என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் தனியார் மொத்த உர விற்பனை நிறுவன உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நிலம் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்களிலும் ரெய்டு நடைபெற்றது.
கோவை, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 10 பேர் தீவிர சோதனை நடத்தினர்.
இந்நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் தனியார் உரவிற்பனை நிறுவன உரிமையாளர் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவனுக்கு கடந்த 21-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு 25 சதவீத தொற்று இருந்ததால், கலெக்டர் முகாம் அலுவலகத்திலேயே அவர் தனிமைப்படுத்திக்கொண்டார்.
அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. வீட்டில் இருந்தபடியே கலெக்டர் சி.கதிரவன் அலுவலக பணிகளை செய்து வந்தார். செல்போன் மூலமாகவும், காணொலி காட்சி மூலமாகவும் பணியை தொடர்ந்தார்.
இதற்கிடையே அவருக்கு கொரோனா மறு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்தது. நோய் தொற்றில் இருந்து குணமடைந்ததால், அவர் கடந்த 28-ந் தேதியில் இருந்து வெளியில் செல்லலாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள். இருந்தாலும், கலெக்டர் சி.கதிரவன் வெளிநிகழ்ச்சிகளில் உடனடியாக பங்கேற்காமல் இருந்து வந்தார்.
இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் பெருந்துறை தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ள கொரோனா நோயாளிகளையும் அவர் நேரில் பார்வையிட்டார்.
அப்போது கொரோனா நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் இருப்பு உள்ளதா? உணவுகள் முறையாக வழங்கப்படுகிறதா? சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்று கேட்டறிந்தார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறியதாவது:-
தமிழக அரசு 4-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து உள்ளது. இதில் பொதுமக்களின் நலன் கருதி மாவட்டத்துக்குள் பஸ்கள் இயக்கப்படுகிறது. இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுகிறது. 100 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இருந்தாலும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிந்து செல்லுதல், கை கழுவுதல், கிருமி நாசினி பயன்படுத்துதல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்கள் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் டாக்டர் ஆர்.மணி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு எந்தவித கட்டணமும் வசூல் செய்யப்படவில்லை. தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக பெற்றோர்கள் புகார் அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்கள் சேர்க்கைக்காகவும், மாணவர்களுக்கு வழங்கப்படும் பொருட்களுக்காகவும் மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும்.
நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு குறித்து முதல்-அமைச்சர் தகுந்த நடவடிக்கை மேற்கொள்வார். குழந்தை தொழிலாளர்களை நல்வழிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 1 லட்சத்து 72 ஆயிரம் குழந்தைகள் கூடுதலாக ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். செப்டம்பர் வரையிலும் சேர்க்கை நடைபெறும் என்பதால் கூடுதல் சேர்க்கைக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் சேர்க்கைக்கு ஏற்ப ஒவ்வொரு வகுப்பிற்கும் 20 ஆயிரம் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளது. கொரோனா சிகிச்சை அளிக்க கோபி கலை கல்லூரி, அந்தியூர், தாளவாடி, பெருந்துறை ஆகிய பகுதிகளில் கூடுதல் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் நடக்க இருந்த பள்ளி, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதுடன், இந்த தேர்வு எழுத இருந்த அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்ச்சி அடைந்ததாக தமிழக அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து கல்லூரிகளில் அரியர் (தோல்வி அடைந்த) பாடங்களை எழுதுவதற்கு தேர்வுக்கட்டணம் செலுத்தி இருந்தவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அறிவித்தார். இது பல ஆண்டுகளாக கல்லூரிகளில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற முடியாமல் இருந்த முன்னாள் மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்து உள்ளது. இதை கொண்டாடும் வகையில் ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் நேற்று காலை ஒரு விளம்பர தட்டி வைக்கப்பட்டு இருந்தது. அதில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படம் வைத்து 'அரியர் மாணவர்களின் அரசனே' என்று அவரை புகழ்ந்து வாசகங்கள் போடப்பட்டு இருந்தன.
மேலும் ஒரு திருக்குறள் வாசகமும், ஐயா எடப்பாடியாரே நீர் வாழ்க வாழ்க என்ற வாசகங்களும் இடம் பெற்று இருந்தன. அரியர் மாணவர்கள் சார்பில் வைக்கப்பட்டு இருந்த இந்த விளம்பர தட்டியை அந்த வழியாக சென்ற பலரும் நின்று பார்த்து படித்து சிரித்துச்சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த சூரம்பட்டி போலீசார் விரைந்து வந்து விளம்பர தட்டியை அங்கிருந்து அகற்றினார்கள். இதற்கிடையே இந்த விளம்பர தட்டி படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பவானி:
பவானி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மகள் கவுதமி (23). இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
குழந்தை இல்லாததால் கணவர் அவரை தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கவுதமிக்கும் அதே பகுதியை சேர்ந்த பார்த்தீபனுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இவர்கள் வெள்ளோடு பகுதியில் ஏரி கருப்பராயன் கோவிலில் கடந்த 3-ந் தேதி திருமணம் செய்துள்ளனர். பின்னர் ஈரோடு வேப்பம் பாளையம் பகுதியில் குடியிருந்து வந்தனர். இது பார்த்தீபனின் பெற்றோருக்கு தெரிய வந்தது.
அவர்கள் மகனை அழைத்து சென்றதாகவும், கவுதமியுடன் பேசக் கூடாது என கூறி பார்த்தீபன் செல்போனை வாங்கி வைத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஈரோட்டுக்கு துணி எடுக்க செல்வதாக கூறி பார்த்தீபன் வந்துள்ளார். கொங்கம் பாளையம் பகுதியில் இருந்து கவுதமிக்கு போன் செய்து வர சொல்லி உள்ளார். அதன்படி கவுதமியும் வந்துள்ளார். இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அவர்களுடன் கவுதமியின் தந்தை- தாயும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.
பவானி பழைய பஸ் நிலையத்திற்கு அருகில் வரும் போது பார்த்தீபனும், கவுதமியும் மாயமாகி விட்டனர். இது குறித்து கவுதமி தந்தை மாதேஸ்வரன் பவானி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் குமரவேல், சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து மாயமான பார்த்தீபன், கவுதமியை தேடி வருகிறார்கள்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட, குறைவான பாதிப்புடைய குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 51 பேர் அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி செம்புளிச்சாம் பாளையத்தில் உள்ள தனியார் பள்ளிளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களுக்கு எந்த வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மாத்திரை உட்கொள்வதற்கு சுடு தண்ணீர் தர மறுப்பதாகவும், கழிவறையில் தண்ணீர் வசதியில்லை. குப்பைகள் சுத்தப்படுத்தப்படாமல் தேங்கி இருப்பதாக முகாமில் தங்கி உள்ளவர்கள் குற்றம் சாட்டினர்கள்.
தூய்மை பணியாளர்கள் பணி செய்ய வர மறுப்பதாகவும், தங்களுக்கான உணவு பொருட்களை குப்பை வண்டியில் வைத்து கொண்டு வந்து வினியோகிப்பதாகவும் தெரிவித்தனர். இது போன்ற சூழல் தங்களை மேலும் அதிக அளவிலான நோய் தொற்றுக்கு கொண்டு செல்லும் என அச்சம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து நோயாளிகள் அனைவரும் தாங்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை நோயாளிகளில் ஒருவரே தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலை தளத்தில் வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து பவானி தாசில்தார் அங்கு சென்று நோயாளிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அவர்களது அனைத்து தேவைகளும் உடனடியாக நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.
அம்மாபேட்டை:
கோனேரிப்பட்டி துணை மின் நிலையம் மற்றும் பூனாச்சி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மாபேட்டை, நெருஞ்சிப்பேட்டை, சித்தார், எஸ்.பி.கவுண்டனூர், ஊமா ரெட்டியூர், சிங்கம் பேட்டை, ஆனந்தம் பாளையம், காடப்பநல்லூர், கல்பாவி, கேசரிமங்கலம், கோனேரிப்பட்டி பிரிவு, சின்ன பள்ளம், பட்லூர் நால்ரோடு, ஒலகடம், ஒட்ட பாளையம், தாளபாளையம், பூனாச்சி, முளியனூர், மூணாஞ்சாவடி, பூதப்பாடி, செம்படாபாளையம், சமயதாரணுர், பூசாரியூர், கோண மூக்கனூர், குறிச்சி, மாணிக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
இந்த தகவலை கோபி மின் பகிர்மான வட்டம், பவானி உட்கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே குடியிருப்பு பகுதியில் கியாஸ் பங்க் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு எழுதியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
சென்னிமலை யூனியன், முகாசிபிடாரியூர் ஊராட்சி, பி.ஆர்.எஸ். ரோடு, பூங்கா நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். குடியிருப்புக்கு அருகில் தனியார் இடத்தில் கியாஸ் பங்க் அமைக்க பணிகள் நடக்கிறது.
இந்த இடத்தில் கியாஸ் பங்க் அமைந்தால் சுற்றிவசிக்கும் மக்கள் அச்சத்துடன் வசிக்கும் நிலை ஏற்படும். மேலும் அந்த இடத்தில் அதிக அளவில் விசைத்தறி பட்டறைகள் இருப்பதால் பாதிக்கப்படும். இதனால் அந்த இடத்தில் கியாஸ் பங்க் வைக்க அனுமதி அளிக்க கூடாது. இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.
அந்தியூர்:
அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்தில், வட்டார சங்க தலைவர் கிருஷ்ண மூர்த்தி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, மண்டல வட்டார வளர்ச்சி அலுவலரும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க வட்டார செயலாளருமான சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில வட்டார பொருளாளர் சுப்பிரமணியன், துணை தலைவர் தேவராஜ், துணை செயலாளர் மகேந்திரன், ஊராட்சி செயலர்கள் மணிமுத்து, பெரியசாமி, எட்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






