என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடுகல் கண்டுபிடிப்பு"

    • குளக்கரையில் கண்டறியப்பட்ட கணவன்-மனைவி நடுகல் 17-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும்.
    • நடுகல்லில் உள்ள ஆண் இப்பகுதியில் நாயக்கர் அரசின் நிர்வாகத்தில் முக்கிய அதிகாரியாக பணிபுரிந்திருக்கக்கூடும்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் வரலாற்று ஆய்வுக்குழு ஆய்வாளர் விஸ்வநாததாஸ், மாணவர் ரத்தினம் முரளிதர், வரலாற்று ஆர்வலர்கள் சந்திரசேகர், உமாமகேஸ்வரி ஆகியோர் கொண்ட குழுவினர் திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகில் உள்ள வி.மேட்டுப்பட்டியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது ஒரு வீட்டில் இருந்த கணவன்-மனைவி நடுகல்லை கண்டறிந்தனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், குளக்கரையில் கண்டறியப்பட்ட கணவன்-மனைவி நடுகல் 17-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். ஒரு குகை போன்ற வீட்டினுள் அமைந்துள்ள இந்த நடுகல் இடதுபுறம் ஆண் சிற்பத்தில் தலையில் அள்ளிமுடிந்து சவரிகொண்டை முடிச்சில் தொங்கும் குஞ்சமும், ஆணின் காதில் வளைகுண்டலமும், இருகரமும் மார்போடு இணைந்து கும்பிட்ட நிலையும், இடைவாரியிலிருந்து மீண்டும் காணப்படுகிறது.

    இடுப்பில் இடைகச்சை ஆடை, தார்பாச்சி கட்டிய அமைப்பும் அதிலிருந்து கெண்டைக்கால்வரை மூடியநிலையில் இடைகச்சை ஆடை உள்ளது.

    பெண் சிற்பத்தில் கொண்டை வலதுபுறமும், காதில் வலைகுண்டலமும், மார்பில் ஆரமும், இடதுகை தொங்குகரம், டோலிமுத்திரையும், வலதுகரம் இடுப்பில் வைத்தபடியும், இடை ஆடை இடுப்பில் சுற்றி கெண்டைக்கால் வரை நீண்டுள்ளது.

    இந்த நடுகல்லில் உள்ள ஆண் இப்பகுதியில் நாயக்கர் அரசின் நிர்வாகத்தில் முக்கிய அதிகாரியாக பணிபுரிந்திருக்கக்கூடும் என்றனர். இதேபோன்று மற்ற பகுதியிலும் வேறு ஏதேனும் தொல்லியல் ஆய்வுகள் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    • நத்தம் என்பதற்கு விளைநிலம் சார்ந்த மக்கள் வாழும் இடம் என்று பொருள்.
    • குதிரைக்கு பின்னால் இரு சேவகர்களின் சிற்பம் உள்ளது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் அளித்த தகவலின் படி போடி ஏல விவசாயிகள் சங்க கல்லூரியின் வரலாற்று துறை பேராசிரியர் மற்றும் மாணவர்கள் நத்தம் பட்டத்தரசி அம்மன் கோவில் முன்பு ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கி.பி 16, 17- ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் காலத்து குதிரை வீரன் நடுக்கல் ஒன்றை கண்டறிந்தனர்.

    இந்த ஆய்வு பற்றி ஆய்வாளர் மாணிக்கராஜ் கூறுவதாவது, திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இன்றைய நத்தம் என்ற ஊர் சங்ககாலம் முதல் நாயக்கர் காலம் வரையிலான பல வரலாற்றுச் சான்றுகளை பெற்றுள்ளது. இதைத் தவிர இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது சில முக்கியமான போராட்ட நிகழ்வுகள் நடைபெற்ற ஊராகவும் தமிழக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.

    நத்தம் என்பதற்கு விளைநிலம் சார்ந்த மக்கள் வாழும் இடம் என்று பொருள். பிற்கால பாண்டியர்கள் காலத்தில் நத்தம் ஊரும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் துவராபதி நாடு என்ற பிரிவில் இருந்துள்ளது. துவராபதி வேளாண் என்ற நாட்டுப்பிரிவில் இருந்துள்ளது. சேர நாட்டில் இருந்து வணிக பெருவழி பாதையும், சோழ நாட்டிலிருந்து ஒரு வணிக பெருவழிப் பாதையும் நத்தத்தில் இணைந்து பின்னர் மதுரை சென்றுள்ளதை வரலாறு கூறுகின்றன.

    வரலாற்று சிறப்புகளை பெற்றுள்ள நத்தத்தில் பட்டத்தரசி அம்மன் கோவிலுக்கு முன்பு 3 அடி உயரம், 3 அடி அகலத்தில் வீரன் ஒருவன் அலங்கரிக்கப்பட்ட குதிரையில் அமர்ந்த நிலையில் புடைப்புச் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளான்.

    நாயக்கர் காலத்தில் வீரர்கள் அணியும் கொண்டை அமைப்புடன் வலது கையில் பிடித்துள்ள ஈட்டியை முன்னோக்கி வீசி எறிவது போன்ற தோற்றத்திலும், இடதுகை குதிரையின் கடிவாளத்தை பிடித்த நிலையிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    குதிரை வீரனின் வீர மரணத்திற்கு பின்பு அவனுடைய இரு மனைவியர்களும் சதி என்னும் உடன் கட்டை ஏறி உயிர் நீத்துள்ளனர் என்பதை வெளிக்காட்டும் சிற்பங்களாக குதிரைக்கு முன் வடிவமைக்கப்பட்டுள்ளனர். இவ்விரு பெண்களும் நாயக்கர் காலத்து பட்டத்தரசிகள் அணியும் குந்தளம் எனும் கொண்டை அணிந்துள்ளனர்.

