என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற் கட்ட வாக்குப்பதிவு ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
    ஈரோடு:

    ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற் கட்ட வாக்குப்பதிவு ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 183 வார்டுகள், 225 கிராம ஊராட்சி தலைவர்கள், 2097 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் 19 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள் உள்ளன.

    இதில் முதல் கட்ட தேர்தல் ஈரோடு கோபி கொடுமுடி மொடக்குறிச்சி நம்பியூர் தாளவாடி டி. என். பாளையம் ஆகிய ஏழு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 894 கிராம ஊராட்சி வார்டுகளுக்கும், 95 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளும் 79 ஊராட்சி ஒன்றியக் குழு வார்டுகளுக்கும், 8 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

    முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 657 ஓட்டுச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.

    ஈரோடு ஒன்றியத்தில் 49 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    கோபி ஒன்றியங்களில் 144 வாக்குச்சாவடி மையங்கள் கொடுமுடி ஒன்றியங்களில் 52 வாக்குச்சாவடி மையங்கள்,

    மொடக்குறிச்சி ஒன்றியங்களில் 160 வாக்குச்சாவடி மையங்கள், நம்பியூரில் 102 வாக்குச்சாவடி மையங்கள், தாளவாடியில் 75 வாக்குச்சாவடி மையங்கள், டி.என்.பாளையத்தில் 75 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 3 லட்சத்து 79 ஆயிரத்து 218 பேர் வாக்களிக்கிகின்றனர்.

    ஒரு வாக்காளர் நான்கு பதவிகளுக்கான வாக்குகளை செலுத்தினர். அதாவது வார்டு உறுப்பினர் ஊராட்சி மன்ற தலைவர் மாவட்ட கவுன்சிலர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு தங்களது வாக்குகளை செலுத்தினர்.

    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடும் பனிப்பொழிவு பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் கைக்குழந்தையுடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.

    மேலும் முதியவர்களும் தங்களது ஜனநாயக கடமைகளை வந்து நிறைவேற்றினர். வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு லக்காபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெறும் வாக்கு பதிவை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பார்வையிட்டார்.

    கிராம பகுதிகளில் இன்று காலை முதல் தொடங்கி நடந்து வரும் வாக்குப்பதிவில் பல இடங்களில் இளைஞர்களுக்கு இணையாக முதியோர்கள் வந்து ஆர்வத்துடன் ஓட்டு போட்டனர்.

    அவர்கள் கூறும்போது, கவுன்சிலர் வந்தால்தான் எங்கள் பகுதியில் ரோடு, தண்ணீர் வசதி செய்து தருவார்கள். அதற்காக தவறாமல் ஓட்டு போடுகிறோம் என்றனர்.

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வரிசையில் காத்திருந்து தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் ஓட்டு போட்டார்.

    அந்த ஓட்டுச்சாவடியில் ஓட்டு போட காலை 6.30 மணிக்கெல்லாம் வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
    ஊரக உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக தான் முழுமையான வெற்றி பெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    கோபி:

    தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதற் கட்டமாக நடைபெறுகிறது. கோபி ஒன்றிய பகுதிகளில் ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

    இதையொட்டி காலை 7 மணிக்கு தேர்தல் துவங்கியது. கிராம பகுதி வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வரிசையாக நின்று தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

    கோபி அருகே உள்ள தனது சொந்த ஊரான குள்ளம்பாளையம் உயர் நிலைப்பள்ளியில் 61-வது வாக்குச்சாவடியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் காலை 7.20 மணிக்கு வாக்காளர்களோடு வரிசையாக நின்று வாக்களித்தார்.

    அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை 7.20 மணிக்கு வாக்காளர்களோடு வரிசையாக நின்ற போது எடுத்த படம்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இதே வாக்குச்சாவடியில் எம்.பி, எம்.எல்.ஏ. தேர்தலுக்கு நான் இங்கு வந்து வாக்களித்துள்ளேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் சுற்றுப் பயணத்தின் போது ஊராட்சி தேர்தலில் நான் வாக்களிக்க வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    ஆனால் இன்று ஊராட்சி தேர்தலுக்காக நான் வாக்களித்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து திட்டங்களும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல இந்த தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் தான் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அரசின் திட்டங்களை இணைந்து செயல்படுத்த முடியும்.

