என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் வெளி மாவட்டங்களை சேர்ந்த 1,114 கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டன.

    ஈரோடு:

    பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் போலியாக விவசாயிகள் சேர்க்கப்பட்டு கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் இந்த திட்டத்தில் மொத்தம் 97 ஆயிரத்து 898 பயனாளிகள் சேர்க்கப்பட்டனர். இதில் முறைகேடு குறித்து அதிகாரிகள் தீவிர ஆய்வு செய்தனர். குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பெற்ற 4,250 விண்ணப்பங்களில் தான் மோசடி நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விண்ணப்பங்களில் உள்ள முகவரி, சர்வே எண், ஆதார் எண், சிட்டா அடங்கல் உள்ளிட்டவைகளை வைத்து கடந்த ஒரு வாரமாக கள ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய வட்டாரங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர்.

    இதில் 4,251 கணக்குகளில் முழுமையாக ஆய்வு செய்ததில் 3,671 கணக்குகள் தகுதியானவை என உறுதி செய்யப்பட்டது. 580 கணக்குகள் முடக்கப்பட்டன. அந்த கணக்கில் அரசு வழங்கிய 13.10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதா? என்பது குறித்து அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் 580 போலி கணக்குகள் கண்டறியப்பட்டு அவை முடக்கப்பட்டுள்ளன.இது தவிர வெளி மாவட்டங்களில் நிலம் வைத்திருப்பவர்களில் 1,114 பேர் ஈரோடு மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் இணைந்து வங்கி கணக்கு வைத்துள்ளனர். இவர்கள் ஏன் ஈரோடு மாவட்டத்தில் கணக்கு வைத்துள்ளனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது இவற்றை பிற மாவட்ட வேளாண் துறையினர் ஆய்வு செய்கின்றனர்.

    இதனால் ஈரோட்டில் உள்ள அவர்களது வங்கிக் கணக்கை முடக்கி உள்ளேம். அவர்களது வங்கிக் கணக்கில் அரசு செலுத்திய 67.76 லட்சம் ரூபாயை முடக்கி வைத்துள்ளோம். தகுதியான பயனாளிகள் இருந்தால் அவரது வங்கி கணக்கு தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். தவறு கண்டறியப்படும் பட்சத்தில் அவர்களது வங்கி கணக்கில் இருந்து உரிய தொகை பறிமுதல் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தாளவாடி அருகே கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளது. இங்கு மான், புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    சிறுத்தை மற்றும் புலி விவசாய தோட்டத்தில் புகுந்து அடு, மாடுகளை கடித்து குதறுவது தொடர் கதையாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தாளவாடி வனசரகத்திற்கு உட்பட்ட பீம்ராஜ் நகர்,சூசைபுரம், தொட்டகாஜனூர் கிராமத்தை ஒட்டி உள்ள கல்குவாரியில் பதுங்கி உள்ள சிறுத்தை அங்குள்ள ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன் கல்குவாரியில் வனத்துறையினர் வைத்த கண்காணிப்பு கேமிராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானது.

    நேற்று இரவு 9 மணியளவில் தாளவாடியில் இருந்து அருள்வாடிக்கு 2 பேர் காரில் சென்றனர். சூசைபுரம் பிரிவு பகுதியில் சென்ற போது கல்குவாரியில் இருந்து சிறுத்தை சாலையை கடந்து சென்றது.

    இதனால் அவர்கள் பீதி அடைந்தனர். காரை நிறுத்தி சிறுத்தையை தங்களது செல்போனில் படம் பிடித்தனர். கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்படாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபியில் முதியோர் உதவி தொகைக்கான ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு முதியோர் உதவி தொகைக்கான ஆணையை வழங்கினார்.

    அவரிடம் வருகிற 5-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளிக்கும் போது, தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்படாது. இது குறித்து எந்த தகவலும் வரவில்லை. வந்தால் தகவல் தெரிவிக்கிறேன் என்றார்.

    தமிழகத்தில் இதுவரை 13 லட்சத்து 84 ஆயிரம் மாணவ- மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்ந்து உள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஆண்டை விட அதிக மாணவ- மாணவிகள் சேர்ந்து உள்ளனர்.

    அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இந்த மாதம் கடைசி வரை நடைபெறும். பெற்றோர் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க படையெடுத்து வருகிறார்கள்.

    நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் அரசின் கொள்கை முடிவு. நாளை 238 மையத்தில் நீட் தேர்வு நடைபெறுகிறது. இதனை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் எழுதுகிறார்கள்.

    நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு அரசு உதவி செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஈரோட்டில் வீட்டின் குளியல் அறையில் பதுங்கிய 3 பாம்புகளை பிடித்த தீயணைப்பு படையினர் காட்டுப்பகுதியில் விட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரியம் முதலாவது பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 48). இவரது மனைவி நேற்று காலை வீட்டின் குளியல் அறைக்குள் சென்றார். அப்போது அங்கு தண்ணீர் வெளியேறும் குழாயில் பாம்புகள் இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் அங்குவிரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது 3 பாம்புகள் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த பாம்புகளை தீயணைப்பு படையினர் லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்புகள் காட்டுப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.
    ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி ஊழியர் ஒருவர் ஒலி பெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தற்காலிக காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அங்கு பொதுமக்கள் சிலர் காய்கறி வாங்கும் ஆர்வத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க மறந்து விடுகிறார்கள். எனவே மாநகராட்சி ஊழியர் ஒருவர் ஒலி பெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

    அதில், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும். இந்த விதிமுறைகளை கடைபிடிக்க தவறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது.
    சத்தியமங்கலம் காந்தி நகரில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடை முன்பு ஏராளமானோர் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-கோவை ரோட்டில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை மதில் சுவரையொட்டி புதிதாக டாஸ்மாக் கடை திறக்க கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஏற்பாடு நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு டாஸ்மாக் கடை முன்பு போராட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடை திறப்பது கைவிடப்பட்டது.

    ஆனால் 8 மாதங்கள் கழித்து மீண்டும் அதே இடத்தில் டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், சாலைமறியல், ஆர்ப்பாட்டம், தர்ணா, வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றுதல், மெழுகுவர்த்தி ஏந்துதல் போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந் தேதி டாஸ்மாக் கடை திறப்பதற்கு அரசு அதிகாரிகள் மீண்டும் ஏற்பாடு செய்தார்கள். இதுபற்றி அறிந்ததும் பொதுமக்கள் அங்கு சென்று கடை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு அங்கிருந்த போலீசார், ‘டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று நீங்கள் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்று வாருங்கள். அல்லது யாராவது உயர் அதிகாரிகளை சந்தித்து மாற்று ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். நீங்கள் கேட்டுக்கொண்டபடி 10-ந் தேதி வரை டாஸ்மாக் கடையை திறக்க மாட்டோம். இதில் நீங்கள் தவறும் பட்சத்தில் நாங்கள் கடையை திறப்போம்’ என்றனர்.

    இதையடுத்து காந்திநகரில் உள்ள டாஸ்மாக் கடையை திறக்க தடை விதிக்க வேண்டும் என்று கூறி கோணமூலை ஊராட்சி தலைவர் பா.செந்தில்நாதன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணிக்கு டாஸ்மாக் பிரிவு மாவட்ட அதிகாரி மணிமொழி, சத்தியமங்கலம் தாசில்தார் கணேசன், டாஸ்மாக் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம், சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், கிராம நிர்வாக அதிகாரி தவுசியப்பன் ஆகியோர் காந்திநகர் சென்று டாஸ்மாக் கடையை திறக்க முற்பட்டனர்.

    இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஆண்களும், பெண்களும் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கே.சி.பி.இளங்கோ, சத்தியமங்கலம் நகர தி.மு.க. பொறுப்புக்குழு தலைவர் ஆர்.ஜானகி, அரியப்பம்பாளையம் பேரூர் முன்னாள் கவுன்சிலர் மாணிக்கம், தலித் விடுதலை கட்சி மாநில இணை பொதுச்செயலாளர் சகுந்தலா தங்கராசு, தி.மு.க இளைஞர் அணி ஸ்ரீராம், ம.தி.மு.க. நகர நிர்வாகி தருமன் உள்பட ஏராளமானோர் காந்தி நகர் சென்று அதிகாரிகளிடம், ‘நாங்கள் கோர்ட்டில் தடை உத்தரவு பெற மனு தாக்கல் செய்துள்ளோம். அதன் மீதான தீர்ப்பு 11.30 மணிக்கு தான் தெரியவரும். அது வரை கடையை திறக்கக்கூடாது’ என கூறினார்கள்.

    இதனை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. இந்த நிலையில் 11.30 மணி அளவில், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை அடுத்த மாதம் 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. ஆனால் அதிகாரிகள் கடையை திறக்க முயன்றனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதற்கு அங்கிருந்த அதிகாரிகள், ‘எங்களுக்கு கடையை திறக்க அதிகாரம் கொடுத்ததால் தான் வந்துள்ளோம். கடையை திறக்கக்கூடாது என்று மாவட்ட கலெக்டர் கூறினால் தான் ஏற்றுக்கொள்வோம். நாளை (அதாவது இன்று) காலை வரை உங்களுக்கு நேரம் கொடுக்கிறோம். அதற்குள் கலெக்டரை சந்தித்து ஒரு முடிவு எடுங்கள்’ என்றனர். அதற்கு பொதுமக்கள், ‘கலெக்டரை சந்திக்கிறோம்’ என்று கூறினார்கள்.

