என் மலர்
திண்டுக்கல்
- கடந்த 3 நாட்களாக உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. முதல்நாள் காணிக்கைமூலம் ரூ.2கோடியை 44 லட்சத்து 23ஆயிரத்து 479 வருவாயாக கிடைத்தது.
- 2-வது நாளாக எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையில் ரூ.2கோடியே 65 லட்சத்து 57 ஆயிரம் கிடைத்தது.
பழனி:
முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த கோவிலில் கடந்த மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைதொடர்ந்து தைப்பூச திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்திற்கு குறிப்பிட்ட அளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது மண்டலபூஜைகள் நடந்து வருகின்றன. இதனால் தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு வரும் பக்தர்கள் அலகு குத்தியும், முடிகாணிக்கை செலுத்தியும், காவடி எடுத்தும் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்.
மேலும் கோவில் உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளிபொருட்களையும் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
தைப்பூசதிருவிழா நிறைவடைந்த நிலையில் பழனி முருகன் கோவிலில் கடந்த 20-ந்தேதி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் இணைஆணையர் நடராஜன் தலைமையில் துணை ஆணையர் பிரகாஷ் முன்னிலையில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள், வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த 3 நாட்களாக உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. முதல்நாள் காணிக்கைமூலம் ரூ.2கோடியை 44 லட்சத்து 23ஆயிரத்து 479 வருவாயாக கிடைத்தது. 2-வது நாளாக எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையில் ரூ.2கோடியே 65 லட்சத்து 57 ஆயிரம் கிடைத்தது.
3-ம் நாளாக நேற்று இரவு 10மணிவரை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. 3 நாட்கள் உண்டியல் வருவாயாக ரூ.7கோடியே 17 லட்சத்து 42 ஆயிரத்து 126 கிடைத்துள்ளது. தங்கம் ஒருகிலோ 248கிராம், வெள்ளி 48கிலோ 377கிராம் ஆகியவை கிடைத்தது. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 2529 காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
பக்தர்கள் காணிக்கையாக தங்கம், வெள்ளியாலான வேல், மயில், திருமாங்கல்யம், காவடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
பழனி முருகன் கோவிலில் கடந்த 2019-ம் ஆண்டு தைப்பூச திருவிழா நடைபெற்றது. அதன்பிறகு கடந்த 2 வருடமாக திருவிழா குறிப்பிட்ட அளவு பக்தர்களுடன் மட்டுமே நடந்தது. கடந்த வருடமும் குறைந்த அளவு பக்தர்களே கலந்து கொண்டனர். இந்த வருடம் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூச திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதன்மூலம் உண்டியல் வருவாய் ரூ.7 கோடிக்குமேல் கிடைத்துள்ளது. பழனி கோவில் உண்டியல் வருவாயில் இதுவரை கிடைத்த அதிக வருவாயாக இது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- திருக்கல்யாணம் ஏப்ரல் 3-ந் தேதி நடக்கிறது.
- ஏப்ரல் 4-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் பங்குனி உத்திர திருவிழாவும் ஒன்றாகும். இத்திருவிழாவின் போது திண்டுக்கல், ஈரோடு, கரூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து காவடியாக கொண்டு வந்துமுருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற மார்ச் 29-ந்தேதி பழனி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் ஏப்ரல் 3-ந் தேதி மாலை 5 45 மணிக்கு மேல் 6.45 மணிக்குள் கன்னியா லக்னத்தில் நடக்கிறது. ஏப்ரல் 4-ந் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது. விழா நடைபெறும் 10 நாட்களும் சுவாமி தந்தப்பல்லக்கு, தங்ககுதிரை, வெள்ளி காமதேனு, தங்கமயில், வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
விழாவை முன்னிட்டு குடமுழுக்கு நினைவரங்கில் தினந்தோறும் பக்தி சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, பரதநாட்டியம், நாட்டுப்புறப்பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ஏப்ரல் 2-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை மலைக்கோவிலில் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு இருக்காது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சந்தானம்.
- இவர் பழனி கோவிலுக்கு சென்று பக்தர்களுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கடந்த மாதம் 27ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 29ம் தேதி தைப்பூச கொடியேற்றம் நடத்தப்பட்டு கடந்த 5ந் தேதி தேரோட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து பழனி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள், அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் வந்து வழிபாடு செய்து வருகின்றனர். கடந்த வாரம் நடிகைகள் அமலாபால், சமந்தா, நடிகர் கவுதம் கார்த்திக், அவரது மனைவி மஞ்சிமாமோகன் உள்பட ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் இன்று நடிகர் சந்தானம் பழனி கோவிலுக்கு சென்று அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று பக்தர்களுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அவருடன் ஏராளமான ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன்பின் ரோப்கார் மூலம் அடிவாரம் வந்தடைந்தார். பழனி அருகே சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதால் படபிடிப்புக்கு இடையே பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்ததாக தெரிவித்தார்.
