என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • சிறுவர்-சிறுமிகள் வேடன்-குறத்தி போன்று வேடமிட்டு ஆடி வந்தனர்.
    • பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் படையெடுத்தனர்.

    பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக தைப்பூசத்திருவிழா முடிவடைந்த பிறகும் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

    அதன்படி நேற்றும் பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் படையெடுத்தனர். அந்த வகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குறவர் இன மக்கள் மற்றும் வனவேங்கைகள் கட்சியினர் சீர்வரிசை பொருட்களுடன் பழனி முருகன் கோவிலுக்கு நேற்று வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக பஸ்நிலைய பகுதியில் இருந்து மா, பலா, வாழை உள்ளிட்ட பழங்கள், கிழங்கு வகைகள், தேன், தினைமாவு, காய்கறிகள் உள்ளிட்டவற்றை மூங்கில்நார் கூடைகளில் பெண்கள் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

    ஊர்வலத்தின் முன்பு மேளம், பறை இசை முழங்க சிறுவர்-சிறுமிகள் வேடன்-குறத்தி போன்று வேடமிட்டு ஆடி வந்தனர். பின்னர் பாதவிநாயகர் கோவில் முன்பு சீர்வரிசை பொருட்களுடன் குறவர் கூத்து, வேலன் ஆட்டம், காவடி ஆட்டம் உள்பட பாரம்பரிய நடனங்களை ஆடி அசத்தினர். இது, அங்கு வந்த பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. இதைத்தொடர்ந்து முருகன் கோவிலுக்கு சென்று சீர்வரிசை பொருட்களை படைத்து வழிபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், குறவர் மகள் வள்ளியை முருகப்பெருமான் திருமணம் செய்ததால் தாய் வீட்டு சீதனமாக மலைப்பகுதியில் விளையும் பொருட்களை சீர்வரிசையாக கொண்டு வந்து தரிசனம் செய்தோம். பூர்வீக தமிழ்குடி மக்களாகிய எங்களுக்கு அறுபடை வீடுகளில் உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றனர்.

    • புகையிலைப்பட்டியில் புனித சந்தியாகப்பர், புனித செபஸ்தியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
    • கம்பீரமான காளைகளை பிடிக்க வந்த வீரர்களுக்கு காளைகள் போக்கு காட்டி அவர்களை முட்டித் தள்ளின. இதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் சாணா ர்பட்டி அருகே மடூர் ஊராட்சிக்கு உட்பட்ட புகையிலைப்பட்டியில் புனித சந்தியாகப்பர், புனித செபஸ்தியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடை பெற்றது.இதையொட்டி திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. உதவி இயக்குனர் திருவள்ளுவர் தலைமையில் கால்நடை மருத்துவர்கள் ராஜா, ராஜேஷ்குமார் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் காளைகளை பரிசோதனை செய்து ஜல்லிக்கட்டில் 490 காளைகள் பங்கேற்க அனுமதி வழங்கினர்.

    இதேபோல் மாடுபிடி வீரர்களுக்கு டாக்டர் அசோக்குமார் தலைமை யிலான மருத்துவ குழுவினர் 214 பேரை பரிசோதனை செய்து காளைகள் பிடிக்க அனுமதித்தனர். இதையடுத்து காலை 8.15 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது.இதை கோட்டாட்சியர் பிரேம்கு மார் தொடங்கி வைத்தார்.இதில் கிழக்கு தாசில்தார் சந்தன மேரி கீதா, மண்டல துணை வட்டாட்சியர் தங்கமணி, வருவாய் ஆய்வாளர் ஜெயபால், வி.ஏ.ஓ. சைமன் ஆகியோர் உடனிருந்தனர்.முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.அதனை யாரும் பிடிக்க வில்லை.

    அதன்பின் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்க ளில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப் பாய்ந்து சென்று தனது உரிமை யாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது.காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர்.

