என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    பாலியல் பலாத்காரத்திற்கு உடந்தையாக இருந்த பொன்னியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சிபுரம்:

    திருக்கழுக்குன்றம் தாலுகாவை சேர்ந்த 16 வயது சிறுமி வாலாஜாபாத் பகுதியில் உள்ள டெய்லரிங் பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார்.

    இதற்காக அவர் கடந்த பிப்ரவரி மாதம் வாலாஜாபாத் அடுத்துள்ள சங்கராபுரத்தில் உள்ள தனது  அக்காள் முறையான  பெரியப்பா மகள் பொன்னி என்பவரது வீட்டில் வந்து தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி பொன்னியின் கணவர் மோகன் (30) என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு சிறுமியின் அக்காள் பொன்னியும் உடந்தையாக இருந்துள்ளார்.

    இது குறித்து சிறுமியின் தாயார் சாலவாக்கம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் பாலியல் பலாத்காரத்திற்கு உடந்தையாக இருந்த பொன்னியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மோகனை தேடி வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாளை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளதாக கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா நோயை தடுப்பதற்காக காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மெகா தடுப்பூசி முகாம் அனைத்து வட்டாரத்திலும் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திலும் 100 தடுப்பூசி முகாம்கள் நடத்த மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின்படி திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி ஒவ்வொரு தடுப்பூசி முகாம்களிலும் தடுப்பூசி போடுவதற்காக நர்சுகள், தகவல்களை பதிவிட தகவல் பதிப்பாளர்கள் மற்றும் பயனாளிகளை அழைத்துவர 4 நபர்கள் முறையே சத்துணவு பணியாளர்கள், உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறையை சேர்ந்த பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.

    இந்த கொரோனா தடுப்பூசியானது 100 சதவீதம் பாதுகாப்பானது. ஆகவே முதல் தவணை தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் 2-வது தவணை தடுப்பூசி நிலுவையில் இருந்தால் அவர்களும் இந்த முகாமில் 2-வது தவணை தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.

    முதல் தவணை தடுப்பூசி போடாதவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தாங்களும் தங்கள் குடும்பத்திலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் குடும்பமாக வந்து தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.

    குறிப்பாக ரத்த அழுத்தம், சக்கரைநோய் உள்ளவர்களும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்பது அவசியமானது. இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த தடுப்பூசி முகாமை பயனாளிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    ரே‌ஷன் கடையில் இருந்து அரிசி 6 மூட்டைகள் கடத்தப்படுவதை பார்த்த அப்பகுதி மக்கள் அரிசி மூட்டைகளை கொண்டு சென்றவரை பிடிக்க விரட்டி சென்றனர்.
    காஞ்சிபுரம்:

    சின்ன காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சிபுரம் காவல் நிலையம் அருகே உள்ள யாகசாலை மண்டபத் தெருவில் ரே‌ஷன் கடை செயல்பட்டு வருகிறது. ஊழியராக செல்வம் உள்ளார்.

    இந்த கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக அரசு வழங்கும் இலவச அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை, உள்ளிட்ட பொருட்களை ரே‌ஷன் கடை விற்பனையாளர் வழங்குவதில்லை என பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ரே‌ஷன் கடையில் இருந்து அரிசி 6 மூட்டைகள் கடத்தப்படுவதை பார்த்த அப்பகுதி மக்கள் அரிசி மூட்டைகளை கொண்டு சென்றவரை பிடிக்க விரட்டி சென்றனர். பொதுமக்கள் துரத்துவதை கண்ட அரிசி கடத்தல்காரர் மூட்டைகளை ரோட்டிலேயே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.

    இதுகுறித்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் பாபுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து ரே‌ஷன் கடையில் சோதனை மேற்கொண்டார்.

    அப்போது ரே‌ஷன் கடையில் இருந்து அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டு இருப்பது உறுதியானது. இதையடுத்து ரே‌ஷன் கடை ஊழியர் செல்வத்தை சஸ்பெண்ட் செய்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் பாபு உத்தரவிட்டுள்ளார்.

    படப்பை அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள சோமங்கலம் அடுத்த புதுநல்லூர் கிராமத்தில் 700-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் செல்போன் கோபுரம் அமைக்க தனியார் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் அந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைத்தால் குழந்தைகள், பெரியவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் ரேடியேஷன் அதிகமாக இருக்கும் என தெரிவித்து செல்போன் கோபுரம் அமைப்பதை தடுத்து நிறுத்தக்கோரி சோமங்கலம்-புதுநல்லூர் சாலையில் பொதுமக்கள் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோமங்கலம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து அந்த பகுதி பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ.விடம் சென்று புகார் தெரிவிக்க போவதாக தெரிவித்தனர்.

    உறவினர் இல்ல விழாவில் கலந்து கொள்ள வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஒரு வார காலம் சென்னையில் தங்கி இருந்து 13-ந் தேதி புறப்பட்டு செல்கிறார்.
    ஆலந்தூர்

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெலுங்கானாவில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் நேற்று சென்னை வந்தார். அப்போது, விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் இறையன்பு, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கவர்னர் மாளிகை செயலாளர் ஆனந்த் ராவ் உள்பட அதிகாரிகள் வரவேற்றனர்.