- அம்மனுக்கு மஞ்சள் புடவை, திருமாங்கல்யம் சாத்துப்படி செய்தல் நடந்தது.
- கொடியில் உள்ள அம்மன் படத்திற்கு கண் திறப்பு நடந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் மாசித்திருவிழா கடந்த 16-ந்தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. அடுத்த நாள் 17-ந் தேதி பூச்சொரிதல் விழா நடந்தது. அதைத்தொடர்ந்து மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் நேற்று நடந்தது.
இதையொட்டி திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் அம்மனுக்கு மஞ்சள் புடவை, திருமாங்கல்யம் சாத்துப்படி செய்த பின் கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம். அதன்படி திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா தலைவர் ஏ.கந்தசாமி தலைமையில் சபா மண்டபத்தில் இருந்து அம்மனுக்கு சாத்துப்படி செய்யப்படும் மஞ்சள் புடவை, திருமாங்கல்யம் ஆகியவை எடுத்து வரப்பட்டது. பின்னர் அவை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து ரத வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தது.
அதன்பிறகு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஞ்சள் புடவை, திருமாங்கல்யம் சாத்துப்படி செய்தல் நடந்தது. அதேபோல் திண்டுக்கல் டவுன் மார்க்கெட் குமரன் தெரு சாம்பான் குலத்தினர் சார்பில் பாலக்கொம்பு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ரதவீதிகள் வழியே சுற்றி கோவிலை வந்தடைந்தது. அதன்பிறகு ஊன்றப்பட்டது. இதையடுத்து பாலக்கொம்புக்கு மஞ்சள் நீர் ஊற்றினர். அதன் பிறகு கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சுபாஷினி மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் சார்பில் கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி மஞ்சள் வண்ண துணியில் சிங்க வாகனத்தில் கோட்டை மாரியம்மன் அமர்ந்து இருப்பதை போன்று வரையப்பட்ட கொடி தயார் நிலையில் இருந்தது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு கொடியில் உள்ள அம்மன் படத்திற்கு கண் திறப்பு நடந்தது.
அதைத்தொடர்ந்து பகல் 12 மணியளவில் கோவில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது சுற்றி இருந்த பெண்கள் பக்தி பரவசத்தில் "ஓம் சக்தி, பராசக்தி" என்று கோஷம் எழுப்பினர். இதில் விஸ்வகர்ம அறக்கட்டளை செயலாளர் ஆனந்தன், சங்கச் செயலாளர் சந்தானம், பொருளாளர் பொன்னலங்காரம், இணைச் செயலாளர் சின்னு, சங்க நிர்வாகிகள் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதன்பிறகு விஸ்வகர்ம அறக்கட்டளை இயக்குனர் குமரேசன் மற்றும் நண்பர்கள் சார்பில் அன்னதானம் நடந்தது.
மாலை 6 மணியளவில் கோவிலில் உள்ள கருப்பணசாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இரவு 7 மணி அளவில் அம்மனின் மின்தேர் வீதி உலா தொடங்கி ரதவீதிகள் வழியே வலம் வந்து கோவிலை அடைந்தது.
இரவு கோவில் கலையரங்கில் திண்டுக்கல் விஸ்வகர்ம இளைஞர் சங்கம் சார்பில் இன்னிசை கச்சேரி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சங்கத் தலைவர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- அதிகாலை நேரத்தில் வந்த காட்டெருமை 3 ஆடுகளை முட்டி தாக்கியது.
- குடல் சரிந்து படுகாயமடைந்த ஆடுகள் இறந்தன.
கொடைக்கானல்:
கொடைக்கானல் நகர் பகுதிகளில் அவ்வப்போது வனவிலங்குகள் வருவது வழக்கம்.இதில் காட்டெருமைகள் தெருப்பகுதிகளில் சர்வசாதாரணமாக நடைபோடும்.பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் காட்டெருமைகள் நடமாட்டம் இருக்கும்.