    சில காளைகள் மைதானத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடின.இதனை பார்த்த பார்வை யாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.கம்பீரமான காளைகளை பிடிக்க வந்த வீரர்களுக்கு காளைகள் போக்கு காட்டி அவர்களை முட்டித் தள்ளின.இந்த ஜல்லிக்க ட்டில் பங்கேற்று பிடிபடாத மாடுகள் மற்றும் காளை களை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கு சைக்கிள், பிரிட்ஜ், அண்டா, பானை, கட்டில், பீரோ உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

    இந்த ஜல்லிக்கட்டில் பாலமேட்டைச் சேர்ந்த மாட்டின் உரிமையாளர் விக்னேஷ் (வயது 26), புகையிலைப்பட்டியைச் சேர்ந்த பார்வையாளர் சந்தனம் (60), மாட்டின் உரிமையாளர் தனராஜ் (32), கணவாய்பட்டியை சேர்ந்த பூமிராஜ் (21), நெய்க்கார ப்பட்டியை சேர்ந்த மாடுபிடி வீரர் கிரேந்திரன் (21) ஆகிய 5 பேர் காயமடைந்தனர்.

    இதில் படுகாயமைடந்த தால் கிரேந்திரன் திண்டு க்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துசெல்லப்பட்டார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பிக்கள் இமானுவேல் ராஜ்குமார், முருகன், நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பரமசாமி, சிராஜுதீன், சேகர் பவுல்ராஜ் உள்பட 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.இதில் மடூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெர்மன் சாந்தி, கனிகா மில்க் உரிமையாளர் பால ச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த விழாவிற்கான ஏற்பாடு களை விழா கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • வழக்கமாக ராக்கால பூஜைக்குப்பின் கோவில் நடை சாத்தப்படும்.
    • சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    மகா சிவராத்திரியையொட்டி இரவு முழுவதும் பக்தர்கள் விழித்திருந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி வருகிற 18-ந்தேதி மகா சிவராத்திரியொட்டி, பழனி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. பழனி மலைக்கோவிலில் இரவு 8 மணிக்கு முதற்கால பூஜையும், 11 மணிக்கு 2-ம் கால பூஜையும் நடைபெற்றது. நள்ளிரவு 1 மணிக்கு 3-ம் கால பூஜையும், அதிகாலை 3 மணிக்கு 4-ம் கால பூஜையுடன் அர்த்தஜாம பூஜையும் நடைபெறுகிறது. வழக்கமாக ராக்கால பூஜைக்குப்பின் கோவில் நடை சாத்தப்படும். ஆனால் சிவராத்திரி இரவு முழுவதும் நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

    இதேபோல் பெரியாவுடையார் கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், பட்டத்து விநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில், வேளீஸ்வரர் கோவில், சன்னதி வீதி, மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் உள்ள சிவன் சன்னதிகளில் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பழனி அடுத்துள்ள நெய்க்காரபட்டியைச் சேர்ந்த ராஜா முகமது என்பவர் வீட்டில் இன்று சோதனை நடைபெற்றது.
    • ராஜா முகமது வீட்டுக்கு இன்று காலை உள்ளூர் போலீசாருடன் வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    பழனி:

    நாடு முழுவதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகிகள் மற்றும் அவர்களது வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி பழனி அடுத்துள்ள நெய்க்காரபட்டியைச் சேர்ந்த ராஜா முகமது (வயது 35) என்பவர் வீட்டிலும் இன்று சோதனை நடைபெற்றது. இவர் தனது தந்தையுடன் அதே பகுதியில் வசித்து வியாபாரம் செய்து வருகிறார். இன்று காலை அவரது வீட்டுக்கு உள்ளூர் போலீசாருடன் வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் இதே பகுதியைச் சேர்ந்த டீ மாஸ்டரான பி.பி.ஐ. அமைப்பின் முன்னாள் நிர்வாகியிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி சென்றது குறிப்பிடத்தக்கது. 

