என் மலர்
ஈரோடு
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கொத்துக்காட்டை சேர்ந்தவர் சின்னம்மாள் (55) இவரது மகன் சாமி நாதன் (27). கட்டிட தொழிலாளர்கள்.
இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சத்தியமங்கலம்- கோபி ரோட்டில் எருமைபடை பள்ளம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் மோதியது.
இதில் சின்னம்மாள், சாமிநாதன் ஆகியோர் பலியானார்கள்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்தியூர் பர்கூர் ரோட்டில் வசிக்கும் 40 வயது ஆண் ஒருவர் காய்ச்சல், சளி இருந்ததால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஈரோடு அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.
பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக சின்னத் தம்பிபாளையம் அரசு டாக்டர் சக்தி கிருஷ்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் அவரது வீட்டிற்குச் சென்றனர்.
ஆனால் அந்த நபர் வீட்டில் இல்லை. மேலும் கடந்த 2 நாட்களாக வீட்டிற்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் மாயமான கொரோனா நோயாளியை தேடும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அந்தியூர் போலீஸ் நிலையத்தில் டாக்டர் சக்தி கிருஷ்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் புகார் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு சாஸ்திரி நகரில் உள்ள ஒரு கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐம்பொன் முருகர் சிலை திருட்டு போனது. இந்த சம்பவம் தொடர்பாக சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருடர்களை தேடி வருகிறார்கள். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாமல் இருப்பதால் திருடர்களை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து அந்த பகுதியில் குற்றச்சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. பொதுமக்களின் நிதி பங்களிப்புடன் ரூ.22 ஆயிரம் செலவில் 3 கண்காணிப்பு கேமராக்கள் வாங்கப்பட்டன. சடையம்பாளையம் ரோடு, குமரன்நகர்வீதி, சாஸ்திரிநகர் வீதி ஆகிய பகுதிகளை நோக்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த கேமராக்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் சூரம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் கலந்துகொண்டு கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். இதில் சக்திவேல், பாஸ்கர், மனோகர், பிரபாகரன், பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது. 10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு நாளை வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டு உள்ளது.
தனி தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க கோரி அவர்கள் சார்பில் மனு வழங்கப்பட்டு உள்ளது. இது குறித்து தமிழக முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
தற்போது பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கூடுதலாக 2.35 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். மேலும் 20 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
கட்டாய கல்வி திட்டத்தில் தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக சில பள்ளிகள் மீது புகார் வந்தது. அவர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி இனி இது போல் நடக்க கூடாது என கூறப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் 40 சதவீத கல்வி கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என கூறி உள்ளது. கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் மாவட்ட கல்வி அலுவலரிடம் பெற்றோர்கள் நேரடியாக புகார் தெரிவிக்கலாம்.
பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் தற்போது தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள் என பல்வேறு பாடத்திட்டங்கள் கற்று கொடுக்கப்படுகிறது. இதனால் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு உருவாக்கப்படுகிறது. இதனை களைய அரசு நடவடிக்கை எடுக்குமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளிக்கும் போது, மத்திய அரசுதான் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலை நாடுகளில் ஒரே பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளது. தற்போது அவையே ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு நீக்கும் என்றார்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், தலமலை, தாளவாடி, கேர்மாளம் வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளது. இந்த அடர்ந்த வன பகுதி திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த சாலையில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக உலா வருகிறது. ஆசனூர் அடுத்துள்ள காரபள்ளத்தில் சோதனை சாவடியில் உயர தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வழியாக அதிக கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரி டிரைவர்கள் கரும்புகளை தேசிய நெடுஞ்சாலையில் வீசி சென்று விடுகிறார்கள். இதனை உண்ண யானைகள் சாலையில் உலா வருகிறது. எனவே ரோட்டில் கரும்புகளை வீசி செல்லும் லாரி டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மற்ற வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
நம்பியூர்:
நம்பியூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நம்பியூர் தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலார் கிருஷ்ண மூர்த்தி தலைமை தாங்கினார்.
