என் மலர்tooltip icon

    ஈரோடு

    கொடுமுடி அருகே லாரியும், மொபட்டும் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியைச் சேர்ந்தவர் முருகேசன். ஆட்டோ டிரைவர். அவருடைய மகன் தினேஷ்குமார் (19), மகள் அனுசியா. தினேஷ்குமார் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கணிப்பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்தநிலையில் தினேஷ்குமார் கரூரில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றுவிட்டு் நேற்று மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார். மதியம் 2.30 மணி அளவில் கொடுமுடியை அடுத்த சாலைப்புதூர் அருகே சின்னப்பையன் புதூர் என்ற இடத்தில் சென்றபோது மொபட்டும், அந்த வழியாக வந்த லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இதில் தினேஷ்குமார் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து நடந்ததும் டிரைவர் நிற்காமல் லாரியில் அங்கிருந்து சென்றுவிட்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தினேஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தினேஷ்குமாரை பரிசோதித்துவிட்டு் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    தலமலை வனப்பகுதி ரோட்டில் யானைகள் கூட்டமாக சுற்றி திரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் ஏராளமான மான், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தலமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதி வழியாக தலமலையில் இருந்து திம்பம் செல்லும் சாலை அமைந்துள்ளது.

    உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை, சிறுத்தை, மான் போன்ற வனவிலங்குகள் இந்த சாலையை அடிக்கடி கடந்து செல்வது வழக்கம்.

    அதன்படி நேற்று பகல் 11.30 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டமாக வெளியேறின. பின்னர் இந்த யானைகள் ராமர் அணை அருகே செல்லும் ரோட்டுக்கு வந்து நின்றன. அப்போது அந்த வழியாக தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு அரசு பஸ் சில பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. யானைகளை பார்த்ததும் டிரைவர் பயந்து, பஸ்சை சற்று தூரத்திலேயே நிறுத்திக்கொண்டார்.

    அதேபோல் அந்த வழியாக இருசக்கர வாகனம், கார், சரக்கு வாகனங்களில் வந்தவர்களும் யானைகளை பார்த்ததும் ரோட்டில் ஆங்காங்கே தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொண்டனர். யாரும் வாகனங்களை விட்டு கீழே இறங்காமல் உள்ளேயே இருந்தனர். ஒரு சிலர் யானைகளை தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    யானைகள் ரோட்டில் அங்கேயும், இங்கேயும் ராஜ நடைபோட்டன. பின்னர் தானாகவே அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. அதன்பின்னரே போக்குவரத்து நிலைமை சீராகியது. இதையடுத்து வாகனங்கள் அங்கிருந்து சென்றன. யானைகளால் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பஸ்சில் வந்த பயணிகள் அவதியடைந்தனர்.

    இதுபற்றி அறிந்த வனத்துறையினர் கூறும்போது, ‘தலமலை வனப்பகுதி சாலையில் யானை போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம்’ என்றனர்.
    சத்தியமங்கலம் மார்க்கெட்டில் இன்று குறைந்த அளவிலேயே மல்லிகைப்பூக்கள் வந்ததால் ஒரு கிலோ ரூ. 3700க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை பூ செடிகள் வளர்த்து வருகின்றனர்.

    இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், கோவை திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

    தற்போது இந்த பகுதிகளில் பனிப்பொழிவு காரணமாக, மல்லிகைப் பூக்களின் வரத்து குறைந்தது.

    கடந்த வாரம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்து மல்லிகைப்பூ அதிகபட்சமாக கிலோ ரூ.3132க்கு விற்பனையானது.

    இந்நிலையில் இன்று மார்க்கெட்டுக்கு குறைந்த அளவிலேயே மல்லிகைப்பூக்கள் வந்ததால் மல்லிகைப்பூ கிலோ 3700 ரூபாயை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக வாங்கிய கடனை கொடுக்க முடியாததால் விஷ மாத்திரையை தின்று கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
    பெருந்துறை:

    பெருந்துறை பெத்தாம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் விக்ரம் என்கிற கோதண்டராமன் (வயது 36). இவர் அந்த பகுதியில் ஸ்டீம் அயனிங் கடை வைத்து நடத்தி வந்தார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ஹர்ஷிதா (11), ரக்‌ஷிதா (5) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து விக்ரம் தன்னுடைய கடையை அடைத்து விட்டார். இதனால் வருமானமின்றி தவித்த அவர் பலரிடம் கடன் வாங்கி குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மன உளைச்சல் காரணமாக அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாக தெரிகிறது.

