என் மலர்
திண்டுக்கல்
- பரம்பரையாளர்கள் தலையில் முதல் தேங்காய் உடைத்து பின்னர் வேண்டி வரம் கேட்பவர்களுக்கு தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் விழா நடந்தது.
- பரிவார தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து குலவழக்கப்படி சிறப்பு பூஜை அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வலையபட்டி மகாலட்சுமி அம்மன் கோவிலில் மகாசிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இடையகோட்டை வலையபட்டியில் ராயர்குல வம்சம் குரும்பாகவுண்டர் இனமக்களின் குலதெய்வமான மகாலட்சுமி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகாசிவராத்திரி விழா 4 நாட்கள் கொண்டாடப்படும்.
அதன்படி குலவிளக்கு ஏற்றி விழா தொடங்கியது. 2ம் நாள் அன்று பரம்பரையாளர்கள் தலையில் முதல் தேங்காய் உடைத்து பின்னர் வேண்டி வரம் கேட்பவர்களுக்கு தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் விழா நடந்தது. பூசாரி பூச்சப்பன் இதனை செய்தார். 52க்கும் மேற்பட்டோர்களுக்கு தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.
3ம் நாளான இன்று பரிவார தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து குலவழக்கப்படி சிறப்பு பூஜை அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- முனியாண்டி கோவில் பரம்பரை ஜமீன்தார் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- காணிக்கை செலுத்தி வழிபாடு நடத்தினால் குடும்பம் தலைத்தோங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே சுக்காம்பட்டி மூங்கில்மலை அடிவாரத்தில் முனியாண்டி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவராத்திரியையொட்டி இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று சிறப்பு வழிபாடு செய்ய ஏராளமான பக்தர்கள் வந்தனர்.
முனியாண்டி கோவில் பரம்பரை ஜமீன்தார் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். சுற்றுவட்டாரத்தில் உள்ள 18 பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் வெளியூரில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு களிமண்ணால் ஆன நாய், குதிரை, மாடு உள்ளிட்ட உருவ பொம்மைகளை காணிக்கையாக செலுத்தினர்.
இது போல் காணிக்கை செலுத்தி வழிபாடு நடத்தினால் குடும்பம் தலைத்தோங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். எனவே பாரம்பரியமாக இதனை பின்பற்றி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
- அரசியலிலும், வாழ்க்கையிலும் தடுக்கி விழுந்தால் உடனடியாக எழுந்து விட வேண்டும்.
- மனிதராக பிறந்தால் ஆளுனராக இருந்தாலும் சரி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.
பழனி:
பழனியில் தனியார் நிகழ்ச்சியில் தெலுங்கானா மற்றும் புதுவை மாநில ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழிசை என்று பெயர் வைத்ததால் நான் தமிழில் பேசவில்லை. தமிழ் என்னை பெற்றததால் தமிழில் பேசுகிறேன்.
அரசியலிலும், வாழ்க்கையிலும் தடுக்கி விழுந்தால் உடனடியாக எழுந்து விட வேண்டும். ஏனெனில் தடுக்கி விழுந்தது மிகப்பெரிய செய்தியாகி விடும். எனவே வீழ்ந்தே கிடக்காமல் உடனடியாக எழுந்து நமது பயணத்தை தொடர வேண்டும்.
ஆளுனராக இருந்தால் 4 சுவருக்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதில்லை. தெலுங்கானாவில் நன்கு படிக்கும் மாணவர் ஒருவர் தனக்கு லேப்டாப் இல்லாததால் உயர் படிப்பு தடைபடுவதாக கூறினார்.
அப்போது பழைய மாணவர்கள் யாரேனும் லேப்டாப் இருந்தால் தந்து உதவலாம் என அறிவித்தேன். அதனை ஏற்று ஒரு மாணவர் லேப்டாப் கொடுத்தார். அதனை படிப்பிற்கு தேவைப்பட்ட மாணவருக்கு வழங்கியதால் நல்ல மதிப்பெண்கள் பெற்றார்.
இதேபோல் ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி உள்ளேன். சேவை செய்ய வேண்டும் என்று நினைத்தால் எங்கிருந்தாலும் செய்யலாம். இதை நான் செய்தால் அரசியல் கட்சியினர் விமர்சனம் செய்வார்கள். ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுனரும் தேவையில்லை என்று கூறுவார்கள்.
மனிதராக பிறந்தால் ஆளுனராக இருந்தாலும் சரி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். இதுதான் எனது அடிப்படை கொள்கை.
இதுபோல் சேவை செய்து வாழ்ந்தால் கிடைக்கும் மனநிம்மதி சொல்லில் அடங்காதது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து தனது கணவருடன் பழனி மலைக்கோவிலுக்கு சென்ற தமிழிசை அங்கு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பின்னர் கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
- பச்சிளங்குழந்தையுடன் தம்பதி உயிரிழந்த சம்பவம் இரு குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செந்துறை அடைக்கனூரைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் சின்ன அடைக்கான் (வயது 28). இவர் டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை அருகே சிங்கி வலைக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சேதுராஜா மகள் சுமதிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கர்ப்பிணியான சுமதியை சின்ன அடைக்கான் குடும்பத்தினர் கடந்த மாதம் ராமநாதபுரத்தில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சுமதிக்கு கடந்த 17-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சின்ன அடைக்கானின் உறவினர் திருமணம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இதற்காக தனது மனைவியை ஊருக்கு அழைத்து வர முடிவு செய்தனர். இதற்காக நேற்று மாலை ஆஸ்பத்திரியில் இருந்து சுமதி டிஸ்ஜார்ஜ் ஆனார். அதனைத் தொடர்ந்து தனது பச்சிளங்குழந்தையுடன் சுமதி, கணவர் சின்ன அடைக்கான், தாய் காளியம்மாள் (50) ஆகியோர் சிங்கிவலைக்குப்பத்துக்கு ஆட்டோவில் சென்றனர்.
ஆட்டோவை மலைராஜ் என்பவர் ஓட்டி வந்தார். ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் நதிப்பாலம் அருகே எதிரே வந்த கார் இடது புறமாக சென்ற ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ சுக்கு நூறாக நொறுங்கி அதில் இருந்த 5 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் வழியிலேயே மலைராஜ், சுமதி, ஆகியோர் உயிரிழந்தனர். சிகிச்சையில் இருந்த பச்சிளங்குழந்தையும், தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சின்ன அடைக்கானும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். கார் டிரைவரான சென்னை சேலையூர் கேம்ப் ரோடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (34) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காளியம்மாள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். பச்சிளங்குழந்தையுடன் தம்பதி உயிரிழந்த சம்பவம் இரு குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- மாரியம்மன் உருவம்பொறித்த கொடி மரத்திற்கு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது
- திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா வரும் மார்ச் 7-ம் தேதி நடைபெறுகிறது
நத்தம்:
நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 7.29 மணிக்கு மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சிறப்பு பூஜைகள் நடத்தி கோவில் முன் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
இதில் கொடிமரம், நாணல்புல், மாவிலை, வண்ண பூமாலைகள் இணைத்து மாரியம்மன் உருவம்பொறித்த கொடி மரத்திற்கு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.தொடர்ந்து மூலவர் மாரியம்மன் வெள்ளி மயில் வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து நாளை (செவ்வாய்கிழமை) அதிகாலையில் நத்தம் அருகே உள்ள கரந்தமலையில் கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக சந்தன கருப்புசுவாமி கோவிலில் பக்தர்கள் ஒன்று கூடுவார்கள். அங்கிருந்து ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் அழைத்து செல்லப்படுவர்.
பின்னர் மஞ்சள் காப்பு கட்டி 15 நாட்கள் விரதம் தொடங்குவார்கள். தொடர்ந்து திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா வரும் மார்ச் 7-ம் தேதி நடைபெறுகிறது. திருவிழா சமயங்களில் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும், கோவில் நிர்வாகிகளும் செய்து வருகின்றனர்.
- கண்டக்டர் விசில் அடிப்பதற்கு முன்னதாகவே பஸ்சை நகர்த்தியதால் பஸ்ஸில் இருந்து தவறி விழுந்தார்.
- மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்
நத்தம்:
நத்தம் அருகே வேலம்பட்டியைச் சேர்ந்தவர் கலையரசி (வயது 43). இவர் நத்தம் வெள்ளைக்குட்டு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணியாளராக உள்ளார். நத்தம்- சிங்கம்புணரி செல்லும் அரசு பஸ்ஸில் கலையரசி வேலைக்குச் சென்றார்.
அப்போது பஸ் டிரைவர் நத்தம் அண்ணா நகரைச் சேர்ந்த சுப்பிரமணி, கண்டக்டர் விசில் அடிப்பதற்கு முன்னதாகவே பஸ்சை நகர்த்தியுள்ளார். இதனால் கலையரசி பஸ்ஸில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவரது தலையில் ரத்த காயம் மற்றும் உடலில் சிராய்ப்பு ஏற்பட்டு படுகாயத்துடன் நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். இது குறித்து காயம் அடைந்த பெண்ணின் சகோதரர் ராஜரத்தினம் கொடுத்த புகாரின் அடிப்படையில் நத்தம் போலீசார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டில் பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
- பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராக்கள் உதவியுடன் கொள்ளையர்கள் உருவம் பதிவாகியுள்ளதா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பழனி:
பழனி சண்முகபுரம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 65). இவர் ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி. இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்று விட்டார். இந்நிலையில் அவரது வீட்டின் கதவு மற்றும் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர்.
இன்று காலை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இது குறித்து பாலசுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் பழனி டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவரது வீட்டில் பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து தடயவியல் நிபுணர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராக்கள் உதவியுடன் கொள்ளையர்கள் உருவம் பதிவாகியுள்ளதா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பழனி மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது தொடர்ந்து திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- முதலமைச்சர், அன்புமணி ராமதாஸ் சந்திப்பு குறித்து பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன.
- தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்து பேசவே அன்புமணி மு.க.ஸ்டாலினை சந்தித்தார்
திண்டுக்கல்:
பா.ம.க. கவுரவத்தலைவர் ஜி.கே.மணி இன்று திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழை வளர்க்க வேண்டும், மீட்டெடுக்க வேண்டும் என பா.ம.க தொடர்ந்து போராடி வருகிறது. இதற்காக வருகிற 21-ந்தேதி தாய்மொழி தினத்தன்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
தமிழ் குறித்த விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளும் அவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 28-ந்தேதி திண்டுக்கல்லில் தொடங்கி மதுரையில் நிகழ்ச்சி நிறைவடைகிறது. இதில் அரசியலுக்கு அப்பாற்பட்டு தன்னார்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
முதலமைச்சர், அன்புமணி ராமதாஸ் சந்திப்பு குறித்து பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன. ஆனால் தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்து பேசவே அவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இதில் வன்னியர்களுக்கு 10½ சதவீத இடஒதுக்கீடு, தமிழ் வளர்ச்சி, நீர் மேலாண்மை குறித்து மட்டுமே ஆலோசனை செய்யப்பட்டது என்றார்.
அப்போது மாநில பொறுப்பாளர் திலகபாமா, மாவட்ட செயலாளர்கள் ஜான்கென்னடி, ஜோதிமுத்து, சிவக்குமார், மணி, திருப்பதி, வைரமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.
- தவசிமடை புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
- ஜல்லிக்கட்டில் 14 வீரர்கள் காயமடைந்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே தவசிமடை புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இதையொட்டி திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி, சிவகங்கை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. கால்நடைகளை உதவி இயக்குனர் திருவள்ளுவன் தலைமையில் டாக்டர்கள் ஸ்ரீதர், ஸ்ரீமதி மற்றும் மருத்துவ குழுவினர் காளைகளை பரிசோதனை செய்தனர்.
ஜல்லிக்கட்டில் 482 காளைகள் பங்கேற்க அனுமதி வழங்கினர். இதேபோல் மாடுபிடி வீரர்களுக்கு டாக்டர்கள் அசோக்குமார், ஆனந்த பிரபு, திலீப் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் 140 பேரை காளைகள் பிடிக்க அனுமதித்தனர். இதையடுத்து காலை 8.10 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. கோட்டாட்சியர் பிரேம்குமார் தொடங்கி வைத்தார். கிழக்கு தாசில்தார் சந்தன மேரி கீதா, மண்டல துணை வட்டாட்சியர் தங்கமணி,வருவாய் ஆய்வாளர் மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.
முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.அதனை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.
சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப் பாய்ந்து சென்று தனது உரிமையாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது.காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர்.சில காளைகள் மைதானத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடின. இதனை பார்த்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். கம்பீரமான காளைகளை பிடிக்க வந்த வீரர்களை போக்கு காட்டி அவர்களை முட்டித் தள்ளின.
இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்று பிடிபடாத மாடுகள் மற்றும் காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கு சைக்கிள், அண்டா, பானை, கட்டில், பீரோ உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் புகையிலைபட்டியில் இருந்து அழைத்து வரப்பட்ட காளை மாட்டின் ஓனர் வீரமங்கை ஜெயமணி என்பவருக்கு அண்டா, கட்டில், பேஷன் ஆகிய பரிசுகளை பரிசாக பெற்று கொடுத்தது.
இந்த ஜல்லிக்கட்டில் மதுரையை சேர்ந்த மாடுபிடி வீரர் ரகுமான்(24), பாலமேட்டைச் சேர்ந்த குமார்( 29), மேலூர் சேக்கிபட்டியை சேர்ந்த மனோஜ் (25), கோணபட்டியை சேர்ந்த ரமேஷ் உள்பட 14 பேர் காயமடைந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி. வெள்ளைச்சாமி தலைமையில் புறநகர் டி.எஸ்.பி. உதயகுமார், நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பரமசாமி, சேகர் பவுல்ராஜ் உள்பட 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதில் சாணார்பட்டி மாவட்ட கவுன்சிலர் விஜயன், தவசிமடை ஊராட்சி மன்ற தலைவர் எலிசபெத் ஹெலன் ராணி, ஊராட்சி செயலர் தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ளதால் பொதுமக்கள் சுற்றுலா செல்வதை ஒத்திவைத்துள்ளனர்.
- வனப்பகுதியில் உள்ள பில்லர்ராக், பைன்பாரஸ்ட், குணாகுகை, மோயர் பாயிண்ட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த 2 மாதங்களாக கடும் உறை பனி ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்த்து வருகின்றனர்.
விடுமுறை நாட்களில் மட்டும் சுற்றுலா பயணிகள் வருகை இருந்தது. தற்போது மேலும் உறை பனி ஏற்பட்டு நட்சத்திர ஏரி, சின்னப்பள்ளம், பெரும்பள்ளம், மன்னவனூர் உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி பரவியுள்ளது.
வயல்வெளிகளில் வெள்ளைப்போர்வை போர்த்தியது போல் எங்குபார்த்தாலும் பனித்துளிகள் காணப்படுகிறது. காலை 9 மணி வரை ஏற்பட்டுள்ள உறை பனியால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.
மேலும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ளதால் பொதுமக்கள் சுற்றுலா செல்வதை ஒத்திவைத்துள்ளனர். இதனால் வனப்பகுதியில் உள்ள பில்லர்ராக், பைன்பாரஸ்ட், குணாகுகை, மோயர் பாயிண்ட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. மேலும் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட நகர் பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களிலும் பயணிகள் வருகை குறைவாக இருந்ததால் வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.
கோடை காலம் மார்ச் இறுதியில் தொடங்கும். மேலும் முழு ஆண்டு விடுமுறையும் தொடங்கும் என்பதால் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நத்தம் என்பதற்கு விளைநிலம் சார்ந்த மக்கள் வாழும் இடம் என்று பொருள்.
- குதிரைக்கு பின்னால் இரு சேவகர்களின் சிற்பம் உள்ளது.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் அளித்த தகவலின் படி போடி ஏல விவசாயிகள் சங்க கல்லூரியின் வரலாற்று துறை பேராசிரியர் மற்றும் மாணவர்கள் நத்தம் பட்டத்தரசி அம்மன் கோவில் முன்பு ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கி.பி 16, 17- ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் காலத்து குதிரை வீரன் நடுக்கல் ஒன்றை கண்டறிந்தனர்.
இந்த ஆய்வு பற்றி ஆய்வாளர் மாணிக்கராஜ் கூறுவதாவது, திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இன்றைய நத்தம் என்ற ஊர் சங்ககாலம் முதல் நாயக்கர் காலம் வரையிலான பல வரலாற்றுச் சான்றுகளை பெற்றுள்ளது. இதைத் தவிர இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது சில முக்கியமான போராட்ட நிகழ்வுகள் நடைபெற்ற ஊராகவும் தமிழக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.
நத்தம் என்பதற்கு விளைநிலம் சார்ந்த மக்கள் வாழும் இடம் என்று பொருள். பிற்கால பாண்டியர்கள் காலத்தில் நத்தம் ஊரும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் துவராபதி நாடு என்ற பிரிவில் இருந்துள்ளது. துவராபதி வேளாண் என்ற நாட்டுப்பிரிவில் இருந்துள்ளது. சேர நாட்டில் இருந்து வணிக பெருவழி பாதையும், சோழ நாட்டிலிருந்து ஒரு வணிக பெருவழிப் பாதையும் நத்தத்தில் இணைந்து பின்னர் மதுரை சென்றுள்ளதை வரலாறு கூறுகின்றன.
