search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
    X
    போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு- மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் போராட்டம்

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காந்தி நகரில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் சத்தியமங்கலம்- கோவை மெயின் ரோட்டில் காந்திநகர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் டாஸ்மாக் கடை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால் கடந்த வாரம் மீண்டும் அதே பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதை அறிந்த அப்பகுதி பெண்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடை முன் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    டாஸ்மாக் கடையை திறக்க முயற்சிக்கும் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த 2 நாட்களுக்கு முன் பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணி முதல் 8 மணிவரை காந்திநகர் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். காந்தி நகரில் உள்ள 4 வீதிகளிலும் அவரவர் வீடுகளுக்கு முன்பு நின்று கைகளில் பதாகைகள் ஏந்தியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் போராட்டம் நடத்தினார்கள்.

    சுமார் 200-க்கும் மேற்பட்டோர் வரிசையாக நின்று டாஸ்மாக் கடையை அகற்றி எங்களது வாழ்வில் ஒளி ஏற்றிட வேண்டும் என கோ‌ஷம் எழுப்பினார்கள். இதில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளும் பங்கேற்றனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்தின் அருகில் விநாயகர் கோவில் மற்றும் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இங்கு வழிபாடு நடத்த பெண்கள் அதிக அளவில் வருவார்கள். எனவே அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது. கடை அமைத்தால் பல்வேறு வடிவங்களில் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என தெரிவித்தனர்.
    Next Story
    ×