என் மலர்
செய்திகள்

இங்கிலாந்தில் இருந்து ஈரோட்டுக்கு வந்த 16 பேரை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை
ஈரோடு:
சீனாவில் வுகான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் ஆட்டி படைத்தது. கடந்த சில நாட்களாக தொற்றின் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது.
தற்போது இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அது கொரோனா தொற்றை விட அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக உலக சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து பல்வேறு நாடுகள் இங்கிலாந்து நாட்டுக்கான விமான போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவிலும் இன்று முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை இங்கிலாந்துக்கு விமான சேைவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியா திரும்பியவர்களை கண்காணிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழக சுகாதார துறையினர் ஒவ்வொரு மாவட்டத்திலும் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் குறித்து கணக்கெடுக்க அறிவுறுத்தி இருந்தனர்.
அதன்படி கடந்த 15-ந்தேதி முதல் நேற்று வரை இங்கிலாந்தில் இருந்து ஈரோட்டுக்கு வந்தவர்கள் குறித்து சுகாதார துறையினர் கணக்கெடுத்தனர். அப்போது 16 பேர் இங்கிலாந்தில் இருந்து வந்திருந்தது தெரிய வந்தது.
இது குறித்து ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் சவுண்டம்மாள் கூறியதாவது:-
சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில் இங்கிலாந்தில் இருந்து கடந்த 15-ந்தேதி முதல் நேற்று வரை ஈரோட்டுக்கு வந்த 16பேர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இங்கிலாந்தில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து வாடகை கார் மூலம் ஈரோடு வந்துள்ளனர்.
அவர்கள் 16 பேரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் நெகடிவ் சான்றிதழுடன் வந்துள்ளனர். ஆனாலும் இங்கிலாந்தில் தற்போது பரவி வரும் புதிய கொரோனா தொற்று காரணமாக 16 பேருக்கும் மீண்டும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்த சோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் அது புனேவில் உள்ள ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அது எந்த வகையான கொரோனா என்று கண்டறியப்படும்.
தற்போது இங்கிலாந்தில் இருந்து ஈரோடு திரும்பிய 16பேரும் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தி உள்ளோம். மேலும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தகவல் தெரிவிக்கவும் கேட்டு கொண்டுள்ளோம்.
மேலும் இங்கிலாந்தில் இருந்து வேறு யாராவது வந்திருந்தால் அவர்களாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் பொதுமக்களும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் சுகாதாரத்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