    இந்த நிலையில், கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டதால் அதை திருப்பி செலுத்த முடியாமல் தவித்தார். இதனால் விக்ரம் மனமுடைந்து நேற்று முன்தினம் விஷ மாத்திரையை தின்று வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விக்ரம் இறந்தார். 

    இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 13 ஆயிரத்து 479 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

    அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 46 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இதுவரை மொத்தம் 13 ஆயிரத்து 44 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு 143 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 292 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதற்கிடையில் இங்கிலாந்து நாட்டில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு வந்த 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக அவர்களிடம் இருந்து ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 14 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், மீதமுள்ள 8 பேரின் முடிவுகள் இன்னும் வரவில்லை என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
    தனியார் பள்ளிகள் விருப்பம் இருந்தால் ஆன்லைனில் அரையாண்டு தேர்வை நடத்தலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிக்கூடங்கள் விருப்பம் இருந்தால் ஆன்லைன் மூலம் தேர்வை நடத்திக் கொள்ளலாம்.

    தமிழகத்தில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசு பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் 405 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு 11 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதால், மாணவர்களுக்கு கூடுதலாக மருத்துவம் படிக்க இடம் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும், ‘பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா’? என்று நிருபர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘இது குறித்து முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்’. என்றார்.
    கோபி அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடத்தூர்:

    கோபி அருகே உள்ள பொலவக்காளிபாளையம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 34). கூலி தொழிலாளி. இவர் கடந்த 20-ந் தேதி மோட்டார் சைக்கிளில் தண்ணீர் பந்தல் புதூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் நிலை தடுமாறி மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மூர்த்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெண்ணை கொன்ற கள்ளக்காதலனுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோபி கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.
    கடத்தூர்:

    கோபி அருகே உள்ள அளுக்குளி, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் குமார். அவருடைய மனைவி தங்கமணி (29). இவர் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார்.

    தங்கமணி கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ந் தேதி சோழமாதேவி கரை கிராமத்தில் உள்ள வாய்க்கால் அருகில் ரத்தக்காயத்துடன் பிணமாக கிடந்தார்.

    இதுதொடர்பாக கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பெருமுகைபுதூரைச் சேர்ந்த சின்னச்சாமி (39) என்பவருக்கும், தங்கமணிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், தங்கமணி, வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இது சின்னச்சாமிக்கு தெரிய வந்தது.

    இது குறித்து பேசுவதற்காக சின்னச்சாமி தங்கமணியை சோழமாதேவி கரை கிராமத்தில் உள்ள வாய்க்கால் பகுதிக்கு அழைத்து சென்றார். அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சின்னச்சாமி, தங்கமணியை கல்லால் தாக்கியும், வாய்க்கால் தண்ணீரில் மூழ்கடித்தும் கொலை செய்தது தெரியவந்தது. இதையொட்டி போலீசார் சின்னச்சாமியை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கோபி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் தங்கமணியை கொலை செய்த குற்றத்துக்காக சின்னச்சாமிக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதி்த்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து சின்னச்சாமியை போலீசார் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
    சென்னிமலை அருகே மாற்றுத்திறனாளி மகளை பராமரிக்க முடியாததால் தீக்குளித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
    சென்னிமலை

    சென்னிமலை அருகே எக்கட்டாம்பாளையம் ஊராட்சி திருமலை நகரை சேர்ந்தவர் துரைசாமி. இவர் ஏற்கனவே இறந்து விட்டார். அவருடைய மனைவி ராதாமணி (வயது 62). இவர்களுக்கு வள்ளி (வயது 30) என்ற மகள் இருந்தார். இவருக்கு பிறவியிலேயே 2 கால்களும் ஊனம். இவர் திருமணம் ஆகி கணவர் சரவணனுடன் ராதாமணி வீட்டிலேயே வசித்து வந்தார்.

    வள்ளியை ராதாமணி பராமரித்து வந்தார். இந்த நிலையில் வயதானதால் அவரால் வள்ளியை கவனிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ராதாமணி மன வேதனையில் இருந்து வந்தார்.

