என் மலர்
திண்டுக்கல்
- லெக்கை யன்கோட்டை முதல் அரசப்பபிள்ளைபட்டி வரை நான்குவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- உரிய பாதுகாப்பு நடவடிக்கையை நெடுஞ்சாலைத் துறையினர் எடுத்து விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் எனக் கூறினார்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதி திண்டுக்கல், மதுரை, தேனி, பழனி, போடி, ராமேஸ்வரம், சென்னை, பெங்களூர், திருப்பூர், கோவை, ஊட்டி, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு முக்கிய வழித்தடமாக உள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக லெக்கை யன்கோட்டை முதல் அரசப்பபிள்ளைபட்டி வரை நான்குவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த 4 வழிச்சாலை பணியில் சாலையை அகலப்படுத்தும் போது சிறு பாலங்கள், தடுப்புச் சாலைகள் அமை க்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த பாலங்கள் அமைப்பதற்காக ஆங்கா ங்கே குழிகள் தோண்டி வேலை நடைபெற்று வருகிறது.
பணிகள் விரைவில் முடிக்காமல் ஆமை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த குழிகள் தோண்டிய இடத்தில் தகுந்த பாதுகாப்பு இல்லாமலும், தடுப்புகளும் இல்லாததால் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் குழிகள் இருப்பது தெரியாமல் உள்ளே விழுந்து விடுகின்றனர். இரவு நேரங்களில் குழிகளில் விழுந்து இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவையின் மாவட்ட தலைவர் விஸ்வரத்தினம் கூறியதாவது, போக்கு வரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், பிற்காலங்களில் நெரிசல் ஏற்படாத வண்ணம் இந்த 4 வழிச்சாலை அமை க்கும்பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இருந்த சாலையில் சென்டர் மிடியன்கள் அமைக்க ப்பட்டிருந்தது. அவை தற்போது அகற்றப்பட்டு சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த சென்டர் மிடியனை அகற்றிய பின்பு புழுதிகள், தூசிகள் கிளம்பி வாகன ஓட்டிகளையும், சாலையில் நடந்து செல்வோரையும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்குகிறது.
மேலும் உணவகங்கள், பேக்கரி, டீ கடையில், பழக்கடைகள், சாலையோர வியாபாரிகள், காய்கறி கடைகள் அனைத்திலும் தூசிகள் படிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பல நோய்கள் ஏற்படுகிறது. மேலும் நெடுஞ்சாலையில் இடிபட்ட கட்டிட கழிவுகளை முற்றிலுமாக அகற்றிவிட்டு பணிகளை தொடர வேண்டும். மேலும் பாலம் கட்டும் இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைத்து இரவு நேரங்களில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமலும், உரிய பாதுகாப்பு நடவடிக்கையை நெடுஞ்சாலைத்துறையினர் எடுத்து விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் எனக் கூறினார்.
- ஆர்.வெள்ளோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைகள் பல மாதங்களாக தூய்மைப்படுத்த ப்படாமல்உள்ளது.
- கழிப்பறையை சுத்தம் செய்து உரியமுறையில் பராமரிக்க வேண்டும். இல்லையெனில் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா ஆர்.வெள்ளோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைகள் பல மாதங்களாக தூய்மைப்படுத்த ப்படாமல்உள்ளது.
இதனால் மாணவிகள் கழிவறைகளை பயன்படுத்தாமல் இயற்கை உபாதைகளுக்கு வெளியிடங்களை பயன்படுத்தும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. மேலும் சில மாணவிகள் இயற்கை உபாதையை அடக்கிக் கொள்வதால் அவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் சூழல் உள்ளது.
தொடக்க பள்ளிகளில் கூட கழிப்பிட வசதிகள் சிறந்த முறையில் செய்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மேல்நிலை ப்பள்ளி மாணவிகளுக்கு அசுத்தமான கழிப்பிடம் பெறும் தொற்று உருவாகும் இடமாக அமைந்துள்ளது.
நூற்றுக்கணக்கான மாணவிகள் படிக்கும் பள்ளியில் இதுபோன்ற ஒரு நிலை இருப்பது குறித்து அவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் கூறியதை தொடர்ந்து அவர்கள் அங்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். எனவே கழிப்பறையை சுத்தம் செய்து உரியமுறையில் பராமரிக்க வேண்டும். இல்லையெனில் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளனர்.
குஜிலியம்பாறை, வடமதுரை, எரியோடு, அய்யலூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் கழிப்பிடம் மற்றும் சுகாதார வசதிகள் கேள்விக்குறியாக உள்ளது. எனவே கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கொடைக்கானலில் கடந்த மாதம் கடுமையான உறை பனி சீசன் நிலவி வந்தது.