    ஊரக உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக தான் முழுமையான வெற்றி பெறும். கடலை பயிருக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். விரைவில், அதற்கான நல்ல தகவல் வரும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் சிறப்பாக உள்ளது. அரசு தொலைநோக்கு சிந்தனையோடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படுவதால், விவசாயம் நன்றாக உள்ளது. மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். 1ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை தனியார் பள்ளிகள் நடத்தி வருவதாக அரசின் கவனத்திற்கு வந்தது.

    அதை நடத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீறி செயல்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே, மாணவர்கள் தங்களது விடுமுறை நாட்களில் உறவினர்களுடனும், நண்பர்களுடனும் மகிழ்ச்சியாக இருக்கலாம். மாணவ, மாணவிகளுக்கு 3-ம் பருவ தேர்வு புத்தகங்கள் பள்ளி திறக்கும் நாளான வரும் 3-ந்தேதி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஈரோடு அருகே மில்லுக்கு சென்ற தொழிலாளி பாம்பு கடித்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    தூத்துக்குடி மாவட்டம் குமரெட்டியாபுரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் குருவராஜ் (வயது 62). இவர் கடந்த 4 வருடமாக ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூரில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    இரவு குருவராஜ் வீட்டில் இருந்து மில்லுக்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்தார். அப்போது வரும் வழியில் பாம்பு ஒன்று குருவராஜை கடித்தது. இதையடுத்து அவர் அலறி துடித்தார்.

    அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி குருவராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    குருவராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் கட்டமாக 7 ஒன்றியங்களில் நடைபெறும் வாக்குப்பதிவில் மொத்தம் 3 லட்சத்து 79 ஆயிரத்து 218 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
    ஈரோடு:

    தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக வரும் 27 ,30 தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 183 வார்டுகள், 225 கிராம ஊராட்சி தலைவர்கள், 2097 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் 19 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள் உள்ளன.

    இதில் முதல் கட்ட தேர்தல் ஈரோடு கோபி கொடுமுடி மொடக்குறிச்சி நம்பியூர் தாளவாடி டி. என். பாளையம் ஆகிய ஏழு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 894 கிராம ஊராட்சி வார்டுகளுக்கும், 95 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளும் 79 ஊராட்சி ஒன்றியக் குழு வார்டுகளுக்கும், 8 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கும் நடைபெற உள்ளது.

    முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 657 ஓட்டுச்சாவடிகளில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட ஓட்டுப்பதிவு நாளில் தொடங்கும் நிலையில் அனைத்து பகுதியிலும் வீடு வீடாகச் சென்று அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் பூத் சிலிப் வழங்கும் பணி நிறைவடைந்துள்ளது. சில வீடுகளில் பூத் சீலிப் பெற ஆட்கள் இல்லாத நிலையில் அவற்றை ஓட்டுச்சாவடியில் வைத்து அவர்களுக்கு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு ஒன்றியத்தில் 49 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன இதில் ஆண்கள் 15 ஆயிரத்து 938 பேரும் பெண்கள் 16, 651 பேரும் திருநங்கைகள் 5 பேர் என மொத்தம் 32 ஆயிரத்து 594 பேர் வாக்களிக்க உள்ளனர்.

    கோபி ஒன்றியங்களில் 144 வாக்குச்சாவடி மையங்களில் 38 ஆயிரத்து 766 ஆண்களும் 40 ஆயிரத்து 766 பெண்களும் ஒரு திருநங்கை என மொத்தம் 79 ஆயிரத்து 533 பேர் வாக்களிக்கவுள்ளனர். கொடுமுடி ஒன்றியங்களில் 52 வாக்குச்சாவடி மையங்களில் 12,510 ஆண்களும் 13 ஆயிரத்து 753 பெண்களும் இரண்டு திருநங்கைகள் என மொத்தம் 26 ஆயிரத்து 365 பேர் வாக்களிக்கவுள்ளனர்.