    மனமுடைந்த ராதாமணி கடந்த 15-ந் தேதி இரவு வீட்டில் இருந்தபோது மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய நிலையில் அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று ராதாமணியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ராதாமணி இறந்தார்.

    இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று ஈரோட்டில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.
    ஈரோடு:

    மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில தலைவர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    தமிழகத்தில் நடந்து வரும் அ.தி.மு.க. ஆட்சி மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படுகிறது. மத்திய பா.ஜ.க. அரசுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டு, அடிமை சேவகம் செய்யும் ஆட்சியாக உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை மூலம் மாநில அரசுகளின் அனுமதியில்லாமல் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரமுடியும். இதற்கு எதிராக தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக மக்களின் நலன் காக்க வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெற பாடுபடுவோம். தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி சிறப்பான தொகுதிகளை பெறும் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கிறது.

    அரசு பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவதை போல, வேளாண் துறையையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் வகையில் மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இங்கிலாந்தில் இருந்து ஈரோட்டுக்கு வந்த 16 பேரை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

    ஈரோடு:

    சீனாவில் வுகான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் ஆட்டி படைத்தது. கடந்த சில நாட்களாக தொற்றின் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது.

    தற்போது இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அது கொரோனா தொற்றை விட அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக உலக சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர்.

    இதையடுத்து பல்வேறு நாடுகள் இங்கிலாந்து நாட்டுக்கான விமான போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவிலும் இன்று முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை இங்கிலாந்துக்கு விமான சேைவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இங்கிலாந்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியா திரும்பியவர்களை கண்காணிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழக சுகாதார துறையினர் ஒவ்வொரு மாவட்டத்திலும் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் குறித்து கணக்கெடுக்க அறிவுறுத்தி இருந்தனர்.

    அதன்படி கடந்த 15-ந்தேதி முதல் நேற்று வரை இங்கிலாந்தில் இருந்து ஈரோட்டுக்கு வந்தவர்கள் குறித்து சுகாதார துறையினர் கணக்கெடுத்தனர். அப்போது 16 பேர் இங்கிலாந்தில் இருந்து வந்திருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் சவுண்டம்மாள் கூறியதாவது:-

    சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில் இங்கிலாந்தில் இருந்து கடந்த 15-ந்தேதி முதல் நேற்று வரை ஈரோட்டுக்கு வந்த 16பேர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இங்கிலாந்தில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து வாடகை கார் மூலம் ஈரோடு வந்துள்ளனர்.

    அவர்கள் 16 பேரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் நெகடிவ் சான்றிதழுடன் வந்துள்ளனர். ஆனாலும் இங்கிலாந்தில் தற்போது பரவி வரும் புதிய கொரோனா தொற்று காரணமாக 16 பேருக்கும் மீண்டும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

    இந்த சோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் அது புனேவில் உள்ள ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அது எந்த வகையான கொரோனா என்று கண்டறியப்படும்.

    தற்போது இங்கிலாந்தில் இருந்து ஈரோடு திரும்பிய 16பேரும் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தி உள்ளோம். மேலும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தகவல் தெரிவிக்கவும் கேட்டு கொண்டுள்ளோம்.

    மேலும் இங்கிலாந்தில் இருந்து வேறு யாராவது வந்திருந்தால் அவர்களாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் பொதுமக்களும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் சுகாதாரத்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் கடந்த ஒரு வாரம் முன்பு வரை ரூ.875 ரூபாய் முதல் ரூ.1,505 வரை விற்பனையான மல்லிகை பூ இன்று கிலோ 3,132 ரூபாயை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கொத்தமங்கலம், தாண்டாம்பாளையம், பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர்.

    இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், கோவை திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

    இந்நிலையில் பனிப்பொழிவு காரணமாக, மல்லிகைப் பூக்களின் வரத்து குறைந்ததன் காரணமாகவும், கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி விட்டதாலும், துபாய், சார்ஜா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரித்து உள்ளதாலும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்து மல்லிகைப்பூ கிலோ ரூ.3,132 ஆக உயர்ந்து உள்ளது.

    கடந்த ஒரு வாரம் முன்பு வரை ரூ.875 ரூபாய் முதல் ரூ.1,505 வரை விற்பனையான நிலையில், அதிரடியாக மல்லிகைப்பூ கிலோ 3,132 ரூபாயை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ×