என் மலர்
திண்டுக்கல்
- பழனி பகுதியில் உள்ள மசூதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு முறைகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
- பழனி பகுதியில் நடைபெற்ற ஆய்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி:
மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் கோவையில் 105வது பட்டாலியனில் அதிவிரைவுப்படையினர் செயல்பட்டு வருகின்றனர். இந்த படையினர் பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் உள்ள பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பழனி பகுதியில் உள்ள மசூதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு முறைகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
பழனி போலீசாரிடம் எடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து பழனி சரகத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு சென்ற அதி விரைவுப்படையினர் கடந்த ஓர் ஆண்டாக நடைபெற்ற குற்றச்சம்பவங்கள் குறித்தும் அதில் கைதான குற்றவாளிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
வழக்கமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அதிவிரைவுப்படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி பழனி பகுதியில் நடைபெற்ற ஆய்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பருவம் தவறி பெய்த மழை காரணமாக மலைப்பூணடு விளைச்சல் பாதிக்கப்பட்டது.
- தேவை அதிகரித்துள்ள நிலையில் அதற்கேற்ற விளைச்சல் விவசாயிகளால் எடுக்க முடியவில்லை.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை, வில்பட்டி, பள்ளங்கி, பூண்டி, கிளாவரை போளூர், கூக்கால், புதுப்புத்தூர், பழம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய பயிராக மலைப்பூண்டு விவசாயம் நடைபெற்று வருகிறது.
புவிசார் குறியீடு பெற்ற இந்த மலைப்பூண்டு விவசாயத்தில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கொடைக்கானலில் நிலவும் தட்பவெப்பநிலை, மண்ணின், தன்மை, மலையின் உயரம் போன்ற காரணிகளால் இந்த மலைப்பூண்டுக்கு கடந்த 2018ம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
இருந்தபோதும் பல சமயங்களில் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்து வந்தனர். தற்போது மலைப்பூண்டுக்கு கூடுதல் விலை கிடைத்து வருவது அவர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
1 கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை விற்கப்பட்டு வந்த மலைப்பூண்டு தற்போது ரூ.600 முதல் ரூ.650 வரை விற்கப்பட்டு வருகிறது. கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் கூடுதல் பரப்பளவில் மலைப்பூண்டு விவசாயம் செய்யப்படவில்லை.
வடமாநிலங்களில் இருந்து வரும் வெள்ளைப்பூண்டு வரத்து அடியோடு நின்று விட்டது. இதனால் கொடைக்கானலில் இருந்து மட்டுமே வெள்ளைப்பூண்டு தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு செல்கிறது.
பருவம் தவறி பெய்த மழை காரணமாக மலைப்பூணடு விளைச்சல் இங்கு பாதிக்கப்பட்டது. இதனால் தேவை அதிகரித்துள்ள நிலையில் அதற்கேற்ற விளைச்சல் விவசாயிகளால் எடுக்க முடியவில்லை. இங்கிருந்து பெரியகுளம், வடுகபட்டி சந்தைக்கு மலைப்பூண்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த சந்தை தனியார் வசம் உள்ளதால் அவர்களே அதிக லாபம் அடைந்து வருவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில்தான் மலைப்பூண்டை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இங்கு வியாபாரிகள், இடைத்தரகர்கள் தங்கள் லாபத்துக்கு ஏற்றவாறு விலையை நிர்ணயம் செய்து விற்று வருகின்றனர். இதனால் கஷ்டப்பட்டு விளைவிக்கும் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதில்லை. அறுவடை செய்யக்கூடிய பூண்டு அனைத்தும் ஓரளவு பதப்படுத்தப்பட்டு 150 கி.மீ தூரத்தில் வாகனத்தில் எடுத்துச் சென்ற பிறகுதான் வடுகபட்டி சந்தையில் சந்தைப்படுத்தும் நிலை உள்ளது.
இதனால் விவசாயிகளுக்கு போக்குவரத்து செலவு அதிகரித்து வருகிறது. எனவே கொடைக்கானலில் மலைப்பூண்டுக்கு சந்தை மற்றும் பதப்படுத்தும் கிடங்கு அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாறைகள் அகற்றப்பட்டு அதன் பிறகு ரெயில் இயக்க அனுமதி வழங்கப்பட்டது.
- ரெயிலை கவிழ்க்க சதித் திட்டம் நடந்துள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைரோடு:
நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் அந்தியோதயா ரெயில் நேற்று இரவு திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டு இருந்தது. கொடைரோடு - அம்பாத்துரை இடையே வந்து கொண்டு இருந்தபோது காமலாபுரம் பிரிவு அருகே தண்டவாளத்தில் ராட்சத பாறையும், அதன் அருகே சிறு சிறு கற்களும் இருந்தது.
