என் மலர்tooltip icon

    ஈரோடு

    பிளாஸ்டிக் பை பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சென்னிமலையில் துணி பைகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
    சென்னிமலை:

    தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால், ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியில் கைத்தறி துணிகள் மற்றும் மேட் ரகங்களை பயன்படுத்தி பல விதமான துணி பை தயாரிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    எளிதில் மக்கும் தன்மை கொண்ட துணிப்பைகள் உள்ளிட்ட மேட் ரக பைகள், கைத்தறி துணிகளில் தயார் செய்து விற்பனை செய்வதில் கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    தற்போது துணி பைகள் உற்பத்தியில் அதிக அளவில் ஈடுபட்டு வரும் காளிக்கோப்டெக்ஸ் மேலாளர் சுப்பிரமணியம் கூறியதாவது:-

    இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத துணி பைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் நல்ல வரவேற்பு உள்ளது.

    காய்கறி வாங்குவதற்கு பயன்படும் பைகள், திருமண தாம்பூல பைகள், ஜவுளி கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பைகள், உணவுக் கூடை பைகள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான கைப்பைகள், அலுவலகத்திற்கு கொண்டு செல்லும் பைகள் என பல வண்ணங்களில் பல மாடல்களில் 30 வகையான துணி பைகளை தயாரிக்கிறோம்.

    பல்வேறு வண்ணங்களிலும், வடிவங்களிலும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பைகள் தயார் செய்யப்படுகின்றன. துணிபைகள் குறைந்தபட்சம் மூன்று ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை உழைக்கும். 150 ரூபாய் முதல் 220 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    தற்போது மொத்தமாக ஆடர்கள் கொடுத்தாலும் தயார் செய்து தருகிறோம். பிரத்யேகமாக நிறுவனங்களின் பெயர் பொறித்து தரவும் ஏற்பாடுகள் செய்கின்றோம். கோ-ஆப்டெக்ஸ் வடிவமைப்பாளர்களின் மேற்பார்வையில் புதிய வடிவமைபில் பெண்கள் விரும்பி வாங்கும் வகையில் தயார் செய்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    பாராளுமன்றத்துக்கும் - சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமற்றது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் கூறியுள்ளார். #SimultaneousElections #Pandian

    ஈரோடு:

    ஈரோடு, சூரம்பட்டி வலசில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் கலந்து கொண்டார்.பின்னர் நிரூபர்களுக்கு தா.பாண்டியன் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது.-

    தமிழகத்தில் எங்கோ பெய்த மழையால் அணைகள் நிரம்பி வருகின்றன. ஆனால் இன்னும் பல நகரங்கள், கிராமங்களில் குடிநீர் பிரச்சனை உள்ளது. அதனை தீர்ப்பதற்கு தமிழக அரசு முன் வர வேண்டும்.

    பல ஏழை விவசாயிகளை மிரட்டி அவர்களிடம் இருந்து நிலங்களை எடுத்து எட்டு வழி சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இந்த திட்டம் தேவைதானா?. அரசு இந்த திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    பா.ஜனதா.தலைவர் அமித்ஷா தமிழகத்தை ஊழல் நிறைந்த மாநிலம் என்று சொல்லுவது அவர் கண்ணாடி முன்பு அவரே சொல்லி கொள்வது போல் உள்ளது. அவர் மகன் இரண்டு வருடத்தில் 16 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டி உள்ளார்.

    செலவு சிக்கனம் என்ற பெயரில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது சாத்தியமற்றது. மோடி உலகம் சுற்றும் செலவை குறைந்தாலே செலவை குறைக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உடன் இருந்தார்.  #SimultaneousElections #Pandian

    சத்தியமங்கலம் அருகே சிட்டுக்குருவி கூடுகட்டி குஞ்சு பொரித்ததால் ஸ்கூட்டரை எடுக்காமல் அப்படியே விட்ட தம்பதி, ‘குஞ்சுகள் பறந்துசெல்லும் வரை ஸ்கூட்டரை எடுக்காமல் காத்திருப்போம்’ என்றனர்.
    பவானிசாகர்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 35), லாரி உரிமையாளர். அவருடைய மனைவி சவீதா (32). ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்துவிட்டு தற்போது வீட்டை கவனித்து வருகிறார். இவர்களுக்கு ஓம்ஸ்ரீமன் (7) என்ற ஒரு மகன் உள்ளான். சவீதா ஒரு ஸ்கூட்டர் வைத்துள்ளார்.