மத்திய தொழிற் சங்க துணை தலைவர் ரவிச்சந்திரன், அய்யா சாமி, பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் முன்னேற்ற சங்க மண்டல தலைவர் கே.கே. பழனிசாமி, டி.டி.எஸ்.எப் மண்டல தலைவர் கலை முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து ஓட்டும் முயற்சியை கைவிட வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட சம்பள பாக்கியை திரும்ப வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு நேற்று வந்தார். அவர் பவானி கூடுதுறையில் புனித நீராடினார். பின்னர் ஈரோடு காலிங்கராயன் இல்லத்துக்கு வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டம் மூலிப்பட்டி கிராமத்தில் உள்ள தவசிலிங்கசாமி எங்களது குல தெய்வம். இந்த கோவிலின் கும்பாபிஷேகம் வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக திருச்செந்தூர், பாபநாசம், பவானி கூடுதுறை போன்ற புண்ணிய நதிகளில் தீர்த்தம் எடுத்து செல்கிறேன். அதற்காக பவானி கூடுதுறைக்கு சென்று ஆற்றில் புனிதநீராடி தீர்த்தம் எடுத்து கொண்டு குலதெய்வ கோவிலுக்கு செல்ல உள்ளேன்.
தமிழகத்தின் பிரச்சினைக்குரிய கருத்துக்களை யாரும் பேச வேண்டாம் என்று கட்சியின் தலைமை உத்தரவிட்டு உள்ளது. அரசியல் தொடர்பான பிரச்சினைகளுக்கு முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். அ.தி.மு.க.வின் முதல்-அமைச்சர் வேட்பாளர் தேர்வு செய்வதில் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.
இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. இந்தநிலையில் முழு ஊரடங்கான நேற்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பவானி கூடுதுறையில் புனித நீராடி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மாநகர் பகுதியில் தினந்தோறும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் மாவட்ட நிர்வாகம் மாநகராட்சியுடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மாநகர் பகுதியில் சூரம்பட்டிவலசு, பி.பி.அக்ரஹாரம், காந்திஜி ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தினந்தோறும் பலருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
அப்போது யாருக்காவது கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் உடனடியாக, ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தால் வீட்டிலேயே அவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். வீட்டில் வசதி இல்லாத பட்சத்தில் பி.வி.பி. பள்ளிக்கூடத்தில் உள்ள சிறப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு தங்க வைக்கப்படுகிறார்கள். கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தால் மட்டுமே பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் வரை 915 பேர் சிகிச்சையில் இருந்தனர்.
இந்த நிலையில் பவானி பகுதியை சேர்ந்த 64 வயது முதியவரும், ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த 69 வயது முதியவரும் காய்ச்சல் காரணமாக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 17-ந்தேதி அனுமதிக்கப்பட்டனர். அப்போது அவர்களுடைய ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனை முடிவில் அவர்கள் 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர்கள் 2 பேரும் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று மாவட்டம் முழுவதும் 45 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர 2 பேர் ஈரோடு மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதனால் ஏற்கனவே 2 ஆயிரத்து 24 பேர் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை நேற்று2 ஆயிரத்து 71 ஆக உயர்ந்தது.
நேற்று புதிதாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் 24 பேருக்கும், பெருந்துறை பகுதியை சேர்ந்த 8 பேருக்கும், கொடுமுடி பகுதியை சேர்ந்த 3 பேருக்கும், கோபி மற்றும் மொடக்குறிச்சி பகுதிகளில் தலா 2 பேருக்கும், நம்பியூர், சத்தியமங்கலம், நசியனூர், பவானி ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த 2 பேர் ஈரோடு மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அதே நேரம் நேற்று ஒரே நாளில் 73 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 887 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 32 பேர் இறந்துள்ள நிலையில், 1,152 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.