இதனை ரெயில் ஓட்டுனர் கவனித்து விட்டதால் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். பின்னர் உதவியாளர்களோடு கீழே இறங்கி தண்டவாளத்தை சோதனை செய்தனர்.
முன்பாகவே ரெயில் ஏறியதில் ஒரு சில பாறாங்கல் உடைந்து சத்தம் கேட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து திண்டுக்கல் ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் சுனில்குமார், கொடைரோடு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் வந்து சோதனை நடத்தினர்.
பாறைகள் அகற்றப்பட்டு அதன் பிறகு ரெயில் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 9-ந் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது இதே பகுதியில் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கரூரைச் சேர்ந்த பயணி ஒருவர் காயமடைந்தார். இதனையடுத்து சென்னையில் இருந்து நெல்லை நோக்கி சென்ற வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீதும் கல் வீசி தாக்குதல் நடைபெற்றது.
கொடைரோடு அருகே தொடர்ந்து இதே போன்று கல் வீச்சு மற்றும் தண்டவாளத்தில் பாறைகள் வைக்கப்படுவதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். தற்போது நடந்த சம்பவம் ரெயிலை கவிழ்க்க சதித் திட்டம் நடந்துள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஸ்கந்த ஸபாநாதர் நாட்டிய சேத்ரா சார்பில் நாட்டிய உபசார உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
- நாட்டிய நிகழ்ச்சியானது தொடர்ந்து 20 நிமிடங்கள் நடைபெற்றது.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் கிரிவீதியில் உள்ள அழகு நாச்சியம்மன் கோயில் பகுதியில் ஸ்கந்த ஸபாநாதர் நாட்டிய சேத்ரா சார்பில் நாட்டிய உபசார உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் 1000க்கும் மேற்பட்ட நாட்டியக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். இதனை செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
64 உபசாரங்களில் கடவுளை நேரடியாக சென்றடையும் விதமாக பழனி முருகனுக்கு சுப்ரபாதம், திருப்புகழ், காவடிச்சிந்து ஆகியவை நாட்டியமாக ஆடி முருகனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. சிறியவர் முதல் பெரியவர் வரை கலந்து கொண்ட இந்த நாட்டிய நிகழ்ச்சியானது தொடர்ந்து 20 நிமிடங்கள் நடைபெற்றது.
நாட்டிய உபச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடிய நாட்டிய கலைஞர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டது. பரிசுகளை கலைமாமணி முரளிதரன் வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுந்தரேச குருக்கள், ராமலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.
- முதலில் சாப்பிட்ட மாணவிகள் 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, தலைச்சுற்றல் ஆகியவை ஏற்பட்டது.
- உணவை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாணவிகளுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது.
இந்த விடுதியில் தங்கி பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மாணவிகள் விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விடுதியில் நேற்று இரவு மாணவிகளுக்கு உணவு சமைத்து வழங்கப்பட்டது. முதலில் சாப்பிட்ட மாணவிகள் 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, தலைச்சுற்றல் ஆகியவை ஏற்பட்டது. இதனால் மற்ற மாணவிகள் உணவு சாப்பிட தயக்கம் காட்டினர்.
இது குறித்து விடுதி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மாணவிகளுக்காக தயார் செய்து வைத்திருந்த உணவின் தரம் மற்றும் சமையல் அறை ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும் உணவை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதனிடையே விடுதியில் உணவு சாப்பிட்ட காவியா (வயது14), நாகலட்சுமி (14), ஜெயப்பிரியா (13), நிரோஷா (13), பாவனா (17), இந்துஜா (13), யமுனா (15), கோபிகா (17), கோகிலா (16) உள்ளிட்ட 10 மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்படவே அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் சக மாணவிகள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவிகளுக்கு தரமான உணவு, சுகாதாரமான முறையில் தயார் செய்து வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திருநங்கையாக பிறந்து விட்டோம் என்ன செய்வது என்று சோர்ந்து போய்விடவில்லை.
- திருநங்கைகள் தங்களுக்கு தான் பிரச்சனை என்று நினைத்து மனம் தளர்ந்து விடக்கூடாது.
திண்டுக்கல்:
விவசாயம் முதல் விண்வெளி வரை பெண்கள் சாதித்து வருகின்றனர். அனைத்து துறைகளிலும் பெண்கள் தடம்பதித்த நிலையிலும், ஆணுக்கு நிகராக சமத்துவம் கிடைப்பதற்கு சிலநேரம் போராட வேண்டி இருக்கிறது. இந்த சூழலில் ஆணும், பெண்ணும் சேர்ந்து பிறந்த திருநங்கைகளின் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது.
