என் மலர்
ஈரோடு
ஈரோடு சூளை நெசவாளர் காலனி லட்சுமி நகரில் பிச்சைக்காரன் பள்ளம் ஓடை செல்கிறது. இந்த ஓடையின் பாலத்தில் நேற்று இரவு 11 மணிஅளவில் ஒரு வாலிபரின் தலை மட்டும் கிடந்தது. அந்த வழியாக சென்ற ஒருவர் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக ஈரோடு கருங்கல் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பால முருகன், பன்னீர்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு பாலத்தின் ஒரு தூணில் ரத்தக்கறையுடன் வாலிபரின் தலை மட்டும் கிடந்தது. இதைத்தொடர்ந்து உடலை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 வீதிகளை கடந்து ஓடை கரையோரமாக உடல் கிடந்தது.
அங்கு சென்று போலீசார் பார்வையிட்டனர். பேன்ட் மற்றும் டி-சர்ட் அணிந்த நிலையில் தலையில்லாமல் உடல் கிடந்தது. அங்கிருந்து சற்று தொலைவில் ரத்தக்கறையும் படிந்து கிடந்தது. அதைத்தொடர்ந்து உடலையும், தலையையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டது. அந்த நாய், கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடந்த ரத்தக்கறையை முகர்ந்துவிட்டு சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது.
கொலை நடந்தது தொடர்பாக அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
போலீசார் விசாரணையில் கொலையுண்டவரின் அடையாளமும் கொலைக்கான காரணமும் தெரிய வந்தது. சேலம் மாவட்டம் பச்சபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரிதிவிராஜ் (வயது 24) இவருக்கு திருமணமாகி விட்டது. இவர் ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் உள்ள சாயப்பட்டறையில் வேலை பார்த்து அங்கே தங்கியிருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை பிரித்திவிராஜ் தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து சூளை நெசவாளர் காலனி அருகே உள்ள ஓடை பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த அவரது நண்பர் மற்றொருவர் இங்கு மது அருந்த கூடாது வேறு எங்கேயோ சென்று அருந்துகள் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த நண்பர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் பிரிதிவிராஜ் அவரது நண்பர்கள் சிறிது நேரம் கழித்து அந்த நண்பர் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் இது கைகலப்பாக மாறி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நண்பர் கட்டையால் பிரிதிவிராஜை தாக்கியுள்ளார். இதில் பிரித்திவிராஜ் மயங்கி கீழே விழுந்துள்ளார். உடன் வந்த நண்பர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர். எனினும் ஆத்திரம் தீராத அவர் பிரித்திவிராஜ் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் அந்த தலையை ஓடை பள்ளத்தில் தூக்கி வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வருகின்றனர். வாலிபர் ஒருவர் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் ஆசனூர் வனக்கோட்டம் தாளவாடி வனச்சரகத்தில் ஏராளமான புலி-சிறுத்தை உள்ளன.
வனத்தில் இருந்து வெளியேறும் சிறுத்தை அவ்வப்போது கிராமத்துக்குள் புகுந்து ஆடு மாடுகளை வேட்டையாடி வருகிறது. அண்மையில் பீம்ராஜ்நகர்,சூசைபுரம், தொட்டகாஜனூர் பகுதியில் சிறுத்தை தோட்டத்திற்குள் புகுந்து 10 ஆடுகளையும் 12 நாய்களையும் வேட்டையாடியது. சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
பின்னர் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கல்குவாரி, தோட்டம் என இரண்டு இடங்களில் கூண்டு வைத்தனர். ஆனால் கடந்த 4 மாதமாக சிறுத்தைகூண்டில் சிக்காமல் போக்குகாட்டி வருகிறது.
இந்நிலையில் தாளவாடி அடுத்த தொட்டகாஜனூர் கிராமத்தில் வெங்கட்ராமன் (51) என்பவர் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். இன்று காலை தனது வீட்டின் முன் கட்டி வைத்திருந்த கன்று குட்டியை காணவில்லை என்று பல இடங்களில் தேடியுள்ளார். அப்போது தனது வீட்டில் இருந்து சாற்று தூரத்தில் புதர் மறைவில் தனது கன்று குட்டி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது பற்றி தாளவாடி வனத்துறைக்கு தகவல் அளித்தார். வனத்துறையினர் அங்கு பதிந்த கால் தடத்தை வைத்து சிறுத்தை தான் கன்று குட்டியை கடித்து கொன்றுள்ளது என்றனர்.