    குதிரைக்கு பின்னால் இரு சேவகர்களின் சிற்பம் உள்ளது. அதில் ஒரு சேவகர் குதிரை வீரனுக்கு குடை பிடித்தபடி உள்ளார். பொதுவாக குதிரையும், சேவகர்களும் குடை பிடித்து காட்சியும் குறுநில மன்னர், தளபதி ஆகியோருக்காக எடுக்கப்படும். நடுக்கலில் காட்டப்படும் இவற்றுடன் ஆடை, ஆபரணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இக்குதிரைவீரன் இப்பகுதியை நாயக்கர் காலத்தில் ஆட்சி செய்த குறுநில மன்னன் அல்லது தளபதியாக இருக்கலாம்.

    ஆட்சி செய்த குறுநில மன்னன் இவன் இங்கு நடைபெற்ற சண்டையில் வீர மரணம் அடைந்த பின் அவன் நினைவாக இந்நடுகல் எழுப்பப்பட்டிருக்க வேண்டும். மேலும் நடுக்கல்லில் கல்வெட்டு சான்றுகள் இல்லாததால், சரியான செய்தியை அறிய முடியவில்லை என்றார்.

    • பிற்கால பாண்டியர்கள் காலத்தில் நிர்வாக வசதிக்காக தாங்கள் ஆட்சி செய்த பகுதிகளை பல நாட்டு பிரிவுகளாக பிரித்து இருந்தனர்.
    • பண்டைய காலத்தில் மக்களின் வாழ்க்கையும், வாழ்விடமும் மலையும் மலை சார்ந்த இடமாக இருந்துள்ளது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகே மணக்காட்டூரில் கி.பி 14, 15 ஆம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆற்றூர் நாடு வரலாற்று ஆய்வு மையக்குழுவின் முனைவர். மாணிக்கராஜ், சுப்பு உலகநாத பாண்டியன், ராமு, திண்டுக்கல் மாவட்டம் நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர் கருப்பையா ஆகியோர் இணைந்து நத்தம் அருகே உள்ள மணக்காட்டூர் பகுதியில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 14, 15-ம் நூற்றாண்டை சேர்ந்த அப்புச்சி என்று இப்பகுதி மக்களால் அழைக்கப்படும் வில்வீரன் நடுகல்லை கண்டறிந்தனர்.

    பிற்கால பாண்டியர்கள் காலத்தில் நிர்வாக வசதிக்காக தாங்கள் ஆட்சி செய்த பகுதிகளை பல நாட்டு பிரிவுகளாக பிரித்து இருந்தனர். அதன்படி இப்பகுதியானது புறமலை நாட்டு பிரிவின் கீழ் இருந்து வந்துள்ளது. இப்பகுதியானது மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பகுதியாகும். இங்கு வாழ்ந்த வில்வீரன் ஒருவனின் மரணத்தின் நினைவாக இந்த நடுகல் எடுக்கப்பட்டிருக்கலாம். இந்த நடுகல் 3.5 அடி உயரம், 1.5 அடிஅகலம் உடையதாக உள்ளது. இதில் வீரன் தனக்கு எதிரே நேராக பார்த்தவாறு புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

    வீரன் முகம் தேய்ந்த நிலையில் உள்ளது. வீரன் தனது வலது கையில் வில்லின் அம்பை பிடித்தவாறும், இடது கையில் வில்லின் நடுப்பகுதியான நாபியை பிடித்தவாறும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வீரனுக்கு வலது பக்கமாக கூந்தலை அள்ளி கட்டி முடிக்கப்பட்ட கொண்டையும், வீரனுக்கே உரிய விரிந்த மார்புடனும் இடை சிறிதாக வீரனுக்குரிய உடல் அமைப்புடனும் அழகாக வெட்டப்பட்டிருக்கிறது. இந்த நடுகல் வீரனின் இடுப்புக்கு கீழ் பகுதி முழுவதும் மண்ணில் புதைந்து காணப்படுவதால் வீரனின் ஆடை மற்றும் காலில் அணிவிக்கப்பட்டு இருக்கும் அணிகலன்களை அறிந்து கொள்ள முடியவில்லை.

    பண்டைய காலத்தில் மக்களின் வாழ்க்கையும், வாழ்விடமும் மலையும் மலை சார்ந்த இடமாக இருந்துள்ளது. அவ்வாறு வாழ்ந்த மக்கள் விலங்குகளை உணவுக்காக வேட்டையாடும்போது அவற்றுடன் சண்டையிட்டு இறப்பது வழக்கமாக இருந்துள்ளது. இவ்வாறான நிகழ்வுகளில் வீர மரணம் அடையும் வீரர்களின் நினைவாக கல்நட்டு அவர்களை தெய்வமாக வழிபடுவது தமிழர்களின் சிறப்பான பண்பாட்டு மரபாகும். இதனை இலக்கியங்கள், கல்வெட்டுச் சான்றுகள் கூறுகின்றன. பண்டைய காலம் முதல் தமிழர்கள் வீரர்களை போற்றி தெய்வமாக வணங்கும் செயலுக்கு இந்த வில்வீரன் நடுகல் சான்றாக உள்ளது. இந்த வில் வீரன் நடுகல்லை இப்பகுதி மக்கள் அப்புச்சி என்ற பெயரில் தெய்வமாக வணங்கி வருகின்றனர்.

    ×