என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    உத்திரமேரூர் அருகே கத்திமுனையில் மூதாட்டியிடம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்திரமேரூர்:

    உத்திரமேரூர் பேரூராட்சி செங்குந்தர் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் கோட்டம்மாள் (வயது 75). இவருக்கு சொந்தமான வீட்டில் அவர் தனியாக வசித்து வந்த நிலையில், வீடு வாடகைக்கு விடப்படும் என்று பலகை வைத்துள்ளார். நேற்று மதியம் மர்ம நபர் ஒருவர் கோட்டம்மாளிடம் வீடு பார்க்க வந்துள்ளதாக கூறியுள்ளார்.

    அதனை நம்பிய கோட்டம்மாள் வீட்டைகாண்பிக்க அவரைஉள்ளே அழைத்து சென்றபோது, கத்தியைக் காட்டி மிரட்டிய அந்த நபர் அவரிடம் இருந்த 5 பவுன் மதிப்புள்ள தங்க வளையல் மற்றும் சங்கிலியை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

    இது குறித்து உத்திரமேரூர் போலீஸ்நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    உத்திரமேரூர் பகுதியில் ஒரே நாளில் 3 இடங்களில் நகை, பணத்தை கொள்ளையடித்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
    உத்திரமேரூர்:

    உத்திரமேரூர் ஒன்றியம் கவனிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 32). இவரது மனைவி திவ்யா (28). நேற்று காலை 11 மணி அளவில் திவ்யா வீட்டில் இருந்தபோது அவரது வீட்டின் பின்பக்க கதவு வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் 2 பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் திவ்யாவை பிடித்து கட்டிப்போட்டு அவருடைய கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலி மற்றும் தாலி சரடு 4 பவுன் மற்றும் காதில் இருந்த 3 கிராம் கம்மலையும் கழற்றி கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    பின்பு திவ்யாவின் உறவினர்கள் அங்கு வந்து கட்டி போட்டு இருந்த அவரை விடுவித்தனர். இது பற்றி திவ்யா சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சாலவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    இதே போல், உத்திரமேரூர் பேரூராட்சி அண்ணாநகரை சேர்ந்தவர் சீனிவாசன் (41). இவரது மனைவி செல்வமணி (38). இவர்கள் இருவரும் கண் பார்வையற்றவர்கள். அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் இருவரும், கடந்த புதன்கிழமை திருச்சியில் உள்ள உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்ற நிலையில், நேற்று காலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை அறிந்து திடுக்கிட்டனர்.

    வீட்டின் உள்ளே சென்றபோது பீரோவில் இருந்து 5 பவுன் நகையும், ரூ.30 ஆயிரமும் கொள்ளை போனது தெரிய வந்தது. இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    மேலும், உத்திரமேரூர் ஒன்றியம் பினாயூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (49). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பத்மாவதி (45). இவர்கள் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற நிலையில், பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்று பீரோவில் இருந்த 4½ பவுன் நகையும், ரூ.60 ஆயிரத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

    இதுபற்றி கிருஷ்ணகுமார் சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
    உள்ளாட்சி தேர்தலின் போது அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு வருகிற 6 மற்றும் 9-ந் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.

    தற்போது உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.

    கடந்த 23-ந் தேதி எடப்பாடி பழனிசாமி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    நேற்று தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தி பேசினார்.

    இன்று காலை எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரம் சுகுமாரி திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சிமன்றத் தலைவர், வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் நூற்றுக்கணக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்தார்.

    பின்னர் நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    உள்ளாட்சி தேர்தலின் போது அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தி.மு.க.வினர் பெட்டிகளை மாற்றி நம்மை தோல்வியுற செய்து விடுவார்கள்.

    மு.க.ஸ்டாலின்

    எனவே தொண்டர்கள் மிகுந்த விழிப்புடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டும். மு.க.ஸ்டாலின் தமிழக மக்களை ஏமாற்றி விட்டார். பெண்கள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு பல வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் அவர் முதல்வராக பதவியேற்று 100 நாட்களை கடந்தும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 5 ஆண்டுகளில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அவர் கூறுகிறார். ஆனால் தேர்தல் நேரத்தில் அவர் அப்படி சொல்லவில்லை.

    ஆட்சிக்கு வந்தவுடனேயே வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்றார். ஆனால் தற்போது வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார்.