    ஆனால் தாங்கள் அங்கிருந்து சென்றுவிட்டால் அதிகாரிகள் டாஸ்மாக் கடையை திறந்துவிடுவார்கள் என பொதுமக்கள் நினைத்து, கடை முன்பு உட்கார்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மதியம் ஓட்டலில் இருந்து சாப்பாடு வரவழைத்துக்கொண்டு அங்கேயே வைத்து அனைவரும் சாப்பிட்டனர்.

    மதிய சாப்பாடு முடிந்ததும் பொதுமக்கள் தங்களுடைய காத்திருப்பு போராட்டத்தை மீண்டும் தொடர்ந்தனர். இந்த போராட்டம் இரவிலும் தொடர்ந்தது. இரவு 8 மணி அளவில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். குறிப்பாக இரவு என்றும் பாராமல் ஏராளமான பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர்.

    இந்த நிலையில் இரவு 9 மணிஅளவில் சத்தியமங்கலம் தாசில்தார் கணேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், ‘இதுகுறித்து நாளை (அதாவது இன்று) மாலை 3 மணி அளவில் கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம். எனவே போராட்டக்குழுவினர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கலெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்துங்கள்,’ என்றனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்ட சிறிது நேரத்தில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘நாளை (அதாவது இன்று) மாலை கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. எனினும் நாங்கள் எங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி நாளை (அதாவது இன்று) காலை 9 மணி அளவில் போராட்டத்தை மீண்டும் தொடர்கிறோம். போராட்டக்குழுவில் ஒரு பிரிவினர், மாலையில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள்,’ என்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கொரோனாவுக்கு பலியான மூதாட்டி உடலை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பாலக்குட்டை பகுதியை சேர்ந்த 72 வயது மூதாட்டி காய்ச்சல் காரணமாக அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து மூதாட்டி அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த 2 மணி நேரத்திலே உயிரிழந்தார்.

    இதனை தொடர்ந்து அவரது உடலை அடக்கம் செய்ய அவரது சொந்த ஊரான பாலக்குட்டைக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு நிலவியது. இது குறித்த தகவல் கிடைத்ததும் வருவாய் துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அதில் அந்தியூர் அருகே உள்ள பெரிய ஏரி பகுதியில் மூதாட்டி உடலை அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    அதன் பின்னர் மூதாட்டியின் உடல் பெரிய ஏரி பகுதியில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    உடல் அடக்கத்தை பாதுகாப்பு கவச உடை அணிந்த ஊராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர். இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    ஈரோடு மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் நடந்த ஆய்வில் 580 பேர் விவசாயிகள் என்ற பெயரில் போலியாக சேர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    பிரதமரின் கிசான் திட்டத்தின் மூலம் ஏழை விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் காலாண்டுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம், ஆண்டு ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்திற்காக அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேளாண் துறை, வருவாய்த்துறை மூலம் தகுதியானவர்கள் கணக்கெடுக்கப்பட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டு வந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இத்திட்டத்தில் சேர விண்ணப்பித்திருந்தனர். இதனை வருவாய் துறை, வேளாண் துறை அதிகாரிகள் இணைந்து ஆய்வு செய்ததில் 85 ஆயிரம் விவசாயிகள் இணைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் தமிழகத்தில் பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் பல மாவட்டங்களில் விவசாயிகள் அல்லாதவர்களை சேர்த்து மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் நடந்த ஆய்வில் 580 பேர் விவசாயிகள் என்ற பெயரில் போலியாக சேர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனையடுத்து போலி விவசாயிகளின் பெயரில் உள்ள வங்கி கணக்குகளை முடக்கியதோடு ரூ.11 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் சேர்க்கப்பட்டவர்களின் விண்ணப்பம், பயனாளிகள் விபரம் ஆய்வு செய்யப்பட்டது. இதில் முதற்கட்டமாக 580 கணக்குகள் போலியாக தொடங்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு அந்த வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    மோசடி தொடர்பாக வங்கி கணக்கில் இருந்து 11 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடியில் தொடர்பில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடத்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் குறைந்த அளவில் தான் மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் இத்திட்டம் தொடங்கிய நாள் முதல் ஒவ்வொரு நாளும் வரும் விண்ணப்பங்களை வருவாய் துறை, வேளாண் துறை அதிகாரிகளால் முழு மையாக ஆய்வுக்கு உட்படுத்தி பயனாளிகள் பட்டியலில் இணைக்கப்பட்டனர்.