திருநங்கைகள் சமுதாயத்தில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதற்கு போராடி வருகின்றனர். அதேநேரம் திருநங்கைகளுக்கு வேலை கிடைக்குமா? என்ற கேள்வியை தகர்த்து ஒருசில திருநங்கைகள் திறமையால் சாதித்து விடை எழுதி வருகின்றனர். சுயதொழில் மட்டுமின்றி மத்திய, மாநில அரசு பணிகளிலும் திருநங்கைகள் அசத்தி வருகின்றனர்.
அந்த வகையில், திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக திருநங்கை சிந்து நேற்று பதவி ஏற்றார். இதன்மூலம் தெற்கு ரெயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.
அவருக்கு ரெயில் நிலைய மேலாளர் கோவிந்தராஜ், முதன்மை வர்த்தக ஆய்வாளர் சத்தியமூர்த்தி, எஸ்.ஆர்.எம். தொழிற்சங்க கோட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் ரபீக் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இதுதொடர்பாக திருநங்கைகளுக்கு முன்னுதாரணமாக திகழும் சிந்து கூறுகையில், எனது சொந்த ஊர் நாகர்கோவில் ஆகும். நான் பி.லிட் தமிழ் இலக்கியம் படித்துள்ளேன். கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ரெயில்வே பணியில் சேர்ந்தேன். 14 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லுக்கு மாறுதலாகி வந்தேன். ரெயில்வே மின்சார பிரிவில் பணியாற்றினேன்.
இதற்கிடையே சிறு விபத்தில் எனக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மின்சார பிரிவில் இருந்து வணிக பிரிவுக்கு மாற்றப்பட்டேன். டிக்கெட் பரிசோதகர் பயிற்சியை முடித்து, இன்று (நேற்று) பதவி ஏற்றுள்ளேன். இது எனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு ஆகும். திருநங்கையாக பிறந்து விட்டோம் என்ன செய்வது என்று சோர்ந்து போய்விடவில்லை.
மனம் தளராமல் நன்றாக படித்து இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன். எல்லோருடைய வாழ்விலும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. எனவே திருநங்கைகள் தங்களுக்கு தான் பிரச்சனை என்று நினைத்து மனம் தளர்ந்து விடக்கூடாது. கல்வி, உழைப்பு மூலம் எந்த உயரத்தையும் எட்ட முடியும். அதை மனதில் கொண்டு திருநங்கைகள் முன்னேற வேண்டும் என்றார்.
- 500 ரூபாய் நோட்டுகள் கிழிந்த நிலையிலும், டேப் ஒட்டியிருந்ததாலும் திருமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார்.
- பணம் எடுக்கும்போது இதுபோன்ற கிழிந்த நோட்டுகள் வந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே எத்தலப்பநாயக்கனூரை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது31). இவர் வேடசந்தூரில் உள்ள தனியார் மில்லில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
அய்யலூரில் இருந்து எரியோடு செல்லும் சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.மில் நேற்று இரவு ரூ.4 ஆயிரம் பணம் எடுத்துள்ளார். அதில் 500 ரூபாய் நோட்டு 7, 200 ரூபாய் நோட்டு 2, 100 ரூபாய் நோட்டு 1 வந்துள்ளது.

இதில் 500 ரூபாய் நோட்டுகள் கிழிந்த நிலையிலும், டேப் ஒட்டியிருந்ததாலும் திருமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். மேலும் பணம் எடுத்தற்கான குறுஞ்செய்தியும் தாமதமாக வந்துள்ளது.
அவசர தேவைக்காக பணம் எடுக்கும்போது இதுபோன்ற கிழிந்த நோட்டுகள் வந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற தவறுகள் ஏற்படாமல் ஏ.டி.எம். எந்திரங்களில் நல்ல நிலையில் உள்ள நோட்டுகளை மட்டும் வைக்க அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
- மற்றவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரும்பாறை:
மதுரை கே.புதூரைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 36). இவர் தனது காரில் 5 பேர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். கொடைக்கானலில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும் அவர்கள் ஊருக்கு செல்ல திட்டமிட்டனர்.
இன்று அதிகாலை வத்தலக்குண்டு சாலையில் பூலத்தூர் பிரிவு அருகே கார் வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
அதிர்ஷ்டவசமாக அந்த கார் ஓங்கி உயர்ந்த 2 மரங்களுக்கு இடையில் சிக்கியது. இதனால் காரில் இருந்தவர்கள் உயிருக்கு பயந்து கூச்சலிட்டனர். அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து அவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர். இது குறித்து தாண்டிக்குடி போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து காரில் சிக்கிக்கொண்டவர்களை மீட்டனர்.