    எனவே பொதுமக்கள் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் மிகவும் விழிப்புணர்வுடன் வாக்களித்து அ.தி.மு.க.வை வெற்றிபெற செய்ய வேண்டும்.

    அ.தி.மு.க. பொறுப்பாளர்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தொண்டர்கள் அனைவரும் அ.தி.மு.க. வெற்றிக்காக இரவு- பகல் பாராமல் கடுமையாக உழைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும்.

    9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. வெற்றிபெற்றது என்ற செய்தி நமது காதில் விழவேண்டும். அந்த அளவுக்கு அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் பென்ஜமின், காமராஜ், கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி, நிர்வாகிகள், எஸ்.எஸ்.சத்யா, தும்பவனம் ஜீவானந்தம், வரதராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


    ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம், சரோஜினி தெருவைச் சேர்ந்தவர் ஆனஸ்ட்ராஜ் (வயது 24). லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது அறைக்குள் சென்றவர் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் அறைக்குள் சென்று பார்த்தபோது, ஆனஸ்ட்ராஜ் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ஆனஸ்ட்ராஜை மீட்டு, குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் போலீசார் இறந்துபோன ஆனஸ்ட்ராஜ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ஆனஸ்ட்ராஜ் திருநீர்மலையை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், அந்த பெண் சில நாட்களாக அவருடன் பேசுவதை தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் ஆனஸ்ட்ராஜ் தற்கொலை செய்து கொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாகவும், மேலும் அவர் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்திலும் குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    படப்பை அருகே பஸ் மோதிய விபத்தில் காயமடைந்த காவலாளி சிக்கிச்சை பலனின்றி பரிதாமக உயிரிழந்தார்.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த நாட்டரசன்பட்டு பகுதியில் உள்ள துலுக்கானத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்துரு இவருடைய மகன் ஜானகிராமன் (வயது 43). இவர் செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே உள்ள தனியார் கல்லூரியில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் படப்பை அடுத்த ஆரம்பாக்கம் கூட்டுச்சாலை அருகே வண்டலூர்-வாலாஜாபாத் சாலையை கடக்கும் போது காஞ்சீபுரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் ஜானகிராமன் மீது வேகமாக மோதியது.

    இதில் ஜானகிராமன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் படுகாயம் அடைந்த ஜானகிராமனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜானகிராமன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ஒரே குடும்பத்தை சேர்ந்த மாமியாரும் மருமகளும் ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால் சபாஷ் சரியான போட்டி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
    வாலாஜாபாத்:

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவி பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஊத்துக்காடு கிராமத்தை சேர்ந்த சாவித்திரி மணிகண்டன் (வயது 43) என்ற பெண் வேட்பாளர் போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து அவரது மாமியார் ஜெயலட்சுமி லோகநாதன் (வயது 61) என்பவரும் போட்டியிடுகிறார்.

    ஒரே நேரத்தில் மாமியாரும், மருமகளும் வேட்புமனு தாக்கல் செய்ய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே குடும்பத்தை சேர்ந்த மாமியாரும் மருமகளும் ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால் சபாஷ் சரியான போட்டி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


    மத்திய அரசை கண்டித்து பொன்னேரி, சோழவரம், மீஞ்சூர், பழவேற்காடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் தங்களது வீடுகளில் முன்பாக கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காஞ்சீபுரம்:

    மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கல் உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் இன்று (20-ந் தேதி) முதல் 30-ந் தேதி வரை தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர், மத்திய அரசை கண்டித்து தங்களது வீடுகளின் முன்பு கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. சாலவாக்கத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்.

    இதில் ஒன்றிய செயலாளர் சாலவாக்கம் குமார், ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். இதே போல் காஞ்சீபுரத்தை அடுத்த சிறுவேடலில் எம்.பி. ஜி.செல்வம் தனது வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

    காஞ்சீபுரம் ரெயில்வே சாலையில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. வக்கீல் எழிலரசன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

    திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 13 வது வார்டில் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கமலக் கண்ணன் தலைமையில், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பாபு, நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், திருலோகசந்தர், ராமதாஸ், கருணாகரன், சுரேஷ், சீனு, அஜித் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதேபோல் பூண்டி ஒன்றியம் நாராயணபுரம் கிராமத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் கிளை செயலாளர் கே.வி.எஸ். குபேரன் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தார்.