    • வேடசந்தூர் அண்ணா நகரில் தோழியுடன் தங்கி இருந்து சிந்து நூற்பாலைக்கு வேலைக்கு சேர்ந்துள்ளார்.
    • சிந்து காணாமல் போனதை அறிந்த வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவரது கணவர் அங்கிருந்தவாறே கேரள போலீசாருக்கு புகார் அளித்தார்.

    வேடசந்தூர்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மெலட்டூர் அருகில் உள்ள பட்டிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சிந்து (22). இவருக்கு கடந்த வருடம் திருமணமானது. கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டார்.

    தனியாக வசித்து வந்த சிந்துவுக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சமித் (30) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு அது பின்னர் காதலாக மாறியது. இன்ஸ்டாகிராமில் பேசிய சமித், தான் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நூற்பாலையில் மேலாளராக பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார். மேலும் தனக்கு மிகப்பெரிய செல்வாக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கணவர் இல்லாமல் தனிமையில் வாடி வந்த சிந்து தனது காதலன் சொல்வதை உண்மை என நினைத்து அவரை நேரில் சந்திக்க விரும்பினார். இதனையடுத்து தனது வீட்டில் யாருக்கும் சொல்லாமல் திண்டுக்கல் வந்தார்.

    பின்னர் அங்கிருந்து தனது காதலன் சொன்ன இடமான வேடசந்தூரில் சமித்தை தேடியுள்ளார்.

    அவர் எங்கும் கிடைக்காத நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் வேடசந்தூர் பகுதியில் உள்ள ஒரு பெண்ணின் உதவியை நாடினார். அந்த பெண்ணும் அவரின் நிலை அறிந்து வேதனைப்பட்டார். மேலும் காதலனை கண்டுபிடிக்கும்வரை தன்னுடன் இருக்குமாறு அடைக்கலம் கொடுத்துள்ளார். வேடசந்தூர் அண்ணா நகரில் தோழியுடன் தங்கி இருந்து சிந்து நூற்பாலைக்கு வேலைக்கு சேர்ந்துள்ளார்.

    நூற்பாலைக்கு வேலைக்குச் சென்றுகொண்டே காதலித்த சமித் பற்றி விசாரித்தார். அப்போது அவருக்கு கிடைத்த தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமித் ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருவதும், அவர் சாதாரண கொத்தனார் வேலை பார்த்து வந்ததும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    தனது காதலன் சொன்ன விபரங்கள் அனைத்தும் போலியானது என அறிந்து வேதனையடைந்த அவர் யாரிடமும் சொல்ல முடியாமல் கண்ணீர் வடித்தார்.

    இதனிடையே சிந்து காணாமல் போனதை அறிந்த வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவரது கணவர் அங்கிருந்தவாறே கேரள போலீசாருக்கு புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கேரளா மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலும் சிந்துவை தேடி வந்தனர்.

    3 மாதமாக சிந்து மாயமான நிலையில் கேரள போலீசார் அவரது புகைப்படத்தை தமிழக போலீசாருக்கு அனுப்பி விசாரித்து வந்தனர். இந்நிலையில் சிந்துவின் குடும்பத்தினரும் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். உடல்நிலை சரியில்லாமல் வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிந்து வந்தபோது அங்கு டி.எஸ்.பி துர்க்காதேவி தலைமையிலான போலீசார் அவரிடம் விசாரித்தபோது நடந்த விபரங்களை கூறியுள்ளார்.