- உள்ளூர் மக்களுக்கு சற்று பாதிப்பை தந்தாலும் சுற்றுலா பயணிகள் இந்த ரம்யமான சீதோசனத்தை உற்சாகமாக கண்டு ரசித்து செல்கின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த மாதம் கடுமையான உறைபனி சீசன் நிலவி வந்தது. வெப்ப நிலை 5 டிகிரி செல்சியசுக்கு கீழ் சென்றதால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. உறை பனி மற்றும் பனிமூட்டத்தால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவானது. அதன் பிறகு கடந்த சில நாட்களாக உறைபனி குறைந்து கடும் குளிர் நிலவி வந்தது.
கொடைக்கானல் இந்த வாரம் மலைப்பகுதியில் பகலில் கடும் வெயிலும், மாலை நேரங்களில் கடும் குளிரும் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இன்று மீண்டும் கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் உறைபனி காணப்பட்டது. ஏரிச் சாலை, ஜிம்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புற்களில் பனி படர்ந்து காணப்பட்டது.
மேலும் வெப்பநிலை 8 டிகிரி செல்சியசுக்கு கீழ் பதிவாகி உள்ளது. திடீரென மாறிய இந்த காலநிலையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. கொடைக்கானலை மகிழ்வுடன் அனுபவிக்க வந்த சுற்றுலா பயணிகள் தற்போது நிலவும் இந்த வித்தியாசமான காலநிலையை ரசித்து உற்சாகமடைந்தனர்.
தொடர்ந்து டிசம்பர் மாதம் முதல் ஜனவரி இறுதி மாதம் வரை மட்டுமே இருக்கும் உறைபனி தற்போது பிப்ரவரி மாதத்தில் நிலவி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உள்ளூர் மக்களுக்கு சற்று பாதிப்பை தந்தாலும் சுற்றுலா பயணிகள் இந்த ரம்யமான சீதோசனத்தை உற்சாகமாக கண்டு ரசித்து செல்கின்றனர்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்களை காணிக்கையாக கொடுத்து அம்மனை வழிபட்டனர்.
- இந்த பூத்தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் மாசித்திருவிழா பூத்தமலர் பூ அலங்காரத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நேற்று பூச்சொரிதல் விழா நடந்தது. இதையொட்டி காலை 9 மணியளவில் கோவில் பரம்பரை அறங்காவலர்கள் பூத்தட்டுகளை சுமந்து கோவிலை 3 முறை வலம் வந்தனர். அதன்பிறகு பூக்களை அம்மனுக்கு படைத்து அந்த பூக்களை கோவில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேருக்கு கொண்டு வந்து கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து தேரின் முன்பு 21 வாழைத்தண்டுகளில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழிக்கப்பட்டு பூத்தேரோட்டம் தொடங்கியது. இதில் கோட்டை மாரியம்மனின் பூத்தேருக்கு முன்பாக விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, முருகன் சாமி பூத்தேர்கள் அணி வகுத்து சென்றன. இந்த பூத்தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. அப்போது வழியெங்கும் அமைக்கப்பட்டு இருந்த பூக்காணிக்கை மையங்களில் இருந்து பூக்கள் பெறப்பட்டன.
அதேபோல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்களை காணிக்கையாக கொடுத்து அம்மனை வழிபட்டனர். இந்த காட்சி பக்தர்கள் வெள்ளத்தில் பூத்தேர் மிதந்து வருவதை போன்று இருந்தது. அதைத்தொடர்ந்து மதியம் சுமார் 2 மணியளவில் பூத்தேர்கள் கோவிலை வந்தடைந்தன. அதன்பிறகு பக்தர்களிடம் காணிக்கையாக பெறப்பட்ட பூக்கள் அனைத்தும் அம்மனின் கருவறையில் கொட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
- கருப்பூர் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் இன்று காலை இடும்பன் கோவில் அருகே உள்ள முடிகாணிக்கை மையத்திற்கு வந்தனர்.
- பக்தர்களிடம் ரூ.100 கட்டாயம் செலுத்த வேண்டும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
பழனி:
பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூசம் நிறைவடைந்த நிலையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர். இவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக முடிகாணிக்கை செலுத்துவது வழக்கம். இதற்காக அடிவாரம், இடும்பன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் முடி காணிக்கை செலுத்தும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்துசமயஅறநிலையத்துறை சார்பில் பழனி கோவிலில் முடிகாணிக்கை செலுத்த கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் முடிகாணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் கட்டாய வசூலில் ஊழியர்கள் ஈடுபடுவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளது.
