என் மலர்tooltip icon

    ஈரோடு

    சத்தியமங்கலம் அருகே சாலை அமைக்க 2 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய விவசாயிகளுக்கு கோணமூலை ஊராட்சி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கோணமூலை ஊராட்சிக்கு உட்பட்ட அக்கரை நெகமம் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சாலை அமைப்பதற்கு அப்பகுதி விவசாயிகள் 2 ஏக்கர் நிலத்தை தானமாக கோணமூலை ஊராட்சி நிர்வாகத்திற்கு வழங்கினார்கள்.

    அக்கரை நெகமம் கிராமத்திலிருந்து சக்திவேல் தோட்டம் வரை உள்ள விவசாய விளை நிலங்கள் வழியாக அப்பகுதி விவசாயிகளுக்கு சொந்தமான வண்டிப்பாதை உள்ளது.

    இந்த வண்டிப்பாதை நிலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சாலை அமைப்பதற்காக ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க அப்பகுதி விவசாயிகள் முடிவு செய்தனர்.

    இதனை தொடர்ந்து கோணமூலை ஊராட்சி தலைவர் செந்தில்நாதன் தலைமையில் வருவாய் துறையினர் இந்த நிலத்தை அளவீடு செய்து பின்னர் முறையாக சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து ஊராட்சி நிர்வாகத்திற்கு 2 ஏக்கர் நிலத்தை விவசாயிகள் ஒப்படைத்தனர்.

    இதற்கான விழா கோணமூலை ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சத்தியமங்கலம் ஒன்றிய குழு தலைவர் இளங்கோ, கோணமூலை ஊராட்சி தலைவர் செந்தில் நாதன், துணை தலைவர் ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல் வஹாப், பெருமாள், கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கர், ஊராட்சி செயலாளர் அருண் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    2 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய விவசாயிகளுக்கு கோணமூலை ஊராட்சி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    ஆசனூர் அருகே யானை மிதித்து பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வன சரகத்திற்கு உட்பட்ட அட்டபாடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கரன். விவசாயி.

    இவரது மனைவி சாலம்மா (45). இவர்களுக்கு 2 மகன், 2 மகள் உள்ளனர். நேற்று இரவு சாலம்மா தனது தோட்டத்தில் பயிர்களை சேதப்படுத்தி வரும் பறவைகளை விரட்ட சென்றார்.

    அப்போது அங்கு வந்த காட்டு யானை சாலம்மாவை மிதித்து கொன்றது. அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

    இது குறித்து ஆசனூர் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு சாலம்மாவின் கணவர் சங்கரன் தகவல் அளித்தார். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். யானை மிதித்து பலியான சாலம்மா உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது

    யானை மிதித்து பெண் பலியான சம்பவம் ஆசனூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    லாலாபேட்டையில் பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு காவிரி ஆற்றில் குதித்து நீந்தி வந்த வாலிபர்கள் தொட்டியம் போலீசாரிடம் சிக்கினர்.
    லாலாபேட்டை:

    ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் காயத்திரி (வயது 26). இவர் தனது தாயார் செல்லம்மாள் (51) என்பவருடன் திருச்சியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக ஈரோட்டிலிருந்து ஸ்கூட்டரில் நேற்று முன்தினம் காலை புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது லாலாபேட்டை மேம்பாலம் அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிளில் அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் 2 பேர் காயத்திரி கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர்.

    தொடர்ந்து காயத்திரி அவர்களை விரட்டி சென்றபோது, அந்த மர்மநபர்கள் லாலாபேட்டை சுரங்கபாதையில் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு, காவிரி ஆற்றில் குதித்து தப்பினர். இதுகுறித்து காயத்திரியின் தாய் செல்லம்மாள் லாலாபேட்டை போலீசில் புகார் செய்தார்.

    இதனையடுத்து லாலாபேட்டை போலீசார் மர்மநபர்களை பிடிப்பதற்காக திருச்சி மாவட்டம் தொட்டியம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தொட்டியம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் போலீசார், காவிரி ஆற்றுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, காவிரி ஆற்றில் 2 பேர் நீந்தி வந்து கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் காயத்திரியிடம் நகையை பறித்து வந்ததை ஒப்புக்கொண்டனர். பின்னர் இருவரையும் லாலாபேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர்கள் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்த மொட்டையன் மகன் வடிவேல் (25), மற்றொருவர் தஞ்சாவூரை சேர்ந்த கணேசன் மகன் அருண்குமார் (26) என தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து ஒரு பவுன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர்.
    தாளவாடி அருகே வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானையை கண்ட டிரைவர்கள் ஓட்டம் பிடித்தனர். லாரியில் இருந்த கரும்புகளை சிறிது நேரம் தின்ற யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது.
    தாளவாடி:

    தாளவாடியை அடுத்துள்ள புளிஞ்சூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி பழுதானதால் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது.