    இன்ஸ்டாகிராம் மோகத்தில் போலியான காதலனை நம்பி உள்ளூரில் வசிக்க முடியாமலும், தனது கணவர் வீட்டிற்கு செல்லமுடியாமலும் இருப்பதாக சிந்து கதறி அழுதார். இதனையடுத்து அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரை வரவழைத்து வேடசந்தூர் போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். சமூகவலைதளங்களில் ஏற்படும் காதலால் உண்டாகும் விபரீதங்களை குறித்து அறியாமல் இளம்பெண்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்துவிடுகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்து வந்தாலும் வழிதவறி செல்லும் நபர்களை வீட்டில் உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • தயிர் பாக்கெட்டின் முன் பகுதியில் 200கிராம், விலை ரூ.10 என அச்சிடப்பட்டுள்ளது.தயிர் பாக்கெட்டின் ஓரத்தில் 450 கிராம் ரூ.35 என அச்சிடப்பட்டுள்ளது.
    • வாடிக்கையாளர்களுக்கு தயிர் பாக்கெட்டின் எடை குறித்தும் விலை குறித்தும் எடுத்துரைப்பதில் சில்லறை விற்பனையாளர்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் கவிதியாகராஜர் சாலையில் ஆவின் மொத்த விற்பனை நிலையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து கொடைக்கானல் நகரின் பல சில்லறை விற்பனை கடைகளுக்கு பால் மற்றும் பால் பொருள்கள், தயிர் ஆகியவை விற்பனைக்காக வழங்கப்பட்டு வருகிறது.இதில் தயிர் பாக்கெட்டில் தயிர் வழங்கப்படும் எடை, அதன் விலைப்பதிவு ஆகியவற்றில் முரண்பாடு உள்ளது.

    இதனால் பொதுமக்களும் சில்லறை வியாபாரிகளும் குழப்பத்தில் உள்ளனர். தயிர் பாக்கெட்டின் முன் பகுதியில் 200கிராம், விலை ரூ.10 என அச்சிடப்பட்டுள்ளது.தயிர் பாக்கெட்டின் ஓரத்தில் 450 கிராம் ரூ.35 என அச்சிடப்பட்டுள்ளது.

    இதனால் சில்லறை விற்பனையாளர்களும், பொதுமக்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.வாடிக்கையாளர்களுக்கு தயிர் பாக்கெட்டின் எடை குறித்தும் விலை குறித்தும் எடுத்துரைப்பதில் சில்லறை விற்பனையாளர்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து ஆவின் மொத்த விற்பனை நிலையத்தில் விசாரித்த போது இந்த தயிர் பாக்கெட் கவர், முன்பே அச்சடித்து நிறைய உள்ளதாகவும் அது தீரும் வரை இதே பாக்கெட்டில் தான் தயிர் விற்பனைக்கு வரும் எனவும் கூறினார். ஒவ்வொரு தயிர் பாக்கெட்டிலும் சரியான எடை, சரியான விலை குறித்து முறையாக அளவிட்டு பேக்கிங் செய்யவும், சரியான விலையை அச்சிட்டு வெளியிடவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • போலீசார் ஆனந்தகிரி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.
    • கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் பாஸ்டின்தினகரன், சப்-இன்ஸ்ர்பெக்டர் விஜயபாண்டியன் மற்றும் போலீசார் ஆனந்தகிரி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது ஆனந்தகிரி 4வது தெரு ஓம் சக்தி கோவில் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

    அவர்களிடம் சோதனையிட்டபோது மறைத்து வைத்திருந்த 1.50 கிலோ கஞ்சா மற்றும் 100கிராம் போதை காளான் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பல நாட்களாக கஞ்சா மற்றும் போதை காளான்களை சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து இந்திராநகரை சேர்ந்த ஆனந்தகுமார் (25), ஆனந்தகிரி 1-வது தெருவை சேர்ந்த ஜாபர்சாதிக் (27) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    • அனைத்து தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில் மாஜிஸ்திரேட்டு கார்த்திக் தீர்ப்பளித்தார்.
    • பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களுக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பூம்பாறையை அடுத்த கூக்கால் பிரிவு அருகே கடந்த 3-ந்தேதி மன்னவனூரைச் சேர்ந்த ஜீவா (வயது 22), பூண்டியைச் சேர்ந்த பாலமுருகன் (26) ஆகிய இருவரும் மது அருந்தி விட்டு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    அப்போது மேல்மலை கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொடைக்கானல் சென்று விட்டு காரில் தனது விடுதிக்கு வந்து கொண்டு இருந்தார். அவரிடம் ஜீவா, பாலமுருகன் ஆகிய 2 பேரும் லிப்ட் கேட்டுள்ளனர்.

