிமுக கொடியை பயன்படுத்தியது கண்டனத்திற்குறியது. 
    சசிகலா காரில் அ.தி.மு.க. கொடி
    பல்வேறு கோணங்களில் அதிமுகவை கைப்பற்ற டிடிவி தினகரன் முயற்சி செய்து பார்த்தார். தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக தன்பக்கம் இருப்பவர்களை ஏமாற்றி வருகிறார். 

    அதிமுகவுக்கு எதிராக செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு தினகரன் மன்னிப்பு கடிதம் தர வேண்டும். மன்னிப்பு கடிதம் தந்தால் அதுபற்றி தலைமை பரிசீலனை செய்யும் என்றார்.
    செல்போனில் ‘கேம்’ விளையாடியதை கண்டித்ததால் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    தாம்பரம்:

    காஞ்சீபுரம் மாவட்டம், உழவர் தெருவை சேர்ந்தவர் பத்மினி. இவரது மகன் மாதவன் (வயது 15). அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த வாரம் பீர்க்கன்காரணை, தேவநேசன் நகர் 2-வது தெரு இருளர் பகுதியில் உள்ள உறவினரது வீட்டிற்கு வந்துள்ளார்.

    இந்நிலையில், அந்த வீட்டில் நேற்று முன்தினம் மாலை தூக்கில் தொங்கிய நிலையில் மாதவன் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் பீர்க்கன்காரணை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    அதில் மாதவன் காஞ்சீபுரத்தில் இருந்தபோது அடிக்கடி செல்போனில் ‘வீடியோ கேம்’ விளையாடி வந்ததால் அவரது பெற்றோர் பீர்க்கன்காரணையில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி உள்ளனர்.

    இங்கும் செல்போனில் ‘வீடியோ கேம்’ விளையாடியதை உறவினர்கள் தடுத்ததால், மனமுடைந்த மாதவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
    மாங்காட்டில் திருமண மண்டபத்தில் நகை திருடியது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பூந்தமல்லி:

    பம்மலை சேர்ந்தவர் விஜயகுமார் (61), இவர் தனது உறவினர் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக மாங்காடு, பரணிபுத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் அறையில் பைகளை வைத்து பூட்டிவிட்டு கீழே சென்று திருமண வேலைகளை பார்த்து கொண்டிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அறையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கு இருந்த 7½ பவுன் நகைகள், 2 செல்போன்கள் திருட்டு போயிருப்பது தெரிந்தது. இது குறித்து மாங்காடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் மாங்காடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமாக ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்.

    அந்த நபரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார். மேலும் விசாரணை செய்தபோது திருமண மண்டபத்தில் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். விசாரணையில் அவர் பொழிச்சலூரை சேர்ந்த பன்னீர்தாஸ் (என்ற) பன்னீர்செல்வம் (வயது23), என்பது தெரிய வந்தது. அவர் பாக்கெட்டில் வைத்திருந்த 7½ பவுன் நகை மற்றும் 2 செல்போன்களை போலீசார் கைப்பற்றினர்.

    கொள்ளை சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் பன்னீர்தாஸ் கைது செய்யப்பட்டார்.
    வருகிற சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொய் வாக்குறுதி பலிக்காது. மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும் என்று ஜி.கே.வாசன் பேசியுள்ளார்.

    காஞ்சீபுரம்:

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பிரசாரத்தை காஞ்சீபுரத்தில் இருந்து நேற்று தொடங்கி இருக்கிறது.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் காஞ்சீபுரம் காந்தி ரோடு, பெரியார் தூண் அருகே மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன் தலைமையில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் முன்னிலையில், “மக்களை நோக்கி மக்கள் தளபதி வாசன்” என்ற வாசகத்தை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

    எதிர்க்கட்சிகளுக்கும் எதிர்க்கட்சியை சேர்ந்த கூட்டணி கட்சிகளுக்கும் தேர்தல் பயம் வந்து விட்டது. இதன் காரணத்தினால் மக்களுக்கான திட்டங்களுக்கு தடையாக தமிழகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    தேர்தல் வாக்குக்காக எதிர்கட்சிகள் தொடர்ந்து பொய் வாக்குறுதிகளை ஏழை எளிய மக்களுக்கு கூறி அதனால் வாக்கு பெற்று வெற்றி பெறலாம் என நினைக்கிறார்கள். ஆனால் அது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பலிக்காது. மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத் தொடர்ந்து ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தே.மு.தி.க. கூட்டணியை வலுப்படுத்த உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்கிட வேண்டும். வருகிற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரசுக்கு எத்தனை இடம் கொடுக்கப்படும் என்பது பேச்சு வார்த்தைக்கு பிறகே தெரிய வரும்.