    கடந்த மாதம் 27-ந் தேதி ஸ்கூட்டரை வீட்டுக்குள் நிறுத்திவிட்டு மகேந்திரன் குடும்பத்துடன் காரில் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    உறவினர் வீட்டில் இருந்து 29-ந் தேதி வீட்டுக்கு திரும்பினார்கள். காரில் இருந்து இறங்கியதும் சவீதா ஸ்கூட்டரை எடுக்க சென்றார். அப்போது வண்டியின் முன்பகுதியில் பொருட்கள் வைக்கும் பொந்துபோன்ற இடத்தில் சிட்டுக்குருவி ஒன்று கூடு கட்டியிருந்தது. உடனே தன்னுடைய கணவரையும், மகனையும் அழைத்து அதை காண்பித்தார். மகிழ்ச்சி அடைந்த 3 பேரும் கூட்டை கலைக்கவேண்டாம் என்று முடிவு செய்து, ஸ்கூட்டரை அசைக்காமல் அதே இடத்தில் விட்டுவிட்டார்கள்.

    இதற்கிடையே 2 நாட்கள் கழித்து சவீதா கூட்டை பார்த்தபோது, குருவி எங்கோ இரைதேட சென்றிருந்தது. ஆனால் கூட்டுக்குள் 3 முட்டைகள் இருந்தன. இதனால் மேலும் மகிழ்ச்சி அடைந்த சவீதா ஸ்கூட்டரை சிறிது கூட அசைக்காமல் பார்த்துக்கொண்டார். நாள்தோறும் குருவி வருவதும், கூட்டில் முட்டையை அடை காப்பதுமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அழகான 3 குஞ்சுகளை தாய் குருவி பொரித்தது.

    தாய் குருவியையும், குஞ்சு களையும் பார்த்து பார்த்து மகிழ்ச்சி அடைந்த சவீதா குடும்பத்தார். ‘குஞ்சுகள் பெரியதாகி தாய் குருவி அவைகளை அழைத்துக்கொண்டு பறந்து செல்லும் வரை ஸ்கூட்டரை எடுக்காமல் அப்படியே விட்டுவிடுவோம்’ என்றார்கள்.

    இதற்கிடையே தாய் குருவி இரையுடன் வந்து, தன்னுடைய அலகில் இருந்து குஞ்சுகளின் வாயில் ஊட்டுகிறது. அப்போது மற்றொரு குருவியும் உடன் வருகிறது. அது தந்தை குருவியாக இருக்கலாம். இந்த காட்சிகளை அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து செல்கிறார்கள். 
    சென்னிமலை பகுதியில் குரங்குகளின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் வனத்துறையின் மூலம் குரங்குகளை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை வனப்பகுதியில் வாழும் குரங்குகள் தற்போது நகர பகுதியில் உள்ள வீடுகள், கடைகளிலும் புகுந்து தொந்தரவு செய்வது அதிகரித்து விட்டது.

    குரங்குகளுக்குள் ஏற்படும் சண்டை மக்களை பய முறுத்துகிறது. சென்னிமலை வனப்பகுதியில் வாழும் குரங்குள் அங்கு உணவு பற்றாக்குறையால் சென்னிமலை டவுன் பகுதிக்கு வர ஆரம்பித்து விட்டன. வீடுகளுக்குள் புகுந்து அனைத்து பொருட்களை குரங்குகள் தூக்கிச் சென்று விடுகின்றன.

    பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னிமலையில் இப்படித்தான் குரங்குகள் தொந்தரவு செய்தன. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த நடவடிக்கையில் குரங்குகள் பிடிக்கப்பட்டு சத்தியமங்கலம் வனப்பகுதியில் விடப்பட்டது. அன்று முதல் இதுவரை குரங்குளின் தொந்தரவு கொஞ்சம் குறைந்திருந்தது.

    தற்போது அவற்றின் எண்ணிக்கை பல மடங்கு பெருகி விட்டது. குரங்குகளுக்கு மலை பகுதியில் போதுமான உணவு இல்லாத காரணத்தால் மெதுவாக மலை அடிவாரப் பகுதிக்கு வந்து இரை தேடுகின்றன. தற்போது சென்னிமலை நகரப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அழையா விருந்தாளிகளாக இந்த குரங்குகள் வந்து இருப்பவற்றை தூக்கிப் போவது வாடிக்கையாகி விட்டது.

    வீடுகளில் ஜன்னல் திறந்து இருந்தால் போதும் அந்த வீட்டில் எந்த பொருளும் மிஞ்சாது. குறைந்தது 10 முதல் 15 குரங்குகள் வரிசையாக இறங்கிவிடும். வீடுகளில் எந்த ஒரு உணவு பொருளையும் வெயிலில் காய வைத்தால் குரங்குகளுக்குதான் ஆகும் என்ற நிலை உள்ளது. சென்னிமலை டவுன் பகுதி மக்கள் குரங்கு கூட்டத்திற்கு பயந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    கடை வீதியில் பழம், பன் போன்றவற்றை எந்த பயமும் இல்லாமல் சர்வ சாதாரணமாக வந்து தூக்கி செல்கின்றன என கடை வியாபாரிகள் வருத்தப்படுகின்றனர். இந்த குரங்கு கூட்டத்தினால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.

    குரங்குகளின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மீண்டும் வனத்துறையின் மூலம் குரங்குகளை பிடிக்க வேண்டும் என சென்னிமலை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடுமுடி அருகே தவறி விழுந்து தனியார் கம்பெனி ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே உள்ள கணபதிபாளையம் நால்ரோடு அடுத்த பஞ்ச லிங்கபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55).

    இவர் மன்னாதம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி குணசுந்தரி (50). இவர்களுக்கு பாலமுருகன் (30), வெற்றிவேல் (28), கார்த்திகேயன் (26), ஹரிஷ்குமார் (24) என 4 மகன்கள் உள்ளனர்.இவர்கள் வெவ்வேறு செங்கல் சூளைகளில் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் ராஜேந்திரன் வேலை முடித்து விட்டு வீட்டுக்கு வரவில்லையாம். அவரது மகன்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் எங்கு சென்றார்? என்று தெரியாமல் இருந்தது.

    இந்த நிலையில் ராஜேந்திரன் நஞ்சப்ப கவுண்டன் புதூர் கொளந்தான் தோட்டம் என்ற இடத்தில் குப்புற விழுந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    அவரது இடது கன்னம் பகுதியில் ரத்த காயம் ஏற்பட்டு இறந்தது. எனவே இவர் தவறி கீழே விழுந்து இறந்திருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து மலையம் பாளையம் போலீஸ் நிலையத்தில் ராஜேந்திரனின் மகன் வெற்றிவேல் புகார் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் ராஜேந்திரன் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு அருகே திருட்டு வழக்கில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). இவர் அந்தியூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நிதி நிறுவனங்கள் மற்றும் கடையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இதையடுத்து போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர். மேலும் இவர் மீது ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் கற்ற செயல்களில் ஈடுபட்டதாக 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

