என் மலர்
ஈரோடு
- பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயிலின் பொது ஏலம் நடந்தது.
- ஏலதாரர்கள் தங்களுக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
பவானி:
பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
இந்த கோவிலில் பின்புறம் உள்ள பரிகார மண்டபத்தில் பரிகார பொருட்கள் விற்கப்படும் உரிமைக்கான ஏலம், பிரசாத கடை, புக் ஸ்டால், ராஜகோபுரம் முன் பகுதியில் உள்ள தேங்காய் பழம் பூ விற்பனை செய்யும் கடைகள் மற்றும் டீக்கடை, ஓட்டல் போன்றவற்றிற்கு ஒராண்டு வாடகை உரிமம் பெறுவதற்கான ஏலம் கோவில் அதிகாரிகள் மூலம் நடைபெறுவது வழக்கம்.
பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயிலின் பசலி 1433 க்கான பலவகை உரிம இனங்கள் பொது ஏலம் நேற்று மாலை ராஜகோபுரம் அருகில் உள்ள கோவில் திருமண மண்டபத்தில் நடந்தது.
ஈரோடு மாவட்ட உதவி ஆணையர் அன்னக்கொடி, பவானி சங்கமேஸ்வரர் கோயில் உதவி ஆணையர் சுவாமிநாதன், கோவில் கண்காணிப்பாளர் நித்யா கோவில் பணியாளர்கள் மூலம் ஏலம் விடப்பட்டது.
சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 23 கடைகளில் நேற்று 17 கடைகளுக்கு ஒராண்டு வாடகை உரிமம், ஆற்றில் துணி சேகரம் செய்யும் உரிமம், ராஜ கோபுரம் முன் உள்ள கோட்டை விநாயகர் கோவி லில் பக்தர்கள் உடைக்கும் சிதறு தேங்காய் சேகரிக்கும் உரிமம், தென்னை மரங்கள் பலன் உரிமம் ஆகிய இனங்க ளுக்கு ஏலம் விடப்பட்டதில் 47.63 லட்சம் ரூபாய்க்கும்,
கடந்த சில தினங்களுக்கு முன் கோவில் பின்பகுதியில் பரிகார பொருட்கள் விற்பனை செய்யும் உரிமை க்கான ஏலம் ரூ. 69 லட்சம் ரூபாய் என ஒரு கோடியே 16 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் நடை பெற்று உள்ளதாக சங்கமே ஸ்வரர் கோவில் நிர்வா கத்தினர் தெரிவித்தனர்.
இந்த ஏலத்தில் கலந்து கொண்ட ஏலதாரர்கள் தங்களுக்கு அடிப்படை வசதியான கழிப்பிட வசதி குடிநீர் வசதி போன்றவையை கோவில் நிர்வாகத்தினர் முறைப்படி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
கோவில் நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தனர்.
- ராமானந்த சுவாமிகளின் 98-ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.
- சிறப்பு பூஜை நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சிவகிரி:
சிவகிரி ஜீவா தெருவில் இராமானந்த சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது. 98-ம்ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.
சித்தர் வழிபாட்டு தலமான இங்கு பவுர்ணமி, அமாவாசை, கிருத்திகை, மற்றும் திங்கள்கிழமை, வெள்ளிக்கிழமை, வியாழக்கிழமை ஆகிய விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
சித்தர் ஜீவ சமாதி என்பதால் உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களிலிருந்தும் அதிகமான பக்தர்கள் வருவார்கள்.ராமானந்த சுவாமிகளின் 98-ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.
குருபூஜையை முன்னிட்டு ராமானந்தருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிசேகம், அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை ராமானந்தசுவாமிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.
- 7,841 விவசாயிகள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர்.
- வட்டார வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:
பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி (பி.எம்.கிசான்) திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்கும் வகையில் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
பி.எம்.கிசான் திட்டத்தில் ஆதார் விபரங்களை சரி பார்த்து உறுதி செய்தால் மட்டுமே அடுத்த (14-வது) தவணைத்தொகை பெற முடியும் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பி.எம்.கிசான் நிதி உதவி பெற்று வரும் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதும் அவசிய மாகும்.
ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் தற்போது சுமார் 10,506 விவசாயிகள் ஆதார் எண்ணை சரிபார்த்து உறுதி செய்யாமலும், சுமார் 7,841 விவசாயிகள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமலும் உள்ளனர்.