    மொடக்குறிச்சி ஒன்றியங்களில் 160 வாக்குச்சாவடி மையங்களில் 46,210 ஆண்களும் 48,980 பெண்களும், 19 திருநங்கைகளும் என மொத்தம் 95, 209 பேர் வாக்களிக்க உள்ளனர்.

    நம்பியூரில் 102 வாக்குச்சாவடி மையங்களில் 27 ஆயிரத்து 483 ஆண்களும், 28 ஆயிரத்து 710 பெண்களும் இரண்டு திருநங்கைகள் என மொத்தம் 56 ஆயிரத்து 195 பேர் வாக்களிக்க உள்ளனர்.

    தாளவாடியில் 75 வாக்குச்சாவடி மையங்களில் 23 ஆயிரத்து 919 ஆண்களும், 24 ஆயிரத்து 24 பெண்களும் என மொத்தம் 47 ஆயிரத்து 943 பேர் வாக்களிக்க உள்ளனர். டி.என்.பாளையத்தில் 75 வாக்குச்சாவடி மையங்களில் 20,116 ஆண்களும் 21 ,261 பெண்களும் இரண்டு திருநங்கைகள் என மொத்தம் 41 ஆயிரத்து 379 பேர் வாக்களிக்க உள்ளனர்.

    இவ்வாறாக நாளை முதல் கட்டமாக 7 ஒன்றியங்களில் நடைபெறும் வாக்குப்பதிவில் மொத்தம் 3 லட்சத்து 79 ஆயிரத்து 218 பேர் வாக்களிக்கவுள்ளனர். ஒன்றியங்களிலும் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
    ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    நாகபட்டினம் மாவட்டம் சேத்தூர் பருத்திகுடியை சேர்ந்த சத்தியசுந்தரம் (வயது 37). கட்டிட தொழிலாளி. இவர் கேரளா மாநிலம் கோழிகோட்டில் இருந்து ஈரோடு வருவதற்காக மங்களுர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொதுபெட்டியில் பயணித்தார்.

    ரெயில் பெருந்துறை- தொட்டிபாளையம் இடையே நேற்று நள்ளிரவு வந்து கொண்டிருந்தது. அப்போது, ரெயில் பெட்டியில் படிகட்டில் நின்றபடி பயணித்த சத்தியசுந்தரம் எதிர்பாரதவிதமாக தவறி கீழே விழுந்தார்.

    இதில் அவரது வலது கை மற்றும் வலது கால் துண்டானது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த மக்கள் அவரை 108 ஆம்புலன்சு மூலம் மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கரூர் மாவட்டம் வையாபுரி நகரைச் சேர்ந்தவர் சுரேந்தர் (வயது19). சம்பவத்தன்று சுரேந்தர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள உறவினர் வீட்டு விசேசத்திற்கு வந்திருந்தார். விசேசம் முடிந்ததும் ஈரோட்டில் உள்ள தனது நண்பரைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    ஈரோடு சக்தி ரோடு அருகே வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சுரேந்தர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுரேந்தர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோட்டில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு பெரிய செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ஜெசிண்டா மேரி (வயது28). சுரேசும், ஜெசிண்டா மேரியும் கடந்த 5½ வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெசிண்டாமேரி கரூரில் இருக்கும் தனது தாயிடம் தொலைபேசியில் கூறினார்.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி தனது தாய் வீட்டிற்கு செல்வதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் ஜெசிண்டாமேரி செய்து வந்தாராம். இந்நிலையில் சம்பவத்தன்று ஜெசிண்டா மேரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோட்டில் கடன் தொல்லையால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல் பாளையம் கமலா நகரைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவரது மனைவி புஷ்பலதா (29).

    சம்பவத்தன்று புஷ்பலதா நாமக்கல்லில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று இருந்தார். அப்போது புஷ்பலதாவுக்கு கருங்கல்பாளையம் பக்கத்து வீட்டில் வசிக்கும் தெரிந்தவர் போன் செய்து உனது கணவர் தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். என கேட்டு அதிர்ச்சி அடைந்த புஷ்பலதா உடனடியாக தனது வீட்டிற்கு வந்தார்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்த கணவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சரவணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கருங்கல் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் சரவணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. எனினும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் கருப்பணன் நடனம் ஆடி வாக்கு சேகரித்தார்.
    ஈரோடு:

    ஊரக உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதேபோல் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சி மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்களும் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே பட்தூர் ஊராட்சிக்குட்பட்ட கெம்மியன் பட்டியில் நேற்று மாலை தமிழக சுகாதார துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து ஓட்டு கேட்டு கொண்டிருந்தார்.