    வாலிபர்கள் மது அருந்தி இருந்த விபரம் தெரியாததால் அந்த பெண் அவர்களுக்கு லிப்ட் கொடுத்துள்ளார். காரில் ஏறிய சிறிது நேரத்தில் அவர்கள் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். இதனால் காரில் இருந்து அவர்களை இறக்கி விட்டு இது குறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். இந்த வழக்கு கொடைக்கானல் 2-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் உடனடியாக விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

    போலீசாரும் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அனைத்து தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில் மாஜிஸ்திரேட்டு கார்த்திக் தீர்ப்பளித்தார். பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களுக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் அவர் உத்தரவிட்டார்.

    மேலும் அவர் தனது தீர்ப்பில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க தண்டனைகளை கடுமையாக்க வேண்டும். அனைத்து ஆண்களும் பெண்களை சரியான முறையில் நடத்துகிறார்களா? என்பதை உறுதி செய்ய வேண்டும். இது போன்ற சம்பவங்கள் உடனடியாக தடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் வழக்கு பதிவு செய்த 9 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    நீதித்துறை வரலாற்றில் இது புதிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

    • உடல்நலம் முன்னேறுவதற்காக வழிபாடு செய்தார்.
    • படிவழியில் நடந்து சூடம் ஏற்றி சாமி தரிசனம்.

    பழனி:

    தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தென்னிந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள அவரது திரைப்படங்கள் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகின்றன. சமீபத்தில் சமந்தா அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    தற்போது உடல் நலம் ஓரளவு குணமடைந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் சாமி செய்தார்.

    தனது உடல்நலம் முன்னேறுவதற்காக படிவழி பாதையில் நடந்து வந்து 600 படிகளில் சூடம் ஏற்றி வழிப்பட்டார்.

    • சண்முகலெட்சுமி மீது விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவிட்டார்.
    • அறிக்கை அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமியை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

    கொடைரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள கன்னிமார் நகரைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 45). இவரது மகன் சதீஸ் கண்ணன் (வயது 23). நிலப்பிரச்சினை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சங்கர், நாச்சியப்பன், சின்னக்கருப்பு உள்ளிட்ட சிலர் பாண்டி மற்றும் அவரது மகனிடம் தகராறு செய்தனர்.

    மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நிலக்கோட்டை கோர்ட்டில் பாண்டி புகார் அளித்தார். கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரணை நடத்தவில்லை. இதனால் சம்பவத்தன்று அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையம் முன்பு பாண்டி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அதன் பிறகு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    உயிரிழந்த பிறகு போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் பாண்டி விஷம் குடித்து போலீஸ் நிலையம் முன்பு நியாயம் கேட்ட போது அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சண்முகலெட்சுமி அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் செல்போனில் பேசியபடி இருந்தார்.

    பாண்டி விஷம் குடித்து புலம்பியபடி மயங்கி விழுந்தபோதும் அவர் கண்டுகொள்ளவில்லை. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சண்முகலெட்சுமி மீது விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவிட்டார். அறிக்கை அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமியை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

    • சுரேசின் நண்பரான மணிமாறனை தனது வலையில் விழவைத்த கருப்புச்சாமி மதுபாட்டிலில் ஊசிமூலம் விஷம் ஏற்றியுள்ளார்.
    • விஷம் ஏற்றிய மதுபாட்டில் ஒன்றையும், விஷம் இல்லாத மதுபாட்டில் ஒன்றையும் மணிமாறனிடம் கொடுத்துள்ளார்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள பூலாம்பட்டியை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி மகேஸ்வரி (44). கணவர் இறந்துவிட்ட நிலையில் மகேஸ்வரி வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த உறவினரான சுரேஷ் (39) என்பவருடன் மகேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.