இந்நிலையில் மணப்பாறை அடுத்துள்ள கருப்பூர் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் இன்று காலை இடும்பன் கோவில் அருகே உள்ள முடிகாணிக்கை மையத்திற்கு வந்தனர். அவர்களிடம் ரூ.100 கட்டாயம் செலுத்த வேண்டும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
முடிகாணிக்கைக்கு இலவசம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில் எதற்காக பணம் கேட்கிறீர்கள் என கேட்டனர். ஆனால் பணம் கொடுத்தால்தான் மொட்டை அடிக்கப்படும் என்று கண்டிப்பாக கூறியதால் பக்தர்கள் அங்கு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து அறிந்ததும் கோவில் அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் முடிகாணிக்கைக்கு பணம் கேட்டு மிரட்டும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- திவேஸ்மேரி அணிந்திருந்த தங்கசங்கிலி, வளையல்கள் உள்ளிட்ட நகைகள் காணவில்லை.
- போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே ரெட்டியபட்டியை சேர்ந்தவர் சந்தியாகு மகள் திவேஸ்மேரி(62). இவருக்கு திருமணமாகாததால் தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டைஒட்டி தபால் நிலையம் மற்றும் தோட்டங்கள் உள்ளது. வழக்கமாக காலையில் அவரது உறவினர் திவேஸ்மேரி வீட்டிற்கு பால் வினியோகம் செய்ய செல்வார்.
இன்று காலை வழக்கம்போல் அவரது வீட்டிற்கு சென்றபோது கதவு திறக்கப்படவில்லை. செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோதும் முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது அங்கு திவேஸ்மேரி இறந்துகிடந்ததைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.மேலும் திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மலைச்சாமி, ஜெய்கணேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திவேஸ்மேரி அணிந்திருந்த தங்கசங்கிலி, வளையல்கள் உள்ளிட்ட நகைகள் காணவில்லை. மேலும் வீட்டின் ஓடு பிரிக்கப்பட்டுள்ளது. எனவே அவரை நகைக்காக மர்மநபர்கள் கொன்றனரா? என சந்தேகம் எழுந்துள்ளது. எனவே போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே திவேஸ்மேரி எவ்வாறு இறந்தார் என்பது தெரியவரும்.
- கோவில் வளாகத்தில் சாமிகளுக்கு சிறப்பு பூைஜகள் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து மேளதாளம் முழங்க பூத்தேர் ஊர்வலம் தொடங்கியது.
- திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் வருகிற 21-ந்தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் நகரின் காவல் தெய்வமாக விளங்கும் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா நேற்று பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. இன்று பூச்சொரிதல் எனப்படும் பூத்தேர் ஊர்வலம் நடைபெற்றது. இதற்காக காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டது.
அதனைதொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பூத்தேரில் கோட்டை மாரியம்மன் எழுந்தருளினார். தேரில் முருகன், விநாயகர், அய்யப்பன் ஆகியோர் பரிவார தெய்வங்களாக எழுந்தருள நடுநாயகமாக கோட்டைமாரியம்மன் வீற்றிருந்தார். கோவில் வளாகத்தில் சாமிகளுக்கு சிறப்பு பூைஜகள் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து மேளதாளம் முழங்க பூத்தேர் ஊர்வலம் தொடங்கியது.
பூத்தேர் மேற்குரதவீதி, கலைக்கோட்டு விநாயகர் கோவில், பென்சனர் தெரு, கோபாலசமுத்திரம் தெரு, கிழக்குரதவீதி, தெற்குரதவீதி வழியாக வந்தது. வழிநெடுகிலும் பல்வேறு இடங்களில் பூக்களை காணிக்கை செலுத்தும் வகையில் மண்டகப்படி அமைக்கப்பட்டிருந்தது.
அவர்கள் கோட்டை மாரியம்மனுக்கு மலர்களை காணிக்கையாக வழங்கி வழிபட்டனர். மேலும் பக்தர்களும் கோட்டை மாரியம்மனுக்கு பூக்களை காணிக்கையாக வழங்கினர். பக்தர்கள் வெள்ளத்தில் கோட்டை மாரியம்மன் நீந்தி வந்து அருளாசி வழங்கியது கண்கொள்ளா காட்சியாக அமைந்திருந்தது.
பூத்தேர் வரும் வழியில் பல்வேறு இடங்களில் நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் அன்னதானமும் வழங்கப்பட்டது. பூத்தேர் கோவிலை வந்தடைந்ததும் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பூக்களை கொண்டு அம்மனுக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. பின்னர் அந்த பூக்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் வருகிற 21-ந்தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
- ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் தங்களை ஜாதியைச் சொல்லி திட்டிய தால் மனவேதனையடைந்து தற்கொலைக்கு முயன்றதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் தெரிவித்தனர்.
- புகாரின் பேரில் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் உள்பட 5 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சின்னாளப்பட்டி:
திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டியில் அரசு உதவி பெறும் தனி யார் மகளிர் உயர்நிலை ப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் 9ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் பினாயில் குடித்து மயங்கி கிடந்தனர். சக மாணவிகள் அளித்த புகாரின் பேரில் அவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் தங்களை ஜாதியைச் சொல்லி திட்டிய தால் மனவேதனையடைந்து தற்கொலைக்கு முயன்றதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து மாணவி களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகை யிட்டும், பள்ளி வாகனத்தை சிறை பிடித்தும் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஆர்.டி.ஓ. பிரேம்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன், குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
தலைமை ஆசிரியை உள்பட மாணவிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் உள்பட 5 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கணித ஆசிரியை பிரேமலதாவை பணியிடை நீக்கம் செய்தும், உடற்கல்வி ஆசிரியை ரம்யாவை கட்டாய விடுப்பில் அனுப்பி யும் பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்த 5 பேரும் எப்போது அழை த்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று போலீசார் தெரிவித்து சென்றனர். மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
- அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
- இன்று பூச்சொரிதல் விழா நடக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் மாசித்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மாசித்திருவிழா பூத்தமலர் பூ அலங்கார மண்டகப்படியுடன் நேற்று தொடங்கியது.
இதையொட்டி காலையில் அம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்பட 21 வகையான பொருள்களால் மகா அபிஷேகம், அலங்காரம், பூஜை, தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மாலையில் மூலஸ்தான அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் கோவில் மண்டபத்தில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி அலங்காரம் மற்றும் ரோஜா, மல்லிகை, சம்பங்கி உள்பட பல்வேறு மலர்களால் சிவன், முருகன், ஆண்டாள், வாராகி அம்மன் கோலங்கள் போடப்பட்டது. இதேபோல் பூத்தமலர் பூ அலங்காரத்தில், கரகங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
மாசித்திருவிழாவில், இன்று (வெள்ளிக்கிழமை) பூச்சொரிதல் விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.
- பாதிக்கப்பட்ட மாணவிகள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் இன்று 2-வது நாளாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- மாணவிகளின் வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் மிரட்டல் விடுத்த மாணவிகளிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.
சின்னாளபட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே தொப்பம்பட்டி கிராமம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த 2 மாணவிகள் சின்னாளபட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் பள்ளி சார்பில் இயக்கப்பட்டு வந்த பஸ்சில் பள்ளிக்கு வருகின்றனர். அவ்வாறு வரும்போது அதேபகுதியை சேர்ந்த ஒருசில மாணவிகள் அவர்களிடம் சாதிய பாகுபாடு காட்டி இருக்கையில் அமரவிடாமல் நின்றபடியே வருமாறு மிரட்டியுள்ளனர்.
மேலும் அவர்கள் சமூகத்தை சொல்லியும் திட்டி வந்துள்ளனர். நேற்று காலை பள்ளிக்கு வந்தபோதும் அந்த மாணவிகளுக்கும், மற்றொரு தரப்பு மாணவிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனஉளைச்சலில் இருந்த அந்த 2 மாணவிகளும் நடந்த விபரங்களை தங்கள் வகுப்பு ஆசிரியரிடம் கூறியுள்ளனர். ஆனால் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தாமல் பாதிக்கப்பட்ட மாணவிகளையே வகுப்பு ஆசிரியர் கண்டித்து அமர வைத்துள்ளார்.
