என் மலர்
ஈரோடு
ஈரோடு:
ஈரோடு ரங்கம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் வளாகத்தில் சில்வர் உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது. இதில் பொதுமக்கள் காணிக்கையாக பணத்தை செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று புத்தாண்டையொட்டி காலையில் சிறப்பு பூஜை செய்வதற்காக கோவிலை திறப்பதற்காக பூசாரி வந்தார்.
அப்போது கோவிலின் 2 பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது கோவில் வளாகத்தில் இருந்த சில்வர் உண்டியல் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கோவிலில் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் பூட்டை உடைத்து உண்டியலை தூக்கி சென்றது தெரியவந்தது. உண்டியலில் ரூ.10 ஆயிரம் வரை பணம் இருக்கலாம் என கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக உண்டியல் திறக்கப்படாததால் எவ்வளவு பணம் இருக்கிறது என தெரியவில்லை.
இந்நிலையில் கோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட உண்டியல் அருகே உள்ள சடயம்பாளையம் பைபாஸ் ரோட்டில் உள்ள புதரில் கிடந்ததை போலீசார் கண்டு பிடித்தனர். உண்டியல் கிடந்த இடம் அருகே ஒரு பையில் சில பண ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்தது. உண்டியலையும் பணத்தையும் போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை நடந்த கோவில் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் சார்பில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் நேற்று முன்தினம் பழைய பாளையம் ஓடை மேட்டில் உள்ள மதுரைவீரன் சக்தி மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். அடுத்தடுத்து 2 சம்பவங்கள் நடந்து உள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த 2 கொள்ளை சம்பவத்திலும் கோவிலைப் பற்றி நன்கு தெரிந்த நபர்களே ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஈரோடு பழையபாளையம் ஓடைமேட்டில் மதுரை வீரன், சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பூஜை நடப்பது வழக்கம். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை பூஜை முடிந்து கோவில் நடை பூட்டப்பட்டது. இந்த கோவிலில் அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகத்தினர் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் வைக்கப்பட்டு உள்ள 2 உண்டியல்கள் கடந்த 10 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது.
நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து, கோவிலுக்குள் வைக்கப்பட்டு இருந்த 2 உண்டியல்களையும் திருடினர். பின்னர் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியலை அருகே உள்ள ரோட்டில் வீசி சென்றுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று காலை கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கோவில் திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது கோவிலில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் இதுபற்றி ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
திருட்டு நடந்த கோவில் மற்றும் அதன் அருகில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுபற்றி கூறும்போது, ‘நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக கோவில் உண்டியலை திறக்கவில்லை. இதனால் உண்டியலில் ரூ.4 லட்சம் வரை இருந்திருக்கக்கூடும். இதை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
ஐம்பொன் சிலைகள், பீரோவில் வைக்கப்பட்டு இருந்த அம்மன் நகைகள் எதுவும் திருடு போகவில்லை. இதனால் கோவிலை பற்றி நன்கு அறிந்த நபர்களே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க கூடும்’ என்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
பவானி:
தமிழக அரசு சார்பில் தை பொங்கலையொட்டி 2.06 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 ரொக்கம், முழு கரும்பு, 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி, ஏலக்காய், முந்திரி, திராட்சை ஆகியவை வழங்கப்பட உள்ளது.
இதற்காக துணிப்பைகள் தைக்கும் பணியில் ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கஞ்சி போடப்பட்ட காடா துணி வாங்கப்பட்டு எந்திரம் மூலம் 12 இஞ்ச் அகலம், 14.5 இஞ்ச் உயரத்துக்கு எந்திரத்தில் வெட்டப்படுகிறது. பின்னர் தமிழக அரசு அறிவித்துள்ளபடி பிரிண்டிங் செய்யப்பட்டு தையல் தொழிலாளர்களிடம் தைப்பதற்கு கொடுக்கப்படுகிறது.
இந்த பைகள் 10 கிலோ வரை எடை தாங்கும் அளவிற்கு கைப்பிடிகள் தைக்கப்பட்டு வருகிறது. வீடுகளில் பைகள் தைக்கும் பெண்களுக்கு பைக்கு ரூ.1 வீதம் கூலியாக வழங்கப்படுகிறது. இந்த பைகள் ஏஜெண்ட்கள் மூலம் சேகரிக்கப்பட்டு ரேசன் கடைகளுக்கு வழங்கப்படுகிறது.