    இவர்கள் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் மகேஸ்வரியின் தம்பி கருப்புச்சாமி (36) என்பவர் தனது சகோதரியிடம் கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறியுள்ளார். சுரேஷையும் தனியாக அழைத்து இனிமேல் தனது அக்காவை பார்க்க வரவேண்டாம் என கண்டித்துள்ளார். இருந்தபோதும் அவர்கள் கள்ளத்தொடர்பு நீடித்து வந்தது.

    இதனையடுத்து சுரேஷை கொலை செய்ய கருப்புச்சாமி முடிவு செய்தார். மது பழக்கம் கொண்ட சுரேசுக்கு விஷம் கலந்து கொடுத்து கொலைசெய்ய முடிவு செய்தார். ஆனால் தான் அழைத்தால் சுரேஷ் வரமாட்டார் என நினைத்து அவரது நண்பரான மணிமாறன் (25) என்பவரை உதவிக்கு அழைத்தார்.

    சுரேசுக்கு விஷம் கலந்த மதுவை கொடுக்குமாறு மணிமாறனிடம் கருப்புச்சாமி கூறினார். அதன்படி கடந்த 3ம் தேதி மதுகுடித்து பின்னர் வாந்தி எடுத்த சுரேஷ் பழனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மதுவில் விஷம் கலந்திருந்தது குறித்து டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் சந்தேகமடைந்த மகேஸ்வரி தனது காதலன் இறப்பில் மர்மம் இருப்பதாக கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    சுரேசின் நண்பரான மணிமாறனை தனது வலையில் விழவைத்த கருப்புச்சாமி மதுபாட்டிலில் ஊசிமூலம் விஷம் ஏற்றியுள்ளார். விஷம் ஏற்றிய மதுபாட்டில் ஒன்றையும், விஷம் இல்லாத மதுபாட்டில் ஒன்றையும் மணிமாறனிடம் கொடுத்துள்ளார். விஷம் கலந்த மதுபாட்டிலை சுரேசுக்கு கொடுத்துவிட்டு விஷம் இல்லாத மதுவை தான் குடித்துள்ளார். சற்று நேரத்தில் அவர் வாந்தி எடுத்து மயக்கமடையவே அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதனையடுத்து போலீசார் விசாரணையில் அவர்கள் கொலை செய்தது உறுதியானது.

    இதனை தொடர்ந்து கருப்புச்சாமி மற்றும் அவரது நண்பர் மணிமாறனை போலீசார் கைது செய்தனர்.

    • நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு மூச்சு விட முடியாத நிலை ஏற்பட்டது
    • சிக்கன் மற்றும் மீன் உணவுகளை அதிக அளவு சாப்பிட்டதால் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு அவர் இறந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் அருகில் உள்ள கலிக்கம்பட்டியை சேர்ந்த சோலமலை மகன் வசந்தகுமார் (வயது22). கூலி வேலை பார்த்து வருகிறார். வசந்தகுமார் நேற்று விடுமுறை என்பதால் மதியம் வீட்டில் சமைத்த சிக்கன் உணவை அதிக அளவு சாப்பிட்டுள்ளார்.

    பின்னர் மாலையில் பொறித்த மீன்களை சாப்பிட்டுள்ளார். அதன்பிறகு அவருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு மூச்சு விட முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து தனது தந்தையிடம் வசந்தகுமார் கூறி உள்ளார்.

    ஜீரணத்துக்காக குளிர்பானம் குடித்த நிலையில் சிறிது தூரம் நடந்து செல்வதாக வீட்டில் கூறி சென்றார். அதன்பிறகு ஊருக்கு வெளியே மயங்கிய நிலையில் வசந்தகுமார் கிடந்துள்ளார். உடனே ஆம்புலன்சுக்கு அவரது பெற்றோர் போன் செய்து வரவழைத்தனர்.

    அவரை பரிசோதித்த ஊழியர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதன் பிறகு சின்னாளபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்துஅவரது உடலை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிக்கன் மற்றும் மீன் உணவுகளை அதிக அளவு சாப்பிட்டதால் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு அவர் இறந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்

    ×