இதனால் அப்பகுதி மக்கள் பீதிஅடைந்துள்ளனர் கூண்டு வைத்தும் கடந்த 4 மாதமாக கூண்டில் சிக்காமல் சிறுத்தை போக்குகாட்டிவருவதால் அட்டகாசம் செய்துவரும் சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறையினரும் திணறிவருகின்றனர்.
கோபி:
கோபி அருகே உள்ள கரட்டடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. கூலித்தொழிலாளி. இவரது மகள் ரிதியா (வயது 21). இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ரிதியா வேதனையுடன் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த ரிதியா தற்கொலை செய்ய முடிவு எடுத்து வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் தனக்குத்தானே ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு கோபியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ரிதியா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோபி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு, மார்ச். 7-
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் .இந்த சட்டத்தை நடைமுறைப் படுத்த கூடாது. தமிழக சட்டசபையில் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் செல்ல பாஷா வீதியில் இஸ்லாமியர்கள் கடந்த 21ஆம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டம் நேற்று 15-வது நாளாக நீடித்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர். அதைத்தொடர்ந்து நேற்று மாலை போராட்ட களத்தில் வைத்து ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த சலீம்பாஷாவுக்கும், மரப்பாலம் பகுதியைச் சேர்ந்த அஸ்விதாவுக்கும் திருமணம் நடைபெற்றது.
மணமக்களை ஏராளமானோர் வாழ்த்தினர் பின்னர் இனிப்பும், இரவு விருதும் வழங்கப்பட்டது. மணமக்கள் அஞ்சாதே போராடு, வேண்டாம் சி ஏ.ஏ, என்.பி.ஆர், என் .ஆர் .சி, என்ற வாசகத்துடன் கூடிய பதாகைகளை கையில் வைத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று 16-வது நாளாக இஸ்லாமியர்களின் காத்திருப்பு போராட்டம் நீடித்து வருகிறது. இன்று நடந்த போராட்டத்தில் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் போராட்ட களத்திற்கு நேரடியாக சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். * * * மணமக்கள் அஞ்சாதே போராடு, வேண்டாம் சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி. என்ற வாசகத்துடன் கூடிய பதாகைகளை கையில் வைத்திருந்த காட்சி.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு விலங்குகள் உள்ளன. இதில் யானை, மான், புலி, சிறுத்தை என பல்வேறு விலங்குகள் உள்ளன.
இந்நிலையில் நேற்று மாலை சத்தியமங்கலம் அடுத்துள்ள ஜல்லியூர் கிராமத்தில் பழனிச்சாமி என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில், சாலையில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகள் சத்தம் எழுப்பியுள்ளது. அப்போது சிறுத்தை ஒன்று தென்னை மரத் தோட்டம் ரோட்டை கடந்து செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பட்டிக்குள் சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் ஆடுகள் துடிதடித்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில் சம்பவ இடத்திலேயே ஒரு ஆடு இறந்து விட்டது. மேலும் இரண்டு ஆட்டுக்குட்டிகள் சிறிது தொலைவில் இறந்து கிடந்துள்ளது.
பவானிசாகர் வனத்துறையினரிடம் தகவல் கூறியுள்ளனர். பவானிசாகர் வனச்சரகர் சரவணன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் தோட்டத்தை ஆய்வு செய்தனர்.
கால் தடங்களை ஆய்வு செய்து இது சிறுத்தை தான் என்று கூறினர். நேற்று இரவு முழுவதும் ரோந்து பணி மேற்கொண்டனர். பொதுமக்கள் யாரும் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தினர்.
சத்தியமங்கலம் பகுதியில் தொடர்ந்து அடுத்தடுத்து ஊருக்குள் புகுந்த சிறுத்தையால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். ஊருக்குள் புகுந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர்.