    பின்னர் அவரது காரில் அடையாறில் உள்ள வீட்டிற்கு சென்றார். உறவினர் இல்ல விழாவில் கலந்து கொள்ள வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஒரு வார காலம் சென்னையில் தங்கி இருந்து 13-ந் தேதி புறப்பட்டு செல்கிறார்.
    ஒரகடம் அருகே சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் காவலாளி பலியானார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பட்டவரம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் தர்மன் (வயது 60). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லம் பகுதியில் தங்கியிருந்து வல்லம் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை பணி முடிந்து சைக்கிளில் வல்லம் அருகே ஸ்ரீபெரும்புதூர் சிங்கப்பெருமாள் கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று சைக்கிள் மீது மோதியது.

    இதில் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட தர்மன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார் இறந்த தர்மன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்திரமேரூர் அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்திரமேரூர்:

    உத்திரமேரூர் பெருநகர் பகுதியில் லாரிகளில் மணல் கடத்துவதாக பெருநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. நேற்று முன்தினம் இரவு சப்-இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தண்டரை சேர்ப்பாக்கம் சாலையில் வந்த 2 லாரியை மறித்து சோதனை செய்ததில் லாரியில் அனுமதியின்றி மண் ஏற்றி கொண்டு வந்தது தெரியவந்தது. இது சம்பந்தமாக தண்டரை கிராமத்தை சேர்ந்த ராபின் (வயது 31), பெருநகர் சிங்காள தெருவை சேர்ந்த தவமணி (36) ஆகியோரை போலீசார் கைது செய்து, 2 மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    வாலாஜாபாத் சார்பதிவாளர் அலுவலக ஊழியர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்துள்ள சுதர்சன் விரிவாக்கம் நகர் பகுதியில் வசித்து வரும் கவிதா வாலாஜாபாத் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் இன்று காலை வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 50 சவரன் தங்க நகை மற்றும் வைர நெக்லஸ், கம்மல், வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கமாக ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.

    இதனையடுத்து அவர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    கொரோனா தொற்றை ஒழிக்க தொழிற்சாலைகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டு கொள்ளப்படுகிறது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்று தாக்கத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கையில் முக்கிய பங்காக தமிழக அரசு அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக அளித்து வருகிறது. அதனை தொடர்ந்து தொழிற்சாலைகள் நிறைந்துள்ள காஞ்சீபுரம் மாவட்டத்தில் அனைத்து பணியாளர்களுக்கும் 3-ம் கட்ட தடுப்பூசி போடும் முகாமை துரிதப்படுத்தும் பொருட்டு தொழில் நிறுவனங்கள் அதிகமாக இயங்கி வரும் சிப்காட் மற்றும் சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, மாம்பாக்கம், பிள்ளைப்பாக்கம், வல்லம்வடகால், ஒரகடம், திருமுடிவாக்கம் போன்ற இடங்களில் தினந்தோறும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. எனவே, தொழிலாளர்கள் இந்த முகாம்களுக்கு சென்று தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

    சிப்காட் மற்றும் சிட்கோவில் உள்ள நிறுவனங்கள் தவிர ஏனைய தொழில் நிறுவன தொழிலாளர்களும் நகர்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று தடுப்பூசி போட்டு 100 சதவீதம் தடுப்பூசி போட்டு கொண்ட மாவட்டம் என்ற இலக்கை அடைய அனைவரும் விடாமுயற்சியுடன் கடைசி ஒரு தொழிலாளர் வரை தடுப்பூசி போட்டு கொள்ள செய்ய வேண்டும்.

    கொரோனா தொற்றை ஒழிக்க தொழிற்சாலைகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டு கொள்ளப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், மாவட்ட தொழில் மையம், பொது மேலாளரை தொடர்பு கொள்ளலாம். (044-27238837, 9688036736).

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 6 லட்சத்து 81 ஆயிரத்து 731 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலை கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான டாக்டர் ஆர்த்தி, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி முதல் பிரதியை பெற்று கொண்டார்.

    பின்னர் கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கூறியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு உள்ளாட்சித் தேர்தலுக்கான மறு வரையறை செய்யப்பட்ட வார்டுகளின் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன. ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள 1281 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 6 லட்சத்து 81 ஆயிரத்து 731 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 266 ஆண்கள், 3 லட்சத்து 50 ஆயிரத்து 387 பெண்கள் மற்றும் 78 இதர வாக்காளர்கள் உள்ளனர்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இறுதிநாள் வரை வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கல் தொடர்பான விவரங்கள் வருவாய்த்துறையினரிடம் இருந்து பெறப்பட்ட மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) ஸ்டீபன் ஜெயச்சந்திரா, வட்டார வளர்ச்சி அலுவலர் (தேர்தல்) தினகரன் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
    ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    பெரிய காஞ்சீபுரம் வெள்ளக்குளத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 58). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி செல்வி. 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் சீனிவாசன் தனது அண்ணனுடன் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். சீனிவாசனை குடும்பத்தினர் தேடிவந்த நிலையில் காஞ்சீபுரம் அருகே பிச்சாவாடி பாலாற்று படுகையில் விஷம் குடித்து உயிரிழந்துள்ளார்.

    இதுகுறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், போலீசார் அங்கு விரைந்து சென்று சீனிவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சியில் பொதுமக்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சியில் பொதுமக்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) முத்துக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். குன்றத்தூர் ஒன்றிய தி.மு.க. மகளிரணி அமைப்பாளர் மலர்விழி தமிழ்அமுதன், ஆதனூர் ஊராட்சி கிளை செயலாளர் டி. தமிழ்அமுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சமூக இடைவெளியுடன் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர். பொதுமக்களுடன் வரிசையில் நின்று வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். பொதுமக்கள் பொது இடங்களில் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். அப்போது ஊராட்சி செயலர் இதயராஜ் உடன் இருந்தார்.
    ×