இவற்றை கட்டுப்படுத்த வனத்துறை சார்பில் தற்போது களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவ்வப்போது நகர் பகுதிக்குள் புகும் காட்டெருமைகளை பொது மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.இந்நிலையில் நாயுடுபுரம் பகுதியில் இறைச்சி நடத்தி வரும் முருகன் என்பவர் தனது ஆடுகளை அவரது கடைக்கு எதிர்ப்புறம் உள்ள புல்வெளியில் கட்டி வைத்துள்ளார்.
இன்று அதிகாலை அந்த வழியாக வந்த காட்டெருமை 3 ஆடுகளை முட்டி தாக்கியது. இதில் 3 ஆடுகளும் உயிரிழந்துள்ளது. சம்பவம் குறித்து அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடற்கூறு ஆய்வு செய்த பின்பு காட்டெருமை தான் தாக்கியது என்று உறுதிப்படுத்தப்பட்டால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். 3 ஆடுகள் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சித்தரேவு- பெரும்பாறை வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்தது.
- தாண்டிக்குடி, பெரும்பாறை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலைக் கிராமங்களான தாண்டிக்குடி, பெரும்பாறை வனப்பகுதியில் கடந்த சில வாரங்களாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் மலைப்பகுதியில் உள்ள புல்வெளிகள் கருகி வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. கோடைக்காலம் தொடங்கி விட்டால் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிவது வழக்கமாக இருந்து வருகிறது.
அதன்படி நேற்று முன்தினம் மாலை சித்தரேவு- பெரும்பாறை வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலகுண்டு வனத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் வனப்பகுதியில் இருந்த அரிய மூலிகைகள், மரங்கள் எரிந்து சேதமாகின.
இந்தநிலையில் 2-வது நாளாக தாண்டிக்குடியில் உள்ள கரியமாள் கோவில், அழிஞ்சோடை வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றியது. சிறிது நேரத்தில் தீ மள மளவென பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலக்குண்டு வனச்சரகர் ராம்குமார் தலைமையிலான வனத்துறையினர் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தாண்டிக்குடி, பெரும்பாறை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.
- பள்ளபட்டி பாலம் அருகே காரின் மேற்கூரையில் கட்டப்பட்டிருந்த சூட்கேஸ் தவறி ரோட்டில் விழுந்தது.
- மதுரையில் இருந்து திருச்சி நோக்கி லாரி ஓட்டி வந்த அலங்காநல்லூர் ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ் நடுரோட்டில் சூட்கேஸ் கிடப்பதை கண்டு அதை எடுத்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் செந்தில். இவர் அழகர் கோவில் அருகே உள்ள கிடாரிபட்டிக்கு சிவராத்திரியை முன்னிட்டு குலதெய்வ வழிபாடு நடத்த சென்றார். பின்னர் மீண்டும் நத்தம் வழியே பழனிக்கு திரும்பி கொண்டிருந்தார். பள்ளபட்டி பாலம் அருகே காரின் மேற்கூரையில் கட்டப்பட்டிருந்த சூட்கேஸ் தவறி ரோட்டில் விழுந்தது. அப்போது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி லாரி ஓட்டி வந்த அலங்காநல்லூர் ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ் நடுரோட்டில் சூட்கேஸ் கிடப்பதை கண்டு அதை எடுத்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார்.
அந்த சூட்கேசில் ரூ.25 ஆயிரம் பணமும், 3 பவுன் தங்கநகை மற்றும் செல்போன் ஆகியவை இருந்தது. இதையடுத்து நத்தம் போலீசார் உரியவர்களை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தார். பின்னர் ரமேஷ் கையாலேயே அதனை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். அவற்றை பெற்றுக்கொண்ட செந்தில் குடும்பத்தினர் ரமேசுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டனர். லாரி டிரைவர் ரமேசின் நேர்மையை பாராட்டி நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி சன்மானம் வழங்கி பாராட்டினார்.
- கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நிகழ்ச்சி 28-ந்தேதி நடைபெறுகிறது.
- மார்ச் 7-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
- 8-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
பழனி முருகன் கோவிலின் உபகோவிலான மாரியம்மன் கோவில் பழனி கிழக்கு ரதவீதியில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் அம்மன் லிங்க வடிவத்தில் அமைந்திருப்பது சிறப்பு அம்சமாகும். இங்கு ஆண்டுதோறும் மாசி திருவிழா 21 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 17-ந்தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கம்பம் சாட்டுதல் இன்று (செவ்வாய்க்கிழமை) மாரியம்மன் கோவிலில் நடைபெறுகிறது. இதையொட்டி அம்மன் உத்தரவுபடி திரிசூல வடிவிலான கம்பம் வெட்டி எடுத்து வரப்படும். பின்னர் அது அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்யப்பட்டு கோவில் முன்பு நடப்படும். அதைத்தொடர்ந்து தினந்தோறும் பக்தர்கள் மஞ்சள்நீர், பால் கொண்டு வந்து கம்பத்துக்கு ஊற்றி வழிபடுவர்.