    அங்கு சிறிய அளவில் போடப்பட்டு உள்ள மேடையில் ஏறி அமைச்சர் கருப்பணன் பிரசாரம் செய்து பேசிக்கொண்டிருந்தார்.

    அவர் பேசி முடித்ததும் மேளதாளங்கள் முழங்கியது.

    இந்த மேளதாளத்தை கேட்டு அதில் மூழ்கிய அமைச்சர் கருப்பணன் மேடையை விட்டு கீழே இறங்கி மேளதாளத்துக்கேற்று ஆடினார்.

    அமைச்சரே கீழே இறங்கி ஆடியதை கண்ட கூடி இருந்த அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் மேளத்துக்கேற்ப ஆடினர்.

    இதனால் தேர்தல் பிரசாரத்தில் பரவசம் ஏற்பட்டது.

    அதன் பிறகு அமைச்சர் கருப்பணன் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஓட்டு போடுமாறு கேட்டுக்கொண்டார்.
    குடியுரிமை சட்டதிருத்தம் தொடர்பாக வடமாநிலத்தில் நடைபெற்று வரும் தொடர் போராட்டம் காரணமாக, ஈரோட்டில் 20 கோடி மதிப்பிலான ரயான் துணிகள் தேக்கமடைந்துள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு சுற்று வட்டாரத்தில் வீரப்பன்சத்திரம், அசோக புரம், சூளை, மாணிக்கம் பாளையம், லக்காபுரம், சித்தோடு உள்பட பல பகுதிகளில், 30 ஆயிரத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் இயங்குகிறது.

    இந்த விசைத்தறிகள் மூலம் ரயான், காட்டன் காடா துணி தயாரிக்கப்படுகிறது. ரயானில், 120, 140 கிராம் பிளைன், 110, 120, 140 கிராம் ஹை-ட்விஸ்ட், 70, 90, 100 கிராம் பிளைன், 33 இன்ச் காடா துணிகள் தயாரிக்கப்படுகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன் ரயான் நூல் ஒரு கிலோ 182 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பிறகு விலை குறைந்து சில மாதங்களாக 152 ரூபாயாக நீடிக்கிறது. நூல் விலை குறைந்த போதிலும், ரயான் துணி விலை வீழ்ச்சியால் நஷ்டமடைந்து வருவதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையில், குடியுரிமை சட்டம் தொடர்பாக வட மாநிலத்தில் போராட்டம் நடைபெற்று வருவதால், ரயான் துணிகளுக்கு டையிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, ஈரோட்டில் இருந்து வடமாநிலங்களுக்கு ரயான் துணி அனுப்புவது நிறுத்தம் காரணமாக, கடந்த 10 நாட்களில் ரூ.20 கோடி மதிப்புள்ள துணிகள் குடோன்களில் தேக்கமடைந்துள்ளது.

    இதுகுறித்து ஈரோடு விசை உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

    இந்திய அளவில் ஈரோடு மாவட்டத்தில் ரயான் துணி உற்பத்தி அதிகம் செய்யப்படுகிறது. கடந்த காலங்களில் நூல் விலை ஏறுவதும், திடீரென இறங்குவதுமாக இருப்பதால் விசைத்தறியாளர்கள் ஸ்டிரைக்கில் இறங்கினர்.

    அதன் பிறகு நூல் விலை ஏற்றம் காணாமல் கிலோ ரூ.152 ஆக நீடிக்கிறது. நூல் விலைக்கும், உற்பத்திக்கு மீட்டருக்கு ரூ. 3 வரை நஷ்டம் ஏற்படுகிறது. ஈரோட்டில் ரயான் கிரே துணி மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து வடமாநிலங்களுக்கு டையிங் செல்கிறது. அங்கு பல வண்ண துணிகளாக மாற்றி விற்பனைக்கு செல்கிறது. கடந்த சில நாட்களுக்கு வட மாநிலங்களில் நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக டையிங் தொழில் ஸ்தம்பித்து உள்ளது.