இதுவரை பி.எம்.கிசான் திட்டத்தில் ஆதார் விவ ரங்களை சரிபார்த்து உறுதி செய்யாத விவசாயிகள் உட னடியாக தங்களது ஆதார் விவரங்களை சரிபார்க்கும் வகையில் இன்று (24-ந் தேதி) முதல் வரும் 27-ந் தேதி வரை 4 நாட்கள் வட்டார வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் வரும் 27-ந் தேதி வரை அனைத்து வட்டார வேளா ண்மை விரிவாக்க மைய ங்கள் மற்றும் சத்தியமங்கலம் வட்டாரத்தில் கடம்பூர், பசுவனாபுரம், கராலயம் ஆகிய கிராமங்களிலும், தாளவாடி வட்டாரத்தில் மள்ளங்குழி, பைனாபுரம் ஆகிய கிராமங்களிலும்,
நம்பியூர் வட்டாரத்தில் வேமாண்டம்பாளையம், ஒலலக்கோயில் ஆகிய கிரா மங்களிலும், அம்மாபேட்டை வட்டாரத்தில் சனிசந்தை, ஒலகடம் ஆகிய கிராமங்க ளிலும், அந்தியூர் வட்டா ரத்தில் தாமரைக்கரை, பிரம்மதேசம், அத்தாணி ஆகிய கிராமங்களிலும்,
பவானி வட்டாரத்தில் பரு வாச்சி, கவுந்தப்பாடி, வரத நல்லூர் ஆகிய கிராமங்களிலும், பவானிசாகர் வட்டாரத்தில் புளியம்பட்டி கிராமத்திலும், சென்னி மலை வட்டாரத்தில் வெள் ளோடு, முருங்கத்தொழுவு, புஞ்சைபாலத்தொழுவு ஆகிய கிராமங்களிலும் சிறப்பு முகாம் நடக்கிறது.
ஈரோடு வட்டாரத்தில் மேட்டுக்கடை, சித்தோடு ஆகிய கிராமங்களிலும், கோபி செட்டிபாளையம் வட்டாரத்தில் அயலூர், சிறுவலூர், கூகலூர் ஆகிய கிராமங்களிலும்,
கொடுமுடி வட்டாரத்தில் சிவகிரி, சோலங்க பாளையம் ஆகிய கிராமங்களிலும், மொடக்குறிச்சி வட்டாரத்தில் கஸ்பாபேட்டை, எழுமாத்தூர்,
அரச்சலூர் ஆகிய கிராமங்களிலும், பெருந்துறை வட்டாரத்தில் காஞ்சிக்கோயில், பெத்தா ம்பாளையம், திங்களூர் ஆகிய கிராமங்களிலும், டி.என்.பாளையம் வட்டா ரத்தில் கொங்கர்பாளையம், காசிபாளையம் ஆகிய கிராமங்களிலும் பொது இ சேவை யைத்தின் மூலம் பி.எம்.கிசான் திட்டத்தில் ஆதார் விவரங்களை சரி பார்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
எனவே தற்போது வரை ஆதார் எண்ணை பி.எம்.கிசான் திட்டத்தில் சரி பார்த்து உறுதி செய்யாத விவசாயிகள் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் தங்கள் பகுதி அஞ்சல் அலுவலகம் மூலமும் ஆதார் எண்ணுடன் மொபைல் போன் எண்ணை இணைத்து விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம்.
மேலும் வங்கிக்கண க்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் உடனடியாக "பி.எம்.கிசான்" தொகை பெற்றுவரும் தங்களது வங்கிகளுக்கு ஆதார் அட்டையுடன் சென்று வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணை த்துக்கொள்ள வேண்டும்.
அவ்வாறு இணைக்க இயலாத விவசாயிகள் உடனடியாக அருகே உள்ள கிராம அஞ்சல் நிலையங்கள் மூலம் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தபால் வங்கி கணக்கு தொடங்கி அதில் பி.எம்.கிசான் திட்ட நிதியினை பெறலாம்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் இது தொடர்பாக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே ஆதார் எண்ணை சரிபார்த்து உறுதி செய்யாத விவசாயிகள் மற்றும் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் உடனடியாக சிறப்பு முகாம்களின் மூலம் பதிவு செய்து திட்ட ப்பயன்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
- நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 78.59 அடியாக சரிந்து உள்ளது.
- வினாடிக்கு 171 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 78.59 அடியாக சரிந்து உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 171 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடி,
காளிங்கராயன் பாசனத்திற்கு 100 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,105 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
- கடந்த தேர்தலில் தோப்பு வெங்கடாசலத்துக்கு வாய்ப்பு கொடுக்காததால் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து களம் இறங்கினார்.
- தி.மு.க.விலும் எதிர்பார்த்தபடி பொறுப்புகள் எதுவும் கிடைக்காததால் ஒதுங்கியே இருந்தார்.
கொங்கு மண்டலத்தில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் எல்லோருக்கும் அறிமுகமானவர். அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் ஐக்கியமானவர். தற்போது கட்சியில் இருந்து விலகியவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பதற்கான வேலைகளை எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். அந்த வகையில் ஒரு காலத்தில் பவர்புல் அமைச்சராக இருந்த தோப்பு வெங்கடாசலம், எடப்பாடி பழனிசாமியின் உறுப்பினரான கே.சி.கருப்பண்ணனுக்கு முக்கியத்துவம் வந்ததும் டம்மியானார்.
இந்த நிலையில்தான் கடந்த தேர்தலில் தோப்பு வெங்கடாசலத்துக்கு வாய்ப்பு கொடுக்காததால் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து களம் இறங்கினார். ஆனாலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து தி.மு.க. பக்கம் சென்றார். ஆனால் தி.மு.க.விலும் எதிர்பார்த்தபடி பொறுப்புகள் எதுவும் கிடைக்காததால் ஒதுங்கியே இருந்தவர் இப்போது மீண்டும் எடப்பாடி முன்பு தொப்பென்று விழுந்துள்ளாராம். சேலத்தில் தங்கி இருந்த எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய விருப்பம் தெரிவித்து இருப்பதாக கொங்கு மண்டலத்தில் பேச்சு பலமாக அடிபடுகிறது.
- ஒரு கட்டத்தில் குடிபோதையில் இருந்த தீபன் போலீசாரை கடுமையான ஆபாச வார்த்தைகளால் திட்டினார்.
- போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட தீபன் தனக்கு தானே பாட்டிலால் வயிறு மற்றும் கழுத்து பகுதியில் சிறிது கிழித்துக் கொண்டார்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் தீபன் (35). பெயிண்டிங் தொழிலாளி. இவர் நேற்று மாலை 4.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் பவானி சாகர் அரசு தொடக்கப்பள்ளிக்கு தனது முதல் மனைவிக்கு பிறந்த 3-ம் வகுப்பு படிக்கும் மகனை பார்க்கச் சென்றார்.
அப்போது குடி போதையில் இருந்ததால் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அவருக்கு அனுமதி மறுத்தனர். அப்போது ஆசிரியர்களை ஆபாசமாக பேசி திட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து பவானி சாகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு போலீஸ்காரர்கள் சண்முகம், செல்லமுத்து ஆகியோர் சென்றனர். அவர்கள் பள்ளியில் ஆசிரியரிடம் தகராறு செய்த தீபனை வெளியே செல்லுமாறு கூறினர். ஆனால் தீபன் வெளியே செல்ல மறுத்து போலீசார் மற்றும் மற்ற குழந்தைகளின் பெற்றோருடனும் தகராறு செய்தார்.
ஒரு கட்டத்தில் குடிபோதையில் இருந்த தீபன் போலீசாரை கடுமையான ஆபாச வார்த்தைகளால் திட்டினார். மேலும் ஒருமையில் பேசி "சட்டையை கழற்றி விட்டு என்னுடன் சண்டைக்கு வா" என்றும் ஆபாசமாக பேசினார். இதனால் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளுடன் பவானிசாகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட தீபன் திடீரென தனக்கு தானே பாட்டிலால் வயிறு மற்றும் கழுத்து பகுதியில் சிறிது கிழித்துக் கொண்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது உடனடியாக 108 ஆம்புலன்சு மூலம் அவரை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று இரவே தீபன் வீடு திரும்பினார்.
போலீசாரை குடி போதையில் தீபன் ஆபாசமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- 238 கிலோ குட்கா பறிமுதல் செய்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், போலீஸ்காரர் சுந்தரம் ஆகியோரை பாராட்டி வெகுமதி வழங்கினார்.
- டி.ஜி.பி. சைலேந்திர பாபு முதல் முறையாக கடந்த 1989-ம் ஆண்டு கோபிசெட்டிபாளையம் ஏ.எஸ்.பி.ஆக பொறுப்பேற்று பணியாற்றினார்.
ஈரோடு:
ஈரோடு, கோபிசெட்டி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று காலை ரெயில் மூலம் ஈரோடு வந்தார்.
பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் போலீசார் வரவேற்றனர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு வெகுமதி வழங்கினார். பெருந்துறை பகுதியில் 238 கிலோ குட்கா பறிமுதல் செய்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், போலீஸ்காரர் சுந்தரம் ஆகியோரை பாராட்டி வெகுமதி வழங்கினார்.
இதேபோல் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூ.1 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் 4 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை பிடித்த சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், மெய்யழகன், செந்தில்குமார் ஆகியோரையும், கருங்கல்பாளையம் பகுதியில் 30 ரவுடிகள் கைது செய்யப்பட்டு அதில் 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்த இன்ஸ்பெக்டர் ராஜபிரபு மற்றும் கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த ஈரோடு அனைத்து மகளிர் நிலைய இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோரை பாராட்டி வெகுமதி வழங்கினார்.
பின்னர் டி.ஜி.பி.சைலேந்திரபாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
இரவு நேரங்களில் தனியாக பயணிக்க அச்சப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக "பெண்கள் பாதுகாப்பு திட்டம்" என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள் 1091, 112, 044-23452365, 044-28447701 ஆகிய உதவி எண்களுக்கு தொடர்பு கொண்டால் அவர்கள் இருக்கும் இடங்களுக்கே காவல்துறை ரோந்து வாகனங்கள் வந்து அழைத்து செல்லும்.
அனைத்து நாட்களிலும் இந்த சேவையை பெண்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 3 நாட்களில் மட்டும் 60 அழைப்புகள் காவல் துறைக்கு வந்துள்ளது.
குறைவான தூரமாக இருக்கும் பட்சத்தில் காவல்துறை ரோந்து வாகனத்தில் அழைத்து சென்று விடப்படும். தூரம் அதிகமாக இருந்தால் ஆட்டோ அல்லது டாக்ஸிகளில் அனுப்பி வைக்கப்படும் என்பதோடு, பாதுகாப்புக்காக போலீசார் ஒருவர் உடன் செல்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
டி.ஜி.பி. சைலேந்திர பாபு முதல் முறையாக கடந்த 1989-ம் ஆண்டு கோபிசெட்டிபாளையம் ஏ.எஸ்.பி.ஆக பொறுப்பேற்று பணியாற்றினார். தற்போது டி.ஜி.பி.யாக பணி உயர்வு பெற்று செயல்பட்டு வருகிறார். அவர் இன்று கோபிசெட்டி பாளையத்துக்கு வந்தார். பின்னர் தான் பணியாற்றிய அலுவல கத்துக்கு சென்று பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார். இதைத்தொடர்ந்து கோபி போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து போலீசாரிடம் தங்களது குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
- வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு பஸ்ஸின் பின்பகுதியிலும் மோதி நின்றது.
- குடி போதையில் கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர்.
அம்மாபேட்டை:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா வளையபாளையத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மகன் கருப்புசாமி (23). பி.பி.ஏ. படித்த இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஞானவேல். இவரது மகன் ராமர் (19). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவர்கள் தங்களின் உறவினர்களான சுப்பிரமணி என்பவரது மகன் கருப்புசாமி (20), ஆறுமுகம் என்பவரது மகன் அன்பரசு (19), பழனிசாமி என்பவரது மகன் பிரசாந்த் (19), கருப்புசாமி மகன் என்பவரது கவியரசு (19) ஆகியோருடன் 3 மோட்டார் சைக்கிள்களில் நேற்று அதிகாலை ஒகேனக்கல் சுற்றுலாவுக்கு சென்றனர்.
பின்னர் வரும் வழியில் உள்ள மேட்டூர் அணை பூங்காவுக்குச் சென்று சுற்றிப் பார்த்தனர். இவர்கள் மாலையில் மீண்டும் திருப்பூருக்கு புறப்பட்டனர். நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் மேட்டூர் - பவானி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது சின்னப்பள்ளம் அருகே மேட்டூரிலிருந்து ஈரோடு நோக்கி வந்த தனியார் பஸ்சுக்கு பின்னால் கருப்புசாமி, ராமர் ஆகியோர் வந்து கொண்டிருந்தனர். தற்போது இந்த ரோட்டில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் ரோடு குண்டும் குழியுமாக இருந்தது. இதனால் முன்னால் சென்ற தனியார் பஸ் டிரைவர் 'திடீர்' பிரேக் போட்டார். இதனால் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த கருப்புசாமி, ராமர் ஆகியோரும் மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றனர்.