    இந்த நிலையில் மணிகண்டனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் பிரபாகர், மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதன் பேரின் போலீசார் மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஈரோட்டில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 24 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு செங்கோடம் பள்ளம் திரிவேனி நகரை சேர்ந்தவர் ராஜேஸ் (வயது 37). தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி செல்வமேரி (35). தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். ராஜேஸ் தனியார் குடியிருப்பில் கீழ் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் வேலை விசயமாக ராஜேஸ் கேரளாவுக்கு சென்று விட்டார். செல்வமேரி திண்டல்மேட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    கேரளாவுக்கு சென்று விட்டு ராஜேஸ் வீட்டுக்கு வந்தார். வீட்டின் முன்பக்க கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு ராஜேஸ் அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் அறையில் இருந்த பீரோ கதவு திறக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த 24 பவுன் நகைகள் மற்றும் ரூ.7 ஆயிரம் ரொக்க பணமும் கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளை குறித்து வழக்குப் பதிவும் செய்தனர்.

    சம்பவம் நடந்த வீட்டுக்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளையர்கள் கைரேகை பதிவு குறித்து தடயங்களை சேகரித்து சென்றனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கைவரிசை காட்டி உள்ளது தெரிய வந்தது.

    மேலும் குடியிருப்பில் வசிக்கும் ராஜேஸ் வீட்டில் கொள்ளை நடந்திருப்பதால் யாராவது தெரிந்த நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாமோ? என்ற சந்தேகம் எழுகிறது.

    அதன்பேரில் விசாரணை நடக்கிறது. இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    அரசு பள்ளிகளில் உள்ள கழிப்பிடத்தை சுத்தம் செய்ய வரும் செப்டம்பர் மாத இறுதியில் ஜெர்மனி நாட்டில் இருந்து ரோட்டரி சங்கம் சார்பில் 1000 வாகனங்கள் தமிழகம் வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். #MinisterSengottaiyan

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பாரியூர் வெள்ளாள பாளையம் தொடக்கப் பள்ளியில் இன்று ‘‘ஸ்மார்ட் கிளாஸ்’’ வகுப்பு தொடக்க விழா நடந்தது.

    விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பை தொடங்கி வைத்தார்.

    அதன் பிறகு அவர் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக கல்வித்துறையில் மாணவ- மாணவிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

    வரும் செப்டம்பர் மாத இறுதியில் ஜெர்மனி நாட்டில் இருந்து ரோட்டரி சங்கம் சார்பில் 1000 வாகனங்கள் தமிழகம் வருகிறது.

    இந்த வாகனங்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று அங்குள்ள கழிப்பிடத்தை சுத்தம் செய்யும். முதல் கட்டமாக 20 ஆயிரம் பள்ளி கூடங்களுக்கு இந்த வாகனங்கள் சென்று கழிப்பிட கட்டமைப்பை சுத்தம் செய்யும்.

    கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் முதன் முதலாக இந்த கழிப்பிட வாகனங்கள் இயக்கப்படும். அதன் பிறகு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு சென்று பள்ளிகளில் கழிப்பிடத்தை சுத்தம் செய்யும்.

    அரசு பள்ளிகளில் உள்ள செயல்படாத பெற்றோர்- ஆசிரியர் சங்கம் மாற்றி அமைக்கப்படும்.

    டி.ஆர்.பி. ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு எழுதியவர்களுக்குழு விரைவில் பணி வழங்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan

    ஈரோட்டில் சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை எடுத்து எஸ்.பி.யிடம் கொடுத்த அரசு பள்ளி மாணவனை தொடர்பு கொண்டு நடிகை குஷ்பு பாராட்டினார்.
    ஈரோடு:

    ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்து உரியவரிடம் ஒப்படைக்க கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்த மாணவர் முகமது யாசினை பலரும் பாராட்டி வருகிறார்கள். சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.

    இதை பார்த்த நடிகை குஷ்பு தனது மானேஜர் மூலமாக ஈரோட்டுக்கு தொடர்பு கொண்டு மாணவனின் பெற்றோரிடம் செல்போனில் பேசினார். உங்கள் மகனின் நேர்மை மகத்தானது. அவனுக்கு படிப்பு செலவுக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன். எவ்வளவு பணம் வேண்டும்? என்று கேட்டார்.