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், முஸ்லிம் அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோட்டிலும் முஸ்லிம் அமைப்புகள் கடந்த 21-ந் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு செல்ல பாஷா வீதியில் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். அது தொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு உள்ளனர். நாளுக்கு நாள் காத்திருப்பு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில் அவர்களின் போராட்டம் இன்று 15- வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இன்று நடந்த காத்திருப்பு போராட்டத்தில் முஸ்லிம் பெண்கள் அதிகளவில் பங்கேற்றனர். இதே போன்று பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் நேரடியாக சென்று அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இன்று மாலை போராட்ட களத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பாப்புலர், ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத் தலைவர் காலித் முகமது கண்டன உரையாற்ற உள்ளனர். இதைத்தொடர்ந்து போராட்ட காலத்தில் ஒரு ஜோடிக்கு திருமணம் நடைபெற உள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் திருமணம் என்றாலே ஆடம்பரம், சொகுசு காரில் ஊர்வலம், மின்விளக்கு அலங்காரம் போன்றவற்றுக்கு குறைவு இருக்காது. அதில் சற்று வினோதமாக ஒரு சிலர் பழமையையும், பாரம்பரிய நிகழ்ச்சிகளையும் நினைவுகூரும் வகையில் திருமண நிகழ்ச்சிகளை நடத்தும்போது அது பலரின் கவனத்தை ஈர்த்துவிடும்.
இதுபோன்ற சம்பவம் ஈரோடு மாவட்டம் கோபி அருகே நடந்து உள்ளது. கோபி அருகே உள்ள கூகலூர் கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவருடைய மகள் சுபாசினி (வயது 23). இவர் பி.எஸ்.சி. தகவல் தொழில்நுட்பம் படித்து உள்ளார். இதேபோல் கோவை மாவட்டம் மேட்டு்ப்பாளையத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருடைய மகன் பரணி பிரகாஷ் (25). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் மனிதவள மேம்பாட்டுதுறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் பரணி பிரகாசுக்கும், சுபாசினிக்கும் கோபி அருகே உள்ள கருங்கரடு முருகன் கோவிலில் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் கூகலூரில் உள்ள திருமண மண்டபத்துக்கு வரவேற்பு நிகழ்ச்சிக்காக புறப்பட தயாராயினர். அப்போது மணமக்களை அழைத்து செல்ல மாட்டு வண்டி கொண்டுவரப்பட்டது. இதில் மணமக்கள் ஏறி உட்கார்ந்தனர். இதைத்தொடர்ந்து உறவினர்கள் புடைசூழ மாட்டுவண்டியில் 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள திருமண மண்டபத்துக்கு மணமக்கள் சென்றனர்.
மாட்டு வண்டியில் மணமக்கள் சென்றதை அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர். வரும் வழியில் மணமக்கள் மாட்டு வண்டியை பார்த்ததும் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் ரோட்டுக்கு ஓடிவந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் வண்டியை நிறுத்தி மணமக்களுக்கு திருஷ்டி சுற்றி அங்கிருந்து வழியனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மணமக்கள் கூறுகையில், ‘சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், புகையில்லா சமுதாயத்தை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாட்டுவண்டி பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதில் எங்களுக்கு புதிய அனுபவம் ஏற்பட்டதுடன், வாழ்நாள் முழுவதும் எங்களால் மறக்கமுடியாத நிகழ்ச்சியாகவும் இது ஆகிவிட்டது. விழாவையொட்டி மணப்பெண்ணின் குழந்தை பருவ புகைப்படங்களை ஒன்றிணைத்து தொகுப்பாக காட்சி படுத்தியிருந்ததும், திருமணத்துக்கு வந்தவர்களை வெகுவாக ஈர்த்தது,’ என்றனர்.
மொடக்குறிச்சி அடுத்த கணபதிபாளையம், மன்னாதம் பாளையம் ரோடு, தோப்பு காரர் வீடு பகுதியை சேர்ந்தவர் சரண்யா (வயது 27). இவரது கணவர் ரவி. இவர்களுக்கு ஹரிஷ் (9) என்ற மகன் உள்ளான். ரவியும் சரண்யாவும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். சரண்யா தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். ரவி சென்னையில் உள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சரண்யா எலி மருந்தை (விஷம்) குடித்து விட்டார். பின்னர் அவரை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சரண்யாவை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே சரண்யா இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து மலையம் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கழுதைப்பால் விற்பனை செய்பவர்கள் முகாமிட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த இவர்கள் ஆண்டு தோறும் சத்தியமங்கலம் பகுதிக்கு வந்து கழுதை பாலை விற்பனை செய்து வருகின்றனர்.
