என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நத்தம் அருகே 14-ம் நூற்றாண்டு வில்வீரன் நடுகல் கண்டுபிடிப்பு
- பிற்கால பாண்டியர்கள் காலத்தில் நிர்வாக வசதிக்காக தாங்கள் ஆட்சி செய்த பகுதிகளை பல நாட்டு பிரிவுகளாக பிரித்து இருந்தனர்.
- பண்டைய காலத்தில் மக்களின் வாழ்க்கையும், வாழ்விடமும் மலையும் மலை சார்ந்த இடமாக இருந்துள்ளது.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகே மணக்காட்டூரில் கி.பி 14, 15 ஆம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆற்றூர் நாடு வரலாற்று ஆய்வு மையக்குழுவின் முனைவர். மாணிக்கராஜ், சுப்பு உலகநாத பாண்டியன், ராமு, திண்டுக்கல் மாவட்டம் நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர் கருப்பையா ஆகியோர் இணைந்து நத்தம் அருகே உள்ள மணக்காட்டூர் பகுதியில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 14, 15-ம் நூற்றாண்டை சேர்ந்த அப்புச்சி என்று இப்பகுதி மக்களால் அழைக்கப்படும் வில்வீரன் நடுகல்லை கண்டறிந்தனர்.
பிற்கால பாண்டியர்கள் காலத்தில் நிர்வாக வசதிக்காக தாங்கள் ஆட்சி செய்த பகுதிகளை பல நாட்டு பிரிவுகளாக பிரித்து இருந்தனர். அதன்படி இப்பகுதியானது புறமலை நாட்டு பிரிவின் கீழ் இருந்து வந்துள்ளது. இப்பகுதியானது மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பகுதியாகும். இங்கு வாழ்ந்த வில்வீரன் ஒருவனின் மரணத்தின் நினைவாக இந்த நடுகல் எடுக்கப்பட்டிருக்கலாம். இந்த நடுகல் 3.5 அடி உயரம், 1.5 அடிஅகலம் உடையதாக உள்ளது. இதில் வீரன் தனக்கு எதிரே நேராக பார்த்தவாறு புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
வீரன் முகம் தேய்ந்த நிலையில் உள்ளது. வீரன் தனது வலது கையில் வில்லின் அம்பை பிடித்தவாறும், இடது கையில் வில்லின் நடுப்பகுதியான நாபியை பிடித்தவாறும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வீரனுக்கு வலது பக்கமாக கூந்தலை அள்ளி கட்டி முடிக்கப்பட்ட கொண்டையும், வீரனுக்கே உரிய விரிந்த மார்புடனும் இடை சிறிதாக வீரனுக்குரிய உடல் அமைப்புடனும் அழகாக வெட்டப்பட்டிருக்கிறது. இந்த நடுகல் வீரனின் இடுப்புக்கு கீழ் பகுதி முழுவதும் மண்ணில் புதைந்து காணப்படுவதால் வீரனின் ஆடை மற்றும் காலில் அணிவிக்கப்பட்டு இருக்கும் அணிகலன்களை அறிந்து கொள்ள முடியவில்லை.
பண்டைய காலத்தில் மக்களின் வாழ்க்கையும், வாழ்விடமும் மலையும் மலை சார்ந்த இடமாக இருந்துள்ளது. அவ்வாறு வாழ்ந்த மக்கள் விலங்குகளை உணவுக்காக வேட்டையாடும்போது அவற்றுடன் சண்டையிட்டு இறப்பது வழக்கமாக இருந்துள்ளது. இவ்வாறான நிகழ்வுகளில் வீர மரணம் அடையும் வீரர்களின் நினைவாக கல்நட்டு அவர்களை தெய்வமாக வழிபடுவது தமிழர்களின் சிறப்பான பண்பாட்டு மரபாகும். இதனை இலக்கியங்கள், கல்வெட்டுச் சான்றுகள் கூறுகின்றன. பண்டைய காலம் முதல் தமிழர்கள் வீரர்களை போற்றி தெய்வமாக வணங்கும் செயலுக்கு இந்த வில்வீரன் நடுகல் சான்றாக உள்ளது. இந்த வில் வீரன் நடுகல்லை இப்பகுதி மக்கள் அப்புச்சி என்ற பெயரில் தெய்வமாக வணங்கி வருகின்றனர்.