    பொன்னேரி, சோழவரம், மீஞ்சூர், பழவேற்காடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் தங்களது வீடுகளில் முன்பாக கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்

    மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சுகுமாரன், தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ்ராஜ், சோழவரம் ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், அத்திப்பட்டு ஊராட்சி செயலாளர் எம்.டி.ஜி. கதிர்வேல், பழவேற்காட்டில் முகமது அலவி, மீஞ்சூரில் தமிழ் உதயன், வேம்பாக்கம் மாவட்ட தகவல் தொழில் நுட்ப துணை ஒருங்கிணைப்பாளர் சீனு, பொன்னேரி நகர இளைஞரணி அமைப்பாளர் தீபன் தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் தி.மு.க.வினர் தங்களது வீடுகள் முன்பு மத்திய அரசுக்கு எதிராக கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதையும் படியுங்கள்...கர்நாடக மாநிலத்தில் மோடி அலையால் மட்டும் பா.ஜனதா ஜெயிக்கவில்லை - எடியூரப்பா

    மாங்காடு அருகே கழிவுநீர் தொட்டியில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பூந்தமல்லி:

    மாங்காடு அடுத்த பட்டூர், புதுப்பேட்டை தெருவை சேர்ந்தவர் பர்கித்பீவி (வயது30) இவருக்கும் பட்டூர் தீன் நகரை சேர்ந்த இதாயத் உசேன் (32) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சமீப காலமாக இதாயத் உசேன் அடிக்கடி தனது மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் மனமுடைந்த பர்கித்பீவி கோபித்து கொண்டு சில தினங்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று முன் தினம் இரவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார்.

    இந்த நிலையில் நேற்று காலை பர்கித்பீவியின் தாய் மரியம்பீவி (66) எழுந்து வெளியே வந்தார்.

    அப்போது கழிவுநீர் தொட்டியின் மூடி திறந்த நிலையில் இருந்தது. உள்ளே எட்டி பார்த்த போது அங்கு பர்கித்பீவி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்த பர்கித்பீவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்த போலீசார் பர்கித்பீவியின் கணவர் இதாயத் உசேனை பிடித்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே திருமணம் ஆகி ஒரு ஆண்டே ஆன நிலையில் உயிரிழந்துள்ளதால் இந்த வழக்கு ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திருமணம் ஆகி ஒரே ஆண்டில் கழிவுநீர் தொட்டியில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
    உள்ளாட்சி தேர்தல் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    உள்ளாட்சி தேர்தல் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

    உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, பொதுமக்கள் தங்களது புகார் மற்றும் குறைகளை தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களான 044 - 2723 7425 மற்றும் 044- 2723 7690 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான டாக்டர் ஆர்த்தி தெரிவித்தார்.
    காஞ்சீபுரம் அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் இருந்து கஞ்சா பொட்டலங்களுடன் ஒரு நபர் மதுரைக்கு செல்ல இருப்பதாக சிவகாஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையொட்டி காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று அதிகாலையில் பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக கையில் பையுடன் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து அவரிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அதில் 6 பண்டல்களில் 9 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையொட்டி அந்த நபரை சிவகாஞ்சி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் மதுரை, உசிலம்பட்டி தாலுகா சேக்கிழார்பட்டியை சேர்ந்த ஒச்சப்பன் (வயது 49) என்பதும் கஞ்சா பொட்டலங்களை ஆந்திராவில் இருந்து வாங்கி வந்து மதுரைக்கு கடத்தி செல்வதும் தெரியவந்தது. இதையொட்டி ஒச்சப்பனை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சீபுரம் அருகே ஷேர் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தில் இருந்து தாமல் நோக்கி ஷேர் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பாலுசெட்டி சத்திரம் அருகே சென்ற போது, சென்னையில் இருந்து அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக ஷேர் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. 

    இதில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த 3 பெண்கள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் பாலுசெட்டிசத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    காஞ்சிபுரத்தில் திருமணம் செய்து வைக்காததால் தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மகாத்மா காந்திநகர் சலவைத் தொழிலாளி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 32). பெயிண்டர் ஆக வேலை பார்த்து வந்தார்.

    ஆறுமுகம் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி வீட்டில் பெற்றோரிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று இரவும் அவர் பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவர் தூங்க சென்று விட்டார். இந்த நிலையில் காலையில் நீண்ட நேரமாகியும் ஆறுமுகத்தின் அறை திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து பார்த்தபோது அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் ஆறுமுகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×