    அதற்கு மாணவனின் தந்தை பாட்ஷா ‘‘என் மகனை அரசு பள்ளியில்தான் சேர்த்துள்ளேன். அவனது படிப்பு செலவுக்கு பணம் தேவைப்படாது. அவனை தொடர்ந்து அரசு பள்ளியில்தான் படிக்க வைக்க விரும்புகிறேன். உதவி செய்வதாக கூறிய உங்களுக்கு நன்றி’’ என்று கூறினார்.



    எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காத மாணவனின் பெற்றோருக்கு குஷ்பு மீண்டும் பாராட்டு தெரிவித்து வாழ்த்தினார். மேலும் மாணவன் முகமது யாசினுடனும் போனில் பேசி அவனையும் பாராட்டி வாழ்த்து கூறினார்.

    மாணவனின் தந்தை பாட்ஷா சைக்கிளில் துண்டு, லுங்கி போன்ற துணிகளை எடுத்து சென்று விற்று வருவது குறிப்பிடத்தக்கது.
    ஈரோட்டில் சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை எடுத்து எஸ்.பி.யிடம் கொடுத்த அரசு பள்ளி மாணவனுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
    ஈரோடு:

    ஈரோடு கனிராவுத்தர் குளம் நந்தவன தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாட்ஷா, ஜவுளி வியாபாரி இவரது 2-வது மகன் முகமது யாசின் (வயது 7).

    சின்னசேமூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். வழக்கம் போல் சிறுவன் முகமது யாசின் பள்ளிக்கு சென்றான்.

    பள்ளியில் பகல் 11 மணியளவில் இடைவெளி சமயத்தில் வெளியே வந்த மாணவன் கண்ணில் ரோட்டில் 500 ரூபாய் கொண்ட பணம் கட்டு கிடந்தது தெரிய வந்தது.

    பணக்கட்டை எடுத்த மாணவன் தனது வகுப்பறைக்கு சென்று தனது ஆசிரியை ஜெயந்தி பாயிடம் ஒப்படைத்தார்.

    “டீச்சர் இந்த பணக்கட்டு ரோட்டில் கிடந்தது. யார் தவறவிட்டு சென்றார்களோ.. தெரியவில்லை” என்று கூறினான்.

    அந்த பணத்தை எண்ணிப் பார்த்தபோது அதில் ரூ.50 ஆயிரம் இருந்தது. பிறகு அரசு பள்ளியின் ஏற்பாட்டின்படி மாணவன் முகமது யாசினை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு மாணவன் எஸ்.பி.சக்திகணேசனிடம் “சார் இந்த பணம் கீழே கிடந்தது உரியவரிடம் ஒப்படையுங்கள்” என்று கூறி பணக்கட்டை எஸ்.பி.யிடம் ஒப்படைத்தான்.

     மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று பணத்தை ஒப்படைத்த மாணவர் முகமது யாசினை எஸ்.பி.சக்தி கணேசன் பாராட்டி அவனிடம் பேசிய காட்சி.

    மாணவரின் நேர்மையை கண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் வெகுவாக பாராட்டினார். மேலும் மாணவனுக்கு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலேயே பாராட்டு விழாவும் நடத்தினார். அதோடு அல்லாமல் மாணவரின் அண்ணன் முகமது ஜமில் (13) அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறான். அவனையும் எஸ்.பி. அலுவலகத்துக்கு வரவழைத்தார்.

    அண்ணன்-தம்பி இருவருக்கும் சீருடை, புத்தகப்பை மற்றும் ஷூ போன்ற பொருட்களையும் வழங்கி பாராட்டு சான்றிதழையும் வழங்கினார்.

    மாணவனின் நேர்மையை அவன் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், சக மாணவ- மாணவிகள் பாராட்டினர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் இன்று மாலைமலர் நிருபரிடம் கூறும்போது, “பள்ளி மாணவனின் நேர்மை எண்ணை வியக்க வைத்தது. மாணவன் ஒப்படைத்த ரூ.50 ஆயிரத்துக்கு உரிமை கோரி ஒருவர் என்னிடம் வந்தார். அவரை இன்று மாலை வரவைத்துள்ளேன்.