வரலாற்று சிறப்புகளை பெற்றுள்ள நத்தத்தில் பட்டத்தரசி அம்மன் கோவிலுக்கு முன்பு 3 அடி உயரம், 3 அடி அகலத்தில் வீரன் ஒருவன் அலங்கரிக்கப்பட்ட குதிரையில் அமர்ந்த நிலையில் புடைப்புச் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளான்.
நாயக்கர் காலத்தில் வீரர்கள் அணியும் கொண்டை அமைப்புடன் வலது கையில் பிடித்துள்ள ஈட்டியை முன்னோக்கி வீசி எறிவது போன்ற தோற்றத்திலும், இடதுகை குதிரையின் கடிவாளத்தை பிடித்த நிலையிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
குதிரை வீரனின் வீர மரணத்திற்கு பின்பு அவனுடைய இரு மனைவியர்களும் சதி என்னும் உடன் கட்டை ஏறி உயிர் நீத்துள்ளனர் என்பதை வெளிக்காட்டும் சிற்பங்களாக குதிரைக்கு முன் வடிவமைக்கப்பட்டுள்ளனர். இவ்விரு பெண்களும் நாயக்கர் காலத்து பட்டத்தரசிகள் அணியும் குந்தளம் எனும் கொண்டை அணிந்துள்ளனர்.
குதிரைக்கு பின்னால் இரு சேவகர்களின் சிற்பம் உள்ளது. அதில் ஒரு சேவகர் குதிரை வீரனுக்கு குடை பிடித்தபடி உள்ளார். பொதுவாக குதிரையும், சேவகர்களும் குடை பிடித்து காட்சியும் குறுநில மன்னர், தளபதி ஆகியோருக்காக எடுக்கப்படும். நடுக்கலில் காட்டப்படும் இவற்றுடன் ஆடை, ஆபரணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இக்குதிரைவீரன் இப்பகுதியை நாயக்கர் காலத்தில் ஆட்சி செய்த குறுநில மன்னன் அல்லது தளபதியாக இருக்கலாம்.
ஆட்சி செய்த குறுநில மன்னன் இவன் இங்கு நடைபெற்ற சண்டையில் வீர மரணம் அடைந்த பின் அவன் நினைவாக இந்நடுகல் எழுப்பப்பட்டிருக்க வேண்டும். மேலும் நடுக்கல்லில் கல்வெட்டு சான்றுகள் இல்லாததால், சரியான செய்தியை அறிய முடியவில்லை என்றார்.
- காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டைவிட்டு வெளியேறினார்.
- 2 பேரும் மேஜர் என்பதால் சேர்ந்து வாழ எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என இரு வீட்டாரிடமும் எழுதி வாங்கிக்கொண்டனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டியை சேர்ந்தவர் பிரியா (வயது 23). கணிதவியல் பட்டதாரி. இவரை கடந்த 16ஆம் தேதி முதல் காணவில்லை என்று அவரது தந்தை வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து பிரியா எங்கு சென்றார் என்பது குறித்து வடமதுரை போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் பிரியா வேடசந்தூர் ஆத்துமேட்டில் பூக்கடை வைத்திருக்கும் பி.ஏ. தமிழ் பட்டதாரியான மனோபாலாஜி (வயது 23) என்பவரை கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டைவிட்டு வெளியேறினார். பின்னர் தனது காதலனை மணப்பாறை அருகில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் தங்கள் வீட்டிற்கு சென்றால் எப்படியும் பிரச்சினை செய்து பிரித்து விடுவார்கள் என நினைத்து மணக்கோலத்தில் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். வடமதுரை போலீசார் இருதரப்பு பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் சேர்ந்து வாழ எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என இரு வீட்டாரிடமும் எழுதி வாங்கிக்கொண்டனர்.
பிரியாவின் குடும்பத்தினர் தங்களுடன் வருமாறு அழைத்தபோதும் தான் கணவருடன் தான் செல்வேன் என அவர் உறுதியாக கூறினார். இதனையடுத்து காதல் ஜோடிகளை போலீசார் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.