    இதனால் லாரிகள் அனைத்தும் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டது. தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு லோடு ஏற்றி வந்த 10-க்கும் மேற்பட்ட லாரிகளும் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது.

    அப்போது வனப்பகுதியில் இருந்து ஒற்றை காட்டு யானை அங்கு வந்தது. இதனை பார்த்ததும் லாரி டிரைவர்கள் ஓட்டம் பிடித்தனர். லாரியில் இருந்த கரும்புகளை சிறிது நேரம் தின்ற யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது.

    ஒற்றை யானை நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர்.

    ஈரோடு மார்க்கமாக நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதையொட்டி ரெயில் நிலையத்தில் முன் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    ஈரோடு:

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ரெயில் சேவையை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது. தமிழகத்தில் பயணிகளின் நலன்கருதி சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா பரவல் அதிகமானதால் சிறப்பு ரயில்களை ரத்து செய்யும்படி தமிழக அரசு, மத்திய அரசை கேட்டுக்கொண்டது. இதைத்தொடர்ந்து சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் ரத்து செய்யப்பட்ட சிறப்பு ரயில்களை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    அதன்படி ஈரோடு ரெயில் நிலையம் மார்க்கமாக, கோவை -சென்னை சேரன் எக்ஸ்பிரஸ், மேட்டுப்பாளையம் -சென்னை நீலகிரி எக்ஸ்பிரஸ், கோவை -சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், கோவை -சென்னை கோவை எக்ஸ்பிரஸ், கோவை -மயிலாடுதுறை ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் இயக்கபட உள்ளன. மேலும் மேற்கண்ட ரெயில் மறுமார்க்கமாகவும் இயக்கப்பட உள்ளதால் 10 சிறப்பு ரெயில்கள் ஈரோடு மார்க்கமாக வந்து செல்லும்.

    இதையொட்டி ஈரோடு ரெயில் நிலையத்தில் முன் ஏற்பாடுகள் நேற்று தீவிரமாக நடைபெற்றது. ரெயில் நிலைய வளாகம் மற்றும் பிளாட் பாரங்களில் ரெயில்வே ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பு முன் ஏற்பாடு பணிகளை மேற்கொண்டனர். சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவுகள் இன்று (சனிக்கிழமை) தொடங்க உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதால் ரெயில் நிலையத்திற்குள் வரும் மற்றும் வெளியேறும் பயணிகளை சமூக இடைவெளி பின்பற்றும் வகையில் எந்தெந்த வழிகளில் அனுப்பி வைப்பது, டிக்கெட் கவுன்டர்களுக்கு வரும் பயணிகளிடையே எவ்வாறு சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்டவைகள் குறித்து ரெயில்வே அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
    பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு கூடுதலாக 3 சீருடைகள் விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே கொங்கர்பாளையம் கொழிஞ்சிக்காடு பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் கொங்கர்பாளையம் மற்றும் அரக்கன்கோட்டை பகுதிகளில் கட்சி அலுவலகத்தை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது:-

    அரக்கன்கோட்டை பகுதியில் மேலும் ஒரு மேல்நிலைப்பள்ளி திறக்கப்படும். பள்ளிக்குழந்தைகளுக்கு வருகிற டிசம்பர் மாத இறுதிக்குள் ‘ஷூ’ வழங்கப்படும். அரசு பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு ஏற்கனவே ஒரு சீருடை வழங்கப்பட்டு உள்ள நிலையில் விரைவில் கூடுதலாக 3 சீருடைகள் வழங்கப்படும்.

    இந்த பகுதியில் படித்த 3 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காந்தி நகரில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் சத்தியமங்கலம்- கோவை மெயின் ரோட்டில் காந்திநகர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் டாஸ்மாக் கடை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால் கடந்த வாரம் மீண்டும் அதே பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதை அறிந்த அப்பகுதி பெண்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடை முன் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    டாஸ்மாக் கடையை திறக்க முயற்சிக்கும் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த 2 நாட்களுக்கு முன் பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணி முதல் 8 மணிவரை காந்திநகர் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். காந்தி நகரில் உள்ள 4 வீதிகளிலும் அவரவர் வீடுகளுக்கு முன்பு நின்று கைகளில் பதாகைகள் ஏந்தியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் போராட்டம் நடத்தினார்கள்.

    சுமார் 200-க்கும் மேற்பட்டோர் வரிசையாக நின்று டாஸ்மாக் கடையை அகற்றி எங்களது வாழ்வில் ஒளி ஏற்றிட வேண்டும் என கோ‌ஷம் எழுப்பினார்கள். இதில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளும் பங்கேற்றனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்தின் அருகில் விநாயகர் கோவில் மற்றும் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இங்கு வழிபாடு நடத்த பெண்கள் அதிக அளவில் வருவார்கள். எனவே அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது. கடை அமைத்தால் பல்வேறு வடிவங்களில் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என தெரிவித்தனர்.
    சத்தியமங்கலத்தில் நேற்று பலத்த மழை பெய்ததால் வெள்ளம் நீர் கோவிலை மூழ்கடித்து சாலையில் ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. காலை முதல் மாலை வரை வெயில் சுட்டெரித்தாலும் ஒரு சில பகுதிகளில் மாலை நேரத்தில் லேசானது முதல் கன மழை பெய்து வருகிறது.

    கடந்த திங்கட்கிழமை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. 2-வது நாளாக நேற்று முன்தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதில் அதிகபட்சமாக குண்டேரிப்பள்ளம் பகுதியில் 85 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    இதே போல் பவானிசாகர், சத்தி, தாளவாடி, நம்பியூர், சென்னிமலை, கொடிவேரி, ஈரோடு பகுதிகளிலும் மழை பெய்தது.

    சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் நேற்று காலை மிதமான மழை பெய்தது. மாலையில் கன மழையாக மாறியது. இந்த மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் பல்வேறு ஓடைகள் வழியாக பெரும்பள்ளம் அணைக்கு வந்து சேரும்.

    கடம்பூர் மலை பகுதியில் பலத்த மழை பெய்ததால் மலைப் பாதையில் உள்ள மல்லியம்மன் கோவில் அருகே உள்ள அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இந்த வெள்ளம் கோவிலை மூழ்கடித்து சாலையில் ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியவில்லை. 3 மணி நேரத்திற்கு பின்னரே சாலையில் கொட்டிய தண்ணீரின் வேகம் குறைந்தது. அதன் பின்னர் போக்குவரத்து தொடங்கியது.

    ஈரோடு அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
    ஈரோடு:

    கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொது போக்குவரத்து முடக்கப்பட்டது. பேருந்து சேவை நிறுத்தப்பட்டு, அத்தியாவசியப் பணிகளுக்காக மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் பொதுப் போக்குவரத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்த போதிலும், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்கவில்லை.

    அதன்பின்னர் தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்குள் மட்டும் பேருந்துகள் இயக்க அனுமதியளித்து, முதல்வா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டிருந்தார். அதன்படி தற்போது மாவட்டங்களுக்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    இந்நிலையில் இன்று ஈரோட்டில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    லக்காபுரம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த நகரப்பேருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 1-ந்தேதி முதல் அரசுப்பேருந்து சேவை தொடங்கிய நிலையில் விபத்து நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    இ.பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சேலம், நாமக்கல், தர்மபுரி, கோவை, கரூர் மாவட்டத்தில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வியாபாரிகள் அதிகளவில் வந்தனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை வரை ஜவுளி சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையானது ஈரோடு திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, கனி மார்க்கெட், பழைய சென்ட்ரல் தியேட்டர் பகுதியில் வாரம்தோறும் நடைபெற்று வந்தது.

    இந்த சந்தைக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிகளவில் வந்து ஜவுளி ரகங்களை மொத்தமாகவும், சில்லரையாகவும் கொள்முதல் செய்வார்கள்.

    லுங்கி, வேட்டி, சேலை, பனியன் மற்றும் மஞ்சள் நிற சேலை, வேட்டி போன்றவை அதிகளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு ஜவுளி ரகங்கள் மலிவான விலையில் கிடைப்பதால் இந்த ஜவுளி சந்தைக்கு வெளிமாவட்ட வியாபாரிகள் வருகை தர அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

    ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 5 மாதங்களாக விதிக்கப்பட்ட ஊரடங்கு விதிமுறை, இ.பாஸ் முறை போன்ற காரணமாக வெளிமாநில, வெளிமாவட்ட வியாபாரிகள் ஈரோடு ஜவுளி சந்தைக்கு வராமல் இருந்தனர். இதனால் ஜவுளி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது.

    ஜவுளி சந்தையில் சாதாரண நாட்களில் ரூ.3 கோடி வரை வியாபாரமாகும். பண்டிகை காலங்களில் 6 கோடி வரை வியாபாரம் நடைபெறும். கொரோனா காலகட்டத்தில் 10 சதவீதம் அளவு கூட ஜவுளி வியாபாரம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 17-ந் தேதி முதல் இ.பாஸ் முறையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஈரோடு ஜவுளி சந்தைக்கு வரத் தொடங்கினர்.

    இந்நிலையில் நேற்று முதல் மாவட்டங்களுக்கு இடையே இ.பாஸ் முறை ரத்து செய்யப்பட்டதால் நேற்று நடந்த ஜவுளி சந்தையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து அதிக அளவு வியாபாரிகள் வந்திருந்தனர். நேற்று வியாபாரம் சூடு பிடித்தது.

    இந்த மாதம் திருமண சீசன் என்பதால் ஜவுளி விற்பனை ஓரளவு நடந்து வருகிறது. தற்போது இ.பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சேலம், நாமக்கல், தர்மபுரி, கோவை, கரூர் மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் வந்தனர். அதே நேரத்தில் வெளிமாநில வியாபாரிகள் இங்கு வர பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை.

    இதனால் மொத்த வியாபாரம் எதிர்பார்த்த அளவு நடைபெறாமல் மந்த அளவில் உள்ளது. போகப்போக இதுவும் சரியாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் கோதுமை நாகம் பிடிபட்டது. அதனை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளிக்குள் பாம்பு புகுந்ததாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அங்கு சென்ற வனத்துறையினர் நீண்ட நேரத்திற்கு பின்னர் சிறிய பொந்தில் பதுங்கி இருந்த பாம்பை பிடித்தனர். இந்த பாம்பு கோதுமை நாகம் ஆகும். அதனை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

    ஈரோடு மாவட்டத்துக்குள் பஸ் போக்குவரத்து தொடங்கியதையொட்டி குறைவான பயணிகளே பயணம் செய்தனர். தனியார் பஸ்கள் ஓடவில்லை.
    ஈரோடு:

    கொரோனா வைரஸ் பரவல் காணரமாக தமிழகத்தில் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று முதல் மாவட்டத்திற்குள் மட்டும் பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று அரசு பஸ்கள் ஓடத்தொடங்கின. அரசு போக்குவரத்து கழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி, அந்தியூர், ஈரோடு, கொடுமுடி, பவானி உள்பட 10-க்கும் மேற்பட்ட பணிமனைகளில் சுமார் 800 பஸ்கள் உள்ளன. நேற்று காலை முதல் 154 பஸ்கள் ஓடத்தொடங்கின. இதில் 105 நகர பஸ்கள், 49 புறநகர் பஸ்கள் ஆகும். 154 பஸ்களில் சுமார் 100 பஸ்கள் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன. அப்போது பயணிகளின் பெயர், முகவரி, தொலைபேசி எண் போன்றவை பதிவு செய்யப்பட்டன.

    இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் ஈரோடு பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது அவர், பஸ்களில் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டு உள்ளதா? என்றும், பயணிகள் முக கவசம் அணிந்திருக்கிறார்களா? என்றும், இடைவெளி விட்டு பயணிகள் பயணம் செய்கிறார்களா? என்றும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    நேற்று தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதுகுறித்து ஈரோடு மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் பழனிசாமி கூறும்போது, ‘பொது போக்குவரத்து தொடங்கலாம் என்றும், 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதனால் எங்களுக்கு கட்டுப்படியாகாது. மேலும், மாவட்டத்துக்குள் மட்டும்தான் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

    ஈரோட்டில் குறைந்த அளவிலேயே தனியார் பஸ்கள் மாவட்டத்திற்குள் இயங்கி வருகிறது. ஆனால் மாவட்டம் விட்டு மாவட்டம் அதிகளவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே மாவட்டம் விட்டு மாவட்டம் பஸ் போக்குவரத்து தொடங்கினால் மட்டுமே எங்களுக்கு ஓரளவு கட்டுப்படியாகும். அதுவரைக்கும் தனியார் பஸ்களை இயக்க முடியாத சூழ்நிலையில் உள்ளோம்’ என்றார்.

    ×