search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சிபுரத்தில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி எடப்பாடி பழனிசாமி பேசிய காட்சி.
    X
    காஞ்சிபுரத்தில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி எடப்பாடி பழனிசாமி பேசிய காட்சி.

    உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

    உள்ளாட்சி தேர்தலின் போது அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு வருகிற 6 மற்றும் 9-ந் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.

    தற்போது உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.

    கடந்த 23-ந் தேதி எடப்பாடி பழனிசாமி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    நேற்று தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தி பேசினார்.

    இன்று காலை எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரம் சுகுமாரி திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சிமன்றத் தலைவர், வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் நூற்றுக்கணக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்தார்.

    பின்னர் நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    உள்ளாட்சி தேர்தலின் போது அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தி.மு.க.வினர் பெட்டிகளை மாற்றி நம்மை தோல்வியுற செய்து விடுவார்கள்.

    மு.க.ஸ்டாலின்

    எனவே தொண்டர்கள் மிகுந்த விழிப்புடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டும். மு.க.ஸ்டாலின் தமிழக மக்களை ஏமாற்றி விட்டார். பெண்கள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு பல வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் அவர் முதல்வராக பதவியேற்று 100 நாட்களை கடந்தும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 5 ஆண்டுகளில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அவர் கூறுகிறார். ஆனால் தேர்தல் நேரத்தில் அவர் அப்படி சொல்லவில்லை.

    ஆட்சிக்கு வந்தவுடனேயே வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்றார். ஆனால் தற்போது வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார்.

    எனவே பொதுமக்கள் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் மிகவும் விழிப்புணர்வுடன் வாக்களித்து அ.தி.மு.க.வை வெற்றிபெற செய்ய வேண்டும்.

    அ.தி.மு.க. பொறுப்பாளர்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தொண்டர்கள் அனைவரும் அ.தி.மு.க. வெற்றிக்காக இரவு- பகல் பாராமல் கடுமையாக உழைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும்.

    9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. வெற்றிபெற்றது என்ற செய்தி நமது காதில் விழவேண்டும். அந்த அளவுக்கு அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் பென்ஜமின், காமராஜ், கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி, நிர்வாகிகள், எஸ்.எஸ்.சத்யா, தும்பவனம் ஜீவானந்தம், வரதராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×