கழுதைப்பால் மருத்துவ குணம் நிறைந்தது. பல்வேறு நோய்களை குணப்படுத்தும் என கூறப்படுகிறது. இதனால் கழுதை பாலை பொதுமக்கள் விரும்பி வாங்கி குடிக்கின்றனர். தற்போது சத்தியமங்கலம் பகுதியில் கழுதைப்பால் விற்பனை செய்பவர்கள் காலை 6 மணி முதல் வீதி, வீதியாக சென்று கூவி, கூவி விற்பனை செய்து வருகின்றனர்.
கழுதைப்பால் கேட்பவர்களுக்கு அவர்களின் கண் முன்னே கறந்து கொடுக்கப்படுகிறது. ஒரு சங்கு கழுதைப்பால் ரூ. 50-க்கும், 50 மி.லி. கழுதைப்பால் ரூ. 200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் வாங்கி குடித்து வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு பாப்பாத்தி காடு பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மகன் யோகேஷ்வன் (35). திருமணமாகாதவர். இவர் ஈரோடு மேட்டூர் ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
இவரது பேஸ்புக் கணக்கில் சிறுமிகளின் ஆபாச படங்கள் மற்றும் பாலியல் உணர்வுகளை தூண்டும் விதத்தில் போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.
இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு புகார் வந்தது. அதன் பேரில் போலீசார் யோகேஷ்வரன் செல்போனை சோதனை செய்த போது அவர் பேஸ்புக் கணக்கை பாலியல் நோக்கத்துக்காக தவறான முறையில் பயன்படுத்தியதும், குழந்தைகளை பாலியல் கற்றலுக்கு தூண்டும் வகையிலும் பயன்படுத்தி சமூக சீர்கேட்டிற்கு காரணமாக இருந்ததும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து வீரப்பன் சத்திரம் போலீசார் யோகேஷ்வரன் மீது போக்சோ மற்றும் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் (ஐ.டி) உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.
பேக்புக் பக்கத்தில் சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவிட்டதாக ஈரோட்டில் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று போலீசார் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி பழனிபுரம் 4-வது வீதியை சேர்ந்தவர் இளஞ்செழியன். தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி ரேகா (36). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் தனியார் கல்லூரியிலும், மற்றொரு மகள் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.
இரு மகள்களுக்கும் கல்வி கட்டணத்தை செலுத்துமாறு பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகம் கூறி உள்ளது. ஆனால் பணம் இல்லாததால் கட்டணத்தை செலுத்த முடியவில்லை.
இதனால் ரேகா மன வேதனையில் இருந்தார். திடீரென அவர் கதவை உள்பக்கம் தாழ்போட்டு கொண்டு தீக்குளித்தார். உடலில் தீப்பிடித்ததும் வலி தாங்க முடியாமல் அலறியபடி கதவை திறந்து வெளியே வந்தார்.
இதனை பார்த்த அவரது கணவர் மற்றும் இளைய மகள் ஆகியோர் அருகில் இருந்த போர்வையை எடுத்து ரேகா மீது பற்றிய தீயை அணைத்தனர். பின்னர் ரேகாவை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் மகள்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் தற்கொலைக்கு முயன்றதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
இதற்கிடையே நேற்று சிகிச்சை பலன் இன்றி ரேகா இறந்து விட்டார். இது குறித்து பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகள்களின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாததால் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பவானியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஆப்பக்கூடல் கூத்தம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (57). ஆப்பக்கூடல் மூங்கில் பட்டி பகுதியில் பந்தல், மைக் செட் கடை நடத்தி வந்தார்.
இவர் மூங்கில் பட்டி பஞ்சாயத்து முன்னாள் துணை தலைவராக இருந்தவர் ஆவார். நேற்று மதியம் 2 மணிக்கு இவர் ஆப்பக்கூடலில் இருந்து அத்தாணிக்கு வேலை நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் சென்றார்.
கருவல்வாடி புதூர் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது அத்தாணியில் இருந்து பவானி சாலையில் ஆப்பக்கூடல் நோக்கி வேகமாக வந்த லாரி குப்புசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலே பலியானார். இது குறித்த தகவல் கிடைத்ததும் ஆப்பக்கூடல் போலீசார் அங்கு விரைந்து வந்து குப்புசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர.
விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் கர்நாடக மாநிலம் பண்டள்ளி கிராமத்தை சேர்ந்த அப்துல் முஷீர் (28) என்பவரை கைது செய்தனர்.
இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