விழாவுக்கான கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நிகழ்ச்சி வருகிற 28-ந்தேதி நடைபெறுகிறது. அடுத்த மாதம் 7-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று இரவு அம்மன் தங்ககுதிரை வாகனத்தில் உலா வந்து அருள்பாலிக்கிறார். 8-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அடுத்த நாள் கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
- ஜல்லிக்கட்டு போட்டியை காண திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கூடியதால் மறவபட்டியில் திருவிழா கோலம் பூண்டது.
- பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. கோகுல கிருஷ்ணன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர்.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள மறவபட்டியில் 200 ஆண்டுகள் பழமையான பெரிய அந்தோணியார் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இதற்காக தேனி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500 காளைகள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. காளைகளை அடக்க 200 மாடுபிடி வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர். அவர்களில் உடல் தகுதி சோதனை நடத்தப்பட்டு 120 மாடுபிடி வீரர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
போட்டியை விலங்குகள் நல வாரிய தலைவர் டாக்டர் மிட்டல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டதற்கு பிறகு போட்டி தொடங்கியது. வாடிவாசல் வழியாக வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். ஆனால் பல காளைகள் வீரர்கள் பிடியில் சிக்காமல் நின்று விளையாடியது. மேலும் சில காளைகள் தன்னை அடக்க வந்த வீரரை தூக்கி பந்தாடியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயம், பீரோ, கட்டில், சைக்கிள், செல்போன் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
போட்டியை காண திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கூடியதால் மறவபட்டியில் திருவிழா கோலம் பூண்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. கோகுல கிருஷ்ணன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர்.
காளைகள் தாக்கியதில் காயமடைந்த வீரர்களுக்கு மைதானத்தின் அருகிலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. படுகாயமடைந்தவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவைச் சேர்ந்தவர் முத்துசென்ராயன் (வயது 38). விவசாயம் செய்து வருகிறார். இவர் ஆன்லைனில் வந்த ஒரு விளம்பரத்தில் ரூ.1000 கொடுத்தால் 150 நாட்கள் கழித்து ரூ.3000 தரப்படும் என்பதை பார்த்தார்.
இதனையடுத்து குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு பேசி அந்த நிறுவனத்தின் ஊழியர்களிடம் பேசினார். அவர்கள் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ.30 லட்சம் கொடுப்போம் என்று கூறியுள்ளனர்.
இதனை நம்பி முத்து சென்ராயன் மதுரை கொடும்பு ஆசாரி தெருவைச் சேர்ந்த தனியரசன் (49) என்பவரிடம் ரூ.15 லட்சத்தை கொடுத்தார். 150 நாட்கள் கழித்து ரூ.45 லட்சம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த முத்து சென்ராயனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அவருக்கு பல முறை போன் செய்தும் எடுக்கவில்லை. இதனையடுத்து நிலக்கோட்டை பஸ் நிலையத்தில் முத்துசென்ராயன் நின்று கொண்டு இருந்தபோது அவ்வழியே சென்ற தனியரசனை மடக்கி பிடித்தார்.
பின்னர் தான் கட்டிய பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை தராமல் தரக்குறைவாக பேசியுள்ளார். இதனையடுத்து அவரை பிடித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி தலைமையிலான போலீசார் தனியரசனை பிடித்து விசாரித்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இவர் மற்றும் மேலும் சிலர் இதே போல் ஆன்லைனில் கூடுதல் பணம் தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்துள்ளது தெரிய வந்தது. இதனிடையே தனியரசன் மோசடி பேர்வழி எனத் தெரிந்ததும் அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த ஏராளமானோர் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். அவர்கள் தாங்கள் பல லட்சம் டெபாசிட் செய்து காத்திருப்பதாக தெரிவித்தனர். தனியரசன் மதுரை, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மேலும் சிலரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்ம்பவம் நிலக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கடனுக்கு ஈடாக வீட்டை ஜப்தி செய்ய முயன்றதால் பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
- போலீசார் தடுத்து நிறுத்தி அவரை அப்புறப்படுத்தி வீட்டை சீல் வைத்தனர்.