    அடையாளம் கேட்டு இது அவரது பணம்தானா? என்று உறுதி செய்யப்பட்ட பிறகு பணத்தை அவரிடம் ஒப்படைப்போம் என்று கூறினார். 
    பவானி அருகே திருமணமான 1½ மாதத்தில் இளம்பெண் மாயமானது குறித்து கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    பவானி:

    பவானி, பழனிபுரம் முதல் வீதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கும் பூமிகா (19) என்பவருக்கும் கடந்த மே மாதம் 25-ந் தேதி திருமணம் நடந்தது.

    இரு வீட்டார் சம்மதத்துடன் பெரியோர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடந்தபோதும் பூமிகாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என தெரிகிறது.

    இதனால் கடந்த 5-ந் தேதி பூமிகா வீட்டை விட்டு சென்றார். அவர் சென்னைக்கு சென்றது தெரியவந்தது. அவரை சென்னை கோயம்பேடு போலீசார் மீட்டனர்.

    அவர் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் இருக்கும் தகவல் அறிந்த பூமிகாவின் தாயார் மற்றும் உறவினர்கள் அங்கு சென்றனர். சென்னையில் இருந்து பூமிகாவை கடந்த 7-ந் தேதி பவானி, பழனிபுரத்துக்கு அழைத்து வந்தனர்.

    அவரை பிரகாஷ் தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். அன்று இரவு பிரகாசும், பூமிகாவும் பேசிக் கொண்டு இருந்தனர். பின்னர் பிரகாஷ் தூங்க சென்றார். மறுநாள் காலை 6 மணி அளவில் எழுந்து பார்த்தபோது பூமிகாவை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து அவர் மாயமானது தொடர்பாக பவானி போலீஸ் நிலையத்தில் பிரகாஷ் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் இளங்கோ விசாரணை நடத்தி வருகிறார்.

    அந்தியூர் அருகே உள்ள ஜரத்தல் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி செல்வி (வயது 38). இவர் கடந்த 8-ந் தேதி தனது உறவினரிடம் பணம் வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றார்.

    ஆனால் அதன்பின்னர் செல்வி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும், உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தும் செல்வி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    எனவே அவர் மாயமானது குறித்து வெள்ளித் திருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    சத்தியமங்கலம் வனப்பகுதியில் சந்தன கட்டைகள் கடத்திய 5 பேரை கைது செய்த வனத்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் சந்தன மரங்கள் அதிகம் உள்ளன.

    சந்தனமர கடத்தல் மன்னன் மாயாவி வீரப்பன் இருக்கும்போது சந்தன மரங்கள் அதிகமாக வெட்டி கடத்தப்பட்டன. அவன் மறைவுக்குப்பிறகு சந்தரமரம் கடத்தல் முற்றிலும் தடுக்கப்பட்டது.

    ஒரு சிலர் கடத்தி வந்ததையும் வனத்துறையினரின் தீவிர நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டது.எனினும் வனத்துறையினர் தீவிர ரோந்துபணியில் ஈடுபட்டு வந்தனர். கடத்தல் காரர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் வனப்பகுதி கே.என்.பாளையம் வனச்சரகம் கானாகுந்தூர் பகுதியில் வனத்துறையினர். ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 5 பேர் சந்தேகப்படும்படி திரிந்து கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் 5 கிலோ சந்தன கட்டைகள் இருந்தது தெரிய வந்தது.

    அவர்கள் அந்த சந்தன கட்டைகளை கடத்தி கொண்டு சென்றது தெரியவர இந்த சந்தன கட்டைகள் அவர்களுக்கு எப்படி வந்தது? யாரிடம் வாங்கியது? எங்கு கொண்டு செல்லப்படுகிறது? என வனத்துறையினர் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ×