என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள். இதனால் சாவு எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மாநகர் பகுதியில் தினந்தோறும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் மாவட்ட நிர்வாகம் மாநகராட்சியுடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மாநகர் பகுதியில் சூரம்பட்டிவலசு, பி.பி.அக்ரஹாரம், காந்திஜி ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தினந்தோறும் பலருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    அப்போது யாருக்காவது கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் உடனடியாக, ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தால் வீட்டிலேயே அவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். வீட்டில் வசதி இல்லாத பட்சத்தில் பி.வி.பி. பள்ளிக்கூடத்தில் உள்ள சிறப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு தங்க வைக்கப்படுகிறார்கள். கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தால் மட்டுமே பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் வரை 915 பேர் சிகிச்சையில் இருந்தனர்.

    இந்த நிலையில் பவானி பகுதியை சேர்ந்த 64 வயது முதியவரும், ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த 69 வயது முதியவரும் காய்ச்சல் காரணமாக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 17-ந்தேதி அனுமதிக்கப்பட்டனர். அப்போது அவர்களுடைய ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

    பரிசோதனை முடிவில் அவர்கள் 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர்கள் 2 பேரும் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் நேற்று மாவட்டம் முழுவதும் 45 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர 2 பேர் ஈரோடு மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதனால் ஏற்கனவே 2 ஆயிரத்து 24 பேர் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை நேற்று2 ஆயிரத்து 71 ஆக உயர்ந்தது.

    நேற்று புதிதாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் 24 பேருக்கும், பெருந்துறை பகுதியை சேர்ந்த 8 பேருக்கும், கொடுமுடி பகுதியை சேர்ந்த 3 பேருக்கும், கோபி மற்றும் மொடக்குறிச்சி பகுதிகளில் தலா 2 பேருக்கும், நம்பியூர், சத்தியமங்கலம், நசியனூர், பவானி ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த 2 பேர் ஈரோடு மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அதே நேரம் நேற்று ஒரே நாளில் 73 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 887 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 32 பேர் இறந்துள்ள நிலையில், 1,152 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.

    திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த திருவிடைமருதூரை சேர்ந்த தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள குணதலைப்பாடி இந்திரா காலனி தெருவை சேர்ந்தவர் இளவரசன் (வயது 20). இவர் பல்லடம் பகுதியில் உள்ள ஒரு மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே மில்லில் ஈரோட்டை சேர்ந்த 15 வயது சிறுமியும் வேலை செய்து வந்தார். அப்போது இளவரசன் சிறுமியிடம் பழகி வந்துள்ளார். பின்னர் 2 பேரும் மாயமானார்கள். இதனால் சிறுமியின் பெற்றோர் இதுபற்றி ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

    இந்த நிலையில் இளவரசனும், சிறுமியும் ஈரோடு சூரம்பட்டி ஜெகநாதபுரம் காலனியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருப்பதாக சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரையும் பிடித்து ஈரோட்டுக்கு அழைத்து வந்தனர். பின்னர் இளவரசனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், இளவரசன் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதும், பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார், போக்சோ உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இளவரசனை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட சிறுமி ஈரோட்டில் உள்ள ஒரு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
    ஈரோட்டில் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    ஈரோடு முள்ளாம்பரப்பு குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவருடைய மனைவி தீபிகா (வயது 22). இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. தீபிகாவுக்கு அடிக்கடி வயிற்றுவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த தீபிகா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.

    உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் தீபிகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தீபிகாவுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து ஈரோடு ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
    மகேந்திர சிங் டோனி தனது மகளுடன் இருப்பது போன்ற உருவ படத்தை வடிவமைத்து அதனை கைத்தறி நெசவு மூலம் போர்வையாக உருவாக்கியுள்ளார்.
    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம், சென்னிமலையை சேர்ந்தவர் அப்புசாமி. இவர் சென்னிமலையில் உள்ள சென்டெக்ஸ் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் ஆடை வடிவமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஏற்கனவே கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் உருவ படத்தை வடிவமைத்து அதை திரைச்சீலையில் உருவாக்கினார். பின்னர் அந்த திரைச்சீலையை சச்சின் தெண்டுல்கரிடம் நேரில் கொடுத்து பாராட்டு பெற்றார். இதுபோல் அப்புசாமி பலருடைய உருவ படங்களை வடிவமைத்து அதனை கைத்தறி நெசவு மூலம் போர்வையாக தயார் செய்துள்ளார்.

    இந்த நிலையில், சமீபத்தில் ஓய்வு பெற்ற பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி தனது மகளுடன் இருப்பது போன்ற உருவ படத்தை வடிவமைத்து அதனை கைத்தறி நெசவு மூலம் போர்வையாக உருவாக்கியுள்ளார். இதுகுறித்து வடிவமைப்பாளர் அப்புசாமி கூறுகையில், ‘கிரிக்கெட் வீரர் டோனியும், அவரது மகளும் தந்தை-மகள் பாசத்தை பிரதிபலிப்பது போல் ஒன்றாக உள்ள புகைப்படத்தை 15 நாட்கள் கைக்கோர்வை மூலம் வடிவமைத்தேன்.

    பின்னர் அதை 47 அங்குல அகலம், 44 அங்குல நீளத்தில் கைத்தறி மூலம் போர்வையாக உருவாக்கினேன். இந்த போர்வையின் எடை 430 கிராம் ஆகும். இந்த போர்வையை ஐ.பி.எல். போட்டியின் போது டோனியை நேரில் சந்தித்து வழங்க இருந்தேன். ஆனால் கொரோனா காரணமாக ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க இருப்பதால், வழங்க முடியவில்லை. இந்த நிலையில் டோனி ஓய்வு அறிவித்து விட்டதால் அவருடைய நினைவு பரிசாக நேரில் சந்தித்து வழங்க உள்ளேன்’ என்றார்.
    பவானி வட்டார கல்வி அலுவலகத்தில் மடிக்கணினி திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
    பவானி:

    பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வட்டார கல்வி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் கடந்த 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றப்பட்டது. அதன்பின்னர் அலுவலகத்தின் கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். சம்பவத்தன்று காலை ஊழியர் ஒருவர் வேலைக்காக வந்து பார்த்தார். அப்போது அலுவலகத்தின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த மடிக்கணினி, 5 மானிட்டர்கள், 2 சி.பி.யு., உள்ளிட்ட பல பொருட்களை காணவில்லை. யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து தொடக்க கல்வி அலுவலர் முத்து பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். விசாரணையில் பவானி வர்ணபுரத்தை சேர்ந்த குருமூர்த்தி (வயது 24) என்பவர் அலுவலகத்தின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த மடிக்கணினி, மானிட்டர், சி.பி.யு. உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஈரோட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் போல் நடித்து வீடு புகுந்து பெண்ணிடம் கைவரிசை காட்டிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு சுண்ணாம்பு ஓடை ரோஜா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன். அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இவருடைய மனைவி ரேவதி (வயது 55). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 3 பேர் வந்து, தங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் என்று கூறி அறிமுகப்படுத்தி கொண்டனர்.

    பின்னர் அவர்கள் ரேவதியிடம், ‘தங்கள் கடையில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே நாங்கள் உங்கள் வீட்டை சோதனை செய்ய வந்துள்ளோம்’ என்று கூறி உள்ளனர். இதனால் ரேவதி தனது கணவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். அதற்கு அவர்கள், ‘உங்களுடைய கணவரை நாங்கள் கைது செய்துள்ளோம்’ என்றனர்.

    அதைத்தொடர்ந்து அவர்கள் சோதனை செய்வது போல் நடித்து வீட்டில் இருந்த ரூ.20 ஆயிரத்தை திருடிக்கொண்டு, ரேவதியிடம் பெயர், முகவரி, கையெழுத்து போன்றவற்றை வாங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதைத்தொடர்ந்து ரேவதி தனது கணவருக்கு போன் செய்தார்.

    அப்போது அவர் தான் கடையில் வியாபாரத்தில் இருப்பதாக கூறி உள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கருங்கல்பாளையம் பகுதியில் போலீசார் நேற்று ரோந்து வந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அம்மன் கோவில் வீதியை சேர்ந்த பாலாஜி என்கிற சவுந்தரபாண்டியன் (25), பள்ளிபாளையம் கண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (19), சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த கிஷோர் (25) ஆகியோர் என்பதும், இவர்கள் 3 பேரும் சேர்ந்து தான் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் போல் நடித்து ரேவதியின் வீட்டில் பணம் திருடிச்சென்றதும் தெரிய வந்தது.

    மேலும் இவர்கள் இதே போன்று தர்மபுரி, ஓமலூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் போல் நடித்து பல்வேறு கடைகளில் கைவரிசை காட்டியதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

    ஈரோடு அருகே சிறுமியை பாலியல் தொல்லை செய்ததாக வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள குணதலைப்பாடி இந்திரா காலனி தெருவை சேர்ந்தவர் இளவரசன் (வயது 20). இவர் பல்லடம் பகுதியில் உள்ள ஒரு மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே மில்லில் ஈரோட்டை சேர்ந்த 15 வயது சிறுமியும் வேலை செய்து வந்தார்.

    அப்போது இளவரசன் சிறுமியிடம் பழகி வந்துள்ளார். பின்னர் 2 பேரும் மாயமானார்கள். இதனால் சிறுமியின் பெற்றோர் இதுபற்றி ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இளவரசனும், சிறுமியும் ஈரோடு சூரம்பட்டி ஜெகநாதபுரம் காலனியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருப்பதாக சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரையும் பிடித்து ஈரோட்டுக்கு அழைத்து வந்தனர். பின்னர் இளவரசனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், இளவரசன் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதும், பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார், போக்சோ உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இளவரசனை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட சிறுமி ஈரோட்டில் உள்ள ஒரு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
    ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா உறுதி செய்யப்பட்ட ஆட்சியர் கதிரவன் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆட்சியருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முகாம் அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.
    காலாண்டு தேர்வு எப்போது நடைபெறும் என்பது தொடர்பான கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.
    ஈரோடு:

    கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. கோடை விடுமுறை கடந்தும், பள்ளிகளின் விடுமுறை நீண்டுகொண்டே செல்கிறது. கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் சிகிச்சை மையமாகவும், தனிமைப்படுத்தும் மையமாகவும் சில பள்ளிகள் மாற்றப்பட்டு உள்ளன.

    இதற்கிடையே மாணவர்களின் கற்றலில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அதுகுறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்? என பெற்றோரும், மாணவர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    தொலைக்காட்சிகள் மூலம் தற்போது வகுப்பு நடைபெறும் சூழலில் காலாண்டு தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:

    கொரோனா தாக்கம் குறைந்தபின், மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

    அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் எதற்காக பணம் வசூலித்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளிகளில் இதுவரை 50 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    10, 12 மட்டுமின்றி 8, 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் மறுதேர்வு எழுத வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஈரோட்டில் பொது கழிப்பிடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி 58-வது வார்டுக்கு உள்பட்ட கருங்கல்பாளையம் செங்கூட்டுவன் வீதியில் பொதுக்கழிப்பிடம் உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் இந்த கழிப்பிடத்தை பயன்படுத்தி வருகிறார்கள். பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக அங்குள்ள பொதுக்கழிப்பிடத்தை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதற்கு பொதுமக்கள் சார்பில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், பொதுக்கழிப்பிடத்தை இடிக்காமல் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று காலை பொக்லைன் எந்திரம் அந்த பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். அப்போது பொதுக்கழிப்பிடத்தை இடிப்பதற்காக பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு இருப்பது அவர்களுக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த பொக்லைன் எந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறுகையில், “பொதுக்கழிப்பிடத்தை இடித்துவிட்டால் எங்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும். திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். எனவே கழிப்பிடத்தை இடிக்கக்கூடாது”, என்றனர். அதற்கு அதிகாரிகள், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிறைவடைந்த பிறகு மீண்டும் பொதுக்கழிப்பிடம் கட்டி கொடுக்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் பொதுமக்கள் அதை ஏற்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பொதுக்கழிப்பிடம் இடிக்கப்படாமல் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    ஈரோட்டில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவரது மனைவி ஸ்ரீதேவி (வயது 25). இவர்கள் 2 பேரும் கடந்த 2015-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை.

    இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கோவை கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கோவையில் வசிக்க விரும்பாத ஸ்ரீதேவி கடந்த ஜனவரி மாதம் முதல் ஈரோடு சம்பத்நகரில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று மாலை அவரது நண்பர் ஸ்ரீதேவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது. இதையடுத்து அவர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது ஸ்ரீதேவி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தது தெரியவந்தது. இதுபற்றி அறிந்ததும் வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஸ்ரீதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஸ்ரீதேவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் ஒரு முதியவர் பலியானார்.
    ஈரோடு:

    கொரோனாவின் பாதிப்பு ஈரோடு மாவட்டத்தில் அதிகரித்து கொண்டே செல்கிறது. தினமும் நோய் தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,726 ஆக உயர்ந்தது.

    இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட வி.ஐ.பி. நகர், சாஸ்திரிநகர், கொல்லம்பாளையம், காந்திபுரம், பார்க்ரோடு, மரப்பாலம், சூரம்பட்டி நால்ரோடு, சூரம்பட்டி, அணைக்கட்டு, மொசுவண்ணன்வீதி, கனிராவுத்தர் குளம், ராஜாஜிபுரம், பி.பி.அக்ரஹாரம், வெட்டுக்காட்டுவலசு, ஆர்.என்.புதூர், கங்காபுரம், முனிசிபல்காலனி, நாடார்மேடு, கருங்கல்பாளையம், பெரியசேமூர், சடையம்பாளையம், ராம்நகர், காந்திநகர், கிருஷ்ணம்பாளையம், டெலிபோன்நகர், சூளை நெசவாளர்காலனி, ஞானபுரம், ஜீவாநகர், ரங்காவீதி, வீரப்பன்சத்திரம், குமலன்குட்டை, அன்னைநகர், உசேன்சாய்பு வீதி, எஸ்.எஸ்.லேஅவுட் பகுதி, தீயணைப்பு நிலைய பகுதி, மாணிக்கம்பாளையம், காசிபாளையம், மூலப்பாளையம், மண்டபம் வீதி ஆகிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதேபோல் அந்தியூர் அருகே அத்தாணி, குப்பாண்டம்பாளையம், தொப்புக்காட்டூர், பெருந்துறை, நசியனூர் அருகே வேப்பம்பாளையம், வெள்ளோடு, கொடுமுடி வடக்கு வீதி, தாலுகா அலுவலகம், பவானி மேட்டூர் மெயின்ரோடு, வர்ணாபுரம், தேவராஜ் பிள்ளைசந்து, சித்தோடு பேட்டைகாடு, தாளவாடி தலமலைரோடு ஆகிய பகுதிகளிலும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் நேற்று 26 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை 946 பேர் குணமடைந்து உள்ளனர். 752 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மாவட்டத்திலேயே ஈரோடு மாநகராட்சியில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தநிலையில் ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியானார். 70 வயதான அவர் தலைவலி, மூச்சு திணறல் பிரச்சினையால் கடந்த 15-ந் தேதி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி 17-ந் தேதி அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது.
    ×