    இத்திட்டத்தின் கடைசி காலகட்டத்தில் தான் வெளி இடங்களில் உள்ள கணினி மையங்கள் மூலம் போலி பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது கண்டறியப்பட்டுள்ள 580 நபர்கள் இந்த திட்டத்தில் சேர எவ்வித தகுதியும் இல்லாதவர்கள். அதாவது, ஈரோடு மாவட்டத்தில் நிலம் இருந்து அவர்கள் வெளியூரில் வசித்து வருவது அல்லது அரசுப் பணியில் இருப்பது போன்ற விதிமுறைகளுக்கு மாறாக இணைந்தவர்களாக உள்ளனர். இதனால் அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மோசடி தொடர்பாக முழு அளவில் விசாரணை நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் 7,000 விண்ணப்பங்களில் மோசடி நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஏனென்றால் இந்த 7,000 விண்ணப்பங்கள் தான் கணினி மையம் மற்றும் இ-சேவை மையங்கள் மூலம் அதாவது இணை இயக்குனரின் பாஸ்வேர்டு கொண்டு பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது.
    பவானிசாகர்:

    ஈரோடு மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இங்கு பெய்யும் மழைநீர் பவானிசாகர் அணைக்கு வருகிறது.

    இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த 9-ந் தேதி பவானிசாகர் அணை 100 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து 14-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

    நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 779 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 99.09 அடியாக இருந்தது. இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்வதால் நேற்று அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 322 கனஅடி தண்ணீர் வந்தது.

    அணையின் நீர்மட்டம் 99.06 அடியாக இருந்தது. அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலில் வினாடிக்கு 700 கனஅடி தண்ணீரும், காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 100 கனஅடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.
    தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தான் தேர்ந்தெடுப்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை அமைச்சர் கே.சி. கருப்பணன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தான் தேர்ந்தெடுப்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர்.

    தமிழகத்தில் தற்போது கோயம்பேட்டை தவிர அனைத்து இடங்களிலும் காற்று மாசுபாடு குறைந்த அளவே உள்ளது.

    பொது போக்குவரத்து தற்போது தொடங்கியுள்ள நிலையில் காற்றின் மாசு அளவு குறித்து இனிமேல் ஆய்வு செய்யப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனால் நோய் தொற்று கண்டு பிடிக்கப்பட்டு பலரும் குணமடைந்து வருகிறார்கள். சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு வரைவு சட்டம் குறித்து தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் முடிவை பொறுத்தே அரசு செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதல்-அமைச்சர் வேட்பாளர் குறித்து அ.தி.மு.க.வில் யாரும் கருத்து தெரிவிக்க கூடாது என கட்சி தலைமை உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் அமைச்சர் கருப்பணன் எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தான் முதல்-அமைச்சர் என கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க 5 நாட்கள் ஆன்-லைன் வகுப்புகள் நிறுத்தப்படுகிறது என்று அமைச்சர் கேஏ செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    கோபி:

    கோபி அருகே உள்ள வெள்ளாங்கோயிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வருகிற 21-ந் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படுகிறது. எனவே 5 நாட்களுக்கு ஆன் லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இதனை வட்ட அளவில் கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் ஆய்வு செய்து கண்காணிப்பார்கள். கொரோனா பாதிப்பு குறைந்த பின்னர் தான் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்.

    பகுதி நேர நூலகங்களை முழு நேர நூலகங்களாக மாற்றம் செய்ய துறை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்.

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

    விதிகளை மீறியதாக பள்ளிகள் மீது புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கே.என்.பாளையம் அருகே வேனில் கடத்திய ரூ.7¾ லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    டி.என்.பாளையம்:

    கே.என்.பாளையம் வன சோதனை சாவடி அருகே பங்களாப்புதூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு வேன் வேகமாக வந்தது. அந்த வேனை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் சரக்கு வேனை ஓட்டி வந்தவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சரக்கு வேனை சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் 35 மூட்டைகளும், 10 அட்டை பெட்டிகளும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

    உடனே போலீசார் அவற்றை பிரித்து பார்த்தனர். அப்போது அவற்றின் மேற்பகுதியில் வெங்காயமும், அடியில் தடை செய்யப்பட்ட புகையிலையான பான் மசாலா, குட்கா போன்ற பாக்கெட்டுகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் டிரைவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த செந்தில்குமார் (30) என்பதும், கர்நாடக மாநிலம் கோழிபாளையத்தில் இருந்து புகையிலை பொருட்களை மதுரைக்கு கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து மூட்டைகள், அட்டை பெட்டிகளில் இருந்த ரூ.7 லட்சத்து 75 ஆயிரத்து 200 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
    ×