வருகிற 4-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் ரேசன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட இருப்பதால் பைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பவானி மட்டுமின்றி சுற்றுபுற பகுதிகளான மேட்டூர், மயிலம்பாடி, பருவாச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் பைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
கொரோனா காலத்தில் மாஸ்க் தயாரிக்கும் ஆர்டர் கிடைத்தது. தற்போது பொங்கல் பை தைக்கும் ஆர்டர் கிடைத்துள்ளதால் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு பெருந்துறை ரோடு டீச்சர்ஸ் காலனி அருகே உள்ள மாவட்ட மொத்த கூட்டுறவு விற்பனை பண்டக சாலையில் ஏலக்காய், முந்திரி, திராட்சை, பேக்கிங் பணி தொடங்கியது.
முந்திரி, திராட்சை தலா 20 கிராம், ஏலக்காய் 5 கிராம் எடை போட்டு தனித்தனியாக பேக்கிங் செய்யும் பணி நடந்து வருகிறது. இங்கு பேக்கிங் செய்யப்படும் இந்த பொங்கல் பொருட்கள் சிந்தாமணி கூட்டுறவு சங்கத்துக்கு உட்பட்ட 25 ரேசன் கடைகளில் உள்ள சுமார் 75 ஆயிரம் ரேசன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல் மற்ற கூட்டுறவு சங்கங்களிலும் பொங்கல் பொருட்கள் எடை போட்டு பேக்கிங் செய்யும் நடந்து வருகிறது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அமைச்சர் செங்கோட்டையன்நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்புதான் பள்ளிகள் பொதுத்தேர்வு குறித்து அட்டவணை வெளியிடப்படும். மலைப்பகுதிகளில் தடை நீக்கப்பட்டு இலவச வீட்டுமனை பட்டா ஜனவரி மாத இறுதிக்குள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் இன்று அமைச்சர் செங்கோட்டையன்நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து கல்வித்துறை ஆய்வு செய்து முடிவு செய்ய உள்ளது. முதல்-அமைச்சர் ஒப்புதல் பெற்றவுடன் அட்டவணை வெளியிடப்படும் என்றார்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவே தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
அரசு பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். அதற்காகவே பெற்றோர்கள் விரும்பி அரசு பள்ளியில் சேர்க்கின்றனர்.
இதை ஊக்கப்படுத்த தான் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் 405 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.
ஒவ்வொரு துறையிலும் உள்ள நிதி நிலைக்கேற்ப அரசு செயல்பட்டு வருகிறது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து எத்தனை பேரால் தனியார் பள்ளிகளில் சேர்க்க முடியும். ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்து எத்தனை பேரால் நீட் பயிற்சி பெற முடியும்?
நீட் தேர்வில் பயிற்சி பெற பல லட்சம் ரூபாய் செலவு செய்து, பெற்றோர்களும் மாணவர்களை படிக்க வைக்கின்றனர். இதை பாராட்ட வேண்டுமே தவிர விமர்சனம் செய்யக் கூடாது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நேரடியாக சிறப்பு தேர்வு நடத்துவது குறித்து கல்வித்துறை ஆய்வு செய்து முடிவு செய்துள்ளது. முதல்-அமைச்சர் ஒப்புதல் பெற்றவுடன் அட்டவணை மூலமாக வெளியிடப்படும்.
பாடநூல் திட்டம் மூலமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கி வருகிறோம்.
அரசு பள்ளியில் உள்ள மீதமுள்ள புத்தகங்களை திரும்ப அனுப்பி வருகின்றனர். அவற்றை கரூரில் உள்ள டி.என்.பி.எல் நிறுவனத்திடம் ஒப்படைக்கிறோம்.
அவற்றை பெற்றோர் ஆசிரியர் சங்கம், எந்த பள்ளிகள் வேண்டுமானாலும் வாங்கலாம். ஒருவர் 2 ஆயிரம் புத்தகங்களை விற்பனைக்கு வைத்து இருந்தார் என்பதற்காக அதை பற்றியே பேசக்கூடாது என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.