பின்னர் படுகாயமடைந்த டிரைவர் சரவணன், மதுரையைச் சேர்ந்த தர்மராஜ் (60) ஆகிய இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மற்றவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 8 வழக்குகளில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கான நகல்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
- இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா இன்று அதன் மீதான உத்தரவை வழங்குவதாக தெரிவித்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டரான சுரேஷ்பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கடந்த டிசம்பர் 1ம் தேதி கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனவே அங்கிட் திவாரி தரப்பில் ஜாமீனில் விடுவிக்க வேண்டும் எனக்கோரி திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில் ஜாமீன் வழங்கக் கோரி அங்கிட் திவாரி தரப்பில் அவரது வக்கீல் செல்வம் 2-வது முறையாக திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு கடந்த 1-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கிட் திவாரி சார்பில் ஆஜரான வக்கீல் செல்வம் கைது செய்யப்பட்டு 60 நாட்களுக்கு மேல் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
தமிழக ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீசார் தரப்பில் ஆஜரான வக்கீல் அனுராதா இந்த வழக்கு குறித்து மேல்நடவடிக்கை எடுக்க கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எனவேதான் தற்போது வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றும், தற்போது ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளை கலைக்கும் அபாயம் உள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கிட் திவாரி தரப்பில் ஆஜரான வக்கீல்கள் காந்தி, செல்வம் ஆகியோர் ஆஜராகி உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் விசாரணைக்கு தடை விதித்த பல வழக்குகள் சிறையில் இருப்பவருக்கு ஜாமீன் வழங்க தடை இல்லை என்பதற்கான வாதங்களை முன் வைத்தனர்.
இது தொடர்பான 8 வழக்குகளில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கான நகல்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஜாமீன் வழங்க கூடாது என்பதற்கான உத்தரவு நகல் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்ததால்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா இன்று அதன் மீதான உத்தரவை வழங்குவதாக தெரிவித்தார். அதன்படி அங்கிட் திவாரி மீதான ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக அவர் உத்தரவிட்டார். 2-வது முறையாக அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அங்கித் திவாரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கடந்த டிசம்பர் 1ம் தேதி கைது செய்யப்பட்டார்.
- 4வது முறையாக நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டரான சுரேஷ்பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கடந்த டிசம்பர் 1ம் தேதி கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அங்கித் திவாரி கைது செய்யப்பட்டு இன்றுடன் 67 நாட்கள் ஆகிறது. இதுவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. எனவே அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு கடந்த 1ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து விசாரித்த நீதிபதி மோகனா அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்குவது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் பதில் அளிக்கக்கோரி விசாரணையை இன்றைக்கு (5ம் தேதி) ஒத்தி வைத்தார். இந்நிலையில் இன்று அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணையின் போது அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வழக்கில் மேலும் சிலரை விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் இவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா மாலை உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.
ஏற்கனவே அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பதும், அவருக்கு 4வது முறையாக நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- தமிழகத்தில் தீய சக்திக்கும் துரோக சக்திக்கும் மாற்றாக நமது இயக்கம் உருவாகி வருகிறது.
- சொத்து வரி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
திண்டுக்கல்:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று திண்டுக்கல் வந்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் தீய சக்திக்கும் துரோக சக்திக்கும் மாற்றாக நமது இயக்கம் உருவாகி வருகிறது. எம்.ஜி.ஆர். உருவாக்கி ஜெயலலிதா வளர்த்தெடுத்த அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம். சில வியாபாரிகளுக்கு நான் அமைச்சர் பதவி பெற்றுத்தந்தேன். ஆனால் அவர்கள் துரோகிகளாக மாறி விட்டனர். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பண பலத்தால் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறலாம் என கனவு காண்கிறார். ஆனால் இதில் நாங்கள் அவருக்கு பதிலடி கொடுப்போம். மின் கட்டணம், சொத்து வரி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதற்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். தி.மு.க.வினர் ரூ.1000 கொடுத்து மக்களின் ஓட்டை விலைக்கு வாங்க பார்க்கின்றனர். அதற்கான பதிலை மக்கள் தேர்தலில் அளிப்பார்கள். குக்கர் சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே இயக்கத்தை மீட்டெடுக்க முடியும் என்பதால் வருகிற தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- அலகு குத்தியும், கிரி வீதிகளில் நடனமாடியும் வந்தனர்.
பழனி:
தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். முக்கிய விழாவான தைப்பூச திருவிழா கடந்த 25-ந் தேதி நடைபெற்றது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பறவைக்காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்தும் அலகு குத்தியும், கிரி வீதிகளில் நடனமாடியும் வந்தனர்.
தற்போது தைப்பூச திருவிழா முடிந்தபின்னரும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் இருந்து குறவர் இன மக்கள் சீர்வரிசை பொருட்களுடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் பாரம்பரிய நடனமாடி பல்வேறு வேடம் அணிந்து வந்தனர். இன்றும் விடுமுறை தினம் என்பதால் கிரி வீதி, அடிவாரம், யானைப்பாதை, படிப்பாதை, ரோப்கார் நிலையம், மின் இழுவை நிலையம் ஆகியவற்றில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மலைக்கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.






