என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேக்கம் அடைந்து குடோனில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ரயான் துணிகள்
    X
    தேக்கம் அடைந்து குடோனில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ரயான் துணிகள்

    வட மாநிலங்களில் போராட்டம் எதிரொலி - ஈரோட்டில் ரூ.20 கோடி ஜவுளி துணிகள் தேக்கம்

    குடியுரிமை சட்டதிருத்தம் தொடர்பாக வடமாநிலத்தில் நடைபெற்று வரும் தொடர் போராட்டம் காரணமாக, ஈரோட்டில் 20 கோடி மதிப்பிலான ரயான் துணிகள் தேக்கமடைந்துள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு சுற்று வட்டாரத்தில் வீரப்பன்சத்திரம், அசோக புரம், சூளை, மாணிக்கம் பாளையம், லக்காபுரம், சித்தோடு உள்பட பல பகுதிகளில், 30 ஆயிரத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் இயங்குகிறது.

    இந்த விசைத்தறிகள் மூலம் ரயான், காட்டன் காடா துணி தயாரிக்கப்படுகிறது. ரயானில், 120, 140 கிராம் பிளைன், 110, 120, 140 கிராம் ஹை-ட்விஸ்ட், 70, 90, 100 கிராம் பிளைன், 33 இன்ச் காடா துணிகள் தயாரிக்கப்படுகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன் ரயான் நூல் ஒரு கிலோ 182 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பிறகு விலை குறைந்து சில மாதங்களாக 152 ரூபாயாக நீடிக்கிறது. நூல் விலை குறைந்த போதிலும், ரயான் துணி விலை வீழ்ச்சியால் நஷ்டமடைந்து வருவதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையில், குடியுரிமை சட்டம் தொடர்பாக வட மாநிலத்தில் போராட்டம் நடைபெற்று வருவதால், ரயான் துணிகளுக்கு டையிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, ஈரோட்டில் இருந்து வடமாநிலங்களுக்கு ரயான் துணி அனுப்புவது நிறுத்தம் காரணமாக, கடந்த 10 நாட்களில் ரூ.20 கோடி மதிப்புள்ள துணிகள் குடோன்களில் தேக்கமடைந்துள்ளது.

    இதுகுறித்து ஈரோடு விசை உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

    இந்திய அளவில் ஈரோடு மாவட்டத்தில் ரயான் துணி உற்பத்தி அதிகம் செய்யப்படுகிறது. கடந்த காலங்களில் நூல் விலை ஏறுவதும், திடீரென இறங்குவதுமாக இருப்பதால் விசைத்தறியாளர்கள் ஸ்டிரைக்கில் இறங்கினர்.

    அதன் பிறகு நூல் விலை ஏற்றம் காணாமல் கிலோ ரூ.152 ஆக நீடிக்கிறது. நூல் விலைக்கும், உற்பத்திக்கு மீட்டருக்கு ரூ. 3 வரை நஷ்டம் ஏற்படுகிறது. ஈரோட்டில் ரயான் கிரே துணி மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து வடமாநிலங்களுக்கு டையிங் செல்கிறது. அங்கு பல வண்ண துணிகளாக மாற்றி விற்பனைக்கு செல்கிறது. கடந்த சில நாட்களுக்கு வட மாநிலங்களில் நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக டையிங் தொழில் ஸ்தம்பித்து உள்ளது.

    டையிங் ஸ்தம்பிப்பு காரணமாக ஈரோட்டில் இருந்து ரயான் துணி ஆர்டர் குறைந்து விட்டதால், குடோன்களில் ரூ.20 கோடி மதிப்பிலான துணி தேக்கமடைந்துள்ளன. இதன் காரணமாக நடப்பு வாரத்தில் மீட்டருக்கு ஒரு ரூபாய் குறைந்துள்ளது. கடந்த 3 மாதத்தில் ரூ.29 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு மீட்டர் ரயான் துணி ரூ.20க்கும், ரூ.34 க்கு விற்கப்பட்ட மற்றொரு ரக துணி ரூ.25 ஆக வீழ்ச்சியடைந்து விட்டது.

    நூல் விலையை விட உற்பத்தி விலை கூடுதலாகி விட்டது. துணி விலை வீழ்ச்சியால் நெசவாளர்கள் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொடர் வீழ்ச்சியால் வேலையிழக்கும் பாதிப்பும் ஏற்படுத்தி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.



    Next Story
    ×