    அ.தி.மு.க. கூட்டணி பலமாக உள்ளதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அ.தி.மு.க. அமோகமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. கட்சி முக்கியமான கட்சி. எனவே அவர்களின் கோரிக்கைகளை அ.தி.மு.க. பரிசீலினை செய்வார்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன், மாநில இளைஞர் அணி பொது செயலாளர் சங்கர், மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திக், நகர தலைவர் சுகுமார், நிர்வாகிகள் கஜா, கோல்டு மோகன், முத்து, சசிகுமார், அஜித், தென்னவன், ராம்குமார், உமாபதி, யுவராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    உத்திரமேரூரில் ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்திரமேரூர்:

    சென்னை வளசரவாக்கம் அன்பு நகரை சேர்ந்தவர் கமல்தாஸ். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள உறவினர் சிவகுமார் வீட்டு கிரகபபிரவேசத்திற்கு குடும்பத்தினருடன் சென்றார். இவரது மகன் மோனிஷ் (வயது 10). நேற்று மாலை மோனிஷ் உத்திரமேரூர் ஏரியில் நண்பர்களுடன் குளிக்க சென்றான். அப்போது எதிர்பாராதவிதமாக மோனிஷ் ஏரியில் மூழ்கினான். உடன் சென்ற சிறுவர்கள் கூச்சலிட்டனர். அங்கு இருந்தவர்கள் ஓடி வந்து ஏரியில் குதித்து மோனிஷை மீட்டு சிகிச்சைக்காக உத்திரமேரூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.35 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த நைனா முகமது (வயது 50), இப்ராகிம் ஆகிய 2 பேர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், இருவரையும் நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

    இதனால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

    அதில் ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 9 விலை உயர்ந்த செல்போன்களை கைப்பற்றினார்கள். பின்னர் 2 பேரையும் தனியறைக்கு அழைத்து சோதனை செய்தனர்.

    அதில் அவர்கள் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.35 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள 706 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
    கார் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த மடிப்பாக்கம் காந்தி நகரை சேர்ந்தவர் சேவியர் (வயது 65). இவர், நங்கநல்லூர் 4-வது மெயின் ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த சேவியர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அதேபோல் திருவண்ணாமலையை சேர்ந்த பிரபு (30) மற்றும் அவருடைய நண்பர் பாலாஜி (24) இருவரும் நேற்று கொளத்தூரில் நடக்கும் திருமண வீட்டில் சமையல் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செம்பரம்பாக்கம் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பிரபு அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். பாலாஜி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

    இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 500 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது துபாய் விமானத்தில் வந்து கடலூரை சேர்ந்த சையத் முஸ்தபா (வயது 28), ராமநாதபுரத்தை சேர்ந்த அசாருதீன் (22), அஜ்மல் கான் (24), சையத் முகமது (34), சுல்தான் சலாவுதீன் (27) ஆகிய 5 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

    அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள 75 விலை உயர்ந்த வெளிநாட்டு சிகரெட்டுகள், 14 மடிக்கணினிகள் இருந்தன. அவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் 5 பேரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர்கள், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததையும் கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து 5 பேரிடம் இருந்தும் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 500 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள். மேலும் இது தொடர்பாக 5 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    திருமணமான 2 ஆண்டில் இளம்பெண் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவர் கைது செய்யப்பட்டார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் ஓரிக்கை சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 34). இவரது மனைவி தீபா (28). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆன நிலையில், 1 வயதில் ஆண் குழந்தையும், 1 மாத பெண் குழந்தையும் உள்ளது.

    இந்நிலையில் ஆனந்தராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது.

    மேலும் மனைவி தீபாவிடம் மாமனார் வீட்டிற்கு சென்று பணம் வாங்கி வரக்கூறி ஆனந்த்ராஜ் அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது.

    இந்நிலையில் மனமுடைந்த தீபா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் படுக்கை அறையில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதனால் பலத்த தீக்காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மணிமேகலை தலைமையில் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் உள்ளிட்ட போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து சென்று தீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தீபாவை அடித்து துன்புறுத்தியதும், மனைவி தீபாவை தற்கொலைக்கு தூண்டியதும் உறுதியானதையடுத்து, ஆனந்த்ராஜை கைது செய்து அதைதொடர்ந்து அவரை காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காஞ்சீபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.

    திருமணமாகி 2 ஆண்டுகளே ஆனதால் இளம்பெண் சாவு தொடர்பாக காஞ்சீபுரம் ஆர்.டி.ஓ. வித்யா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
    சென்னை விமான நிலையத்தில் துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 8 கிலோ 500 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது 4 பெண்கள் உள்பட 17 பேர் வந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை.

    பின்னர் அனைவரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர்கள் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 17 பேரிடம் இருந்து ரூ.4 கோடியே 16 லட்சம் மதிப்புள்ள 8 கிலோ 200 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த கலந்தர் (28) என்பவரிடம் இருந்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தையும் கைப்பற்றினார்கள்.

    சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 18 பேரிடம் இருந்து ரூ.4 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 8 கிலோ 500 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 4 பெண்கள் உள்பட 18 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.
    மேல்மருவத்தூர் தைப்பூச விழாவுக்கு குழுவினருடன் வந்த இளம்பெண் மாமல்லபுரம் சென்று அங்குள்ள கடலில் குளித்தபோது அதில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
    மாமல்லபுரம்:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ஆன்மிக பக்தர்கள் 50 பேர் சேர்ந்து ஒரு குழுவாக மேல்மருத்தூரில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் 10 நாட்களாக நடந்து வரும் தைப்பூச விழாவுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர். அவர்கள் அனைவரும் நேற்று மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர்.

    அங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்தனர்.

    அவர்களில் சிலர் அங்குள்ள கடலில் குளித்தனர். அப்போது குளித்து கொண்டிருந்த பொள்ளாச்சி நகரத்தை சேர்ந்த உமாமகேஸ்வரி (வயது 23) என்ற பெண்ணை ராட்சத அலை கடலுக்குள் இழுத்து சென்றது. இதில் மூச்சு திணறி அவர் பரிதாபமாக இறந்தார். சிறிது நேரத்தில் அவரது உடல் கரை ஒதுங்கியது.

    தகவலறிந்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று கடலில் சீற்றம் அதிகமாக இருந்ததால் குளித்து கொண்டிருந்த மற்ற பக்தர்களை எச்சரித்து கரைக்கு வரும்படி அறிவுறுத்தினர். துயர சம்பவம் அவர்கள் கண் முன் நடந்தும் போலீசாரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் பலர் அலட்சிய போக்குடன் கடலில் குளித்து கொண்டிருந்தனர். போலீசார் கரைக்கு திரும்பி வாருங்கள் என்று கடுமையாக எச்சரித்த பிறகு பலர் கடலில் குளிப்பதை நிறுத்திவிட்டு கரைக்கு திரும்பினர்.

    உமாமகேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த துயர சம்பவத்தால் ஆன்மிக யாத்திரை பயணத்தை ரத்து செய்துவிட்டு பொள்ளாச்சி பக்தர்கள் அனைவரும் சோகத்துடன் சொந்த ஊர் திரும்பினர்.
    சென்னையில் நேற்று நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக விமான நிலையத்தில் 57 விமானங்கள் தாமதமாக சென்று வந்தன. 7 விமானங்கள் பெங்களூரு மற்றும் ஐதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டன.
    ஆலந்தூர்:

    சென்னை புறநகர் பகுதிகளான ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பரங்கிமலை உள்பட பல பகுதிகளில் நேற்று காலை 6.30 மணியில் இருந்து பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது. எதிரே வரும் வாகனங்களே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால் வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர்.

    மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் ஓடுபாதையில் பனிமூட்டம் அதிகமாக இருந்தது. கடும் பனி மூட்டம் காரணமாக காலை 6 மணி முதல் 8 மணி வரை சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டன.

    அதன்படி சென்னையில் இருந்து ஆமதாபாத், மதுரை, மும்பை, புனே, ஹூப்ளி, புவனேஸ்வர், டெல்லி, பெங்களூரு, திருச்சி, விசாகப்பட்டினம், கொல்கத்தா, கோவை, கவுகாத்தி, தூத்துக்குடி, சீரடி, கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய 38 விமானங்கள் சுமார் 30 நிமிடங்களில் இருந்து 1 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.

    மேலும் பிறநகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த 19 விமானங்கள் தரை இறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 30 நிமிட தாமதத்துக்கு பிறகு அவை தரை இறங்கின.

    அதேபோல் பெங்களூரு, மும்பை, டெல்லி, துபாய், அந்தமான் ஆகிய நகரங்களில் இருந்து சென்னை வந்த 5 விமானங்கள் தரை இறங்க முடியாமல் பெங்களூருக்கும், டெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து வந்த 2 விமானங்கள் ஐதராபாத்துக்கும் திருப்பிவிடப்பட்டன.

    காலை 9 மணிக்கு பிறகு பனி மூட்டம் குறைந்ததும் சென்னையில் விமான சேவை சீரானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×