இதனால் வேதனையடைந்த அந்த மாணவிகள் பள்ளி முடிந்த பிறகு மீண்டும் பஸ்சில் சென்றால் அதேமாணவிகள் தங்களை தரக்குறைவாக நடத்துவார்கள் என்று பயந்தனர். இதனால் மாலையில் பள்ளி முடிந்ததும் அந்த 2 மாணவிகளும் கழிவறையில் இருந்த பினாயிலை குடித்து மயங்கி விழுந்தனர். இதைபார்த்த சக மாணவிகள் ஆசிரியரிடம் தெரிவித்தனர். உடனே மாணவிகளை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து அறிந்ததும் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவம் நடந்த பள்ளிக்கு இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசுருதீன் தலைமையில் வத்தலக்குண்டு வட்டார கல்வி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் மாணவிகளின் வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் மிரட்டல் விடுத்த மாணவிகளிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். இதன் அறிக்கையை பள்ளிகல்வித்துறைக்கும், மாவட்ட கலெக்டருக்கும் அளிக்க உள்ளதாகவும், அதன்பிறகு ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவிகள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் இன்று 2-வது நாளாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மாணவிகளின் பெற்றோர், கிராம மக்கள் சின்னாளபட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பள்ளி மாணவிகளுக்கு தீண்டாமை கொடுமை விடுத்த மாணவிகள் மற்றும் உரிய நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பதட்டமான சூழல் உருவானது. சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி பாஸ்கரன், டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். இச்சம்பவம் குறித்து மனிதஉரிமைகள் ஆணையம், எஸ்.இ.எஸ்.டி பிரிவு நீதிபதி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி இனிவரும் நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்து கொள்ளவேண்டும் என்று தெரிவித்தனர்.
தேர்வு நெருங்கிவரும் நிலையில் மாணவிகளுக்கு இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் மற்றமாணவிகளின் பெற்றோர்களும் அச்சமடைந்துள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட பள்ளி முன்பும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- பைக் விபத்தில் காங்கிரஸ் நிர்வாகி பலியானார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை இ.பி. காலனியைச் சேர்ந்தவர் கவுதம் (வயது 28). இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிலக்கோட்டை இளைஞரணி நகரச் செயலாளராக உள்ளார். நிலக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் டிரைவராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் வத்தலக்குண்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு நேற்று இரவு சென்று விட்டு நிலக்கோட்டை- வத்தலக்குண்டு சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். டவர் அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது நிலக்கோட்டையில் இருந்து வத்தலக்குண்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற கிருஷ்ணா நகரைச் சேர்ந்த முத்து (24) என்பவரின் பைக் நேருக்கு நேராக மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த கவுதம் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதை அறிந்த அவரது உறவினர்கள் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் முற்றுகையிட்டனர். இதனையடுத்து விபத்தை ஏற்படுத்திய டிரைவர் முத்து கைது செய்யப்பட்டார்.
- கோட்டை மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா இன்று பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது.
- மாசிப்பெருந்திருவிழா தொடங்கியதை முன்னிட்டு திண்டுக்கல் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்மக்களின் காவல் தெய்வமாகவும், கேட்டவருக்கு கேட்டவரம் அளிக்கும் அன்னையாகவும் விளங்கும் கோட்டை மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுசிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று பூத்தமலர் பூ அலங்காரத்துடன் ெதாடங்கியது. இதனைமுன்னிட்டு கோவிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில் வளாகத்தில் பல வண்ண மலர்களாலும், பொடிகளாலும் கோலம் வரையப்பட்டடது. இதனை பக்தர்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
நாளை காலை பூத்தேர் ஊர்வலம் கோவில் முன்பிருந்து தொடங்கி மேற்குரதவீதி, கலைக்கோட்டு விநாயகர் ேகாவில், பென்சனர் தெரு, கோபாலசமுத்திரம் தெரு, கிழக்குரதவீதி, தெற்குரதவீதி வழியாக உலா வரும். அலங்கரிக்கப்பட்ட பூத்தேரில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வருவார். இதற்காக பூத்தேர் வரும் வழி எங்கிலும் பாதை சுத்தப்படுத்தப்பட்டு பூ மண்டகப்படி அமைக்கப்பட்டுள்ளது.
வழி நெடுகிலும் பக்தர்கள் வழங்கும் பூக்களை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தி வழிபடுவார்கள். வருகிற 19-ந்தேதி இரவு 8 மணிக்கு சாட்டுதல் நிகழ்ச்சியும், 21-ந்தேதி கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அப்போது கோவிலில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்குவார்கள்.
இதனைெதாடர்ந்து அம்மன் வெவ்ேவறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். மாசித்திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் ராட்டினம், மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஸ்டால்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. விழா நடைபெறும் அனைத்து நாட்களும் கோவில் கலையரங்கில் இன்னிசை கச்சேரி, பக்திசொற்பொழிவு உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
வருகிற 3-ந்தேதி பூக்குழி இறங்கும் திருவிழாவும், 4-ந்தேதி தசாவதாரம், 5-ந்தேதி மஞ்சள் நீராட்டுதல் நடைபெற்று மறுநாள் காலை கொடியிறக்கம் நடைபெறும். மாசிப்பெருந்திருவிழா தொடங்கியதை முன்னிட்டு திண்டுக்கல் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.