அப்போது அதே வழித்தடத்தில் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு பஸ்ஸின் பின்பகுதியிலும் மோதி நின்றது. இதில் பஸ் ரோட்டோரம் இருந்த புளிய மரத்தில் மோதி நின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த கருப்பு சாமி, ராமர் ஆகியோர் லாரியின் அடியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். லாரி மோதிய வேகத்தில் பஸ் புளிய மரத்தில் மோதி நின்றதால் பயணிகள் அனைவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அம்மாபேட்டை போலீசார் விபத்தில் இறந்த 2 வாலிபர்களின் உடலையும் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றதால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த சேசன் சாவடி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (48) என்பது தெரிய வந்தது. மேலும் இவர் குஜராத்தில் இருந்து கோவைக்கு டயர் லோடு ஏற்றிக் கொண்டு சென்றதும் தெரிய வந்தது.
மேலும் அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு கண்டெய்னர் லாரியை ஒட்டி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து குடி போதையில் கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர்.
மது குடித்துவிட்டு விபத்தை ஏற்படுத்தி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- குழந்தை இறந்து விட்டதாக அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தனர்.
- குழந்தையின் தலையை அமுக்கி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூனாட்சி நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபு (30). இவரது மனைவி சகுந்தலா தேவி (21). இவர்களுக்கு 3½ வயதில் மகாஸ்ரீ என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் சகுந்தலா தேவி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி 2-வதாக மீண்டும் ெபண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 9-வது நாளான கடந்த 27.4.2023-ந் தேதி காலை சகுந்தலா தேவி குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு தூங்க வைத்து விட்டு வெளியே வந்தார்.
பின்னர் வீட்டு வேலைகளை முடித்து விட்டு வீட்டிற்குள் சென்ற போது குழந்தை இறந்து விட்டதாக அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு பெண் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் தலையில் உள்பக்கம் காயம் இருப்பது தெரியவந்தது. எனவே குழந்தை அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் மீண்டும் குழந்தையின் தாய் சகுந்தலா தேவியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது 2-வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் குழந்தையின் தலையை அமுக்கி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சகுந்தலாதேவியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தண்ணீரை குடித்தவுடன் பழனிசாமி அதே இடத்தில் சுருண்டு விழுந்து விட்டார்.
- கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோயில் காந்தி நகரைச் சேர்ந்தவர் பழனி சாமி (52). இவருக்கு திருமண மாகி 2 மகள்கள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரண மாக கடந்த 15 ஆண்டுகளாக பழனிசாமி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
பழனிசாமி கடந்த சில ஆண்டுகளாக கருங்கல்பா ளையம், குயிலான் தோப்பு பகுதியில் உள்ள கோசாலை யில் தங்கி மாடுகளை பராமரிக்கும் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சுமார் 11 மணியளவில் தன்னுடன் வேலை பார்க்கும் நபரிடம் வயிறு வலிப்பதாக கூறி குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.
தண்ணீரை வாங்கி குடித்தவுடன் பழனிசாமி அதே இடத்தில் சுருண்டு விழுந்துவிட்டார். உடனடியாக 108 ஆம்பு லன்சுக்கு தகவல் தெரி விக்கப்பட்டு மருத்துவக்குழுவினர் வந்து பரிசோ தித்து பார்த்துவிட்டு பழனிசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதையடுத்து பழனிசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சந்திரசேகரன் வீட்டில் கழுத்தை அறுத்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
- போலீசார் நடத்திய விசாரணையில் பங்கு சந்தையில் முதலீடு செய்து நஷ்டம் ஏற்பட்டது தெரியவந்தது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பூசாரியூரை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 33). தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரட்டடிபாளையம் காலேஜ் பிரிவு அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்.
இந்த நிலையில் சந்திர சேகரன் தங்கி இருந்த வீட்டில் கழுத்தை அறுத்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி கோபிசெட்டி பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் சந்திரசேகரன் பங்கு சந்தையில் முதலீடு செய்து அதில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவர் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
- ஈஸ்வரி தனது மகன் கிருஷ்ணமூர்த்தியிடம் தன்னை பாம்பு கடித்து விட்டதாக கூறியுள்ளார்.
- சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நம்பியூரை அடுத்துள்ள கரிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரி (73). இவர் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சம்பவத்தன்று வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவரது இடது காலில் பாம்பு கடித்தது. இதையடுத்து அந்தப் பாம்பை அடித்து கொன்று தன்னுடன் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்த ஈஸ்வரி தனது மகன் கிருஷ்ணமூர்த்தியிடம் தன்னை பாம்பு கடித்து விட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து ஈஸ்வரியை கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வரப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