    டையிங் ஸ்தம்பிப்பு காரணமாக ஈரோட்டில் இருந்து ரயான் துணி ஆர்டர் குறைந்து விட்டதால், குடோன்களில் ரூ.20 கோடி மதிப்பிலான துணி தேக்கமடைந்துள்ளன. இதன் காரணமாக நடப்பு வாரத்தில் மீட்டருக்கு ஒரு ரூபாய் குறைந்துள்ளது. கடந்த 3 மாதத்தில் ரூ.29 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு மீட்டர் ரயான் துணி ரூ.20க்கும், ரூ.34 க்கு விற்கப்பட்ட மற்றொரு ரக துணி ரூ.25 ஆக வீழ்ச்சியடைந்து விட்டது.

    நூல் விலையை விட உற்பத்தி விலை கூடுதலாகி விட்டது. துணி விலை வீழ்ச்சியால் நெசவாளர்கள் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொடர் வீழ்ச்சியால் வேலையிழக்கும் பாதிப்பும் ஏற்படுத்தி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.



    வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க காட்டுக்குள் சென்ற வனக்காப்பாளர் யானை மிதித்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அடுத்த முடுதுறையை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 48). இவர் பவானிசாகர் வனத்துறையில் வனக்காப்பாளராக பணி புரிந்து வந்தார்.

    மகேந்திரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க பவானிசாகர் வனப்பகுதி போலி பள்ளம் என்ற பகுதிக்கு சென்றார்.

    அப்போது மரங்களின் இடையே இருந்து ஒற்றை யானை பிளிறிய படி அங்கு வந்தது. இடை கண்ட அவர்கள் ஆளுக்கொருபக்கம் தப்பிக்க ஓடினார்கள்.

    இதில் அந்த யானையிடம் மகேந்திரன் சிக்கி கொண்டார். ஆவேசத்துடன் காணப்பட்ட அந்த யானை அவரை துதிக்கையால் தூக்கி கீழே போட்டு மிதித்தது. இதில் வனக்காப்பாளர் மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றனர். பவானிசாகர் போலீசாரும் வந்து மகேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யபட்ட பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். வன ஊழியர்கள் வேட்டை தடுப்பு காவலர்களும் கண்ணீர் சிந்தினர்.

    யானை மிதித்து பலியான வனக்காப்பாளர் மகேந்திரனுக்கு வெண்ணிலா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    ஈரோட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் யொட்டி வாக்குசாவடி மையங்களில் அனைத்து வசதிகளும் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் பார்வையாளர் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட தேர்தல் பார்வையாளராக விவேகானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டும் அதிகாரிகளுக்கு ஆலோசனையும் வழங்கிவருகிறார்.  

    இன்று தேர்தல் பார்வையாளர் விவேகானந்தன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 323 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிக்க வெப் குழு, வீடியோ குழு, தேர்தல் நுண்பார்வையாளர்கள் குழு அமைக்கப்பட்டு அவர்கள் தீவிரமாக கண்காணிப்பார்கள் வாடிக்கையாளர்களுக்கு பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.  
    இவர்கள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் பறக்கும் படையினர் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை எங்கு  செல்கிறார்கள் என்பது குறித்து தகவல் அனுப்பப்பட்டு வருகிறது.

    திருமண மண்டப உரிமையாளர்கள் விடுதி உரிமையாளர்கள் வரவழைத்து ஏற்கனவே ஆலோசனை வழங்கி உள்ளோம். பெட்ரோல் பங்க் செல்போன் ரீசார்ஜ் ஏஜென்சி ஆகியோரிடமும் பரிசுப்பொருட்கள் குறித்து முக்கியமாக ஆலோசனை வழங்கி உள்ளோம்.  

    வாரச்சந்தை டாஸ்மாக் விற்பனையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். ஒரு வாக்குச் சாவடி மையத்தில் 72 வகையான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இவை முறையாக வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று உள்ளதா? என்பதை கண்காணித்து வருகிறோம் வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களை கண்காணிக்க கூடுதலாக அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×