நிலக்கோட்டை:
செம்பட்டி மூவேந்தர்கால னியை சேர்ந்த ஜீவா மொக்கவீரம்மாள் தம்பதி யினர் சின்னாளபட்டியை சேர்ந்த நடராஜன் மனைவி தமிழ்செல்வியிடம் கடந்த 1997-ம் ஆண்டு கடனாக ரூ.5.5 லட்சம் பெற்றிருந்தனர்.
இதற்கு ஈடாக மொக்க வீரம்மாள் பெயரில் இருந்த வீட்டை அடமானமாக எழுதி கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவா இறந்துவிட்டநிலையில் கடன் கொடுத்த தமிழ்செல்வி திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதையடுத்து மொக்கவீரம்மாள் பெயரில் இருந்த வீடு தமிழ்செல்வி பெயருக்கு நீதிமன்ற உத்தரவின்பேரில் மாற்ற ப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் வீட்டின் உரிமை யாளர் முறைப்படி வீட்டை காலிசெய்து தராமல் காலம் தாழ்த்தி வந்ததால் வீட்டை ஜப்தி செய்து கைப்பற்ற பிப்ரவரி 3-ந்தேதியன்று தமிழ்செல்வி, நீதிமன்ற ஊழியர்கள், போலீசார் உதவியுடன் வந்தனர்.
அப்போது மொக்க வீரம்மாளும், அவரது உறவினர்கள் வீட்டை ஜப்தி செய்ய விடாமல் தடுத்தனர். இதை யடுத்து நேற்று மீண்டும் போலீசார் வீட்டை ஜப்தி செய்ய வந்தனர். அப்போதும் அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் 4 குடும்பத்தி னர், மொக்க வீரம்மாள் ஆகியோர் போலீ சாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மொக்க வீரம்மாள் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை கேனை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க தற்கொலைக்கு முயற்சிசெய்தார்.
அப்போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் செந்தி ல்குமார் தலைமையிலான போலீசார் மொக்க வீரம்மாள், அவரது உறவி னர்கள், வீட்டில் குடியிருந்த வர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு சீல் வைத்தனர். வீட்டை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள் , போலீசார் முன்பு எதிர்ப்புதெரிவித்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 4 வழி சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
- போலீசார் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சகிந்தர் உரனெவ், ராஜராஜேஸ்வரன், கேசவன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதி மலைகளால் சூழப்பட்டு இயற்கை வளம் நிரம்பிய பகுதியாகும். இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 4 வழி சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதன் பின் இப்பணியில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனம் மீது பல்வேறு கிராமப் பகுதிகளில் மணல் திருட்டில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் நத்தம்-மதுரை சாலையில் உள்ள பரளிபுதூர் டோல்கேட் அருகே மணல் திருட்டில் ஈடுபடுவதாக மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதிக்கு திண்டுக்கல் மாவட்ட சுரங்கத்துறை உதவி இயக்குனர் மாரியம்மாள், அலுவலக உதவியாளர்கள் வாசுதேவன், சதீஷ்குமார், சீனிவாசன் உள்ளிட்டோர் சென்றனர். அப்போது உரிய அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக சுமார் 2 யூனிட் கிராவல் மணலுடன் வந்த டாரஸ் லாரியை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அந்த டிரைவர் ஹிந்தியில் பேசியுள்ளார். அவரிடம் லாரி சாவியை வாங்கி வைத்திருந்தபோது அங்கு வந்த லிங்கவாடியை சேர்ந்த சுரேஷ் மற்றும் கணேசன், ராஜேஷ் ஆகியோர் இந்த வண்டி யாருடையது தெரியுமா? சாவியை தராவிட்டால் இங்கிருந்து யாரும் உயிருடன் போக முடியாது என மிரட்டல் விடுத்துள்ளனர். பின் உதவி இயக்குனர் கையில் வைத்திருந்த சாவியை பறிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர் தர மறுக்கவே உதவி இயக்குனரை தாக்கி சாவியை பறித்தனர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. பின் அனைவரையும் லாரியை ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து உதவி இயக்குனர் மாரியம்மாளை உடன் வந்தவர்கள் அப்பகுதியில் இருந்து அழைத்துச் சென்று விட்டனர். பின் உடன் வந்தவர்கள் உதவியோடு டாரஸ் லாரி மற்றும் ஜே.சி.பி. எந்திரத்தை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து நத்தம் போலீசார் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சகிந்தர் உரனெவ், ராஜராஜேஸ்வரன், கேசவன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சுரேஷ், கணேஷ், ராஜேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.






